No icon

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அமைதி ஏற்படுத்துவோர், கடவுளின் மக்கள் எனப்படுவர்

சில வாரங்களாக இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பை நோக்கிய புனித வாரத்தில், அதுவும், கொள்ளை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இயேசுவின் பாடுகள், மற்றும், உயிர்ப்பைப் பற்றி எடுத்துரைத்து, அன்பே என்றும் நிலைத்திருக்கும் என்பதை சுட்டிக்காட்டி, தன் கடந்த வார புதன்  மறைக்கல்வி உரையை ஏப்ரல் 08 ஆம் தேதி வழங்கினார்.

இயேசு எடுத்துரைத்த பேறுகள் குறித்த மறைக்கல்வியின் தொடர்ச்சியாக ஏப்ரல் 15, புதனன்று, ஏழாவது பேறு குறித்து, வத்திக்கான் மாளிகையிலுள்ள தன் நூலகத்திலிருந்து, காணொளி வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இயேசு எடுத்துரைத்த பேறுகள் குறித்த மறைக்கல்வியின் தொடர்ச்சியாக இன்று, “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத். 5:9) என்ற ஏழாவது பேறு குறித்து சிந்திப்போம். விவிலிய வார்த்தையான ஷலோம் என்பது, அளவற்ற, செழுமை நிறைந்த ஒரு வாழ்வைக் குறிக்கிறது.

இரண்டாவதாக, நவீன கால எண்ணத்தை ஒத்த, உள்மன அமைதியையும் இச்சொல் குறிக்கிறது. இருப்பினும்இந்த இரண்டாவது வகை அமைதி என்பது, நிறைவுபெற்ற ஒன்றாக இருப்பதில்லை, ஏனெனில், நம் உள்மன அமைதி பாதிக்கப்படும் வேளைகளில்தான் ஆன்மீக வளர்ச்சி இடம்பெறுகிறது. இந்த உயிர்ப்பு காலத்தில் தன் அமைதி எனும் கொடையை இயேசு நமக்குக் கொணர்வதைக் காண்கிறோம். இயேசுவின் மரணம் மற்றும், உயிர்ப்பின் கனியாக இந்த அமைதி உள்ளதுஇந்த அமைதி எனும் கொடையைஇவ்வுலகம் வழங்குவதுபோல், இயேசு நமக்கு வழங்குவதில்லை. ஏனெனில், உலகமோ, மற்றொருவரை இழப்படைய வைத்துத்தான் அதனைப் பெற்று விட்டதாக நம்புகிறது. ஆனால், இயேசுவோ, தன் மனித உடலைக் கையளித்து, அதன் வழியே பகைமை மனநிலைகளை அழிவுக்குள்ளாக்கினார்.

புனித பவுல், எபேசியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல், ’ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (எபே.2:14). ஆகவே, அமைதியை உருவாக்கிடுவோர், இயேசுவைப் பின்பற்றி, கடவுள் வழங்கும் அருளின் துணைகொண்டு, எப்போதும், எல்லா இடங்களிலும் தன்னையே கையளித்து மற்றவர்களின் ஒப்புரவுக்காக உழைப்பவர்கள். இவ்வாறு செய்பவர்கள், கடவுளின் உண்மை மக்களாக இருந்து, நமக்கு உண்மை மகிழ்வின் வழியைக் காட்டுகின்றனர்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை ஏப்ரல் 15 ஆம் தேதி புதனன்று வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் ஒருமுறை அனைவருக்கும், இயேசு தரும் அமைதியுடன் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைக் கூறி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment