No icon

உலகின் முதல் தலித் கர்தினால்

மேதகு அந்தோனி பூலா அவர்களுடன் ‘நம் வாழ்வு’ மேற்கொண்ட நேர்காணல்

மே மாதம் 27 ஆம் தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அகில உலக அளவில் 21 கர்தினால்களைத் தேர்ந்துகொண்டார். இதில் ஆசியக் கண்டத்திலிருந்து திருத்தந்தை தேர்ந்த கர்தினால்கள் ஆறுபேர் என்றால், நம் இந்தியத் திருநாட்டிலிருந்து திருத்தந்தை தேர்ந்தவர்கள் இரண்டுபேர். தீபகற்பத்தின் அரபிக் கடற்கரையோரம் அமைந்த கோவா உயர் மறைமாவட்டத்திலிருந்து மேதகு பேராயர் பிலிப் நேரி அவர்களும், கிழக்கே வங்கக் கடற்கரையோரம் பரந்து விரிந்த ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவிலிருந்து ஹைதராபாத் பேராயர் மேதகு அந்தோனி பூலா அவர்கள். தென் இந்தியாவிலிருந்து லத்தின் வழிபாட்டு பிரிவில், நம் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த மேதகு கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்களுக்குப் பிறகு, தென் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கர்தினால் மேதகு அந்தோனி பூலா. எல்லாவற்றையும்விட, தலித் ஆயர் வேண்டும், தலித் பேராயர் வேண்டும் என்று கொடி பிடிக்கும் கோரிக்கைகள் ஆங்காங்கே தென் இந்தியாவில் மேலோங்கும் நிலையில், திருத்தந்தை அவர்கள் அகில உலக அளவில் முதல் தலித் கர்தினாலாக, ஹைதராபாத் பேராயர் அந்தோனி பூலாவைத் தேர்ந்துள்ளார். இந்தியாவின் முதல் ஆதிவாசி - பழங்குடியினத்தைச் சேர்ந்த கர்தினாலாக, கர்தினால் டெலஸ்போர் டோப்போ (அக்.21, 2003) அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு, முதன் முதலாக தலித் சமூகத்திலிருந்து, முதன் முதலாக தெலுங்கு கிறிஸ்தவர்களிடமிருந்து, ஒரு கர்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்தியாவில் உள்ள ஆறு கர்தினால்களில் இவரே குறைந்த வயதுடைய கர்தினால். நவ.15, 1961 இல் பிறந்து, 46 வயதில் ஆயராகி, 60 வயதில் பேராயராகி, 62 வயதில் கர்தினாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கர்தினால் பூலாவின் பெயர் நிச்சயம் இந்தியக் கிறிஸ்தவ வரலாற்றில் இன்றியமையாத இடத்தைப் பெறும் என்பதில் துளியும் ஐயமில்லை. தென் இந்தியாவின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்தப்படும் கர்தினால் அந்தோனி பூலா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை முரசாகவும் திராவிடத்தின் விடிவெள்ளியாகவும் தெலுங்கர்களின் ஒளிர்விண்மீனாகவும் பன்மைத்துவம் நிறைந்த நம் இந்திய மண்ணின் உலகளாவிய பிரதிநிதியாகவும் ஒளிர்வார், மிளிர்வார்.

இந்தியாவின் முதன்மையான கிறிஸ்தவ வார இதழும் தமிழகத்தின் ஒரே கிறிஸ்தவ வார இதழுமான நம் வாழ்வு வார இதழ், கர்தினால் அந்தோனி பூலா அவர்களுக்கு ஈமெயில் வழியாக கேள்விகளை அனுப்பி, அதற்குரிய பதில்களை கர்தினால் அந்தோனி பூலா அவர்களிடமிருந்து பெற்று தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது. நம் வாழ்வு வார இதழ் தமிழக கிறிஸ்தவ மக்களிடையே கொண்டுவரும் விழிப்புணர்மிக்க பத்திரிகை பணிக்கும் அளப்பரிய நற்செய்தி பறைசாற்றும் பணிக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து கர்தினால் அந்தோனி பூலா அவர்கள் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டி;-

முதலாவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களை கர்தினாலாக தேர்ந்து, தங்கள் பெயரை அறிவித்ததை அறிந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்தப் பெயர் முன்மொழிவு தங்களுக்கு உணர்த்துவது என்ன?

கேரளாவில் நடைபெற்ற கத்தோலிக்க அருங்கொடை இயக்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் நிறைவுவிழாவில் அந்நாளில், மே 29 ஆம் தேதி நான் பங்கேற்றிருந்தேன். இத்தாலியில் உள்ள சர்டினியா, கட்டானியா பகுதிகளில் உள்ள நண்பர்களில் சிலர் எனக்கு குறுஞ்செய்தி, ‘தாங்கள் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று அனுப்பியிருந்தனர். அப்படி அனுப்பிய நண்பர்களில் ஒருவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. ஆகையால் நான் அவரிடம், ‘நான் ஹைதராபாத் பேராயராகத்தான் தற்போது இருக்கிறேன்; அதுவும் கடந்த 14 மாதங்களாகத்தான் பேராயராக உள்ளேன், கர்தினாலாக அல்ல’ என்று பணிவோடு பதில் சொல்லிவிட்டு, அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அது தொடர்புடைய இணையதள லிங்கை அவர்தம் பார்வைக்கு அனுப்பி வைத்தேன். அவரோ மறுபடியும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே 27 ஆம் தேதி அன்று புதிய கர்தினால்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்தார். அவர்கள் திருத்தந்தை அறிவித்த அந்தப் பெயர்ப்பட்டியல் வீடியோ தொகுப்பில், 17வது நிமிடம் 12,13 நொடியில் உங்கள் பெயரைப் போல உள்ளது என்று கூறினார். அதன்பிறகுதான் நான் நம்பத்தொடங்கினேன்.

நீங்கள் கர்தினாலாக தேர்ந்துகொள்ளப்பட்டு உங்களின் பெயர் முன்மொழிவு செய்யப்பட்டபோது உங்களின் உணர்வு என்ன? திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எவ்வகையில் நல் ஆலோசனை வழங்கி, உதவ நீங்கள் நினைக்கிறீர்கள்?

எனக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. நான் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு மிக ஆச்சரியமான செய்தியாகவே இருந்தது. நான் இதைப் பற்றி கனவு காணவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது இறைவனின் அருள் - கடவுளின் திட்டம் என்றே நான் உணர்கிறேன். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழியாக நான் பெற்றுக்கொண்ட அழைப்பாக, இறைவனின் திருவுளமாக இது அமைகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களுக்குத் தொண்டாற்ற, தென் இந்தியாவில் உள்ள இறைமக்களுக்கு, அனைத்து மக்களுக்கும் தொண்டாற்ற, இன்னும் குறிப்பாக, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச இறைமக்களுக்குத் தொண்டாற்ற என்னைத் தேர்ந்து எனக்களித்த மிகப்பெரிய நல் வாய்ப்பாகவே நான் இதனைக் கருதுகிறேன். தாழ்ச்சி நிறைந்த மன நிலையில் இதனை ஏற்கிறேன்.

திரு அவையின் வரலாற்றில், தலித் ஆயர் / பேராயர் வேண்டும் என்று கொடி பிடிக்கும் இன்றைய (தென்) இந்தியச் சூழலில், முதல் தலித் கர்தினாலாக, திருத்தந்தை பிரான்சிஸ் தங்களைத் தேர்ந்துகொண்டதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இதன் வழியாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகத்திற்கும் இந்தியாவிற்கும் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தம்முடைய பொறுப்பைத் தேர்ந்துகொண்ட நாள் முதல், மக்களின் திருத்தந்தையாகத் தன் பணியைத் தொடர்கிறார். நீங்கள் அறிந்து உணர்வதுபோல நானும் புரிந்து கொள்கிறேன். நானும் தனிப்பட்ட விதத்தில் இப்படித்தான் அவரைப் புரிந்துகொள்கிறேன். அன்பு, கருணை ஆகியவற்றுடன் விளிம்புநிலையில் உள்ள மக்களை, ஏழைகளிலும் ஏழையராக உள்ளவர்களைத் தேடி அவர் சென்றடைந்திடும் பாங்கு பாராட்டுக்குரியது. அவரின் பாராட்டுக்குரிய நற்குணங்கள் பல உள்ளன.

நாமும்கூட, ஏழைகளுக்கும், விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை எப்போதும் தருகிறோம். ஏழைகளுக்கான ஓர் ஏழைத் திரு அவை என்றுதான் ஒரு வலிமையானச் செய்தியைத் நாம் இந்த உலகிற்கு தருகிறோம். புயல் வீசி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்போது அல்லது இயற்கைச் சீற்றங்கள் வந்து மக்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும்போது, ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் வெடித்து மக்களின் துயரம் உச்சம் தொடும்போது.. இப்படி இன்னும் பிற துயரங்கள் ஏற்படும்போது, அகில உலக மக்களின் மீது நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் கரிசனை நிறைந்த அளப்பரிய அன்பை நான் வியந்து பார்க்கிறேன். இந்த நியமனத்தின் மூலம் சிறப்பான முறையில், தலித்துகள் உட்பட விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளுக்கு, ஒரு நல்ல தீர்வுக் காண திருத்தந்தை இந்தச் சூழ்நிலையில் என்னிடம் எதிர்பார்த்திருக்கலாம். இந்நிலையில் ஓர் ஆயனாக நம்முடைய அரவணைப்பில் ஒப்படைக்கப்பட்ட ஏனைய மக்களை கண்டும்காணாமல் இருக்க வேண்டும் என்று இதற்கு எதிர்மறை பொருள்கொள்ள கூடாது. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்கள்தம் தேவையறிந்து, கருத்தாய் செயல்பட்டு அனைவரின் நலம் பேணுவது என்னுடைய பொறுப்பாகும்.

நுட்பமாக மேலோட்டமாகப் பார்க்கும்போது சாதிய அமைப்பு என்பது இந்தியாவில் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், எதார்த்தத்தில் சாதியம் எப்படி நம் சமூகத்தில், கிறிஸ்தவத்தில் உள்ளது?

சாதிய அமைப்பு முறையை ஒழித்துவிட்டோம் என்று நாம் பெருமையாக மேலோட்டமாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் ஒரு சில சமூகக் காரணிகள் இன்றும் உள்ளன. முற்றிலுமாக, சாதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று நம்மால் அறுதியிட்டு சொல்ல இயலாது. உண்மைச் சூழலை, கள நிலவரத்தைப் பார்க்கும்போது, சில படிநிலை அமைப்புகளை, வேறுபாடுகளைப் பார்க்கலாம். தங்களுடைய திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்; தாங்கள் செய்யும் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக உண்மையில் சிலர் இன்றும் போராடுகின்றனர்.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, தீண்டத்தகாதவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை; கல்வி கற்கும் சாத்தியமே ஏற்படுத்தித் தரப்படவில்லை. நிராகரிக்கப்பட்டார்கள். ஆனால் காலப்போக்கில், மிஷனரிகளின் கடின உழைப்பினால் பணியினால் அனைவரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு, சிறப்பாக தமிழகம் உட்பட நம் மாநில அரசுகள், நான் சார்ந்த இந்த ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களில் உள்ள அரசுகள், விளிம்புநிலை மக்கள், ஏழைகள் மற்றும் தலித்துகள், பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன; அரசும் திரு அவையும் ஏழை மக்களை மதித்து, பள்ளிக்குச் செல்லவும் படிப்பைத் தொடரவும் பேருதவி செய்கின்றன. மனித இயல்பில் அனைவரும் சரி சமமாக கல்வி கற்பது குறித்து ஒரு சிலரிடம் கொஞ்சம் பொறாமை உள்ளது உண்மைதான். நாம் செய்ய வேண்டியது என்னவெனில், மக்களைக் குறித்தும் சூழ்நிலைகளைக் குறித்தும் சமத்துவம் குறித்தும் போதுமான விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும்; மக்களுக்கிடையே சமத்துவம் மலர்ந்திட நாம் அனைவரும் இணைந்து ஒரு சேர பாடுபட வேண்டும்.

நீங்கள் தலித் மக்களிடையே அல்லது ஏழை எளிய மக்களிடையே குருத்துவப்பணி செய்தபோது, அது உங்களுக்குள் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் என்ன?

ஆந்திராவில் உள்ள கர்னூல் மறைமாவட்டத்தில் போளூரூ சின்டுக்கூரு என்னுமிடத்தில் நான் பிறந்தேன். எனது கர்னூல் மறை மாவட்டத்திற்கு அருகே உள்ள கடப்பா மறை மாவட்டத்திற்காக நான் குருமாணவராகப் படித்தேன். குருமாணவராக உயர்கல்வி முடித்து, குருவாக கடப்பா மறைமாவட்டத்திற்காக திருநிலைப்படுத்தப் பட்டேன். குருவான பிறகு, பங்கு அளவிலும் மறைவட்ட அளவிலும் நிறுவனங்களிலும் மக்களுக்குப் பணி செய்வதில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. நன்கொடையாளர்களின் (கல்வி) உதவித் திட்டத்தில் பொறுப்பாளராகப் பணியாற்றினேன். எனவே, சென்று பணியாற்றிய, ஒவ்வொரு பங்கிலும் தொலைதூர கிராமங்களை நான் நன்கு அறிவேன். வறட்சி மிகுந்த அவ்விடங்களில், ஒடுக்கப்பட்ட பரம ஏழைகள் மட்டுமே வசித்து வந்தனர்.

அப்படி நாங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டியிருந்தால், மாலை நேரத்தில்தான் சூரியன் சாய்ந்த பிறகு செல்வோம். அப்போதுதான் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, உழைத்து களைத்துப்போய், மாலை வேளையில் அந்திப் பொழுதில் உழைக்கும் ஏழை மக்கள் இல்லம் திரும்புவர். அவ்வூரில் உள்ள ஆலயத்தில் மணியடித்துவிட்டு, குழந்தைகளை, பள்ளி மாணவ - மாணவியரை ஒருங்கிணைத்து மறைக்கல்வி பாடம் நடத்துவோம். பசியோடு களைப்பில் வீட்டிற்கு வரும் ஏழை மக்கள், கொஞ்சம் கஞ்சி வைத்து குடித்து பசியாறிவிட்டு, ஆலயத்திற்கு அவசர அவசரமாக வருவார்கள். அந்த உழைக்கும் மக்களையும் அவர்களின் விசுவாசத்தையும் பார்ப்பதற்கு கண்கள் கோடி வேண்டும். அது ஒரு நல்ல அருமையான அனுபவம். என்னால் ஒன்றை மட்டும் அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆம். அவை அனைத்தும் என்னை கருணையும் அன்பும் உள்ள மனிதராக உருமாற்றியது. சிறப்பாக, குழந்தைகளுக்கு கல்வி என்னும் பரிசை தரும்போது, குருவாக எனக்குள்ள மிகப்பெரிய கடமையுணர்வை நான் நன்கு உணர்ந்தேன். ஏனெனில், அவர்களிடம் செலவழிப்பதற்கு கொஞ்சம்கூட பணம் இல்லை; விற்பதற்கோ அடகு வைப்பதற்கோ சொல்லிக்கொள்ளும்படி எந்த சொத்தும் இல்லை. அவர்கள் நிராயுதபாணிகள். அப்படிப்பட்ட அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் கல்விதான் மிகப்பெரிய பரிசு; அழியாத மிகப்பெரிய சொத்து.

கர்தினாலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நானும் என்னுடைய சொந்த தனிப்பட்ட வாழ்வை எண்ணிப் பார்க்கிறேன். ஏழாம் வகுப்பு முடித்த பிறகு, என்னால் அக்காலத்தில் கல்வியைத் தொடர முடியவில்லை. அவ்வளவு வறுமை. எனவே வறுமையின் காரணமாக, நான் என்னுடைய பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டிய இக்கட்டான கையறுநிலை. இந்த நிலையில்தான், ஆந்திராவில் பணியாற்றிய மிஷனரிகள், என்மீது அன்பு கொண்டு, சிரத்தையெடுத்து, நான் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று கருதி என்னை கடப்பாவுக்கு கொண்டுவந்தனர்; நான் தொடர்ந்து படிப்பதற்கு, இடை நில்லாமல் கல்வி கற்பதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆகையால், இளங்கலை பி.ஏ வரை அவர்களின் உதவியோடு படித்தேன். அப்படி படித்து முடித்து பிறகு, மிஷனரிகளுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாமல் போனது. ஆனால் அவர்கள்தான் என்னை தங்கள் பொறுப்பில் எடுத்து, அள்ளி அரவணைத்து, பள்ளிக்குச் செல்வதற்கு உதவி இச்சமூகத்திற்கு தகுதியுள்ளவனாக என்னை உருவாக்கினார்கள். அதுதான் உண்மை.

இந்தக் காரணத்திற்காகத்தான் நான் குருமடத்தில் சேர்ந்து குருவாக வேண்டும் என்று விரும்பினேன். நான் கடப்பாவுக்குச் சென்றேன். நான் படித்து முடித்து, பிற்காலத்தில் என்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்கு, கல்வி கற்பதற்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டு உழைத்தேன். இந்தப் பணியை எடுத்த பிறகு, ஒரு குருவாக கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மாணவ - மாணவிகளைச் சந்தித்தேன். நான் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய இடங்களில் உள்ள கிராமங்களை மிகவும் நேசித்தேன். அவையெல்லாம் மிக மிக அழகிய தருணங்கள். எப்போதெல்லாம் நான் ஏழை குழந்தைகளை சாலைகளில் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் நானே அவர்களை, அவர்களின் அனுமதியோடும் பெற்றோரின் சம்மதத்தோடும் என் காரில் ஏற்றிக்கொண்டு சென்று, எனக்கு தெரிந்த பள்ளி விடுதிகளில் அவர்களின் கல்விக்காகச் சேர்த்துவிடுவேன்.

அக்காலத்தில், பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கச் செல்லும் மாணவர்கள் தங்களுடைய சீருடைகளை வைப்பதற்கும், சாப்பாட்டு தட்டு, டம்ளர் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்காக இரும்பு பெட்டி (டிரங்க் பெட்டிகள்) களைக் கொண்டுச் செல்வர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டுபோய், பங்குகளில், பள்ளிகளில் உள்ள ஹாஸ்டல், போர்டிங் வார்டனிடம் ஒப்படைப்பது வழக்கம். அந்த பொறுப்புணர்வுமிக்க சம்பவம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால்தான் நான் கிராமங்களில் மறைப்பணி ஆற்றுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டினேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற போதுகூட, நான் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக்கொண்டே படித்தேன். அங்கிருந்து மீண்டும் இந்தியா வந்தபோது என்னிடம் இந்த கல்விக்கு உதவித் திட்டத்தைக் கொடுத்தனர். கத்தோலிக்கப்  பள்ளிகளின்  துணை இயக்குநராக மறைமாவட்டத்தில் பணியாற்றுவதற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போது நான் இந்த ஏழை மக்களை இந்த ஆக்கபூர்வமான பணி சென்றடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் செவ்வனே செய்தேன். நான் பணிசெய்தவர்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் விளிம்புநிலை மக்கள் தான். இம்மக்களில் பெரும்பாலானாவர் கள் தங்களின் தேவை களைப் பூர்த்திச் செய்ய முடியாத நிலையில் தவிப்பதும் உண்மை. மேற்கண்ட உண்மைகள் என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கின என்றால் அது மிகையன்று.

நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படிப்பட்ட தீண்டாமையை, அவமரியாதையைக் கண்டீர்கள்?

சாதிய பாகுபாடு என்பதை நான் என் சொந்த வாழ்வில், என்னுடைய குழந்தைப் பருவத்தில் அனுபவித்திருக்கிறேன். என் கிராமத்தில் ஒரு நடைமுறை உண்டு. இது ஒரு சமூக நோய். நம்மால் என்ன செய்ய முடியும்? கையறு நிலைதான். எங்களுடைய வீடுகள், எங்கள் கிராமத்தின் வட திசையில் ஒரு மூலையில் இருக்கும். எங்களுக்கு தாகம் எடுக்கிறபோது, உயர்சாதி மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள கிணறுகளில் தவிச்ச வாய்க்கு தண்ணீர் குடிக்க சென்றால், அவர்கள் எங்களை இறங்க அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் எங்கள் கைளில் தண்ணீரை தூரமாக நின்று கைபடாமல் ஊற்றுவார்கள். நாங்கள் குனிந்து கைகளில் தண்ணீர் ஏந்தி, எங்கள் உள்ளங்கையில் நிரம்பி வழிந்தோடும் தண்ணீரைப் பருகுவோம். ஆனால், அது எனக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை; அதில் எனக்கு வருத்தமும் இல்லை. இது ஒரு சமூக நோய் என்று ஏற்றுக்கொண்டேன். ஆனால், இதே போன்ற தீண்டாமை நிறைந்த அவலநிலை நம்முடைய நகர்ப்புறங்களில், பெரிய பெரிய நகரங்களில் காணப்படவில்லை. தற்போது இந்த நடைமுறை, அதாவது தலித்துகளின் கைகளில் தண்ணீர் ஊற்றி குடிக்க வைப்பது, இரட்டை குவளை முறை, இரட்டை தட்டு முறை ஆகியவை இல்லை. இவற்றைதான் நான் தீண்டாமை - பாகுபாடு என்று குறிப்பிடுகிறேன். காலம் மாறுகிறது.

உங்கள் பணிகளைச் செய்யும் போது நீங்கள் சந்திக்கும் சவால் என்ன?

நமக்கு மதச் சுதந்திரம் உள்ளது. எந்த ஓர் இந்தியக் குடிமகனும் குடிமகளும் தான் விரும்பும் மதத்தைக் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் வாழவும் சுதந்திரம் உள்ளது. என் அனுபவத்தைப் பொறுத்தவரை, தென் இந்தியாவில் நாம் மிகவும் சுதந்திரமாக உள்ளோம். அரசியல் கட்சிகளும் எவ்விதச் சார்புநிலையின்றி உள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் 100 சதவீதம் ஒத்துழைப்புத் தருகிறோம். நான் என்னுடையப் பணிகளைச் செய்யும்போது எவ்வித இடையூறையும் அச்சுறுத்தலையும் சந்தித்த அனுபவம் எனக்கில்லை. இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே எவ்வித பாகுபாடும் இல்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம். நாம் அனைவரையும் சமமாக மதிக்கிறோம். அனைவரையும் கடவுளின் பிள்ளைகளாகவே நாங்கள் கருதுகிறோம். தற்போது தலைதூக்கும் மதவாதம், பெரும்பான்மைவாதம் இந்தியச் சமூகத்திற்கு மிகப்பெரிய சவால்தான்.

இந்தியாவில் கிறிஸ்தவச் சிறுபான்மையினரின் நிலைமை எப்படி உள்ளது?

பொதுவாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, வட இந்தியாவில், தென் இந்தியாவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழும் ஒரு சில கெட்ட சம்பவங்களின் காரணமாக ஒருவித அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஒரு சில அடிப்படைவாத குழுக்கள் உள்ளன. ஆனால் நாங்கள் அரசாங்கத்தை அணுகும்போது, அவர்கள் நன்கு புரிந்துகொண்டு, மிகவும் சுமூகமாக, நல் ஒத்துழைப்பு நல்குகின்றனர். அரசே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முயற்சியெடுக்கிறது. ஆனால் கர்நாடகாவில், ஒரு சில இடங்களில் சுரூபங்களைத் தகர்ப்பதும், கெபிகளை அகற்றவதும், இப்படி இன்னும் ஒரு சில சம்பவங்கள் எங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. இங்கும்கூட, ஆந்திராவில் குண்டூர் உட்பட ஒரு சில இடங்களில், சின்ன சின்ன சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், நாங்கள் அரசை இது குறித்து அணுகியபோது, அரசாங்கம் 100 சதவீத பாதுகாப்பு தருவதாக வாக்களித்துள்ளது. இது பாராட்டுக்குரியது.

உங்களின் தனிப்பட்ட பக்தி முயற்சி குறித்து சொல்லுங்களேன். உங்களுக்குப் பிடித்த புனிதர் யார்?

எனக்கு அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி உண்டு. எங்கள் ஊரில் ஒரு சிற்றாலயம் உண்டு. அங்கு லூர்து அன்னை கெபி உள்ளது. சிறு பிள்ளையிலிருந்தே மாதா பக்தி என்னிடம் உண்டு. என் துன்ப நேரத்தில், குருவாக, ஆயராக, கர்தினாலாக என்று எந்த நிலையிலும் எங்கு பணியில் ஈடுபட்டிருந்தாலும் அன்னை மரியாவிடம் செபிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். என் அலுவலக மேசையில், அறையில் எப்போதும் லூர்து மாதாவும், வேளாங்கன்னி ஆரோக்கிய மாதாவும் இருப்பார்கள். மரியன்னையிடம் எனக்கு மிகுந்த பக்தி உண்டு. எனது குழந்தைப் பருவத்திலிருந்து நான் இதனை மேற்கொண்டு வருகிறேன்.

நான் எப்போதெல்லாம் துயரத்தில் இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் செபிப்பேன். அன்னை மரியாவிடம் செபிப்பேன். நான் அன்னையின் ஆறுதலை அனுபவித்திருக்கிறேன். என் வேலைகள், என் பிரச்சனைகள், நான் அனுபவித்த வெற்றி, தோல்வி என அனைத்தையும் முன்வைத்து செபிப்பேன்.

என் பெயர் அந்தோனி என்பதால், எனது பாதுகாவலரான பதுவை நகர்ப் புனிதர் அந்தோனியாரிடம் மிகுந்த பக்தி உண்டு. நான் எப்போதெல்லாம் செபிக்கிறேனோ, அப்போதெல்லாம் அன்னை மரியாவின் வல்லமை வாய்ந்த பரிந்துரை வழியாகவும் பதுவை நகர்ப் புனித அந்தோனியாரிடத்தில் அவர்தம் பரிந்துரை செபத்தாலும் நான் பல்வேறு உதவிகளைப் பெற்றுள்ளேன், நன்மைகளை அடைந்துள்ளேன் என்று உறுதியாக சொல்லமுடியும்.

எனக்காக அனைவரும் செபியுங்கள். நன்றி.

நம் வாழ்வு’ வாசகர்கள் அனைவருக்கும் என் ஆசீரும் செபங்களும்.

குடந்தை ஞானி, நீங்கள் நம் வாழ்வு ஆசிரியராக செய்துவரும் உங்களுடைய ஆற்றல்மிக்க பத்திரிகைப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

Comment