No icon

குடந்தை ஞானி

அன்னை தெரசா சபைக்கு முதல் இந்தியத் தலைமை

கல்கத்தாவின் புனித அன்னை தெரசா சபையின் (மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி) தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள்சகோதரி மேரி ஜோசப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 68 வயதான சகோதரி மேரி ஜோசப், இச்சபையின் மூன்றாவது சபைத்தலைவர் ஆவார். கடந்த 13 ஆண்டுகளாக சபையை வழிநடத்திய ஜெர்மானியரான சகோதரி மேரி பிரேமா (பியரிக்) என்பவருக்குப் பிறகு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இந்திய நாட்டிற்கும், திரு அவைக்கும் பெருமை சேர்ப்பதாகும்.

1953 ஆம் ஆண்டு பிறந்த அருள்சகோதரி மேரி ஜோசப், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாலாவிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய உள் கிராமமான பொய்யாவைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். தனது பள்ளி நாட்களிலிருந்தே, அருட்சகோதரி ஜோசப் தனது வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணிக்க விரும்பினார். மனிதகுலத்திற்காகவும் வறியோருக்காகவும் பாடுபட்ட இயேசுவால் அவர் ஆழமாக ஈர்க்கப்பட்டதால், மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி சபையில் சேர்ந்து ஏழைகளுக்கு முழு மனதுடன் சேவை செய்ய தன்னை அர்ப்பணித்தார். இப்போது சபைத்தலைவியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு கணக்கின்படி, 139 நாடுகளில், 760 இல்லங்களில், 5,167 சகோதரிகளைக் கொண்டதாக மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி சபை இயங்கி வருகிறது. இந்தியாவில் 244 இல்லங்கள் உள்ளன: அனாதை இல்லங்கள், எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களுக்கான இல்லங்கள், உலகளவில் தொண்டு மையங்கள், அகதிகள், பார்வையற்றவர்கள், ஊனமுற்றோர், வயதானவர்கள், குடிகாரர்கள், ஏழைகள், வீடற்றவர்கள், வெள்ளம் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்து வருகின்றனர்.  

Comment