No icon

குடந்தை ஞானி

சீரோ மலபார் கீழைத்திருஅவையில் தொடரும் போராட்டம்

இந்திய சீரோ மலபார் கீழைத்திருஅவையின் ஆயர்கள் மாமன்றம் 1999ஆம் ஆண்டு தங்கள் 35 மறைமாவட்டங்களில் ஒரேவிதமான திருப்பலி வழிபாட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டு காலமாக திருப்பலியின் தொடக்கம் முதல் முடிவு வரை அருட்பணியாளர் மக்களை நோக்கியவாறு திருப்பலி நிறைவேற்றி வருகின்றனர். இந்த புதிய வழிபாட்டு முறையில் அருட்பணியாளர் திருப்பலியை தொடங்கும்போது மக்களைப் பார்த்து தொடங்க வேண்டும். பிறகு நற்கருணை வழிபாடு தொடங்கும் போது திருப்பீடத்தை நோக்கியவாறு அவர் திரும்பிக் கொள்ள வேண்டும். மீண்டும் திருப்பலி முடியும் பொழுது மக்களை பார்த்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 2021ல்  இப்புதிய முறை திருப்பலி கொண்டாட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். 
அதன்படி சீரோ மலபார் கீழைத்திருஅவையின் ஆயர்கள் மாமன்றம் 2022 ஏப்ரல் 17 க்குள் 35 மறைமாவட்டங்களிலும் இந்த புதிய முறையை பயிற்சி செய்து கடை பிடிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இந்த 35 மறைமாவட்டங்களில் எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டம், திருச்சூர் மறைமாவட்டம், இரிஞ்சாலக்குடா மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் மற்றும் இறைமக்கள் இந்த புதிய முறையை வேண்டாமெனவும், ஐம்பது ஆண்டு காலமாக கடைபிடித்து வரும் பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என்று தங்களின் மறைமாவட்ட ஆயர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இப்புதிய முறையை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்றன. அருட்பணியாளர்களும் மக்களும் வீதிகளுக்கு வந்து போராடினார்கள். 
இப்போது இப்போராட்டத்தின் உச்சகட்டமாக எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் அருட்பணியாளர் பாபு ஜோசப் கலத்தில் அவர்கள் இப்புதிய திருப்பலி வழிபாட்டு முறையை கைவிடக்கோரி ஜனவரி 7 ஆம் தேதியிலிருந்து பேராயர் இல்லத்தில் காலவறையற்ற உண்ணாவிரதத்தில்  ஈடுபட்டார். இந்த ஆண்டிற்கான சீரோ மலபார் கீழைத்திருஅவையின் ஆயர்கள் மாமன்றமானது ஜனவரி மாதம் 7 ஆம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. எனவே அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த புதிய வழிபாட்டு முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் அருட்பணியாளர் பாபு ஜோசப் கலத்தில் அவர்கள் இந்த நாட்களில் உண்ணாவிரதத்தை இங்கே தொடங்கினார். மேலும் தெற்கு கேரள மாநிலத்தில் சீரோ மலபார் திருஅவையைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட அருட்பணியாளர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
"ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்துவரும் மக்களை நோக்கி திருப்பலி நிறைவேற்றும் முறையின் பாரம்பரியத்தை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி புரிந்து கொள்ள வேண்டும். 50 ஆண்டு கால ன் பாரம்பரியத்தை மாற்றுவது என்பது இம்முறையை பின்பற்றி வரும் 500,000 க்கும் மேற்பட்ட  இறைமக்களை குழப்பத்தை நோக்கி வழிநடத்துவதாகும். ஆயர் பேரவை அதன் உறுதியான நிலைப்பாட்டை கைவிடாமல், இப்படியே தொடர்ந்தால் திருஅவை மற்றும் இறைமக்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கும்" என்று அருட்பணியாளர் பாபு ஜோசப் கலத்தில் கூறினார்.
ஆயர் குழுவின் ஊடக ஆணையச் செயலாளரான அருட்பணியாளர் அலெக்ஸ் ஓனாம்பள்ளி UCA செய்தி நிறுவனத்திடம், "ஆயர்கள் கூட்டம் நடைபெறுவதால் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது" என்று கூறினார். ஆயர்கள் மன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்க 2022 ஏப்ரல் 17ஆம் தேதி கடைசித் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அருட்பணியாளர் பாபு ஜோசப் கலத்திலின் காலவரையற்ற உண்ணாவிரதம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
 

Comment