Marian Devotion
மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாடு அர்ப்பணம்
- Author --
- Saturday, 02 May, 2020
மே 13ம் தேதி சிறப்பிக்கப்படும் பாத்திமா அன்னை மரியா திருநாளையொட்டி, அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாட்டை அர்ப்பணிக்க, அந்நாட்டு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.
பாத்திமா அன்னை மரியாவின் திருநாளன்று, பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், இந்த அர்ப்பணத்தை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ரோமுலோ வாலஸ் அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
2013ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை ஆண்டில், அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாடு அர்ப்பணிக்கப்பட்டதை உறுதி செய்யும் வகையில், இந்த நெருக்கடியானச் சூழலில், மீண்டும் ஒருமுறை, இந்த அர்ப்பணம் நிகழ்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும், வெள்ளியன்று துவங்கும் மே மாதம், அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மாதம் என்பதால், இம்மாதம் முழுவதும், இல்லங்களில் செபமாலை செபிப்பதன் அழகைக் கண்டுணருமாறு அனைத்து கத்தோலிக்கருக்கும் அழைப்பு விடுத்து, ஏப்ரல் 25, கடந்த சனிக்கிழமையன்று மடல் ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK
செபமாலை செபிப்பதற்கு வலைத்தளங்களில் நல்ல வழிமுறைகள் உள்ளன என்று இம்மடலில் கூறியுள்ள திருத்தந்தை, செபமாலையின் முடிவில் அன்னை மரியாவை நோக்கிச் செபிப்பதற்கு உதவியாக இரு செபங்களை தான் வழங்கியுள்ளதாகவும், விசுவாசிகளோடு ஆன்மீக முறையில் இணைந்து தானும் செபமாலையை செபிக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மே 1ம் தேதி, இவ்வெள்ளியன்று, இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ஆகிய நாடுகள் "திருஅவையின் அன்னையாம் மரியா"வுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று, இம்மூன்று நாடுகளின் ஆயர் பேரவைகளும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத் திருஅவையில்கூட இதே போன்று ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது வெற்றிப்பெற்றதாகத் தெரியவில்லை. மே மாதம் முதல்தேதியை அன்னை மரியாவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மறைமாவட்டங்களும் ஒருசேர ஒப்புக்கொடுத்ததாகச் செய்தி எதுவும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
Comment