No icon

Apr 3

Moracco - Thiruthaiyin 28th Thiruthoodhu Payanam - Special Report

மொராக்கோ திருத்தந்தையின் 28வது திருத்தூதுப் பயணம்

முதல் நாள்
மன்னர் 6 ஆம் முகம்மது நிறுவனத்தில் நிகழ்ந்த சந்திப்பை முடித்து, அங்கிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள மறைமாவட்டக் காரித்தாஸ் மையம் நோக்கி திருத்தந்தை பிரான்சிஸ் காரில் பயணமானார். மொராக்கோவின் காரித்தாஸ் மையம், அந்நாட்டு மக்களுக்குக் குறிப்பாக, மாற்றுத்திறனாளிக்கு பணியாற்று வதோடு, வெளிநாடுகளிலிருந்து மொராக்கோ நாட்டில் அடைக்கலம் தேடி வருவோருக்கும் சிறப்பான பணியாற்றி வருகிறது.

காரித்தாஸ் மையத்தில் புலம் பெயர்ந்தோர், மற்றும் குடிப்பெயர்ந்தோருடன் சந்திப்பை மேற்கொள்ளச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மொராக்கோவின் டாஞ்சர்  உயர்மறைமாவட்டத்தின் பேராயர் சாண்டியாகோ அக்ரல்லோ மார்டீனஸ்  வரவேற்றுப் பேசினார். அங்கு குழுமியிருந்த 80 புலம்பெயர்ந்தோரின் பிரதிநிதியாக ஒருவர் தன் வாழ்வுச் சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டார். பின்னர், திருத்தந்தை அங்கிருந்தோருக்கு தன் உரையை வழங்கினார்.
காரித்தாஸ் மையத்தில் நடைபெற்ற சந்திப்பை நிறைவு செய்து, மாலை 7 மணிக்கு, அங்கிருந்து 8.8 கி.மீ. தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகத்திற்குத் திருத்தந்தை சென்றார்,.தூதரகத்திற்கு முன் நிறையக் குழந்தை
களும், கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களும் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அவர் களுடன் சிறிது நேரம் பேசியத் திருத்தந்தை, அங்கிருந்த குழந்தைகளை கையில் வாங்கி, முத்தமிட்டார். இத்துடன் மொராக்கோ நாட்டில் திருத்தந்தையின் முதல் நாள் பயண நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

இரண்டாம் நாள்
இரண்டாம் நாள் நிகழ்வுகள், ஞாயிறன்று காலை 8.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 1 மணிக்குத் துவங்கின.
திருப்பீடத் தூதரகத்தின் அதிகாரிகளையும், பணியாளர்களையும் சந்தித்து நன்றி கூறி விடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ’சமூகப்பணி கிராம மையம்’ என்ற நிறுவனத்திற்குச் சென்றார். ’பிறரன்பு புதல்வியர்’ என்ற துறவு சபை சகோதரிகளால் நடத்தப்படும் இந்நிறுவனத்தில், கல்வி, மழலையருக்குத் தங்கு மிடம், நலவாழ்வு உதவிகள் என்ற பல பணிகள் நடைபெறுகின்றன. இம்மையத்திற்குச் சென்ற திருத்தந்தை நோயுற்ற குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும் சந்தித்து ஆசி வழங்கியபின், அங்கிருந்து 20.5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயம் நோக்கிச் சென்றார்.
1919 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, 1921 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி திருநிலைப்படுத்தப்பட்ட இந்தப் பேராலயம், ரபாட் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு, அருள்பணியாளர் கள், இருபால் துறவியர், கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைகளின் உறுப்பினர்கள் ஆகியோரைத் திருத்தந்தை சந்தித்தார்.
இச்சந்திப்பின் ஆரம்பத்தில், அருள் பணி ஜெர்மெயின் அவர்களும், அருள்சகோதரி மேரி அவர்களும் தங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள, திருத்தந்தை அங்கிருந்தோருக்குத் தன் உரையை வழங்கினார்.அருள்பணியாளர், துறவியர், கிறிஸ்தவ சபைப் பிரதி நிதிகளுடன் திருத்தந்தை மேற்கொண்ட இச்சந்திப்பிற்கு உள்ளூர் நேரம் பகல் 12 மணியளவில், திருப்பீடத் தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை அத்தூதரகத்தில், மொராக்கோ நாட்டு ஆயர்களோடும், தன்னோடு பயணம் செய்த திருப்பீட அதிகாரிகளோடும் மதிய உணவு அருந்தினார்.
மதிய உணவுக்குப்பின், இளவரசர் மௌலாய் அப்தெல்லா விளையாட்டரங்கத்திற்கு சென்று, அங்கு கூடியிருந்த கத்தோலிக்கர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார்.

புலம்பெயர்ந்தோர் நடுவே திருத்தந்தை பிரான்சிஸ்
மொராக்கோ திருப்பயணத்தில் காரித்தாஸ் மையத்தில் புலம் பெயர்ந்தோர்- அகதிகள் மத்தியில் திருத்தந்தை ஆற்றிய உரை.
அன்பு நண்பர்களே, மொராக்கோ அரசில் உங்களைச் சந்திக்கவும், உங்களோடுள்ள  என் நெருக்கத்தை வெளிப்படுத்தவும் கிடைத்த இந்த வாய்ப்பைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். புலம் பெயர்தல், மற்றும் குடிபெயர்தல் ஆகியவை 21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இவ்வுலகைத் துன்புறுத்திவரும் ஓர் ஆழமான காயம். இந்த வேதனைச் சூழல் குறித்து யாரும் அக்கறையின்றி இருக்க இயலாது. நம் குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்வை உருவாக்கித் தருவது நம் அனைவரின் கடமை.
பாதுகாப்பான, ஒழுங்கான குடிபெயர்தலைக் குறித்த ஓர் ஒப்பந்தம், சில மாதங்களுக்கு முன், மொராக்கோ நாட்டின் மரக்கேஷ் நகரில், கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம், புலம் பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோரைக் குறித்து மட்டும் பேசவில்லை, மாறாக, நம் அனைவரைக்குறித்தும் பேசுகிறது.
நம் சமுதாயம், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் அடைந்துள்ள பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து பெருமை கொள்ளலாம். ஆனால், மனித வாழ்வை மையப்படுத்தி நடைபெறும் முன்னேற்றங்களே, உண்மையான முன்னேற்றங்கள். நம் தனிப்பட்ட மகிழ்வை மட்டுமே மையப்படுத்தி, மற்றவர்கள் துன்பத்தைக் காண மறுக்கும் முன்னேற்றங்களையே இன்றைய உலகம் முதன்மைப்படுத்துகிறது. பரிவை இழந்து முன்னேற்றம் அடையும் ஒரு பெரு நகரம், உலர்ந்துபோன, இதயமற்ற சமுதாயமாக, குழந்தைப்பேறு அற்ற தாயாக மாறிவிடும்! குடிபெயர்ந்து வாழும் நீங்கள் சமுதாயத்தின் விளிம்பில் வாழவில்லை, மாறாக, திருஅவையின் இதயத்தில் வாழ்கிறீர்கள். புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர் குறித்த ஒப்பந்தம், ஏற்பது, காப்பது, முன்னேற்றுவது, இணைப்பது என்ற நான்கு வினைச்சொற்களைக் கொண்டு செயல்படவேண்டும்.
ஏற்பது அல்லது வரவேற்பது என்று சொல்லும்போது, அது, புலம்பெயர்ந்தோரையும், குடிபெயர்ந்தோரையும் வரவேற்க, மேலும், மேலும் பல வழிகளைத் திறப்பதாகும். இவ்வாறு நாம் செய்யத் தவறினால், மனித வர்த்தகத்தை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்குச் சமம்.
காப்பது என்றால், குடிபெயர்ந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோர் வரும் வழிகளில் நடைபெறும் வன்முறைகளைத் தடுத்து, அவர்களுக்குத் தேவையான சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்குவதாகும். இத்தகைய பாதுகாப்பு, இம்மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும்.
முன்னேற்றுவது என்றால், குடிமக்களும், குடிபெயர்ந்தோரும் இணையாக வாழும் ஒரு சூழலை உருவாக்கித் தருவதாகும். ஒவ்வொரு மனிதரும் மாண்புடையவர்கள் என்ற அடிப்படை உண்மையின் மீது, முன்னேற்றுவது என்ற செயல்பாடு மேற்கொள்ளப்படவேண்டும்.
இணைப்பது என்று சொல்லும்போது, குடிபெயர்ந்தோர் மற்றும் குடிமக்கள் இருசாரரும் தங்கள் தனிப்பட்ட கலாச்சாரங்களை மதித்து, ஒருவரையொருவர் ஏற்று வாழ்வதாகும். இத்தகைய சூழலில், ஒருங்கிணைந்த, செறிவு மிகுந்த கலாச்சாரம் உருவாக வாய்ப்புண்டு.
எனவே, நாம் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பயணம் ஒன்று உள்ளது. இந்தப் பயணத்தில், குடிமக்கள், குடிபெயர்ந்தோர் அனைவரும் இணைந்து, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்கிறோம்.
குடிபெயர்ந்துள்ள நண்பர்களே, உங்கள் துயரங்களை, திருஅவை நன்கு உணர்ந்துள்ளது. உங்களோடு பயணிக்கவும், உங்களோடு இணைந்து துன்பங்களைத் தாங்கவும் தயாராக உள்ளது. நம் ’பொதுவான இல்லத்தில்’ அனைவரும் வாழவும், கனவுகள் காணவும், எதிர்காலத்தை உருவாக்கவும் உரிமைகள் கொண்டிருக்கிறோம்.
குடிபெயர்ந்தோருக்காகப் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக, காரித்தாஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. இறைவனின் இரக்கத்தை நம் சகோதரர், சகோதரிகளுக்குக் காட்டும் பணியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்.
தன் வாழ்நாளில், அந்நிய நாட்டில் குடி பெயர்தல் என்ற துன்பத்தை உணர்ந்த ஆண்டவர், உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! நீங்கள் நம்பிக்கை இழக்காமல், அதே வேளையில், ஒருவருக்கொருவர் புகலிடமாகத் திகழ, அவர் உங்களுக்குச் சக்தி வழங்குவாராக!

எருசலேம் நகரம் மும்மதங்களுக்குப் பொதுவான நகரம்
திருத்தந்தையின் மெராக்கோ திருப்பயணத்தின்போது, விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, அந்நாட்டு மன்னரின் மாளிகைக்குள் திருத்தந்தை நுழைந்ததும், அவருக்கு, அரச மெய்க்காப்பாளர் படை, அணி வகுப்பு மரியாதை செலுத்தியது. இதைத் தொடர்ந்து, அரச குடும்பத்தினர், திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திருத்தந்தையும், மன்னரும் ஒருவருக்கொருவர் நினைவுப் பரிசுகளைப் பகிர்ந்து
கொண்ட பின்னர், இருவருக்குமிடையே, தனி அறையில் சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்பில், ஒரு முக்கிய நிகழ்வு இடம்பெற்றது. ஆம், மன்னர் ஆறாம் முகம்மது அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இணைந்து, எருசலேம் நகரைக் குறித்த ஓர் அறிக்கையை விண்ணப்பமாக வெளியிட்டனர்.
“எருசலேம் நகரின் தனித்துவம், அதன் ஆன்மிக முக்கியத்துவம், அமைதியின் நகரம் என்ற அதன் தனித்துவமான அடையாளம் போன்றவற்றை மனத்தில் கொண்டு, அந்நகரைக் குறித்து இந்த விண்ணப்பத்தை வெளியிடுகிறோம். மனித குலத்தின், குறிப்பாக, கடவுள் ஒருவர்தான் என்ற மத நம்பிக்கை கொண்ட மும்மதங்களின் பாரம்பரியக் கருவூலமாக விளங்கும் இந்நகர், கருத்துப் பரிமாற்றம் மற்றும் அமைதி உடன் வாழ்வு ஆகியவற்றின் இடமாக விளங்கி, ஒருவருக்கொருவர் மதிப்பையும், உரையாடலையும் வளர்க்கும் தலமாகத் தொடரவேண்டும் என்று ஆவல் கொள்கிறோம். இதன் காரணமாக, இந்நகரின் பல்சமயப் பண்பும், ஆன்மிகப் பரிமாணமும், கலாச்சாரத் தனித்துவமும் பாதுகாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படவேண்டும். கடவுள் ஒருவர்தான் என்ற மத நம்பிக்கை கொண்ட மும்மதங்களைப் பின்பற்றுவோரும் எருசலேம் வழிபாட்டுத் தலங்களை தரிசித்து, உலகில் அமைதியும், உடன்பிறந்த உணர்வும் நிலவ, இறைவனை நோக்கி செபங்களை எழுப்பும் சுதந்திரம் உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம்" என்ற சொற்கள் அடங்கிய இந்த விண்ணப்பத்தில், மொராக்கோவின் மன்னர் 6 ஆம் முகம்மது அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இணைந்து கையெழுத்திட்டு வெளியிட்டனர்.
மொராக்கோ நாட்டில் இருநாள் திருத்தூதுப் பயணத்தை, சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இரண்டாம் டூர் ஹசான் வளாகத்தில், அந்நாட்டு மன்னர், ஆறாம் முகமது வழங்கிய அரச வரவேற்பு நிகழ்வில் முதலில் கலந்துகொண்டார். பின்னர், நவீன மொராக்கோவின் தந்தை என்றழைக்கப்படும் மறைந்த மன்னர் ஐந்தாம் முகம்மதுவின் சமாதி நிறுவப்பட்டிருக்கும் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் ஒன்றை வைத்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து வெளியேறும்முன், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வை யாளர் பதிவேட்டில், “மொராக்கோ நாட்டின் வளத்திற் காகவும், கிறிஸ்த வர்களுக்கும், இஸ்லாமி யருக்கும் இடையே உடன் பிறந்த உணர்வும், ஒருமைப்பாடும் வளரவேண்டும் எனவும் இறைவனை நோக்கி வேண்டுகிறேன். எனக்காகச் செபியுங்கள்” என்ற சொற்களை எழுதி திருத்தந்தை கையெழுத் திட்டார். அந்த நினைவிடத்திலிருந்து 3.6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மன்னர் மாளிகை நோக்கி திருத்தந்தை பயணமானார், .
அரசுத்தலைவர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அங்கிருந்து  8.2 கி.மீ. தூரத்திலுள்ள 6 ஆம் முகம்மது நிறுவனம் நோக்கி காரில் பயணமானார், மத சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாம் மதத்தை உலகில் பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஆறாம் முகம்மது நிறுவனம், 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. மொராக்கோ நாட்டில் காசாபிளான்கா நகரில், 2003 ஆம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மதச் சகிப்புத்தன்மையை வளர்க்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம், மன்னர் ஆறாம் முகம்மது அவர்களின் உள்ளத்தில் தோன்றியது. தீவிரவாதப் போக்குகளைக் களையவும், மதச் சகிப்புத்தன்மையை வளர்க்கவும் இஸ்லாம் மதத்தலைவர்களுக்கு உதவும் நோக்கத்தில், அவர்களுக்குப் பயிற்சி வழங்க, 2015 ஆம் ஆண்டு, மன்னர் ஆறாம் முகம்மது இதனை நிறுவினார்.
இந்நிறுவனம் துவக்கப்பட்டதி லிருந்து, ஆப்ரிக்காவின் மாலி, செனெகல், ஐவரி கோஸ்ட், கினி, நைஜீரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். மன்னர் ஆறாம் முகம்மது நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சமய விவகாரங்கள் துறையின் அமைச்சர், முதலில் திருத் தந்தையை வரவேற்றுப் பேசினார். இருமாணவர்களின் சாட்சிய உரை
களும் இங்கு இடம்பெற்றன. இறுதியில், மன்னர் ஆறாம் முகம்மது அவர்கள், திருத்தந்தையை வாகனம் வரை வந்து வழியனுப்பி வைத்தார். மொராக்கோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள அழைப்புவிடுத்து, அவரை வரவேற்று கௌரவித்த மன்னர் ஆறாம் முகம்மது, 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் துவங்கிய அலாவிட்  அரசப் பரம்பரையின் 23வது மன்னராவார்.
மொராக்கோ திருப்பயண நிறைவு
தன் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, இஸ்லாமிய நாடான மொராக்கோவில், மார்ச் 30, சனிக்கிழமை காலை தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் நகர், மும்மதங்களுக்கும் பொதுவான புனித நகரம் என்ற தனித்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தில், மன்னர் 6 ஆம் முகம்மது அவர்களுடன் இணைந்து கையெழுத்திட்டது உட்பட, பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு, ஞாயிறு இரவு, வத்திக்கான் திரும்பினார்.
மொராக்கோ நாட்டின் வளத்திற்காகவும், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே உடன்பிறந்த உணர்வும், ஒருமைப்பாடும் வளரவேண்டும் எனவும் இறைவனை நோக்கி வேண்டுகிறேன் என தன் திருப்பயணத்தின்போது திருத்தந்தை ஆவலை வெளியிட்டிருந்தார். அந்த இஸ்லாமிய நாட்டின் அனைத்து மக்களுக்காக, பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகளை ஆற்றிவரும் தலத்திருஅவையின் சமூகப்பணி மையத்திற்குச் சென்று, அங்கு பராமரிக்கப்படும் நோயுற்ற குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும், திருத்தந்தை சந்தித்து, ஆறுதல் கூறியது, மனத்தைத் தொடுவதாக இருந்தது என சமூகத் தொடர்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மொராக்கோ நாட்டில் புகலிடம் தேடிய அண்டை நாட்டு மக்களுள் 80 பேரை சந்தித்து உரையாடிய திருத்தந்தை, முன்னேற்றம் என்றால் குடிமக்களும், குடிபெயர்ந்தோரும் இணையாக வாழும் ஒரு சூழலை உருவாக்கித் தருவதேயாகும் என்பதை வலியுறுத்தினார்.
ரபாட் நகரின் மையத்திலுள்ள புனித பேதுரு பேராலயத்தில் அந்நாட்டு அருள்பணியாளர்களையும் துறவியரையும் சந்தித்த திருத்தந்தை, நாம் அனைவரும் ஒரே தந்தையின் மக்கள்; உடன்பிறந்தோர் என்ற உணர்வை சமூகத்தில் வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த அருள்பணியாளர்கள் சந்திப்பின்போது அல்ஜீரியா துறவு மடத்திலிருந்து அருள்பணி ஜீன் பியரே சூமாக்கர் என்பவரும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 95 வயதுடைய இவர், 1996 ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட 7 டிராப்பிஸ்ட் துறவிகளோடு வாழ்ந்து அந்த ஆபத்திலிருந்து அதிசயமான முறையில் தப்பித்தவர்.
தன் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நிகழ்வான திருப்பலியின் இறுதியில், மன்னருக்கும் மொராக்கோ நாட்டு மக்களுக்கும் தன் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்து அங்கிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் விடைபெற்றார்.
ஞாயிறு இரவு உள்ளூர் நேரம் 9.30 மணியளவில், அதாவது இந்திய நேரம் நள்ளிரவு ஒரு மணியளவில் உரோம் விமான நிலையம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்து நேராக புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று, அன்னை மரியாவின் திருவுருவத்தின் முன் சிறிது நேரம் செபித்து நன்றி கூறியபின், வத்திக்கான் வந்தடைந்தார். இத்துடன், அவரது 28வது வெளிநாட்டுத் திருதூதுப்பயணம் நிறைவுக்கு வந்தது.

Comment