சமுதாயத்திலும் திருஅவைக்குள்ளும்
சனநாயகக் கலாச்சாரத்தை நோக்கி...
- Author முனைவர். இ. தேவசகாயம் --
- Tuesday, 28 Sep, 2021
அண்மையில் நடந்து முடிந்த திமுக அரசின் முதலாவது தமிழக சட்டமன்றத் தொடரை தொலைக்காட்சி மூலம் பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தோர்க்கு ஒரு புதிய சூழலை அனுபவிக்க நல்வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அக்கூட்டத்தொடரில் புதிய ஆட்சி, புதிய முதல்வர் என்ற மாற்றத்தையும் தாண்டி சில பல இதமான சூழலமைவுகளைப் பார்க்க முடிந்தது.
முதல்வர் நாளும் பல அறிக்கைகளைத் தருகிறார். அறிக்கைகளுக்கு பின்னே அரசியல் நோக்கம் இருக்கலாம்; இல்லாமலிருக்கலாம். ஆனால், புரட்சியாளன் லெனின், மக்கள் மன்றங்களை வெறும் பன்றித்தொழுவம் என்று வர்ணிப்பார். இன்று இப்போது கண்ட சட்டமன்றத் தொடரில் ஒரு மென்மையான சனநாயக வாசனை வீசியதை நுகர முடிந்தது.
புதிய அவைத்தலைவர் திரு. அய்யாவு அவர்கள், எதிர்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்கிறார். புதிய ஆட்சியாளர்களின் மென்மையான போக்கினால், பழைய ஆட்சியாளர்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டே போகின்றனர்.
சமூக நீதி நாள்
செப்டம்பர் 17 ஆம் நாள் சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழகத்திற்குப் புதுமையல்ல; பெரியாரை நினைவில் வைத்து, ஒரு பெருநாளாகக் கொண்டாடப்படுகின்ற இன்றைய சூழலும் ஒரு புரட்சியே! பெரியாரையும் அவர்தம் சமநீதியையும் நாளும் தூஷித்து வரும் இந்துத்துவர்கள் நாளை ஏதோ தந்திரத்தில் ஆட்சிக்கு வரவாய்ப்பு ஏற்பட்டாலும் முதல்வர் அறிவித்த சமூக நீதி நாளின் சிறப்பை மாற்றியமைக்க முடியாதல்லவா?! சமூக நீதி சனநாயகப் பண்பின் உயர்ந்த உள்ளடக்கமென்றால், சமூக நீதியைக் கொண்டாடப்போகும் தமிழர்கள் அனைவரும் அறிந்தோ, அறியாமலோ உச்சரிக்கப் போகும் வார்த்தையாய் இந்த பேசுபொருள் ‘சமூகநீதி’ மாறப் போவது நிஜமல்லவா?
செக்கிழுத்த சிதம்பரத்தை கொண்டாட வேண்டுமென்ற நம் மகாகவி பாரதி, அவரைத் தம் வாழ்நாளில், கவிதைகளில் வெகுவாகக் கொண்டாடினார். அந்த மகாகவியை, அந்த மகாகவி பாடிய தேசிய ஒருமைப்பாட்டை அபகரித்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்ட வடவாரியர்க்கு இது சரியான சவுக்கடியல்லவா? பாரதியைக் கொண்டாடும் வடவாரியர்கள், செக்கிழுத்த சிதம்பரத்தைக் கொண்டாடமாட்டார்கள் என்பது நம் திண்ணம்.
அயோத்திதாசருக்கு நினைவு மண்டபம்
நினைவு நாள், நினைவு மண்டபங்களின் வரிசையில் இடம்பெற்றார் அயோத்தி தாசர்! தமிழன், தமிழினத்தானாயினும் தலித் உரிமை பேணியவன். தொடர்ந்து வந்த தமிழக அரசுகள் கண்டு கொள்ளாது விட்டுவிட்ட பண்டிதர் அயோத்திதாசர் இன்றைய முதல்வரால் கண்டு கொள்ளப்படுகிறார். தமிழன், திராவிடன் என்ற சொல்லாக்கத்தை அழுத்தி உச்சரித்த முதல்வர், திராவிடத்தை பேசத் தயங்குவோர்க்கு ஒரு செய்தியையும், எச்சரிக்கையையும் தருகிறார்.
கீழடி - வரலாற்றின் திருப்புமுனை
கீழடி ஆய்வு முடிவுகளையும், பொருநையாற்றங்கரையில் கண்ட பழந்தமிழர் தொன்மையைப் பறைசாற்றியதாகப் பெருமைப் பட்டுக்கொண்ட, தமிழக அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, ராபர்ட் கால்டுவெல்லின் ஆய்விலிருந்து திராவிடத்தின் பெருமையை சொன்ன விதம், வடவாரியத்தார்க்கு மட்டுமல்ல; நமக்குள் நாமே தமிழன் என்ற கூட்டத்துக்கும் விட்ட செய்தி என்பதை மறுக்க இயலுமோ? வரலாறு எழுதப்படவேண்டுமென்றால், அது தெற்கிலிருந்த எழுதப்பட வேண்டும் என்ற முதல்வரின் முழக்கம் திராவிடச் சிங்கத்தின் கர்ஜனையல்லவா?!
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு
சனநாயகம் தரும் சமத்துவத்தை மறுக்கும் வகையில், சனநாயகத்தின் முதுகெலும்பாம் அரசியல் சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில், இசுலாமியர்மீதான வெறுப்பரசியலை நிலைப்படுத்த இயற்றப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவை நாடெங்கும் சனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மதத்தினர் தொடர்ச்சியாக எதிர்த்து வந்த நிலையில், கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு, அதற்குத் துணைபோன தமிழக அரசு - இவர்களின் வாயை அடக்க, பாகுபாட்டை ஏற்க மாட்டோம் என்ற தொனியில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றிய தமிழக அரசின் செயலால் சனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதல்லவா?! மதப் பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்க நேரிடுமோ என்று அரசியல் நடத்தும் நம் கட்சியினர் நடுவே துணிச்சலாக தீர்மானத்தை நிறைவேற்றிய அரசைப் பாராட்டுவோம். பெரும்பான்மைவாதமே ஒன்றிய ஆட்சியாளர்களின் வேதமாக இருக்க பெரும்பான்மையோ, சிறுபான்மையோ, அனைத்தையும்விட சனநாயகமே ஏற்றது என கருதி நடவடிக்கை மேற்கொண்ட அரசின் தீரத்தைப் பாராட்டுவோம்.
ஜனநாயகத்திற்கு அரண்
இந்தியா ஒற்றை தேசமல்ல. இது தேசங்களின் நாடு. தேசங்களால் பிணைக்கப்பட்ட கூட்டாட்சி. கூட்டாட்சியில் அதிகாரத்திணிப்பு இல்லை. கூட்டாட்சியில் உரையாடல் உண்டு. கூட்டாட்சி ஒரு உடன்படிக்கை. இவ்வுடன்படிக்கையை அதிகாரத்தின் உச்சத்தில் கேள்வி கேட்க முடியாது என்ற தோரணையில் நடந்து கொள்ளும் அரசைத் தட்டிக் கேட்கும் துணிவு மாநில அரசுக்கு உண்டு என்பதைக் காட்டிக் கொண்ட தமிழக அரசு சனநாயக திறமையைக் காக்க எடுத்துக்கொண்டதாக கூறிக் கொள்ள முடியாதா?
மத்திய வேளாண் மசோதாவுக்கும் எதிர்ப்பு
சனநாயக அரசு கருணை உள்ளதாக, மக்கள் நலனில் கரிசனை உள்ளதாக அமைதல் வேண்டும். குடிமக்களின் ஓலக்குரலுக்கு செவிமடுக்காத அரசு மக்களரசு அல்ல. புதுதில்லியின் எல்லையில் 310 நாட்களுக்கும் மேலாக அரசு கொணர்ந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீரத்தோடும் தீரத்தோடும் விவசாயிகள் போராடி வருவதை நாடறியும். ஆனால், 8000 கோடி ரூபாய் விமானத்தில் தனி மனிதனாகப் பயணம் மேற்கொள்ளும் ஒன்றிய பிரதமரும் அவர்தம் ஒன்றிய அரசும் அறியவில்லை. இப்படியொரு நிகழ்வு தன் அரசதிகாரத்திற்கு அண்மையில், நடந்து வருவதாக காட்டிக் கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் இயங்கும் ஓர் அரசை சனநாயக அரசு என்று அழைக்க முடியுமா? இரு நாடுகளுக்கிடையே நடக்கும் வீரப்போர் கூட சில காரணங்களுக்காக நிறுத்தப்படுவதுண்டு. சில போர்கள் சமாதான உடன்பாட்டிற்கும் வருவதுண்டு. தன் நாட்டின் சொந்தக் குடிமக்களின் இன்னல்களைக் கண்டுகொள்ளாமல், அவர்தம் இன்னுயிர் மடிதலைக் கண்டுகொள்ளாமல், வாய்மூடி மௌனிக்கும், செயற்படும் ஓர் அரசுக்கு என்ன பெயர்தர முடியும்? இவர்கள் தம் துயரோடு மடிந்து சாகட்டும் என்று நினைத்து செயற்படும் அரசை எவராலும் எதுவும் செய்ய இயலவில்லையே? ஊடகங்களும் ஊமையாக்கப்பட்டுவிட்டனவே?! இது என்ன தர்மம்? இது என்ன நியாயம்?
புதைக்கப்பட்ட பாராளுமன்ற ஜனநாயகம்
எதிர்கட்சிகளின் கண்டனக் குரல்கள் காற்றோடு கலந்துவிட்ட சூழலில், கையறு நிலையில் வாழும் வேளாண் குடிமக்களின் துயர்தீரா நிலையில், சனநாயகமாவது? மண்ணாங்கட்டியாவது? நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதும் வெறும் சம்பிரதாயமே. அவ்வகையில் நாடாளுமன்றம் மக்கள் பிரச்சனையைப் பேசாமல் மௌனித்து வெறும் பன்றித்தொழுவமாகவே மாறிப் போனது. பாராளுமன்றத்தொடர் நிலைகுலைந்தது. நாளும் அவை துவங்கிய நிலையில் குரல் எழுப்பும் எதிர்கட்சி உறுப்பினர்களின் உரிமைக்குரலானது கண்டுகொள்ளப்படவில்லை. சபை ஒத்தி வைப்பு எனும் நாடகத்தை இருஅவைத்தலைவர்களும் சிறப்பாக நடத்தி, மக்களின் பணத்தை விரயமாக்கினர். வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், பெகாசஸ் ஆப் மூலமாக ஒட்டுக் கேட்க நடந்த சூழ்ச்சிக்கு எதிராகவும் மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பியதைக் கண்டு, மாநிலங்களவையின் சபாநாயகரான இந்தியக் குடியரசின் துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு அதிர்ந்து போகிறார்! ஒரு கட்டத்தில் மீடியா வெளிச்சத்தில், மாநிலங்களவையில் தம் இருக்கையில் கண்ணீரும் சிந்துகிறார். ஒரு நாள் இரவு தூங்கவே இல்லை என்று புலம்புகிறார். அரசுக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாக, உரிமைக் குரல் எழுப்பிய எதிர்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்த அதே வெங்கையா நாயுடு, வேளாண் குடிமக்களின் துயர் தீர்க்க, பெகாசஸ் ஒட்டுக் கேட்புக்கு பதில் கேட்ட உறுப்பினர்களுக்கு பதில் சொல்ல வராத அவர்தம் தலைவர் பிரதமர் மோடி மீது கோபப் படமாட்டாராம்! அவர் வரவில்லை என்பதற்காக கண்ணீர் விடமாட்டாராம்! சபைக்கு நாயகராக இருப்பது இப்படித்தானோ? மேலவையில் இம்மாதிரியான ஒழுங்கீனங்களைத் தவிர்க்க, ஒரு குழு (Panel) அமைத்து தப்பித்துக் கொண்டார் திரு.வெங்கையா நாயுடு.
மேலவையின் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் இக்குழுவில் இணைய மறுத்தமைக்கு காரணம் என்ன சொன்னார் தெரியுமா? ‘நடந்து முடிந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஒருநாள் கூட பிரதமரோ, உள்துறை அமைச்சரோ கலந்து கொள்ளாதபோது, தனது அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்ய வந்த பிரதமர் பின் என்றுமே வராதபோது இக்குழுவில் இடம்பெற விரும்பவில்லையென்று மல்லிகார்ஜூன கார்கே பதிலளித்தார்.
சனநாயக நெறிமுறைகளுக்கு நாட்டின் பிரதமர் மோடி தரும் (அவ)மரியாதையை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் மலர்ந்த ஜனநாயகம்
ஆனால், நம் தமிழகச் சட்டமன்றம் ஒரு வித்தியாசமான சூழலைச் சந்தித்துள்ளது. தமிழக முதல்வர் பெருவாரியான மக்கள் ஆதரவைப் பெற்று, ஆட்சியமைத்தாலும் கொஞ்சமும் அகங்காரமின்றி வெகு நிதானமாக (composed)சட்டமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதை காணமுடிந்தது. தேர்தல் நேர வாக்குறுதிகளை நிதானமாக நிறைவேற்றி வரும் முதல்வர், ஒவ்வொரு சட்டமாக தன் நகர்வுகளை வெகு நிதானத்துடன் நகர்த்துகிற பாங்கிற்கு என்ன பெயர் சொல்வது?
வழிபாட்டு உரிமை - வழிபடும் உரிமை
சமூக நீதிபற்றிப் பேசும் முதல்வர், வெகு தைரியமாக முன்னெடுத்த ஒரு பிரச்சனையை நாம் கண்டும் காணாதிருக்க முடியாது. வடமொழி மட்டுமல்ல; தெய்வ மொழியாய் கருதிப் போற்றப்பட்ட சமஸ்கிருதத்தில் செய்யும் வழிபாடே இறைவனுக்கு ஏற்றது என்ற சித்தாந்தத்தை மறுத்து, நம் தாய்மொழியிலும் வழிபாடு செய்ய உரிமையுண்டு என்ற புரட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடிந்த இவர் தீரத்தைப் பாராட்ட வேண்டும். இந்து மதக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்ற அறிவிப்பும், ஏற்கனவே பயிற்சி பெற்றோருக்கு அர்ச்சனைக்குரிய அங்கீகாரம் வழங்கிய செயலும் முதல்வரின் சனநாயக மாண்பை உணர்த்த வழி செய்கிறது.
சனநாயகம் ஒருபோதும் சமரசம் செய்யாது, சனநாயகம் என்பது மனித மாண்புக்காக உறுதியாக நிற்பது; சனநாயகப் பண்பு என்பது மென்மையானது அல்ல; மாறாக நீதியின் பால் உறுதியாக இருப்பது.
சனநாயகம் என்பது வெறும் ஓர் அரசியல் நெறியல்ல; மாறாக, மானுட மாண்பைக் காக்கும் வாழ்நெறியே ஜனநாயகம். இந்த வாழ்நெறியின் மீது தளராத நம்பிக்கை கொள்வது எளிதல்ல. சனநாயகத்தை ஏற்றுக்கொண்ட இந்திய மக்கள் சனநாயக வழி சாதி, வர்க்கம் மற்றும் சமய வழி பெரும்பான்மையை சனநாயகம் தரும் தேர்தல் வழி பெறுதற்கே பயன்படுத்துகின்றனர். பிரிக்கின்ற அடையாள வழி பெறுகின்ற ஆட்சி பெரும்பான்மை வாதத்திற்கு இட்டுச் செல்கிறது. பெரும்பான்மை வாதம் வெற்றி பெறுகையில் எதேச்சதிகாரம், சர்வாதிகாரம் என்ற போக்கையும் தாண்டி, அவ்வரசு, ஒரு பாசிச அரசாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகின்றது.
இந்த சூழலில் நமது தமிழக அரசு எடுத்துள்ள இரு முக்கிய நடவடிக்கையைப் பாராட்ட வேண்டும். முதலாவதாக, தமிழில் வழிபாட்டுரிமை, இரண்டாவதாக, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகரத் திட்டம். இந்தியா போன்ற பழமையான, மரபு சார்ந்த சமுகத்தில் பழைய நம்பிக்கை சார்ந்த சடங்குகளில் மாற்றம் கொண்டு வருவது எளிதல்ல! உலகிலேயே முதல் முறையாக, ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட்டு, அரை நூற்றாண்டுக்கு முன்பே பொதுவுடைமை அரசு நிறுவப்பட்ட கேரளத்தில் கூட, இன்றும் பெண்கள் சபரி மலைக்குச் செல்வது சாத்தியமில்லை எனும் நிலை தரும் செய்தி என்ன? பழமையில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள சமூகத்தில் பெண்மையை மதிக்கும் பொதுவுடைமைக் கொள்கைகளால்கூட வழிபாட்டில் எதுவும் செய்ய இயலவில்லையே?!!!
தமிழகத்தில் இந்துக்கோயில்களுக்குள் நுழைந்து, அதுவும் கருவறைக்குள் புகுந்து மதரீதியாக, காலங்காலமாக தர்மம் என்றும், ஆச்சாரம் என்றும், சனாதனம் என்றும் நியாயப்படுத்தப்பட்ட ஒரு செயலை, மறுத்து புது வழி, புரட்சிவழி காண முயன்ற தமிழக அரசை நாமும் மனதாரப் பாராட்டுவோம். தமிழில் பூசை செய்யப்படுகிறதோ இல்லையோ, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிறார்களோ இல்லையோ இரண்டுமே சட்ட சபையில் சட்டமாகிவிட்டது. இந்தச் சட்டத்தையே சாட்சியமாக்கி, நடைமுறையில் ஒரு கலாச்சார புரட்சி செய்வது மக்களாகிய நம் கடமை. இவ்விரு சட்டங்களும், இந்தியாவில் நடத்தப்பட்ட சமூக நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியே. சாதிய மேலாண்மையை அழித்தொழித்து, நெகிழ்ச்சியே காட்டாத சாதியப் படிநிலைக்கு வேட்டு வைத்து தகர்க்கும் நடவடிக்கை. மதத்தையோ, மத நம்பிக்கைகளையோ வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாத ஒரே அரசு சமயசார்பற்ற அரசாகவே, சாதிய படிநிலைக்குள்ளும், சமயத்துக்குள்ளும் நுழைந்து செய்த இப்பணி சனநாயகப் படுத்துதற்கான ஒரு முறையே ஆகும். இது ஒரு நல்ல துவக்கம்.
சனநாயகமும் தனிநபர் துதியும்
தனிமனித அதிகாரத்தை மக்கள் அதிகாரமாக நிலைப்படுத்தியது சனநாயகம். “மன்னர் உயர்த்தே மலர் தலை உலகம்” என்ற கொள்கைக்கேற்ப மன்னர்களே எல்லாம் என நம்பி வாழ்ந்தோர்க்கு, ‘மக்களே எல்லாம்’ என்ற மாற்றம் உருவாக்கிய பின்பும், இப்படி, ஒரு நூற்றாண்டு ஆனபிறகும் புரட்சித் தலைவர்களும், இதயதெய்வங்களும் இன்னும் ஒழிந்து போகவில்லை. இதயதெய்வம் அம்மாவின் ஆட்சி ஒரு முழக்கமாகவே கூவி விற்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன்னைப் புகழ வேண்டாம் எனவும், மகிழ்ச்சிக்கான நேரத்தை மக்கள் பணியின் காலமாகச் செலவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். . அரசின் விலையில்லாத் திட்டங்களில் முதல்வரின் படம் போட்டு விளம்பரப் பைகள் விநியோகிக்கப்படவில்லை. மாநில நல்லாசிரியர் விருது சான்றிதழில் முதல்வர் படமும் இல்லை.
தனி மனித துதியும், சனநாயகமும் ஒருபோதும் இணைந்து செய்ய முடியாது. தமிழ் நாட்டில் சுயமரியாதையைப் போதித்த திராவிடக் கட்சிகள் தாம் தனிமனித வழிபாட்டை வளர்த்தது. கலைஞர் அவர்களை சோழபரம்பரையின் வாரிசாகப் பார்த்தவர்களும் உண்டு. நமது சாலைகளில் காணப்பெறும் சுவரொட்டிகளில், விளம்பர பதாகைகளில் துதியைத் தவிர வேறு என்ன இருக்கிறது?. திராவிட பாரம்பரியத்தில் ஆட்சிக்கு வந்த அம்மா எப்படி (இதய)தெய்வமாகிறார்? சுருங்கச் சொன்னால் காக்கப்பெற வேண்டிய சனநாயகக் கலாச்சாரம் தனிமனித வழிபாடுகளால் சிதையும் போது அங்கு சனநாயகமில்லை.
இச்சனநாயகப் பாதுகாப்பு முதலமைச்சர் மற்றும் அரசமைப்புகளின் கடமை மட்டுமல்ல, இவ்வழக்கு சமூக மயமாதல் வேண்டும். இதனை பண்பாட்டு மய நோக்கில் செய்ய வேண்டும். சமய அமைப்புகளிலும் ஊடுருவ வேண்டும்.
திருஅவைக்குள்ளும் தனிநபர் துதியும்
அண்மையில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலத்தில் நடந்த நவநாள் ஆராதனை ஒன்றை மாதா தொலைக் காட்சி மூலம் காண நேர்ந்தது. ஒவ்வொரு நாள் திருப்பலியின் போதும் அந்தத் திருத்தல அதிபர் தொடக்கமாக 15 நிமிடங்களையும், இறுதி உரையாக அதைவிட அதிக நேரம் எடுத்து பேசுகிறார்; பேசிக்கொண்டேயிருக்கிறார். அத் திருப்பலியையும், அந்நவநாள் மறையுரையையும் ஆற்றும் தந்தையை வானளாவப் புகழ்கின்றார். இவர் படித்த படிப்பு, பெருமையெல்லாம் கூட நினைவுப்படுத்துகிறார். திருவிழாத் திருப்பலியின் நிறைவுநாள் அன்றும் இதே நாடகம் நேரலையில் நடந்தது. அத்திருத்தல அதிபர் ஆயரை வாழ்த்தியதிலும் நன்றி சொல்லி பேசிய பேச்சிலும் பல கேள்விகள் எழுகின்றன. அத்திருத்தல அதிபர் திருப்பீடத்தில் வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. ஆயரோ திருப்பலி நிறைவில் அத்திருத்தல அதிபரின் புகழ் பாடுகிறார். இப்படி ஒருவர் மற்றவரை திருப்பீடத்தில் மாறி மாறி புகழ்ந்து கொண்டேயிருக்கின்றனர். தெய்வீகத் திருப்பலி என்பது ஓர் அரசியல் நிகழ்வல்ல. திருப்பீடம் என்பது ஓர் அரசியல் மேடையல்ல. திருப்பலியை ஒப்புக்கொடுக்கும் அருள்தந்தையை, ஆயர்களை வானளாவப் புகழ்வதும், நன்றி சொல்வதும், பொன்னாடைப் போர்த்தி மகிழ்வதும் அதற்கு இறைமக்கள் மாறி மாறி கை தட்டுவதும், அரசு விழாக்களை, சமய சார்பற்ற விழாக்களைப் போலவே பார்க்க முடிந்தது. திருப்பலி நிகழ்த்துவது நம் விசுவாசக் கடமையெனில், நாம் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? இப்படி தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த துதிப்பாடலுக்கு நாமாவது முடிவுகட்டுவோமா?
ஸ்டாலின் இந்த கலாச்சாரத்தை உடைக்க முனைந்ததைப் பாராட்டுவோம். இக்கலாச்சாரம் மக்கள் ஏற்கும் கலாச்சாரமாகட்டும். தமிழகத் திருஅவையும் ஜனநாயகமிக்கதாகவே வளர வேண்டும். தனிநபர் துதி என்பது நிறுத்தப்படவேண்டும்.
நம் வாழ்வின் தமிழக அரசின் செயற்பாடு பற்றிய கட்டுரை தமிழக முதல்வரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனாகக் காட்டுவதல்ல. தனக்கு கிடைத்த சிறிய வெளியை பயன் படுத்தும் இவரை பாராட்டுவதுதானே தவிர கொண்டாடுவதில்லை.
Comment