No icon

பாஜக-வின் வெறுப்பு அரசியல்

ஓங்கி அடிக்கும் வளைகுடா நாடுகள்

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மதப்பிரிவினைவாத பேச்சுகளும், செயல்களும் அதிகரித்திருக்கின்றன.

சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பரவவிட்டு மக்களைத் திசைதிருப்பி, தங்களின் காரியங்களை கச்சிதமாய் செய்வதில் மோடி அரசுக்கு நிகர் யாருமில்லை, எவருமில்லை. சிறுபான்மையினர் மீதான வன்முறை பேச்சுக்களை தங்களது வாக்கு வங்கித்தளங்களாக மாற்றி அறுவடை செய்வதே அவர்களது நோக்கு. எனவே, வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் பாஜகவால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அத்திட்டத்தின்படியே ஊக்குவிக்கப்படுகின்றன. இதுபோன்ற பேச்சுக்களும், அறிக்கைகளும் இந்து-முஸ்லீம் இடையே பிரிவினையை வலுப்படுத்தவும், இதனால் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கவும் வழிவகுக்கும். இவ்வுண்மையை நாம் நன்கு புரிந்துகொண்டு, பசுத்தோல் போர்த்திய புலிகளாய் வலம்வரும் வெளி வேடக்காரர்களை கூண்டோடு அழிப்பதே ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒரே வழி!

சமீபத்திய சில உதாரணங்கள்

கடந்த சில வாரங்களாக வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, சிவாலயத்தின்மீது கட்டப்பட்டது என்று நீதிமன்றத்தை நாடி வழிபட உரிமை கோருவது.. மே 29 அன்று , கர்நாடக முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான கே. எஸ். ஈஸ்வரப்பர், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) கொடி என்றாவது ஒருநாள் தேசியக் கொடியாக மாறும் என்று, கருத்து தெரிவிப்பது என்று இதுபோன்ற மதவெறியைத்தூண்டும் வகையிலான விவாதங்களை தொலைக்காட்சி, யுடியூப் சேனல்களில் தொடர்ந்து பார்க்க முடிகிறது. வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் அவ்வப்போது ஊடக நிகழ்வுகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இன்றைய பெரும்பாலான ஊடகங்களும் பாஜக-வின் ஊது குழல்களாக, வெறுப்பு பிரச்சாரங்களின் கருவூலங்களாக மாறிவிட்டன என்பதும் உண்மை. இதன் நீட்சியாகவே தற்போது முகம்மது நபிகள் குறித்த பேச்சு விசுவரூபம் எடுத்துள்ளது.

வெறுப்புப் பிரச்சாரத்தின் நீட்சியே!

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, இறைத்தூதர் முகம்மது நபிகள் குறித்து மோசமாக அவதூறு பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், டெல்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டாலும் அவருக்கு ஆதரவாக பேசினார். இவர்களின் அவதூறுப் பிரச்சாரம் என்பது, ஏதோ ஒருநாள் திடீரென்று தவறுதலாக நடந்து விட்ட செயல் அல்ல; பாஜக இதுவரை செய்து வரும் வெறுப்புப் பிரச்சாரத்தின் நீட்சியே! கடந்த உ.பி. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர், அம்மாநில முதல்வர் உள்ளிட்டோர் இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்தும் வகையிலும், மதப் பகைமையை தூண்டும் வகையிலும் பேசி வாக்குகளை அறுவடை செய்ததை நாடே அறியும். பாஜக அரசுக்கொண்டு வந்த குடியுரிமைச் சட்டமும், மத வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டதுதான். குஜராத்தில் நடந்த மதரீதியான படுகொலையை நாம் எளிதில் மறந்து விடமுடியுமா? இன்றளவும் இஸ்லாமிய மக்களின் உணவு, உடை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் குறிவைத்து பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் சங்கபரிவாரங்கள் நடத்தும் தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

முகமது நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு சர்வதேச அளவில் தீவிரமானதை உணர்ந்த பாஜக தலைமை நுபுர் சர்மாவையும், நவீன் குமார் ஜிண்டாலையும் செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கியது. அத்துடன், “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாஜக எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிப்பதையும் அல்லது இழிவுபடுத்துவதையும் நாங்கள் ஊக்குவிப்பதில்லை” என்று, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கை வைத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு தப்பிக்க நினைத்தது. ஆனால், நடந்ததோ வேறு. நாலாப்புறமிருந்தும் தொடர் எதிர்ப்புகள்.

இந்நிலையில், “இந்திய அரசு அனைத்தும் தங்களுக்கும் உச்சபட்ச மரியாதையை அளிக்கிறது. தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துகளை அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது. ஒருமத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் டுவீட்கள் மற்றும் கருத்துகள் சில நபர்களால் செய்யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வில்லை. சம்பந்தப்பட்ட கட்சிகளால் குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டது அமீரக நாடுகள். “உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் இந்திய ஆளும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு கூறுகிறது. இதனிடையே இவ்விவகாரத்தில் வளைகுடா நாடுகளிடம் இந்தியா பணிந்து போகக் கூடாது என்று சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர்.

வெறுப்பு அரசியல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டிய இந்த தருணத்தில் ஒன்றிய அரசு தேசத்திற்கும், மக்களுக்கும் பெரும் சோகத்தையும், மிகப்பெரிய சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. தேசத்தின் அதிகார மையத்தில் அமர்ந்திருக்கக்கூடிய பாஜக, ஆர்.எஸ்.எஸ். சக்திகள் அரசியல் சாசனம் குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. இவர்கள் ஆட்சி நடத்துவதற்கு அரசியல் சாசனத்தை வைத்திருக்கவில்லை. மாறாக, புல்டோசரைத்தான் வைத்திருக்கிறார்கள். புல்டோசர் என்பது இயந்திரம். ஆனால், இன்று அது வெறும் இயந்திரமல்ல; அது சில விஷயங்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஆட்சியாளர்களின் வெறுப்பு நிறைந்த, விஷம் நிறைந்த அந்த சித்தாந்தத்தை அடையாளப்படுத்துகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் கையில் மக்களைப் பிரிப்பதற்கான ஒரு அரசியல் உத்தியின் அடையாளமாக புல்டோசர் இருக்கிறது.

அரசியல் சாசனத்தை புறம் தள்ளுவதற்கான அடையாளமாக புல்டோசர் உள்ளது. மத அடிப்படையிலான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ். முன்வைத்தபோது அதை மக்களும், தலைவர்களும் நிராகரித்திருந்தாலும், மீண்டும் அந்த இலக்கை அடைவதற்கு அடையாளமாக நம் முன் புல்டோசரை வைக்கிறார்கள். நபிகள் நாயகம் குறித்து, அவதூறாக வெறுப்பு பேச்சுகளை பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களை ‘அதிகாரப்பூர்வமற்ற உதிரி நபர்கள்’ என்று கத்தாரில் இருக்கக்கூடிய இந்தியத் தூதர் கூறியிருக்கிறார். இவர்கள் உண்மையிலேயே ‘உதிரி நபர்கள் தானா? இவர்கள் இப்படிப் பேசுவதற்கான தைரியத்தை வழங்கியது யார்?’…

பற்றவைப்பதே அவர்கள்தானே!

வெறுப்பு பேச்சுக்களை முன்வைத்த பாஜகவின் பெண் செய்தி தொடர்பாளர் தனக்கு சில மிரட்டல்கள் வந்ததாகவும், உடனே தனக்கு ஆதரவு தெரிவித்து வந்த முதல் தொலைபேசி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்துதான் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார். பாஜகவின் அகில இந்திய தலைவரிடமிருந்தும், பிரதமர் அலுவலகத்தில் இருந்தும் தனக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது என்றும், மகா ராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் தொலைபேசியில் நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், நீங்கள் பேசிய வெறுப்பு பேச்சால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் துணை நிற்போம் என்று, ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இப்படி இவர்கள் தைரியமாக பேசுவதற்கு ஆட்சியில் இருப்பவர்களும், அதன் தலைவர்களும் தான் காரணம். இவர்களெல்லாம் இன்றைக்கு வெறுப்பு அரசியலின் பாதுகாவலர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரத்தினுடைய எந்த தலைவர் வாயைத் திறந்தாலும் விஷம் தான் உமிழ்கிறார்கள்.மதச்சார்பின்மையின் அடையாளம் எது இருந்தாலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. சிறுபான்மை மக்களுக்கு துரோகமாக, சனநாயகத்திற்கு விரோதமாக, கருத்து சுதந்திரத்தை முன்வைக்கும் அனைவருக்கும் எதிராக அவர்கள் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய அநாகரிகமான, வெறுப்பு பேச்சின் காரணமாகவே ஒவ்வொரு இந்தியரும் தலை குனிய வேண்டியிருக்கிறது, உலக அரங்கில் அவமானப்பட வேண்டியிருக்கிறது.

உலகமெங்கும் குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து எழுந்த வலுவான எதிர்ப்பிற்கு பின் வெறுப்பு பேச்சை பேசியவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். மதவெறியை தூண்டி வன்முறையை யாரும் ஏற்படுத்தக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. அப்படியானால் சட்டவிரோதமாக இப்படி பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை? மோடியோ, அமித்ஷாவோ இது குறித்து வாய் திறக்கவில்லை. இது பொதுவாக அவர்களிடம் நடப்பதில்லை. சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியவர்கள் பலருக்கு பாஜக உயர் பொறுப்புகளைத்தான் வழங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு, தில்லியில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்ட கபில் மிஸ்ரா போன்றவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள்! இந்நிலையில் தான் சமூக வலைதளங்களில் பாஜக-வினர் தங்களிடையே விவாதங்களை எழுப்பி வருகின்றனர். நுபுர் சர்மாவையும், ஜிண்டாலையும் நீக்கியதை பாஜகவிற்கு அவமானம் என்று குறிப்பிடும் (Shame on BJP) ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு நெருக்கடியா? பின்னடைவா?

முகம்மது நபிகள் குறித்த அவதூறு பேச்சுகளால் ஏற்பட்டிருக்கும் வளைகுடா நாடுகளின் எதிர்வினை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடியாக மாறலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். வளைகுடா நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்நிகழ்வால், இந்தியாவைப் புறக்கணிப்போம் (boycott India), இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் (boycott India products) என்ற ஹேஷ்டேக்குகள், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக டிரெண்ட் ஆகின. சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் போன்ற நாட்டின் வர்த்தக நிறுவனங்களில் இந்தியத் தயாரிப்பு பொருட்கள் கடைகளிலிருந்து அகற்றப்பட்டன. இந்தியத் தயாரிப்புகள் விற்கப்படும் கடைகளில் இந்தியப் பொருட்கள் மீது தடை செய்யப்பட்ட பொருட்கள் என்றும், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதனை நாம் செய்திகள் வழியாக அறிந்தோம்.

மேலும், ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 15-க்கும் அதிகமான நாடுகள், நபிகள் குறித்த இந்திய ஆளும் கட்சித் தலைவர்களின் பேச்சு குறித்து, தங்களின் கண்டனத்தையும் பதிவு செய்தும், இந்தியத் தூதர்களை அழைத்து விளக்கமும் கேட்டுள்ளனர். வளைகுடா நாடுகள் விவகாரத்தில் பாஜக அரசு எதையும் கண்டுகொள்ளாமலோ அல்லது முறித்துப் பேசிவிடவோ முடியாது. அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. முக்கியமாக மூன்று காரணங்களைக் குறிப்பிடலாம்.

ஒன்று, அடிப்படைத் தேவைகளுக்கான சார்பு நிலை : இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு ஆதாரங்கள் இல்லை. எனவே, சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளை நம்பியே இந்தியா உள்ளது. உதாரணத்திற்கு, அரபு நாடுகள் ஒரு மாதத்திற்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினால் இந்தியா மொத்தமும் முடங்கிவிடும் நிலை உள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இந்தியாவின் ஒருநாளுக்கான பெட்ரோலியப் பொருட்களின் தேவையில், 60 விழுக்காடு வளைகுடா நாடுகளிலிருந்தே பெறப்படுகிறது. குறிப்பாக, ஈராக், சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டுமே 50 விழுக்காடு பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, பெட்ரோலியப் பொருட்களுக்காகவாவது, இந்தியா வளைகுடா நாடுகளுடனான தனது உறவை சுமூகமாக வைத்திருப்பது அவசியம். 2018 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குள் வந்த பணம் குறித்த, ரிசர்வ் வங்கியின் ஆய்வானது, வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றமொத்தப் பணப்பரிமாற்றங்களில் 82 விழுக்காடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய ஏழு நாடுகளிலிருந்து வந்ததாக சொல்கிறது. இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா கத்தாரில் இருந்து ஆண்டுக்கு 8.5 மில்லியன் டன் எல்என்ஜி-யை இறக்குமதி செய்கிறது. தானியங்கள் முதல் இறைச்சி, மீன், இரசாயணங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வரை ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையிலான இருவழி வர்த்தகம் 2020-21 இல் 9.21 பில்லியன் டாலரிலிருந்து, 2021- 22 இல் 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகள், தங்களது உணவுப் பொருள் தேவையில் 85 விழுக்காடு இறக்குமதி செய்கின்றன. அதில் இந்தியாவிலிருந்துதான் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, அரிசி, மாட்டிறைச்சி, மசாலா பொருட்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை போன்ற பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு, வளைகுடா நாடுகளும், இந்தியாவும் வர்த்தகம் மற்றும் பிற விஷயங்களில் இணைந்து செயல்பட அதிகத் தேவை உள்ளது.

இரண்டாவது, வளைகுடா நாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்கள் : வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சம்பாதித்து இந்தியாவிற்கு அனுப்பும் பணம் ஆண்டுதோறும் 6 லட்சம் கோடி ரூபாய். இந்த தொகையில் 50 விழுக்காட்டிற்கும்மேல் வளைகுடா நாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது. வெளிநாடுகளில் தங்கிப் பணியாற்றும் 3 கோடியே 20 லட்சம் (32 மில்லியன்) இந்தியர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் அரபு நாடுகளில்தான் பணியாற்றுகின்றனர். அதிலும் குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள். வளைகுடா நாடுகளில் மட்டும் மொத்தம் 89 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்தியர்கள் பெரிய தொழில் நிறுவனங்களையும், உணவகங்களையும் நடத்தி வருகின்றனர். நுபுர் சர்மா போன்றோரின் பேச்சுகளுக்கு எதிராக அரபு நாடுகள் நடவடிக்கை எடுத்தால் இந்தியர்கள் பலகோடி பேர் வேலை இழக்க நேரிடும். இவர்களுக்கு இந்திய அரசால் வேலை கொடுக்க முடியுமா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே.

மூன்றாவது, பொருளாதார நலன்சார் திட்டங்கள்: இன்னொரு உண்மையை நான் நினைவூட்ட விழைகிறேன். கடந்த, பிப்ரவரி 2022 இல் இந்திய அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமானது (CEPA) இந்திய அரசு, வளைகுடா கூட்டமைப்பு நாடுகளுடன் (GCC) மேற்கொண்டுள்ள மிகப்பெரிய ஒப்பந்தமாகும். 2021-22 இல் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக ஐக்கிய அரபு எமிரேட் இருந்தது. சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகியவை இந்தியாவின் முதல் 25 வர்த்தக பங்குதாரர்களில் இடம் பிடித்துள்ளன. 2021- 22 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தக மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்துள்ளது. 2026 ஆம் ஆண்டிற்குள் 7 லட்சம் கோடி அளவிற்கு வர்த்தகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா கடந்த நிதியாண்டில் இந்தியாவின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடாக இருந்தது. இருதரப்பு மொத்த வர்த்தகம் முந்தைய நிதியாண்டில் 22 பில்லியன் டாலரிலிருந்து 2021-22 இல் சுமார் 43 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பாஜக-விற்கு நாமும் பாடம் புகட்டுவோம்:

அமீரக நாடுகளின் எதிர்ப்புக் குரல்கள் ஏதோ திட்டமிட்டு ஒரு சிலரால் இந்திய ஒற்றுமைக்கு எதிராகப் பரப்பப்படுவதாகவும், ஒட்டு மொத்த இந்தியாவையே வளைகுடா நாடுகள் எதிர்ப்பதாகவும் சில வகையறாக்கள் பேசி வருவதும் ஒரு அரசியலே. 2014 இல் பிரதமராக மோடி பொறுப்பேற்றதிலிருந்து இந்நாடுகளுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலும், ஜிசிசியுடனான விரிவான ஒப்பந்தத்திற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஏன், 2018 ஆம் ஆண்டில், அபுதாபியில் முதல் இந்து கோயிலின் பிரபலமான முன்மாதிரி நிகழ்ச்சியில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்தியா மற்றும் அந்நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுக்கு இவையெல்லாம் உதாரணம். மதரீதியாக நாட்டை பிளவு படுத்தி, சிறுபான்மையினரை வதைக்கும் மோடியின் பாஜக ஆட்சியைத்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதனை நாம் நன்கு புரிந்து கொள்வோம்.

நல்லுறவிற்கு பங்கம் விளைவிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் சங்கிகளையும், அவர்களது நிகழ்ச்சி நிரல்களை அரங்கேற்றும் பாஜக - வின் ஆட்சியையும் தான் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். “இந்தியா உள்ளிட்ட நாகரிகங்கள் மற்றும் தேசங்களைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாமின் பங்கையும், இஸ்லாமின் அமைதியான தன்மையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை இத்தகைய பேச்சுகள் தெளிவாகக் காட்டுகின்றன” என்று, குவைத் அமைச்சகம் கூறுகிறது. “இத்தகைய இஸ்லாமிற்கு எதிரான வெறுப்புகருத்துகளுக்கு தண்டனையே வழங்காமல் அவற்றை தொடர அனுமதிப்பது, மனித உரிமைகள் பாதுகாப்பு மீதான கடும் ஆபத்துகளை ஏற்படுத்தும். மேலும், முஸ்லிம்கள் மீதானதவறான அபிப்ராயங்கள் வளரவும், அவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதற்கும் வழிவகுக்கும். இது வன்முறை மற்றும் வெறுப்பு சுழற்சியை உருவாக்கும்” என கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

எனவே, மீண்டும் ‘இந்தியா - இந்து’ என்கிற போர்வையில் தங்கள் கயமைத்தனங்களை மூடி மறைக்கும் பாஜக - வின் ஆட்டம் பலிக்காது. மனித நேயத்திற்கு எதிராக, மனித உரிமைகளுக்கு எதிராக யார் எவ்வித வன்முறைகளைத் தொடுத்தாலும் அவற்றை நாட்டின் உள்விவகாரம் என்று சுருக்கிக் கொள்ளாமல், ஒட்டுமொத்த மானுட உரிமை என்கிற ரீதியில் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பை நாடுவது நலம் பயக்கும் என்கிற பாடத்தை நாம் இச்சம்பங்களில் கற்றுக் கொள்கிறோம். அத்தோடு, இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒன்றுமையை உயர்த்திப் பிடித்து பாஜக பரிவாரத்தை தொடர்ந்து எதிர்த்து போராட வேண்டும். அப்போது தான் மதவெறியர்களின் கருத்துக்கு எதிராகவே மதச்சார்பற்ற இந்தியா நிற்கிறது என்பதனை நாம் நிரூபிக்க முடியும். அதுவே, இந்திய இறையாண்மையைக் காக்க ஒரே வழி!

Comment