Indian Church News
கோவிட்-19: இந்திய திருஅவை நலிந்தவர்களுக்கு உதவி - கர்தினால் கிரேசியஸ்
கொரோனா தொற்றுக்கிருமி உலகை அச்சுறுத்திவரும் இவ்வேளையில், சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கும், நாட்டின் பொதுநலனுக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் இந்தியத் தலத்திருஅவை ஆற்றி வருகின்றது .
இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், இந்நெருக்கடி காலத்தில், கத்தோலிக்கத் திருஅவையின் முழு ஆதரவையும் தெரிவித்து, இம்மாதத்தின் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மடல் ஒன்றை எழுதியிருந்தார்.
அதோடு, இந்திய காரித்தாஸ் இயக்குனர், இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழக (CHAI) பொது நிர்வாகி உள்ளிட்ட பல்வேறு திருஅவை பிரதிநிதிகள் மற்றும், நலவாழ்வுப் பணியாளர்களோடு பிரதமர் மோடி அவர்கள் காணொளி கருத்தரங்கு ஒன்றையும் நடத்தினார்.
ஏப்ரல் 2ம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர் விவகாரம் குறித்து கலந்துரையாட பிரதமர் மோடி அவர்கள் நடத்திய காணொளி கருத்தரங்கில், மும்பை பேராயரான, கர்தினால் கிரேசியஸ் அவர்களும் கலந்துகொண்டார்.
இந்த ஊரடங்கு காலத்தில் எவரும் வேலை செய்ய இயலாமல் இருக்கும்போதும்கூட, அவர்களின் வேலைக்கும், ஊதியத்திற்கும் உறுதி வழங்குமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குத்தளங்களையும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சமுதாய ஊரடங்கு, பரவலாக வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியிருப்பதோடு, தினக்கூலிகள் மற்றும், பூர்வீகக்குடிகளின் வாழ்வாதாரங்களையும் பாதித்துள்ளது.
Comment