No icon

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியீடு

இளையோரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது மடலை, மார்ச் 25 ஆம் தேதி அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் கையொப்பமிட்டுள்ளார். (இது குறித்து அருள்முனைவர் லூ.சகாயராஜ் அவர்கள் ஒரு சிறு கட்டுரைப் படைத்துள்ளார். படிக்கவும்).

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 முதல் 28 ஆம் தேதி வரை வத்திக்கானில், “இளையோர், நம்பிக்கை, அழைத்தலைப் பகுத்தறிதல்” என்னும் தலைப்பில் உலக ஆயர் பேரவை நடைபெற்றது நமக்கு நினைவிருக்கலாம். அப்பேரவையில் விவாதிக்கப்பட்ட மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் “கிறிஸ்து வாழ்கிறார்” என்னும் திருத்தூது அறிவுரை மடலை வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி, புனித இரண்டாம் ஜான் பால் இறந்த நினைவு தினத்தன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடுகிறார். மார்ச் மாதம் 25ஆம் தேதி, கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பெருநாள் அன்று இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற மரியன்னையின் திருத்தலமான லொரேட்டாவுக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு திருப்பலி நிகழ்த்திய பின் இத்திருத்தூது அறிவுரை மடலில் கையெழுத்திட்டார்.  இளையோருக்கான
இத்திருத்தூது அறிவுரை மடல் ஏப்ரல் 2 ஆம் தேதி புனித இரண்டாம் ஜான் பால் இறந்த நினைவு தினத்தன்று வெளியிடப்படுவது சாலப்
பொருத்தமானது. திரு அவையில் இளையோருக்கு முக்கியத்துவம் கொடுத்த திருத்தந்தை, புனித  இரண்டாம் ஜான் பால் அவர்கள், உலகம் முழுவதும்
உள்ள இளையோருக்குப் பல்வேறு சூழல்களில் கடிதங்கள் எழுதி அவர்களது வாழ்க்கையில் தன்னம் பிக்கையையும் இறை நம்பிக்கை ஒளியையும் ஏற்றிவைத்தவர். அகில உலக இளையோர் மாநாட்டை அறிமுகப்படுத்தியவரும் அவரே. ஆக, இளையோர் மீது அக்கறையும் அன்பும் கொண்ட புனித இரண்டாம் ஜான் பாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மடலாகவே இத்திருத்தூது அறிவுரை மடல் அவரது நினைவு நாளில் வெளி
வருகிறது எனலாம். மூன்று கட்டங்களாக நடை பெற்ற உலக ஆயர் பேரவையின் தொடர்
அமர்வைப் பிரதிபலிக்கும் விதமாக இத்திருத் தூது அறிவுரை மடல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது: செவிசாய்த்தல், பகுத் தறிதல், முடிவெடுத்தல். கிறிஸ்து பிறப்பு அறிவிப்பிலே நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக
வைத்து இம்மூன்று பகுதிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கம் தந்துள்ளார். 
செவிசாய்த்தல்
“மரியா, அஞ்ச வேண்டாம், கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்னும் வானதூதர் கபிரியேலின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு செவிசாய்த்தலைப் பற்றி விளக்குகிறார் திருத்தந்தை. தம்மைப் பின்பற்றி வாழும்படி இறைமக்களை எப்பொழுதும் தாமாக முன்வந்து அழைப்பவர் கடவுள். கடவுளின் அழைப்பை இளையோர் கேட்க முன்வர வேண்டும். அவரது குரலையும் அழைப்பையும் சந்தடியும் கிளர்ச்சியும் நிறைந்த இடத்திலோ, சூழலிலோ கேட்க முடியாது. அமைதியும் தெளிவும் உள்ள இடம் மற்றும் சூழலில்தான் கேட்க முடியும். எனவே இளையோர் அமைதியைத் தேடுபவர்களாக வாழ வேண்டும். அமைதியான சூழலில்தான் கடவுளின் திட்டத்தை அறிய முடியும்.தனிப்பட்ட வாழ்வு மற்றும் சமூக வாழ்வில் தங்களுக்கான கடவுளின் திட்டத்தை, மேலோட்டமான வாழ்வில் கண்டறிய முடியாது. மாறாக, நல்லொழுக்க மற்றும் ஆன்மிக சக்திகள் செயல்படும் ஆழமான தளங்களில் மடடுமே கடவுளின் குரலைத் தெளிவாக கேட்க முடியும். இளையோர் அத்தகைய தளங்களுக்கு இறங்கி செல்ல வேண்டும் எனவும்,  அத்தகைய ஆழமான தளங்களுக்குப் பயணம் சென்று கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்க மரியா ஒவ்வோர் இளையோரையும் அழைப்பதாகவும்  திருத்தந்தை கூறுகிறார். 
பகுத்தறிதல்
வானதூதர் கபிரியேலின் கேள்விக்கு மரியா தந்த பதிலில் அவரது பகுத்தறியும் திறன் வெளிப்படுகிறது. “இது எப்படி நிகழும்?” என மரியா வினவுகிறார். மரியாவுக்குக் கடவுளின் திட்டத்தில் சந்தேகம் இல்லை. அவரது கேள்வியில் அவரது நம்பிக்கையின்மை வெளிப்படுகிறது எனக் கூறுவதும் தவறு. மாறாக, கடவுள் தம் வாழ்வில் வெளிப்படுத்தும் ஆச்சரியங்களைக் கண்டுகொள்ள தமக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார் மரியா.  கடவுள் தமக்கு வகுத்துள்ள திட்டத்தின் கூறுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளவும், அதற்குத் தமது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கவும் மரியா முற்படுவதைத்தான் அவரது கேள்வி சுட்டிக்காட்டுகிறது எனத் திருத்தந்தை கூறுகிறார். கடவுளின் அழைப்புக்குச் செவிசாய்க்க இத்தகைய மனநிலையே சரியானது. ஏனெனில் இத்தகைய மனநிலையில் உள்ளோர்தாம் தங்களுக்கான கடவுளின் திட்டத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்வதோடு, கடவுளின் திட்டத்தைத் தம் வாழ்வில் செயல்படுத்த உதவியாக இறையருள் தமது திறமைகளையும் ஆற்றலையும் மேம்படுத்துகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய பகுத்தறியும் திறனை ஒவ்வோர் இளையோரும் தம்மில் எப்படி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தமது திருத்தூது அறிவுரை மடலில் திருத்தந்தை விளக்குகிறார். 
முடிவெடுத்தல்
வானதூதர் கபிரியேலின் கேள்விக்கு மரியா தந்த பதிலில் அவரது முடிவெடுக்கும் திறனும் வெளிப்படுகிறது. முடிவெடுத்தல் என்பது கிறித்தவ வாழ்வில் கடவுளின் அழைப்புக்குச் செவிசாய்க்கும் மிக முக்கியமான கூறாகும். “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று மரியா கூறுகிறார். “ஆம்" என்னும் தமது பதிலினால் தமது முழு வாழ்வையும் மரியா இறைத்திட்டத்துக்கு அர்ப்பணிக்கிறார். கடவுளில் முழு நம்பிக்கை மற்றும் கடவுளின் திருவுளத்துக்குத் தம்மை முற்றிலும் கையளிப்பது ஆகியன அவரது இந்தப் பதிலில் வெளிப்படுகிறது. இவ்வாறு, மரியா சீடத்துவ வாழ்வுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும், கடவுளின் திட்டத்தைத் தம் வாழ்வில் தேடும் ஒவ்வோர் இளையோரும் அவரைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றும் திருத்தந்தை கூறுகிறார். மகளாக, மணமகளாக, தாயாக, மரியா பல்வேறு நிலைகளில் கடவுளின் திட்டத்துக்குச் செவிசாய்த்து வாழ்ந்து காட்டியுள்ளார். அவரைப் போன்று இளைஞரும் தம் வாழ்வின் பல்வேறு நிலைகளில், சூழல்களில் கடவுளின் திட்டத்துக்குச் செவிசாய்த்து வாழ திருத்தந்தை இத்திருத்தூது அறிவுரை மடலில் அறிவுறுத்துகிறார். 
இன்றைய நவீன உலகில் பல்வேறு சவால்கள் மத்தியில், குறிப்பாக நம்பிக்கையின்மை நிறைந்த சூழல்களில் வாழும் இளையோருக்கு வழிகாட்டும் மடலாக இத்திருத்தூது அறிவுரை மடல் அமைந்திருப்பது கடவுள் இளைய சமுதாயத்துக்குத் தந்துள்ள மாபெரும் பரிசு எனலாம்.

Comment