No icon

Nam Vazhvu Editorial

அசாம் துப்பாக்கிச்சூடு

செப்டம்பர் 23 ஆம் தேதி பாஜக ஆளும் மாநிலமான அசாம் மாநிலத்தில் தர்ராங் மாவட்டம், சிபஜார்  என்னுமிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு பாசிச மனப்பான்மையின் இன்னொரு கோரமுகம்.

ஒருவர் கையில் கம்போடு ஓடி வருகிறார்; அவரை சுற்றி வளைத்து காவல்துறையினர் கூட்டமாய் அடிக்க பாய்கின்றனர். அதற்குள் மிக அருகில் நின்ற வண்ணம் இரண்டு போலீசார் துப்பாக்கியால் அந்த நபரைச் சுட்டு வீழ்த்துகின்றனர்; சடலமாய் சரிந்த அந்த நபரின் உடல்மீது பத்து போலீசார் சூழ்ந்து நின்று தாக்குகின்றனர். நெஞ்சிலும் காலிலும் குண்டடிப்பட்டு கீழே விழுந்து அசைவற்று கிடக்கும் அந்த நபரின் மீது ஒரு புகைப்படக்காரன் ஏறி மிதித்து குதிக்கிறான். கழுத்தில் அடிக்கிறான். போலீசார் அவனை இழுத்துச் செல்கின்றனர். மீண்டும் ஓடிவந்து தனது ஆத்திரம் தீர மிதிக்கிறான்.கழுத்தில் ஓங்கி குத்துகிறான். சமூக வலைதளங்களில் இந்த காணொளி பார்ப்போர் மனதை அப்படியே பிசைகிறது. அந்தப் புகைப்படக்காரனின் பெயர் பிஜய் பனியா. அசாமின் தர்ராங் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணியாற்றுபவன். சிபஜாரில் வாழும் முஸ்லீம் மக்களை வெளியேற்றும் நிகழ்ச்சியைப் படம்பிடிக்க அனுப்பப்பட்டவன். அங்கே குண்டடிப் பட்டு இறந்து கிடந்தவர் 33 வயது இளைஞன் மொய்னுல் ஹக்.

சிபஜார் பகுதியில் பெங்காலியை சேர்ந்த 800 முஸ்லீம் குடும்பங்கள் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வெளியேற்றும் திட்டத்தை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. மக்கள் தொகையில் மூன்றாம் இடத்தில் உள்ள முஸ்லீம்கள்தான் அசாமில் ஆட்சியைத் தீர்மானிக்கிறார்கள். ஆகையால், அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றும் துருவ அரசியலை, பாசிச அரசியலை பாஜகவினர் முன்னெடுக்கின்றனர். இந்த எண்ணூறு குடும்பங்களும் வலுக்கட்டாயமாக வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர். நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு நடந்து வரும் நிலையில் அசாம் பாஜக அரசு போலீசாரைக் கொண்டு வன்முறை நிகழ்த்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். இதுவரை ஐந்துபேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டிலேயே அகதிகளாக முஸ்லீம்கள் இவர்கள் வாழ தள்ளப்பட்டுள்ளனர். இது பாஜக அரசே பாசிச வெறி கொண்டு, முன்னின்று நடத்தும் பயங்கரவாதச் செயல் ஆகும். ஏற்கனவே, அசாம்-மிசோரம் எல்லையில் (ஒரே நாடுதான்) இரு மாநிலத்தவரும் கொலை வெறி தாக்குதல் நடத்திக்கொள்கின்றனர்.

வெறுப்பு அரசியலில் மதவாத அரசியலை மட்டுமே முன்னெடுக்கும் பாஜகவின் பாசிச மனப்பான்மையின் கோர முகம்தான் இந்த ஒரு நிகழ்வு. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றாலும் சரி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றாலும் சரி, இந்தியா ஓர் ஒன்றியம் என்றாலும் சரி இவர்கள் மறுப்பதில்தான் குறியாய் இருப்பார்கள்; அம்பேத்கர், பெரியார், ஜோதிராவ் பூலே, எல்லாவற்றிற்கும் மேலாக காந்தி என்றாலே அவர்களுக்கு அலர்ஜி, வயிற்றோட்டம் வந்துவிடும். மீறியும் நாம் பேசினால், அர்பன் நக்சலைட் என்பார்கள்; பாகிஸ்தான் போ என்பார்கள். பிரஸ்டிடியூட் என்று உளறுவார்கள்.

செப்.25 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் 76வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இந்தியா- ஜனநாயகத்தின் தாய் என்று தன் 54 இஞ்ச் மார்பு விரிய விரிய உரையாற்றிய மோடியின் முகத்தில் பூசப்பட்ட கரியாக இந்த நிகழ்வு ஓரிரு நாட்களுக்கு முன்பு அமைந்துவிட்டது.

போலீசாரின் வெறிச்செயல், குண்டடிப்பட்டு வீழ்ந்து கிடக்கிறவன்மேல் பிணந்தின்னி கழுகுகளைப்போல அவர்கள் மொய்ப்பதும் மனிதாபிமானச் செயலே அல்ல. துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பிணங்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. ஜனநாயகத் தூண்களான பத்திரிகைகளின் பேனாக்கள் மௌனிக்கின்றன. செத்துக் கொண்டிருக்கிற நபர்மீது, அல்லது செத்தவர்மீது இப்படி மனிதாபிமானமின்றி வெறியாட்டம் போடும் வன்மம் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது?

செப்டம்பர் 21 ஆம் தேதி அறிவிப்பு கொடுத்து, 22 ஆம் தேதி காவல்துறையைக் கொண்டு விரட்டி அடித்து, இயற்கை விவசாயம் செய்ய அந்நிலங்களை உள்ளூர் மக்களுக்கு கொடுக்கிறது மாநில அரசு. முஸ்லீம்கள், அதுவும் வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். புலம் பெயர்ந்தவர்கள்- ஊடுருவல்காரர்கள்- அந்நியர்கள் என்ற பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைத்து, இந்து வெறியை, பாசிச வெறியை வளர்க்கிறார்கள் இந்து அடிப்படைவாதிகள். அமித்ஷா வங்கதேச முஸ்லீம்களை ‘கரையான்கள்’ என்று வரையறுத்ததிலிருந்தே, அவர்களை ஒடுக்குவதற்கு இவர்கள் கங்கணம் கட்டிவிட்டனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டுவந்து, தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கி, வங்காள இந்துக்களை வரவேற்கும் இவர்கள், வங்காள முஸ்லீம்களைச் சட்டவிரோத குடியேறிகள் என்று நிராகரிக்கின்றனர். அசாம்தான் முதன் முதலில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை அமுல்படுத்திய மாநிலம் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், கடந்த முப்பது ஆண்டுகளில், பல்வேறு இனக் குழுக்களை பாஜகவினர் இந்துத்துவப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். மதமாற்ற தடைச்சட்டம், பசுவதை தடைச்சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு என்று அவர்கள் முன்வைக்கும் ‘நாகரிகப் போரை’த் திட்டமிட்டு மக்களை துருவநிலைப்படுத்தியுள்ளனர். லவ்ஜிகாத் வழியில் பொய்ப்பிரச்சாரத்தைத் திணித்துள்ளனர்.

அசாமில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பொறுப்பேற்றவுடனே 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும்படி உத்தரவிட்டு, அங்கு வாழும் ஏழை வங்காள முஸ்லீம்களைச் சட்ட விரோத குடியேறிகளாக விரட்டியுள்ளார். இன்று சிறுபான்மையினரான முஸ்லீம்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. நாளை அது கிறிஸ்தவர்களுக்கும் நேரலாம்.

அசாமின் சிபஜார் ஒரு தொடக்கம் மட்டுமே. தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தின் சோதனைக் களம் மட்டுமே. இது நாளை இந்தியா முழுமைக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம். பாசிசம் தன் வேலையை ஆரம்பித்துவிட்டதற்கான உறுதியான அறிகுறியே இந்த அசாம் சம்பவம்.

இதற்காக அம்மாநில முதல்வர் வெட்கி தலைகுனிந்து வருத்தம் தெரிவித்து ராஜினாமா செய்யவில்லை. பிரதமர் மோடியும் தன் டுவிட்டரிலோ மன்கி பாத்திலோ இது குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை. இப்படி கல்மனம் கொண்டவர்களுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Comment