Life History
துன்புறுத்தப்படும் மக்கள் பற்றி நினைக்கின்றேன் - திருத்தந்தை
- Author Fr.Gnani Raj Lazar --
- Thursday, 26 Nov, 2020
இந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ள நூல் ஒன்றில், நாடுகளில் துன்புறுத்தப்படும் மக்களை, குறிப்பாக, ரோஹிங்யா, யாசிடி ஆகிய இன மக்களை அடிக்கடி நினைத்துப் பார்க்கின்றேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்டன் இவ்ரெய் என்ற எழுத்தாளரின் துணையுடன், “கனவு காண்போம்: சிறந்த வருங்காலத்திற்குப் பாதை” (டுநவ ரள னுசநயஅ: கூhந ஞயவா வடி ய க்ஷநவவநச குரவரசந) என்ற தலைப்பில் வெளியாகவுள்ள 150 பக்கங்கள் கொண்ட நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நூலில், இஸ்லாமிய நாடுகளில் துன்புறும் மக்கள் பற்றிய பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மியான்மார் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ள ரொஹிங்யா இன முஸ்லிம்கள், ஈராக்கில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் கொல்லப்படும் யாசிடி இன மக்கள், சீனாவில் துன்புறும் உயுக்கூர் சிறுபான்மை இன முஸ்லிம்கள் ஆகியோர் பற்றி கூறியுள்ளார்.
வயதுவந்த குடிமக்கள் ஒவ்வொருவரும் எவ்வித வரையறையும் இன்றி, ஒரு குறிப்பிட்ட நிதியுதவியை, தவறாமல் பெறும் முறையில், நிலையான வைப்பு நிதித் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, கொரோனா கொள்ளைநோய் ஒழிக்கப்பட்டபின் இடம்பெறும், சமத்துவமின்மைகளைக் களைவதற்கு, பொருளாதார, சமுதாய மற்றும், அரசியல் ஆகிய துறைகளில் மாற்றங்கள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.
இந்த கொள்ளைநோய் முடிவுற்ற காலத்தில், ஊதியமின்றி இருக்கும் தொழிலாளர் சமுதாயத்தின் நிலையை உணரவேண்டியது மிகவும் முக்கியம் என்றும், திருத்தந்தை அந்நூலில் கூறியுள்ளார்.
ஆஸ்டன் இவ்ரெய் என்ற எழுத்தாளரின் துணையுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இந்நூல், வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், அதன் ஒருசில பகுதிகள், இத்தாலிய நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், திருத்தந்தையின் இந்த சிந்தனைகள் பதிவாகியுள்ளன.
Comment