52வது உலக நற்கருணை மாநாடு
இறுதித் திருப்பலியில் மறையுரை
- Author Fr.Gnani Raj Lazar --
- Monday, 27 Sep, 2021
புடாபெஸ்ட் நகரில், 52வது உலக நற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அத்திருப்பலியில் வழங்கிய மறையுரை:
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களில், இயேசு தன சீடர்களிடம், "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மாற். 8:29) என்று கேட்கிறார். சீடர்களுக்கு, இத்தருணம், ஒரு திருப்புமுனையாக அமைகிறது. இதுவரை தங்கள் தலைவரை வியந்து பாராட்டிய நிலையிலிருந்து, இனி, அவரைப்போல் வாழ்வதற்கு, அவர்கள் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. "நான் உங்களுக்கு - உண்மையிலேயே - யார்?" என்ற கேள்வியை, இயேசு இன்று, நம் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார். இதற்கு நாம், மறைக்கல்வியில் பயின்றவற்றைக் கொண்டு, பதில் சொல்லமுடியாது, இந்தக் கேள்வி, நம்மிடமிருந்து, முக்கியமான, தனிப்பட்ட பதிலிறுப்பை எதிர்பார்க்கிறது.
நமது பதிலிறுப்பு, சீடர்களாக இருப்பதில் நம்மை புதுப்பிக்கிறது. இது, இயேசுவைப் பறைசாற்றுதல், இயேசுவுடன் தெளிந்து தேர்தல் மற்றும் இயேசுவைப் பின்பற்றுதல் என்ற மூன்று நிலைகளில் நிகழ்கிறது.
இயேசுவைப் பறைசாற்றுதல். "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று ஆண்டவர் கேட்டதற்கு, பேதுரு, "நீர் மெசியா" என்று உரைக்கிறார். உடனே இயேசு, "தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்". (மாற். 8:30) இயேசு ஏன் இந்த கட்டளையை வழங்கினார்? ’மெசியா’ என்ற சொல்லுக்கு, மனித பார்வையிலிருந்து தவறான பொருள் தர இயலும் என்பதால் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது. அந்தக் கணம் முதல், இயேசு, தன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். அந்த அடையாளத்தின் முழு உண்மை, இறுதி இராவுணவில் வெளிப்பட்டது. அந்த அடையாளம், சிலுவை மரணத்தில் முழுமைபெறுகிறது. ’மெசியா’ என்ற தன் அடையாளத்தைப்பற்றி பேசவேண்டாம் என்று கூறிய இயேசு, தன் சிலுவை மரணத்தைப்பற்றி வெளிப்படையாகப் பேசினார். "மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்படவும், மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார். (மாற். 8:31)
இயேசு கூறிய அச்சுறுத்தும் இந்த சொற்கள், நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. நாமும், சிலுவையில் அறையப்பட்ட ஊழியருக்குப் பதிலாக, சக்தி மிகுந்த மெசியாவை விரும்புகிறோம். கடவுள் உண்மையிலேயே யார் என்பதை நமக்கு நினைவுறுத்த நற்கருணை இங்கு உள்ளது. நாம் எத்தனை வழிபாட்டு முறைகளை இணைத்திருந்தாலும், நற்கருணை என்பது, தன்னையே உடைத்து வழங்கும் அப்பமாக, இறைவன் இருப்பதைக் காண்பிக்கிறது. இயேசுவின் அச்சுறுத்தும் சொற்கள், நம்மை இரண்டாம் நிலைக்கு இட்டுச்செல்கிறது.
இயேசுவுடன் தெளிந்து தேர்தல். இயேசு தன் பாடுகளைப்பற்றி சொன்னதும், பேதுருவின் பதிலிறுப்பு அவரது மனிதத்தன்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்ட அடுத்த நிமிடம், இயேசு கூறிய சொற்களால் அவர் இடறல்படுகிறார். சிலுவையிலிருந்து விலகிச்செல்ல, இயேசுவுக்கு அறிவுரை கூறுகிறார். அன்றும், இன்றும், சிலுவை ஒருபோதும் கவர்ச்சியாக இருந்ததில்லை. இவ்வுலகம் காட்டும் வழிகள் கவர்ச்சியாகத் தெரிகின்றன. சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் முன் நிற்கும்போது, நமக்குள் போராட்டம் எழுகிறது.
இத்தகைய எண்ணங்களால் பார்வையிழந்த பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார் (காண்க. மாற். 8:32). கடவுள் நம்மை அவர் பக்கம் இழுக்க முயலும்போது, நாம் பேதுருவைப்போல், ஆண்டவரை நம் பக்கம் இழுக்க முயல்கிறோம். கடவுளின் பக்கம் உலகின் பக்கம் என்ற இரு நிலைகள் உள்ளன. இது இறுதியில் உண்மைக்கடவுளுக்கும், சுயநலம் என்ற கடவுளுக்கும் இடையே நமக்குள் நிகழும் போராட்டம். சுயநல கவர்ச்சிகளிலிருந்து நம்மை குணமாக்க, வாழ்வு தரும் அப்பமான இயேசுவிடம் மன்றாடுவோம்.
இயேசுவைப் பின்பற்றுதல். "என் கண் முன் நில்லாதே, சாத்தானே" (மாற். 8:33) என்ற கடினமான கட்டளை வழியே, இயேசு பேதுருவை அவரது உண்மை நிலைக்குக் கொணர்கிறார். இந்தக் கட்டளை வழியே பேதுரு, தன் சுயநலத்தை விட்டு விலகி, மீண்டும் இயேசுவின் பின்னே செல்லும் அருளைப் பெறுகிறார். கிறிஸ்தவ வாழ்வு, வெற்றியை நோக்கி ஓடும் பந்தயம் அல்ல; மாறாக, அது, சுயநலத்திலிருந்து நாம் விலகிநின்று, இயேசுவைப் பின்தொடரும் சுதந்திரம் பெறுவதே.
இயேசுவைப் பின்தொடர்வது என்பது, தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கு (காண்க. மாற் 10:45) வந்த மானிடமகனைத் தொடர்வதாகும். நற்கருணை, இத்தகைய சந்திப்பை மேற்கொள்ள நம்மைத் தூண்டுகிறது.
இந்த நற்கருணை மாநாடு, ஒரு பயணத்தின் முடிவை குறிக்கிறது, ஆனால், அதைவிட முக்கியமாக, மற்றொரு பயணத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. ஆண்டவர் தன் சீடர்களிடம் எழுப்பிய "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு, ஒவ்வொரு நாளும் பதில் சொல்வதே, இயேசுவின் பின் செல்வது என்பதன் பொருள்.
Comment