No icon

குடந்தை ஞானி

ஆயர் பிராங்கோ மூலக்கல் ‘நிரபராதி’ என்று நீதிமன்றம் விடுவிப்பு

அருள்சகோதரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஜலந்தர் ஆயர் பிராங்கோ  மூலக்கல்லைநிரபராதிஎனக் கூறி கேரள நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் ஆயராக பணியாற்றியவர் பிராங்கோ மூலக்கல். இவரது கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குருவிலங்காடு மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபையின் அருள்சகோதரிகளுள் ஒருவர், ஆயர் பிராங்கோ மூலக்கல், 2014 மற்றும் 2016 க்கு இடையில் தன்னை மிரட்டி, 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டயம் எஸ்பியிடம் 2018 ஜூன் மாதம் புகார் அளித்தார். இந்த புகார் அளித்த அருள்சகோதரிக்கு ஆதரவாக முதலில் ஐந்து அருள்சகோதரிகள் பகிரங்கமாக ஆயரைக் கைது செய்யக் கோரி எர்ணாகுளத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு பல அருள்சகோதரிகள் ஆயர் பிராங்கோ மூலக்கல்லைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயர் பிராங்கோ மூலக்கல் செப்டம்பர் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 7 ஐபிசி பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் 84 சாட்சிகளில் அரசுத் தரப்பு 39 சாட்சிகளை விசாரித்தது. காவல்துறையில் புகார் அளிப்பதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட அருள்சகோதரி தம் சபையின் கண்காணிப்பாளர்கள் பலரிடம் இது பற்றி புகார்களைக் கொடுத்ததாகவும், ஆனால், அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அரசுத் தரப்பு கூறியது. அவர் குற்றம் சாட்டியபோது அவர்மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் அவர் சார்ந்துள்ள சபையால் எடுக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி குற்றஞ்சாட்டப்பட்ட ஆயர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். எனினும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.கோபகுமார், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதாகக் கூறி ஆயர் முல்லக்கல்லை விடுவிக்க உத்தரவிட்டார்.

இது குறித்து ஆயர் முல்லக்கல்லின் வழக்கறிஞர் சி.எஸ். அஜய் "உண்மை வென்றுள்ளது" என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அருள்சகோதரியின் செய்தித் தொடர்பாளர் அருள்சகோதரி அனுபமா, "இத்தீர்ப்பு எதிர்பாராதது; நாங்கள் மேல்முறையீடு செய்வோம். எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம், அதற்காக நாங்கள் இறக்க வேண்டியிருந்தாலும் கூட பரவாயில்லை" என்று கூறினார். தீர்ப்பு வெளியான உடனேயே, ஆயர் மூலக்கல் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்து கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். விசாரணைக்கு தன்னுடன் வந்திருந்த தனது குடும்ப உறுப்பினர்களுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறும் போது, "Praise the Lord" என்றார்.

Comment