No icon

​​​​​​​அருள்சகோதரி முனைவர் சி. சேசுராணி, கல்லூரி முதல்வர்

ஒரு வரலாறின் வரலாறு

வீசும் குளிர்தென்றலும், வானுற உயர்ந்த மரங்களும், மேக மலைமுகடுகளும் வணக்கம் சொல்லும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுந்தொட்டில்தான் பெரிய குளம். திரும்பும் திசையெங்கும் பசும்போர்வை விரித்தாற்போல் வராக நதியின் வனப்பும், வைகை நதி தந்த செழிப்பும் காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

ஆனால், ‘அடுப்பூதும் பெண்டீருக்குப் படிப்பெதற்கு?’ என மனித மனங்கள் இறுகிக் கிடந்த 1970-களின் கால கட்டம். பெரியகுளம் பகுதிகளில் சாதி மற்றும் வகுப்புவாத மோதல்கள் ஒருபுறம்;

மூடநம்பிக்கையில் திளைத்து பெண் சிசுக்கொலை மறுபுறம் என்று பாதிக்கப்பட்டிருந்தது. கல்விக் கண் திறந்த காமராஜரை நம்பி, பெண் பிள்ளைகளைப் மேற்படிப்பிற்கு அனுப்பலாம் என்றால் மக்களுக்கு பொருளாதார வசதி போதுமான அளவு இல்லை; அப்படியே இருந்தாலும் சுற்று வட்டாரத்தில் எந்த உயர்கல்வி நிறுவனங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

ஆனால், இந்த ஏக்கமே உள்ளத்தினை அரித்திட இதற்கு ஒரு தீர்வு கண்டிடத் துடித்தவர்களில் முக்கியமானவர் கல்வித்தந்தையும் தொழிலதிபருமான திரு.செல்லத்துரை அவர்கள். சிந்தனை வலுப்பெறத் திட்டங்களை செயலாக்கிட அன்னாருக்கு

ஒரு நல்லெண்ணமும், அர்ப்பண உணர்வும் கொண்ட நட்புக்கரம் தேவைப்பட்டது. அவரது பார்வையில் விழுந்தவர்கள் பெரியகுளம் மண்ணில் நடுநிலைப்பள்ளி ஒன்று நடத்தி வந்த திருச்சி புனித அன்னாள் சகோதரிகள். கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகளை நிறுவி நடத்தி வந்த இந்த அருள்சகோதரிகள், அதிகம் கற்றறிந்தவர்கள் இல்லையெனினும், தங்கள் மாணவியர் கல்வி பெறுவதற்காக எல்லாவிதங்களிலும் தங்களை அர்ப்பணித்து உழைத்தனர். இப்படி தியாக உள்ளம் கொண்ட உழைப்பாளிகளை கண்ணெதிரில் கண்ட திரு. செல்லத்துரை அவர்கள் தனக்கான நட்புக்கரங்கள் இவர்களே எனத் துணிந்து கரம் கோர்த்தார்.

இருபதாம் நூற்றாண்டின் முன்னணித் தொழிலதிபர், ஏற்றுமதியாளர், விவசாயி, கல்வியாளர், போக்குவரத்து மற்றும் ஹோட்டல் முதலாளி என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டு  விளங்கிய திரு. செல்லத்துரை அவர்கள்பெண்களுக்கான கல்லூரிஒன்றை பெரியகுளத்தில் தொடங்குவதில் உறுதியாயிருந்தார். எனவே, பெரியகுளம் பங்குப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த அருள்சகோதரி ஜெயபுஷ்பம் அவர்களை அணுகி, ‘கல்லூரி நடத்த ஆர்வமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டார். அவர்கள் உடனடியாக அப்போதைய சபை தலைமை சகோதரி லூசி கிரசென்சியா மேரி அவர்களுடன் கலந்தாலோசித்தார். சபையின் பொருளாதாரம், சகோதரிகளின் கல்வி நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு, கல்லூரியை ஏற்று நடத்த அருள்சகோதரி லூசி கிரசென்சியா மேரி சற்றே தயங்கினார்.

மறுபுறம் மதுரையின் பேராயராக இருந்த ஆயர் ஜஸ்டின் திரவியம் அவர்களைச் சந்தித்து, உயர் கல்வி நிறுவனமொன்றைத் துவங்கிட பேராயரிடம் புனித அன்னாள் சபையினர் அனுமதி வேண்டினர். ஆனால், பேராயரோ உயர்கல்வி படித்த சகோதரிகள் ஒருவர்கூட அன்னாள் சபையில் இல்லாத நிலையில் இத்தகு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினால் வெற்றி பெறுவது சாத்தியமா? என்று சகோதரிகளின் திறனைப்பற்றிக் கேள்வி எழுப்பினார். ஆனால், சபைத்தலைமை அன்னை லூசி கிரசென்சியா மேரி மனந்தளராமல், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு, தீர்க்கமாக இறைஊழியர் அன்னம்மாள் வழியில் கல்லூரி தொடங்குவதென உறுதியாக இருந்தார். இதுவே இறைதிட்டம் எனத் தேர்ந்து தெளிந்தார். தன் முழு சம்மதத்தையும், ஒத்துழைப்பையும் கொடுக்கத் தீர்மானித்தார். அதனையடுத்து, 1968 ஆம் ஆண்டில் எண்ணங்கள் ஒன்றித்தன. ஏக்கம் ஏட்டளவிற்கு வரைந்தெடுக்கப்பட்டது. திட்டங்கள் உருவாயின. அனைத்தும் செயலாக்கம் பெறத் துவங்கின.

பின்பு, திரு. செல்லத்துரை அவர்கள், அப்போதைய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மேத்தா மற்றும் அமைச்சர் திரு. நெடுஞ்செழியனின் பேராதரவோடு கல்லூரி தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை செவ்வனே மேற்கொண்டார்.

1970 ஆம் ஆண்டு, அருள்சகோதரி லூசி கிரசென்சியா மேரி, அருள்சகோதரி ஜோஸ்பின் தெரஸ், அருள்சகோதரி பால் வென்சி, அருள்சகோதரி கிளாரன்ஸ் ஆகியோரை திரு. செல்லத்துரை அவர்கள் கல்லும், முள்ளும் நிறைந்திருந்த கள்ளிப்பட்டி காட்டிற்கு கரம்பற்றி அழைத்துச் சென்றார். திரு. செல்லத்துரை அவர்களது பெற்றோர் திரு. ஜெயராஜ், அன்னபாக்கியம் அவர்களின் பெயரில் இப்புதிய கல்லூரி துவங்கப்பட்டது. புனித அன்னாள் சகோதரிகளுக்கு இந்தத் துறையில் அதிக அனுபவம் இல்லாததால், அருள்தந்தை ராஜநாயகம் சே. அவர்கள் கல்லூரி தொடங்கி, நடத்துவதற்கான ஆரம்பகால நடைமுறைகளுக்கு உதவுமாறு நியமிக்கப்பட்டார். இறுதியாக ஏப்ரல் 1970 இல் கல்லூரி தொடங்கிட அரசு அனுமதி பெறப்பட்டது. அமைச்சர் திரு. மதியழகன் அவர்களால், 01.06.1970 அன்று புதிய கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, 9 பேர் கொண்ட குழு கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து பல்கலைக்கழகப் படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கியது. இறுதியாக, ஜூலை 5, 1971 அன்று அன்னை லூசி கிரசென்சியா மேரி மற்றும் செல்லதுரை குடும்பத்தின் ஒருங்கிணைந்த மற்றும் கடினமான முயற்சிகளால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் கல்லூரியில் 254 மாணவிகளைக் கொண்டு, 3 பாடப்பிரிவுகள் மட்டுமே தொடங்கப்பட்டன. கல்லூரியின் முதல் மாணவிகளாக PUC இல் 254 மாணவிகளும், இளங்கலை வரலாற்றுத் துறைக்கு 23 மாணவிகளும் உயர் கல்வி பயில வந்தனர். ஆசிரியர்கள் 17 பேரும், அலுவலக உதவியாளர்கள் 15 பேரும் நியமிக்கப்பட்டனர். பேராசிரியர் திருமதி. அயோனா கோமஸ் அவர்கள் கல்லூரியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்றார்கள்.

1973 ஆம் ஆண்டு, முதன்முதலாக மாணவிகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து, PUC தேர்வு எழுதினர். 2002 ஆம் ஆண்டு, கல்லூரியானது அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேர்வுகளும் இப்பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றன. ஆனால், 2004 இல் கல்லூரி தன்னாட்சி நிலையை அடைந்த பின்பு, கல்லூரித் தேர்வாணையம் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கக் காலத்தில் 254 மாணவிகள் பயின்ற இக்கல்லூரியில், இன்று 2,585 மாணவியர் கல்வி பயில்கின்றனர். விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளில் 85 சதவீதம் பேர் மாநில அரசு அல்லது மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற்று பயனடைகின்றனர்.

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பு கற்பதற்கும், பல துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் வழிகாட்டியாய் இக்கல்லூரி இன்று வளர்ந்துள்ளது. கல்லூரியில் 17 இளங்கலை பாடப்பிரிவுகளும், 9 முதுகலை பாடப்பிரிவுகளும், 6 ஆய்வு பாடப்பிரிவுகளும் உள்ளன. இந்தப் படிப்புகள் தவிர, முதுகலை கணினி பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள் ஆகியனவும் சிறப்பான முறையில் இக்கல்லூரியில் வழங்கப்படுகின்றன.

இக்கல்லூரி கடந்த ஐம்பது ஆண்டுகளாய்ப் பெண்களின் அறிவுக் கண்களைத் திறந்து, தன்னம்பிக்கை எனும் மருந்தூட்டி, ஆக்கத்திற்கு வழிகாட்டும் அறிவாலயமாய்த் திகழ்ந்துள்ளது. கன்னியர் பலரின் கரங்களும், கால்களும் செய்த கடின உழைப்பு, காடும், மேடும் சமன் செய்யப்பட்டு, இன்று நெடுஉயர்ந்த கட்டிடங்களாய், மாணவியர் பலரை வளர்ச்சி எனும் ஏணியில் ஏற்றி வைத்து அழகு பார்க்கிறது

அருள்சகோதரிகள் அனைவருடன் இணைந்து தோள் கொடுத்துத் தாங்குகின்ற பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், சிட்டுக்களாய்ச் சிறகு விரித்து அழகு தரும் மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் என்று இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் இன்று நமது சகோதரிகளின் முயற்சியாலும், திறமையாலும் வளர்ந்து பல அரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

ஞானிகளை நாணச் செய்ய மடமை என உலகம் கருதுவதை இறைவன் தேர்ந்து கொண்டார்என்ற இறைவார்த்தையின்படி எந்தச் சபை சகோதரிகளும் வரமறுத்த இடத்தைத் திருச்சி புனித அன்னாள் அருள்சகோதரிகள் ஏற்று, இன்று பாலும் தேனும் பொழியும் வாக்களிக்கப்பட்ட பூமியாக மாற்றியுள்ளனர். கரட்டுக் காட்டிலே கட்டாந்தரையிலே கல்லும், முள்ளுமாய்  கிடந்த கரம்பை பூமி இன்று சகோதரிகளின் விடாமுயற்சியால், ஒரு அறிவுப் பூங்காவாகக் காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் 800க்கும் அதிகமான இளம் பெண்கள் இங்கே கல்வி பயின்று பட்டதாரிகளாகி இந்த நாட்டுக்கும், சமுதாயத்துக்கும், குடும்பத்துக்கும் தீபமாக விளங்குகிறார்கள்.

Comment