No icon

குடந்தை ஞானி

மத்திய பிரதேசத்தில் கண்காணிக்கப்படும் கிறிஸ்தவ பள்ளிகள்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவ திரு அவையால் நடத்தப்படும் பள்ளிகளை நுண்ணோக்கி போல கண்காணிக்க வேண்டும் என்ற மாநில அரசின் நடவடிக்கைக்கு கிறிஸ்தவ தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மே 16 ஆம் தேதி, மத மாற்றங்களைத் தடுக்க, கத்தோலிக்க கிறிஸ்தவ திரு அவையால் நடத்தப்படும் பள்ளிகளை காவல்துறை கண்காணிக்கும், என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவித்தார்.

மாநில தலைநகரான  போபாலில் உள்ள கிறிஸ்ட் மெமோரியல் பள்ளியில் சட்ட விரோதமாக மதமாற்றம் செய்வதாக, பஜ்ரங் தள் என்ற இந்து அடிப்படைவாத அமைப்பு புகார் அளித்ததை தொடர்ந்து, 2 மறைபோதகர்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆறு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அன்றே விடுவிக்கப்பட்டனர். பள்ளி இயக்குனர் மனிஸ் மேத்யூ, "இது எங்கள் நிறுவனத்தை குறிவைக்கும் நிகழ்வு. பள்ளியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களுக்கென நடத்தப்படும் ஜெபவழிபாட்டை வேண்டுமென்றே, ஒரு மதமாற்ற நடவடிக்கையாக தவறாக சித்தரித்துள்ளனர்" என்று மே 17 ஆம் தேதி UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

போபால் உயர்மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பாளர் அருள்பணி மரிய ஸ்டீபன், "நாங்கள் யாரையும் மாற்றுவதில்லை. எங்களுக்கு எதிராக அவநம்பிக்கை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் வேண்டுமென்றே எழுப்பப்படுகின்றன. எந்தவொரு சட்டவிரோத செயலையும் கண்காணிக்க அரசாங்கத்திற்கு முழு உரிமை உள்ளது, ஆனால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை துன்புறுத்துவதற்கு அது காரணமாக இருக்கக்கூடாது" என்று கூறினார்.

Comment