No icon

குடந்தை ஞானி

ரவீந்திர பால் சிங் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது

இந்துத்துவ அடிப்படைவாத எண்ணங்களை கொண்ட இந்து தேசியவாத அமைப்பான பஜ்ரங் தளத்தின் செயல்பாட்டாளரான ரவீந்திர பால் சிங் என்பவர் மூன்று வெவ்வேறு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது குறைக்கப்பட்டு, இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999ல் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயத்திற்கு வெளியே தங்களின் ஜீப்பில் தூங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நாட்டின் கிறித்துவ மறைப்பரப்பாளரான கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் என்பவரையும் அவரது இரு சிறு பிள்ளைகளையும் உயிருடன் எரித்து கொன்றவர்தான் இந்த ரவீந்திர பால் சிங். இதற்கு இவருக்கு உடந்தையாய் இருந்தவர் சக குற்றவாளியான மகேந்திர ஹெம்ப்ராம். 1999ல் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தனது இந்துமத விழாவைக் கொண்டாட முஸ்லீம் ஆடை வியாபாரியான சேக் ரஹ்மானிடம் நன்கொடை கேட்க, அவர் கொடுக்க மறுத்ததற்காக அவரை கோடரியால் தாக்கி, உயிருடன் எரித்துக் கொன்றவரும் இந்த ரவீந்திர பால் சிங்தான். மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜம்பானி கிராமத்தில் 1999ல் செப்டம்பர்  மாதம் 2 ஆம் தேதி அருள்தந்தை அருள் தாஸ் மீது வன்முறை தாக்குதலை நடத்திய கொலைகார கும்பலின் முக்கிய வழிகாட்டியாய் இருந்தவரும் இந்த ரவீந்திர பால் சிங்தான்.
இவ்வாறு இம்மூன்று கடுங்குற்றங்களுக்காக ரவீந்திர பால் சிங் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இவ்வழக்குகளில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மாற்றக் கோரி ரவீந்திர பால் சிங் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் மற்றும் நீதிபதி பி.பி. ரௌத்ரே ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றம், "இந்த மனுவில் தண்டனையை குறைப்பதற்கான அடிப்படை காரணம் எதுவுமில்லை. இந்த தாக்குதல்களில் முன் விரோதம் எதுவும் இல்லை என்றாலும், தாக்குதலின் தன்மை, அதனுடன் தொடர்புடைய மிருகத்தனம் மற்றும் குற்றத்தின் சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் நிராயுதபாணியாகவும் பாதுகாப்பற்றவராகவும் இருந்தார்கள்" என்று கூறி அவரது மனுவை நிராகரித்து.
கட்டாக்-புவனேஸ்வர் மறைமாவட்ட அருள்தந்தை திபாகர் பரிச்சா நீதித்துறைக்கு நன்றி கூறினார். "ஒரிசா உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாங்கள் முழு மனதுடன் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம், ஏனெனில் சிங் செய்தது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொடூரமான குற்றம் என்பதால் எந்த நீதிமன்றமும் இக்குற்றங்களை குறைக்க ஊக்கப்படுத்தக் கூடாது. சிங் போன்றவர்களுக்கு கம்பிகளுக்குப் பின்னால்தான் சிறந்த இடம் உள்ளது. அவர் சமூகத்திற்கு ஆபத்து"என்று அவர் UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார். 59 வயதான ரவீந்திர பால் சிங் தற்போது கிழக்கு மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

Comment