திருத்தந்தையின் செய்தி (தமிழாக்கம்:குடந்தை ஞானி )
2வது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 18 Jul, 2022
அன்பார்ந்த நண்பர்களே!
‘அவர்கள் முதிர்வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்’ (திபா 92:14). இந்த இரண்டாவது உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தில் அனைவருக்கும் பறைசாற்றும் விதத்தில் ஓர் உண்மையான ‘நற்செய்தி’யாகவும், மகிழ்ச்சியின் அலைகளாகவும் திருப்பாடலாசிரியரின் இந்த வார்த்தைகள் உள்ளன. வாழ்வின் இந்தக் கட்டத்தில் உலகம் அவர்களைப் பற்றி நினைப்பதையும் எதிர்காலத்திற்கான ஒரு சில எதிர்பார்ப்புகளில் நங்கூரமிடும் சில முதிர்வயதினர் சிலரால் வெளிப்படுத்தப்படும் ஒப்படைத்துவிட்டு அமைந்தடங்கும் (Resignation) மனப்போக்கையும் எதிர்கொள்ள அந்த வார்த்தைகள் உதவுகின்றன.
பெரும்பாலான மக்கள் தங்களின் முதிர் வயது குறித்து அஞ்சுகின்றனர். அது ஒருவகை நோய்; அத்தோடு எந்தத் தொடர்பு கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர். முதியவர்கள் அவர்களுடைய அக்கறைக்கு உரியவர்கள் அல்லர். அவர்கள் தனித்து விடப்பட வேண்டும் அனேகமாக அவர்களை பாதுகாத்து பராமரிக்கும் இல்லங்களிலும் இடங்களிலும் விடவேண்டும். அவர்களுடைய பிரச்சனைகளுடன் செயல்தொடர்பு கொள்வதை குறைத்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது பயன்படுத்திவிட்டு ‘தூக்கியெரியும் கலாச்சாரத்தின்’ மனநிலையாகவே இருக்கிறது. இது நம்மிடையே வாழும் ஏழைகளிடமிருந்தும் வலுவற்றவர்களிடமிருந்தும் ஏதோ ஒருவகையில் வேறுபட்டவர்கள் என்று நினைப்பதற்கும் அவர்களுடைய பலவீனங்களால் தொடப்படாதவாறும், “அவர்களிடமிருந்தும் அவர்களுடைய துயரங்களிடமிருந்தும்” தனித்துவிடப்பட்டவர்களாகவும் நினைப்பதற்கு இது நம்மை இட்டுசெல்கிறது. திருவிவிலியமோ முற்றிலும் வேறுபட்ட விதமாக இவற்றைப் பார்க்கிறது. திருவிவிலியம் கற்பிப்பதுபோல நீண்டகால வாழ்க்கை என்பது ஓர் ஆசீர்வாதம். வயது முதிர்ந்தவர்கள் என்பவர்கள் புறக்கணிக்கப்பட விலக்கிவைக்கப்பட்டவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் கடவுளுடைய நன்மைதனத்தில் வாழும் அடையாளங்கள். அவர்களிடமே நிறைவாழ்வை அவர் ஒப்படைக்கிறார். வயது முதிர்ந்த நபர்கள் வாழும் இல்லம் பேறுபெற்றது! வயது முதிர்ந்தவர்களை மதித்து போற்றும் குடும்பம் பேறுபெற்றதே!
முதிர் வயது என்பது நம்மில் ஒரு சிலர் ஏற்கனவே அனுபவிப்பதுபோல எளிதில் புரிந்து கொள்ளும் வாழ்வின் காலமல்ல; காலப்போக்கில் இறுதியாக அது நம்மிடம் வந்தாலும் யாரும் நம்மை முதிர்வயதிற்காக தயாரிப்பதில்லை. அது நம்மை ஆச்சரியத்தால் சில நேரங்களில் கொண்டுசெல்வதுபோல தோன்றும். நன்கு வளர்ந்த சமூகங்கள் வாழ்வின் இந்த கட்டத்தில் மக்கள் இதனை புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும் உண்மையிலேயே உதவாமல் மிகப்பெரிய தொகையை செலவு செய்கின்றனர். அவர்கள் உடல்நலம் பேணும் திட்டங்களை வயது முதிர்ந்தவர்களுக்கு வழங்குகின்றனர். ஆனால் இந்த வயதை நிறைவாக வாழ்வதற்கு எந்த திட்டங்களையும் வழங்குவதில்லை. எத்திசையில் செல்வது என்று தெளிந்து தேர்வதற்கும், எதிர்காலத்தை உற்று நோக்குவதற்கும் மிகவும் கடினமான சூழலை இது ஏற்படுத்துகிறது. ஒருபுறம் நாம் நம்முடைய தோல் சுருக்கங்களை மறைத்து, எப்போதும் இளமையாக இருப்பதுபோன்று நடித்து நம்முடைய முதிர்வயதை பாதுகாத்துக் கொள்வதற்காக சோதனைக்குள்ளாகிறோம். மறுபுறமோ நாம் நம் காலத்தில் இன்னும் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று கற்பனைச் செய்கிறோம். நாம் இன்னும் கனிதர இயலாது என்று வாட்டத்துடன் நினைக்கிறோம்.
பணி ஓய்வும், வளர்ந்த குழந்தைகளும் நமது நேரத்தையும் ஆற்றலையும் வழக்கமாக ஆக்கிரமிக்க செய்த பெரும்பாலானவற்றை இனி நெருக்கடிக்கு உள்ளாக்காது. நம்முடைய பலம் குறைந்துகொண்டு இருக்கிறது அல்லது நம்முடைய நோய்தாக்குதல் நமது நிகழ்ச்சி உறுதிபாடுகளைக் (Certainties) குறைத்து மதிப்பிடுகிறது. நாம் தக்கவைத்துக்கொள்ள போராடும் இந்த பரப்பரப்பான உலகம் நமக்கு எந்த மாற்று வழிகளையும் விடாமல், நாம் பயனற்றவர்கள் என்ற எண்ணத்தை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது. “முதிர்வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்” (திபா 71:9) என்ற திருப்பாடல் ஆசிரியருடைய இந்த இதயபூர்வமான செபத்தோடு நாமும் ஒன்றிணைந்துகொள்ள முடியும்.
இருந்தபோதிலும், ஆண்டவர் எப்படி நம் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மோடு உடனிருக்கிறார் என்று தியானிக்கும் இந்த திருப்பாடல் நம்பிக்கையில் நாம் தளராதிருக்க நம்மை உந்தி தள்ளுகிறது. முதிர் வயதுடன் நரைமுடிகளுடன் கடவுள் நமக்கு வாழ்வில் கொடையை தொடர்ந்து தருகிறார். தீமையால் வென்றுவிடாதபடி நம்மை பாதுகாக்கிறார். நாம் அவரை நம்பினால் அவரை புகழுவதற்கான வலிமையை கண்டடைய முடியும் (காண்க. திபா 71: 14-20). முதுமையில் வளர்வது என்பது இயற்கையாக உடல் தளர்வது என்பதைவிடவும் அல்லது வாழ்வில் தவிர்க்க இயலாத ஒரு கட்டம் என்பதைவிடவும் இதுவொரு நீண்டகால வாழ்விற்கான ஒரு கொடை என்று கண்டுணர முடியும். வயது முதிர்தல் என்பது சாபமல்ல; மாறாக அது ஓர் ஆசீர்வாதம்.
இக்காரணத்திற்காக நாம், நமக்கு நாமே அக்கறை கொள்ள வேண்டும். வாழ்வின் பிற்பகுதியில் தொடர்ந்து செயல்பட வேண்டும். ஆன்மீக நோக்கிலும் இது உண்மையே. நம்முடைய உள்ளார்ந்த வாழ்வை இறைவார்த்தையை விடாமுயற்சியுடன் வாசிப்பது, அன்றாடச் செபம், அருளடையாளங்களைப் பெறுதல், மற்றும் திருவழிபாட்டில் பங்கேற்பது ஆகியவற்றின் வழியாக வளர்த்து எடுக்க வேண்டும். இறைவனோடு இந்த உறவுடன் பிறருடனான உறவையும் நாம் வளர்த்துகொள்ள வேண்டும். முதலாவதாக நம்முடைய குடும்பங்கள், நம்முடைய பிள்ளைகள், நம்முடைய பேரப்பிள்ளைகளுடனான அன்புநிறைந்த அக்கறையை காட்டவேண்டும். அத்தோடு ஏழைகளுக்கும், துயரப்படுவோர்க்கும் அருகே சென்று, நம்மால் ஆன ஆக்கபூர்வமான உதவிகளையும் செபங்களையும் வழங்க வேண்டும். நம்மைச்சுற்றி நடப்பவற்றை நம்முடைய வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டும் அல்லது நம்முடைய வீட்டு சாளரங்கள் வழியாக பார்த்துகொண்டும் இருக்கின்ற வெறும் பார்வையாளர்களாக இப்படிப்பட்ட செயல்கள் நம்மை உணர செய்யாது. மாறாக, இறைவனின் திருப்பிரசன்னத்தை எங்கும் தெளிந்து தேர்ந்துகொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவமரக் கன்றுபோல் (காண்க. திபா 52:8) நாம் நமக்கு அடுத்து வாழ்வோரிடம் ஒரு ஆசீர்வாதமாக இருக்க முடியும்.
முதிர் வயது என்பது கைவிடுவதற்கும் பாய்மர படகின் பாய்ச்சுருளை சுருட்டி வைப்பதற்குமான நேரமல்ல; ‘நமக்கென ஒரு புதிய மறைபணி காத்திருக்கிறது. எதிர்காலத்தை நோக்கி அது நம்மை நகர்த்துகிறது என்று விடாமுயற்சியுடன் பலன் தருவதற்கான காலம். “வயதானவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும், அன்பும், சிந்தனைகளும் நிறைந்த நல்லுணர்வு நம்மை இன்னும் மனித தன்மையுள்ளவர்களாக்கி மீண்டும் பலருக்கான ஒரு நல்வாய்ப்பாக மாற உதவுகிறது. அது இளைய தலைமுறையினருக்கான நம்முடைய அன்பின் அடையாளமாக இருக்கின்றது. இது கனிவிரக்கத்தின் புரட்சிக்கான (Revolution of Tenderness) நம்முடைய பங்களிப்பாக இருக்கும். இந்த ஆன்மீக அகிம்சைமுறையிலான இப்புரட்சியில் பங்கேற்க அன்பார்ந்த தாத்தா- பாட்டிகளே, முதிர் வயதினரே, செயல்திறனுடன் பங்கேற்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.
திடீரென்று பரவிய கொரோனா பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து உலகளவிலான அமைதி மற்றும் வளர்ச்சிக்கு தீங்கிழைக்கும் போர் என்று அடுத்தடுத்து நமது உலகம் சோதனையான காலக்கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது. தற்செயலாகவோ என்னவோ அதே காலகட்டத்தில் கடந்த நூற்றாண்டில் ஒரு தலைமுறை அனுபவித்து பலத்த உயிர்சேதத்தை ஏற்படுத்திய அதே போரானது இப்போதும் ஐரோப்பியாவில் ஏற்பட்டிருக்கிறது. இந்த பெருங்குழப்பமானது ‘ஏனைய பெருந்தொற்றுகளின்’ எதார்த்தத்திற்கும், மானுட குடும்பத்தையும், நமது பொது உலகையும் பாதித்து எங்கும் பரவியிருக்கிற வன்முறையின் ஏனைய வடிவங்களுக்கும் வலி உணர்வற்று இருப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கண்ட அனைத்து கருத்துகளிலும் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஒரு மனமாற்றம் ஏற்பட வேண்டும். அது நம்முடைய இதயங்களை நிராயுதமாக்கி பிறரை நம்முடைய சகோதர சகோதரியாக பார்ப்பதற்கு இட்டுச்செல்ல வேண்டும். நம்முடைய சொந்த பேரப்பிள்ளைகளை நாம் எப்படி கருதுகிறோமோ அதே அன்புடன் அதே புரிதலுடன் பிறரையும் கருதவேண்டும் என்று கற்பிப்பதற்கு தாத்தா - பாட்டிகளாகிய நமக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மிகப்பெரிய பொறுப்புள்ளது. பிறர்மீது அக்கறைக்கொள்ளும் மனிதநேயத்தில் நாம் வளர்ந்திருக்கபடியால் அமைதிக்கான வாழ்வின் பாதையை கற்பிக்கும் ஆசிரியர்களாக நாம் இருக்க முடியும். தேவையில் இருப்போர் மீது கவனம் செலுத்த முடியும். இந்த மனப்போக்கு பலவீனம் என்றோ விலகியிருக்கும் நிலையென்றோ தவறாக புரிந்துகொள்ளக்கூடும். இருந்தபோதிலும், வலியத் தாக்கும் தன்மையுடையோரும், பழித்தூற்றுகிறவரும் அல்லர். மாறாக கனிவுடையோரே நாட்டை உரிமைச்சொத்தாக்கி கொள்வர் (காண்க மத் 5:5)
இந்த உலகை காப்பதற்கான கனியை நாம் கொண்டு வர முன்வரவேண்டும். நம்முடைய தாத்தா – பாட்டிகள் அவர்களுடைய கக்கத்தில் அரவணைத்து, அவர்களுடைய முழங்காலில் நம்மை தூக்கி வந்தனர். உங்களுடைய செயல்திறன் மிக்க உதவியாலோ அல்லது உங்கள் செபத்தாலோ உங்களுடைய சொந்த பேரப்பிள்ளைகளை மட்டுமல்ல; அவர்களுடன் இதுவரை நீங்கள் சந்திக்காத போரிலிருந்தும் அல்லது துன்பம் மற்றும் அதன் விளைவுகளிலிருந்தும் தப்பி பிழைத்தால் போதும் என்று ஓடி வருகின்ற மிரட்சியில் இருக்கிற பேரப்பிள்ளைகளையும் நம்முடைய சொந்த முழங்காலில் தாங்குவதற்கான காலம் இதுவே. அன்பு நிறைந்த குறிப்பறிந்து உதவிய புனித யோசேப்பைப் போல நாமும் நம்முடைய இதயங்களில் உக்ரைனுடைய, ஆப்கானிஸ்தானுடைய, தெற்கு சூடானுடைய சின்னஞ்சிறு குழந்தைகளை நம் இதயங்களில் பற்றிக்கொள்வோமாக.
நாம் மட்டுமே தனித்து காப்பாற்றப்படுவதில்லை என்ற கண்டுணர்தல், நாம் அனைவரும் இணைந்து பிட்கிற அப்பமே மகிழ்ச்சி என்று .. நம்முடைய உலகிற்கு என்ன தேவை என்பதை அறிந்து உணரக்கூடிய ஒரு ஞானநிலைக்கு நம்மில் பலரும் வந்திருக்கிறோம்.
தனிப்பட்ட நிறைவும் குழப்பத்தில் வெற்றியும் கண்டடைய முடியும் என்று தவறாக நினைக்கிறவர்களுக்கு முன்பாக நாம் சான்று பகிர்வோமாக. ஒவ்வொருவரும் ஏன் நம்மில் பலவீனமானவர்களும்கூட இதனை செய்ய முடியும். அயல்நாடுகளிலிருந்து வருகின்ற அகதிகளைப் போல - நமக்கு நாமே அக்கறைக்கொள்கிற அந்த உண்மையே ஒன்றிணைந்து அமைதியில் வாழ்வது சாத்தியம் மட்டுமல்ல;அது அவசியமும்கூட என்று சொல்வதற்கும் வழிவகுக்கும்.
அன்பார்ந்த தாத்தா - பாட்டிகளே, முதிர் வயதினரே, இந்த உலகின் கனிவிரக்க புரட்சியின் கைவினைஞர்களாக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில் நமது வயதுக்கு மிகவும் பொருந்தி போகிற நம்மிடமுள்ள, மிகவும் அடிக்கடி, சிறப்பாக பயன்படுத்தக்கூடிய விலைமதிப்பற்ற கருவியுமான ‘செபத்தை’ பயன்படுத்துவதற்கு நாம் கற்றுகொள்வோமாக. செப கவிஞர்போல நாம் மாறுவோமாக. நம்முடைய சொந்த வார்த்தைகளை பயன்படுத்துவதற்கான சுவையை வளர்த்துக் கொள்வோமாக. இறைவார்த்தையால் கற்பிக்கப்பட்டவற்றை நாம் மீண்டும் ஒருமுறை எடுத்துக்கொள்வோமாக. நம்முடைய நம்பிக்கை நிறைந்த செபம் மிகச்சிறந்த சாதனை படைக்கும். துயரத்தின் மிகுதியால் கதறுவோருக்கு ஆறுதலாகும். மனங்களை மாற்றுவதற்கு அது உதவும். நாம் ஒரு சிறந்த ஆன்மீக கருவறையின் குழுப்பாடலாக இருக்க இயலும். அங்கே வேண்டுதல் செபங்களும், புகழ்ச்சி பாடல்களும் வாழ்வின் தளங்களில் உழைத்து போராடும் சமூகத்திற்கு ஆற்றல் தரும்.
உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர் தினம் என்பது திருவிவிலிய வார்த்தைகளில், ஆண்டவர் யாருடைய நாட்களை நிறைத்தரோ அவர்களுடன் இணைந்து கொண்டாட விரும்புகிறது என்று மகிழ்ச்சியுடன் பறைசாற்றுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகும். இந்நாளை நாம் அனைவரும் இணைந்து கொண்டாடுவோமாக.
இந்த நாளை உங்கள் பங்குகளில், இறைச்சமூகங்களில் அறியப்பட செய்யும்படி நான் உங்களை வேண்டுகிறேன். தனிமையில் உள்ள வயது முதிர்ந்தவர்களை, பராமரிப்பு இல்லங்களில் அல்லது அவர்கள் வாழும் குடியிருப்புகளில் தேடி கண்டுபிடியுங்கள். இந்நாளில் யாரும் தனிமையை உணர்வதில்லை என்பதை நாம் உறுதிசெய்வோமாக. எதிர்பார்க்கும் ஒரு சந்திப்பு, நாங்கள் எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நாட்களை அது மாற்றக் கூடும். ஒரு தொடக்கச் சந்திப்பிலிருந்து ஒரு புதிய தோழமை பூக்கட்டும். தனிமையில் வாழும் வயது முதிர்ந்தோரைச் சந்திப்பது என்பது நாம் வாழும் காலத்தில் ஒரு இரக்கத்தின் செயலாகும். கனிவிரக்கத்தின் தாயாம் நம் அன்னை மரியாவிடம் நாம் அனைவரும் கனிவிரக்கப் புரட்சியின் கைவினைஞர்களாக்கும்படி செபிப்போமாக. இதனால் நாம் இந்த உலகை தனிமையின் பிடியிலிருந்தும், தீயப் போரிலிருந்தும் விடுவிக்க இயலும்.
உங்கள் அனைவருக்கும் நீங்கள் நேசிக்கும் ஒவ்வொருக்கும் எனது இதயப்பூர்வமான நெருக்கத்தையும் அன்பையும் அனுப்புகிறேன். நீங்களும் எனக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்று உங்களை அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்.
Comment