No icon

குடந்தை ஞானி

மன்னிப்பு, ஒப்புரவு, குணம் பெறுதலுக்காக செபிக்கும் கனடா

கனடா நாட்டு பழங்குடியின மக்களின் குழந்தைகளை, மேற்கத்திய பாணியில் உருவாக்கப்பட்ட பள்ளிகளில் வதைத்துவந்த குற்றத்திற்காக, பழங்குடியின சமுதாயத்திடம், இரு மாதங்களுக்கு முன்பு, மன்னிப்பு கோரி அறிக்கையொன்றை வெளியிட்ட அந்நாட்டு ஆயர்கள், நாட்டில், மன்னிப்பும், ஒப்புரவும், குணம் பெறுதலும் நடைபெற மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்துள்ளனர்.

டிசம்பர் 12 ஆம் தேதி சிறப்பிக்கப்படும் குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளை, பழங்குடியினருடன் ஒருங்கிணைப்பை உருவாக்கும் தேசிய நாளாக கடைபிடிக்கும் கனடா தலத்திருஅவை, இந்த நாளுக்கென வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய முயற்சிகளுக்காக விண்ணப்பித்துள்ளது.

இவ்வாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி முடிய கனடா நாட்டு ஆயர்களின் பிரதிநிதிகளும், பழங்குடியினரின் பிரதிநிதிகளும் வத்திக்கானில், திருத்தந்தையின் முன்னிலையில் மேற்கொள்ளவிருக்கும் ஒப்புரவு முயற்சிகளுக்கு முன்னதாக, பழங்குடியினருடன் ஒருங்கிணைப்பை உருவாக்கும் தேசிய நாள் கடைபிடிக்கப்படவிருப்பதை ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.

பல்வேறு இனங்கள், கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையாக, மனித இனத்தை, கடவுள் உருவாக்க திட்டமிட்டுள்ளதை மாற்றி, அனைவரையும் மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் திணிக்க முயன்ற கத்தோலிக்கத் திருஅவையின் தவறை சரிசெய்ய, மன்னிப்பும், ஒப்புரவும் அவசியம் என்ற கருத்துடன், ஆயர்களின் மேய்ப்புப்பணி அறிக்கை ஆரம்பாகிறது.

19, மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில், ’கனடா நாட்டு கலாச்சாரத்தில் ஒருங்கிணைத்தல்என்ற பெயரில் அந்நாட்டு அரசு வகுத்த திட்டத்திற்கு துணைசென்ற கத்தோலிக்கத் திருஅவை, பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வழங்க உருவாக்கப்பட்ட பள்ளிகளில், அக்குழந்தைகள் அடைந்த வேதனைகளால் பல நூறு குழந்தைகள் உயிரிழந்தனர்.

காம்லுப்ஸ் என்ற ஊரில் நிறுவப்பட்ட பள்ளியொன்றில் இவ்வாண்டு மே மாதம் 215 குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடா நாட்டில், பழங்குடியினத்தவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, கனடா நாட்டில், குறிப்பாக, கத்தோலிக்கத் திருஅவையில், ஒப்புரவையும், மன்னிப்பையும் வலியுறுத்தும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறும் சந்திப்பு, ஒப்புரவு முயற்சிகளின் ஒரு முக்கிய பகுதியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

Comment