No icon

பேராயர் அந்தோனி பாப்புசாமி

எப்படித்தான் பொறுத்துக் கொள்வது?

மதச் சிறுபான்மையினர் மீதான அண்மை தாக்குதல்களுக்கு எதிராக தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்களின் கண்டன அறிக்கை.

2021 ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் இந்திய மதச் சிறுபான்மையினர் மீதான மதவாத சக்திகள் தொடுத்து வரும் வன்முறை தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிக்கிறது. இத்தாக்குதல்கள் சனநாயகம், சமத்துவம், சமயச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் நாட்டின் அமைதியில், ஒற்றுமையில், சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அனைத்து மாந்தருமே கவலை கொள்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் உரிமைகளை, இந்திய அரசியல் தின நாளாகக் கொண்டாடி மகிழும் இன்றைய ஒன்றிய அரசின் பார்வையில் நடக்கும் இந்த அவலங்களை அரசும், அரசின் நிறுவனங்களும் எப்படி சகித்துக் கொள்கின்றன என்பதுதான் இங்கு வியப்பையும் வேதனையையும் தருகிறது.

டிசம்பர் மாதம் 17 மற்றும் 19 ஆம் நாட்களில் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் நடந்த இந்து சமய மாநாட்டில், இந்து சமய அமைப்புகளின் தலைவர்கள் சிலர் ஆற்றிய வெறுப்புரைகள் இசுலாமியர்க்கு எதிராக கடுமையான வன்முறைகளை தூண்டுவனவாக அமைந்திருந்தன. இசுலாமிய சிறுபான்மையினரின் மாண்பையும் அவர்தம் உரிமைகளையும் பறிக்கும் வகையில் அமைந்த பகை வளர்க்கும் உரைகள் இந்தியாவின் பல்சமய சமாதான வாழ்விற்கு ஊறுவிளைவிக்கும் என்பதனால் இவ்வுரைகளை வன்முறையாக கண்டிக்கிறோம்.

பாரதிய சனதா கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இருவர் பங்கேற்றிருந்த இக்கூட்டத்தில், இசுலாமியருக்கு எதிரான பகை வளர்க்கும் உரைகளை இவர்கள் ஆட்சேபிக்கவில்லை என்பதோடு, ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள் எவரும் இதனைக் கண்டிக்கவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

பாரதிய சனதா ஆட்சி செய்யும் அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரில் கிறித்து பிறப்பு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் மதவாத சக்திகள் ஊடுருவி கலகம் விளைவித்ததோடு ஏசுநாதரின் உருவச் சிலையையும் அவமானப்படுத்தியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

மேற்கண்ட நிகழ்வு போலவே இதே மாநிலத்தின் பட்டாடி எனுமிடத்தில் ஒரு பள்ளியில் நடந்த கிறித்து பிறப்பு விழா மேடையில் மதவாத சக்திகள் புகுந்து விழாவை சீர்குலைத்துள்ளனர். இந்த ஒரு நிகழ்வைத்தான் அரியானா முதல்வர் கண்டித்துள்ளார்.

இம்மாதத்தில்தான், கர்நாடக அரசு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட சட்ட விவாதத்தின் போது ஒரு சில அமைச்சர்கள் எழுப்பிய பகைக் கருத்துகள் கண்டிக்கத்தக்கன.

இந்நாட்டில் இந்துத்துவ மதவாத அமைப்புகள் தோன்றிய காலத்திலிருந்து, மதச்சிறுபான்மையினரை மையப்படுத்தி பகை அரசியல் நடத்தப்பட்டு வருவதை நாடறியும். மதவாத சக்திகளின் ஓயாத பிரச்சார பலத்தால், பெரும்பான்மைவாத அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, இப்பகைப்போக்கு குறையும் என்று நம்பினோம். இந்த நம்பிக்கை பொய்த்துப் போகும் வகையில், சட்டத்தின் ஆட்சியே சீர்குலைந்து போகும் வகையில் மதச் சிறுபான்மையினரை ஒடுக்கவும், ஒதுக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

ராமருக்காக, ராம சென்ம பூமியில் எழுப்பப்பட்டு வரும் கோவிலுக்கான பூசையை மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் நடத்தியதை நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. அண்மையில் காசி விசுவநாதர் ஆலய வளாகத்தின் விரிவாக்கத்தை இரு நாள் விழாவாக பிரதமர் மோடி தலைமையேற்று நடத்தியதையும் நாங்கள் ஆட்சேபிக்கவில்லை. இந்திய சமய சார்பற்ற கோட்பாடு தரும் மதச் சுதந்திரத்தின் அடிப்படையில் மதச் சிறுபான்மையினரின் நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் மதவாதிகள் நடத்தும் மனித உரிமை மீறல்களை எப்படி பொறுத்துக் கொள்வது?

குடிமக்களின் சமத்துவத்தை காக்க பொறுப்பேற்றிருக்கும் அரசு, சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்கும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுகிறேன்.

 

இயேசுவில் அன்புள்ள

+ மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி

பேராயர், மதுரை உயர் மறைமாவட்டம்

தலைவர், தமிழக ஆயர் பேரவை

Comment