திருத்தந்தை பிரான்சிஸ் சிறு பத்திரிகைகளுக்கு கடிதம்
பத்திரிகைகளின் வேதனையைப் புரிந்து கொண்ட திருத்தந்தை (நம் வாழ்வும் திருத்தந்தையின் கடிதமும்)
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 02 May, 2020
வத்திக்கான் ஏப்.27. குறைந்த முதலீட்டில் பத்திரிகைகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், விற்பனைசெய்யும் தெருவோர விற்பனையாளர்களும், இன்றைய கொள்ளை நோய் சூழலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்த கவலையை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
தெருவோர பத்திரிகைகளை விற்பவர்கள், ஏற்கனவே இந்த கோவிட்-19 கொள்ளை நோயால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இவ்வேளையில், தங்கள் வேலைகளையும் இழந்துவருவது, மேலும் துன்பங்களைத் தருவதாக உள்ளது என சிறு பத்திரிகைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் கடைநிலையில் இருக்கும் இந்த மக்கள் இந்த சிறு ஊதியம் கிடைக்கும் வேலை வழியாக வாழ்வை ஓரளவு ஓட்டிக்கொண்டிருந்த வேளையில், தற்போது அந்த வேலையையும் இழந்து துயரத்தில் இருப்பது வேதனை தருகிறது என அதில் கூறியுள்ளார்.
சிறு பத்திரிகைகள் வழியாக வாழ்வு நடத்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இத்தாலியில் இத்தகைய மக்களிடையே காரித்தாஸ் கத்தோலிக்க அமைப்பு ஆற்றிவரும் சிறப்புப் பணிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிய நிறுவனங்கள் வழியாக அல்லாமல், குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிடும் குறும்பத்திரிகைகள், இன்றைய சூழலில், பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிடும் திருத்தந்தையின் இந்த கடிதம், உலகின் சிறு பத்திரிகைகள் அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நம் வாழ்வும் திருத்தந்தையின் கடிதமும்
தமிழகத்தில் தோராயமாக உள்ள 7,00,000 குடும்பங்களில் 15000 மட்டுமே நம் வாழ்வு சந்தாதாரர்களாக உள்ளனர்.
பத்திரிகையைக் குறித்தும் பத்திரிகையாளர்களையும் குறித்தும் திருத்தந்தையின் வெளியிட்டுள்ள கவலை தமிழக இறைமக்களின் ஒரே வார இதழான ‘நம் வாழ்வு’ வார இதழுக்கும் பொருந்தும்.
- ஏழு லட்சம் குடும்பங்களும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இருந்தும், பதினெட்டு மறைமாவட்டங்களில் 1525 பங்குகள் இருந்தும், 1000க்கும் மேற்பட்ட துறவற இல்லங்கள் இருந்தும் வாரந்தோறும் வெறும் 15000 பிரதிகளை மட்டுமே அச்சிலேற்றும் ஒரே கிறிஸ்தவ வார பத்திரிகையான நம் வாழ்வுக்கும் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.
- 700000 குடும்பங்கள், (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்தம் 6.12 சதவீதம்) இதில் கிராமங்களில் 4.29 % நகர்ப்புறங்களில் 8.08 % )
- 1520 பங்குகள் (PARISHES)
- 2985 கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் (மறைமாவட்டங்களிடம் 1611, துறவியர்களிடம் 1374)
- 600 கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில்லாத சேவை இல்ல நிறுவனங்கள்
- 1200 இருபால் துறவற இல்லங்கள்
- 4500 துறவற மற்றும் மறைமாவட்ட அருள்பணியாளர்கள்
- நம் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் 60000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்கள்..
ஆனால் நம் வாழ்வு வார இதழின் பிரதிகளோ வெறும் 15000 மட்டும்தான்.
-
தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க இருபால் துறவற இல்லங்கள் தங்கள் இல்லங்களுக்கு ஒன்று வீதம் வாங்கினாலே ஆயிரம் பிரதிகளும்,
- கல்வி நிறுவனங்கள் தங்கள் நூலகங்களுக்கு ஒன்று, இருபால் ஆசிரியர் அமர்வு அறைகளுக்கு ஒவ்வொன்று வீதம் மூன்று வாங்கினாலே ஒரு 8000 பிரதிகளும்
- தமிழகத்தில் உள்ள 1525 பங்குகளில் பங்குத்தந்தையர்கள். உதவிப் பங்குத்தந்தையர்கள் மற்றும் துறவற இல்லங்கள் ஆளுக்கு ஒன்று வீதம் வாங்கினாலே 3000 பிரதிகள் என 12000 பிரதிகள் கூடுதலாக அச்சிலேறும்.
- 1525 பங்குகளில் திருஅவைச் சட்டப்படி, பங்குப்பேரவை என்பது நிச்சயம் உண்டு. ஏதோ ஒரு வகையில் பங்குத்தந்தையோடு இணைந்து குறைந்த ஒவ்வொரு பங்குப் பேரவைக்கும் குறைந்தபட்சம் பத்துபேர் வீதம் 1000 பங்குகளில் பத்துபேர் வீதம் 10000 பிரதிகள் கூடுதலாக அச்சிலேறும்.
- தமிழகத்தில் 1500 பங்குகளில் ஒரு பங்கிற்கு பத்துவீதம் 15000 அன்பியங்கள் (25000 அன்பியங்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது). ஒரு அன்பியத்திற்கு ஒன்றுவீதம் நம் வாழ்வு வாங்கினால் 15000 பிரதிகள் அச்சிலேறும். இருபத்தைந்து குடும்பங்கள் ஆண்டிற்கு ரூ.20 வீதம் ஒரு அன்பியத்திற்கு ரூ.500 செலுத்தினாலே நம் வாழ்வு அன்பியத்தலைவரின் வீட்டிற்கு வந்து சேரும்.
எத்தனையோ கூக்குரல் கடிதங்கள், பிச்சையெடுக்காத குறையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேண்டுகோள் கெஞ்சல் கடிதங்கள் அனுப்பப்பட்டாலும் பல்வேறு ஆயர்கள், சபைத்தலைவர்கள், தலைமையன்னையர், மாநிலத் தலைமையன்னையர், பல்வேறு ஆண் துறவற சபைகளின் மாநிலத் தலைவர்கள், பங்குத்தந்தையர்கள், துறவற இல்லங்களின் தலைவர்கள்-தலைவிகள் ‘நம் வாழ்வை’க் கண்டுகொள்வதே இல்லை. இங்கே மிகவும் பாராட்டுக்குரியது என்னவெனில் கும்பகோணம் மற்றும் குழித்துறை தங்கள் மறைமாவட்ட நிர்வாகம் தங்கள் குருக்கள் அனைவருக்கும், தஞ்சை, மற்றும் சென்னை மயிலை மறைமாவட்டம் விருப்பமுள்ளவர்களுக்கும் வாங்கி உதவுகிறது. செங்கை மறைமாவட்டம் நம் வாழ்வு வெளியீடுகளைத் தவறாமல் வாங்கி உதவுகிறது. ஏனைய மறைமாவட்டங்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை.
ஆக, தற்போது அச்சிலேறும் 15000 பிரதிகளில் 14200 பிரதிகள் பொதுநிலையினர்தான் வாங்கி தாங்கிப் பிடிக்கின்றனர். 45 ஆண்டுகாலமாக வருகிற ஒரே கிறிஸ்தவ வார பத்திரிகை வாரத்திற்கு 45000 பிரதிகள்கூட அச்சில் ஏறாத அவலம்.
குறைந்த பட்சம் முப்பதாயிரம் பிரதிகளை வாரந்தோறும் அச்சிலேற்றினால்தான் ஒரு தனிப் பிரதியின் ஒட்டுமொத்த விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.
இதில் வேறு, சொந்த அச்சகம் என்பது நம் வாழ்வுக்கு இல்லை.
அகில உலக கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுத்தாளனின் வலியும் பத்திரிகையாளனின் வேதனையும் புரிகிறது. ஓர் எழுத்தாளனின் வலியை இன்னொரு எழுத்தாளனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஏனைய திருஅவைத்தலைவர்களுக்கும் மேய்ப்பர்களுக்கும் துறவறத்தலைவர்களுக்கும் இந்த வேதனையும் வலியும் ஒருபோதும் புரியபோவதில்லை.
சிறு பத்திரிகையாளர்களின் வேதனையைப் புரிந்து வாஞ்சையோடு கடிதம் எழுதிய திருத்தந்தைக்கு ஓர் எழுத்தாளனாக, ஒரு பத்திரிகையாளனாக, ஒரு கிறிஸ்தவ வார பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் என் மனமார்ந்த நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.
தமிழகத்திருஅவையின் தலைவர்களும் துறவற சபைகளின் தலைவர்களும் மனது வைத்தால் நம் வாழ்வு சர்வ சாதாரணமாக 30000 பிரதிகள் அச்சிலேற உதவு முடியும்.இறைமக்கள் இவர்களோடு கரம் கோர்த்தால் ஐம்பதாயிரம் பிரதிகள் மிக மிக எளிதுதான்.
ஊதப்படும் சங்கொலி நன்மனத்தோர் அனைவரின் காதுகளைத் திறக்க வேண்டும்.
Comment