Vatican News
தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம்
மே 01 ஆம் தேதி வெள்ளி காலை ஏழு மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றியவேளை, பலிபீடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம், 1956ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்தது என்று திருப்பீடம் கூறியுள்ளது.
1955ம் ஆண்டில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், தொழிலாளர் உலக நாளன்று, தொழிலாளர் புனித யோசேப்பு திருவிழாவை உருவாக்கியதற்கு, அடுத்த ஆண்டிலிருந்து, தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவத்தை அவர் ஆசீர்வதித்தார்.
கோவிட்-19 பரவலால் உருவாகியுள்ள நெருக்கடியால் மக்கள் கூட்டமாக இருப்பது குறைந்திருக்கும் சூழல், 64 ஆண்டுகளுக்கு முன்னும் நிலவியது என்றும், அச்சமயத்திலும், இதே தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம் வத்திக்கானில் வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மிலானிலிருந்து உரோம் நகருக்கு
மிலான் பேராயர் ஜொவான்னி பத்திஸ்த்தா மொந்தினி அவர்கள், இந்த தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவத்தை, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், ஆசீர்வதிக்குமாறு, 1956ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி, ஹெலிகாப்டரில் மிலானிலிருந்து உரோம் நகருக்கு எடுத்து வந்தார். அதே நாளில், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், இத்தாலிய கிறிஸ்தவ தொழிலாளர் அமைப்பினரைச் (ACLI) சந்தித்தார்.
என்ரிகோ நெல் புரூன்னிங் (Enrico Nell Breuning) என்ற சிற்பியால் செய்யப்பட்ட, 150 மீட்டர் உயரமுடைய வெண்கலத்தாலான இந்த புனித யோசேப்பு திருவுருவம், உரோம் நகரில், அந்த அமைப்பின் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு மே 23ம் தேதி, அந்த அமைப்பினர், இந்த புனித யோசேப்பு திருவுருவத்தை, புனித ஆறாம் பவுல் அரங்கில் திருத்தந்தையைச் சந்தித்தவேளை, பவனியாக எடுத்து வந்தனர்.
மே 01, வெள்ளியன்று சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றும்போது, அங்கு வைப்பதற்கென, ஏப்ரல் 30 வியாழன் மாலையில் இது வத்திக்கானுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த காலம் முதல், இக்காலம் வரை, தொழிலாளர்கள் எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும்வேளை அவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதற்காக, தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம் வெள்ளியன்று இந்த சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது. திருத்தந்தையும் இப்புனிதரிடம் உலகத் தொழிலாளர்களுக்காகச் செபித்தார்.
Comment