No icon

திருத்தந்தை

இறைத்திட்டத்தைக் கண்டறியும் ஆப்ரிக்கத் திருஅவைக்கு பாராட்டு

இக்காலக்கட்டத்தில் கடவுள் நமக்கு கூறுவதைத் தெளிந்துதேர்வுசெய்வது, நம்பிக்கையின் ஓர் அடையாளம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்க கத்தோலிக்க இறையியல் வல்லுநர்கள், மற்றும், மேய்ப்புப்பணியாளர்களுக்கு செவ்வாயன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

ஜூலை 19 செவ்வாயன்று, கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் இரண்டாவது இறையியல் மாநாட்டைத் துவக்கியுள்ள, ஆப்ரிக்க நாடுகளின் ஆயர்கள், இறையியலாளர்கள், துறவியர், மற்றும், பொதுநிலையினர் ஆகியோரிடம் காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, இக்காலத்தின் தேவைகளை ஆய்ந்தறிவதற்கு ஒன்றிணைந்து வந்துள்ள இவர்கள், தூய ஆவியாரின் தூண்டுதலைப் பெறுமாறு இறைவேண்டல் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

இறையியல், சமுதாயம், மற்றும், மேய்ப்புப்பணி ஆகியவை பற்றி கலந்தாய்வு செய்கின்ற, இந்த மாநாடு குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இன்று கடவுள் நமக்குக் கூறுவதை தெளிந்துதேர்வுசெய்ய ஒன்றிணைந்து வருவது, ஓர் உறுதியுடன் சவால்களைச் சந்திப்பதற்காக மட்டுமல்ல, ஆப்ரிக்கக் கனவுகள் மெய்ப்பிக்கப்படுவதற்கும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆப்ரிக்காவின் சமூக, கலாச்சார, சுற்றுச்சூழல், மற்றும், திருஅவையின் கனவுகள் உண்மை வடிவம் பெறுவதற்காக, இம்மாநாட்டினர் மேற்கொண்டுள்ள முயற்சிகள், ஆப்ரிக்கத் திருஅவை ஏற்கனவே இப்பாதையில் சென்றுகொண்டிருப்பதன் அடையாளமாக இருக்கின்றது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இம்மாநாட்டினர் தங்களது இம்முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, 2015ஆம் ஆண்டில் மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் கூறியதுபோன்று, இம்மாநாட்டின் இறுதியில் வெளிப்படுத்தப்படும் சிந்தனைகள், எப்போதும் நம்மை வியக்கவைப்பதாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்ரிக்க மூதாதையரின் ஞானம், மலைகள் ஒருபோதும் சந்திப்பதில்லை, ஆனால் மனிதர்களே சந்திக்கின்றனர் என்ற முக்கியமான கூறை நமக்கு நினைவுபடுத்துகின்றது என எடுத்தியம்பியுள்ள திருத்தந்தை, இம்மாநாட்டினரின் இறையியல் ஞானம், ஏழைகளுக்கும், வாழ்வு, அமைதி, நம்பிக்கை ஆகியவை கிடைப்பதற்காகப் போராடும் மக்கள் மற்றும், குழுமங்களுக்கும், இரக்கத்தின் நற்செய்தியாக விளங்கவேண்டும் என்ற தன் ஆவலையும் தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்காவிலும் உலகிலும் உயிரூட்டமுள்ள ஒரு திருஅவைக்காக ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்தல்என்ற தலைப்பில், ஜூலை 19 செவ்வாய் முதல், 22 வருகிற வெள்ளி வரை, நைரோபியின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது

Comment