Vatican News
போலந்து, ஹங்கேரி நாடுகள் வத்திக்கானுக்கு அனுப்பிய மருத்துவ உதவிகள்
- Author Vatican News/Tamil --
- Tuesday, 12 May, 2020
இத்தாலி நாடு, கோவிட்-19 கிருமிக்கு எதிராக இன்னும் போராடிக்கொண்டிருக்கும்வேளை, முகக்கவசங்கள் மற்றும் ஏனைய மருத்துவக் கருவிகளை போலந்து நாடு வத்திக்கானுக்கு வழங்கியுள்ளது.
மே 08 ஆம் தேதி வெள்ளியன்று இரண்டு லாரிகளில் வத்திக்கானை வந்தடைந்துள்ள இந்த மருத்துவக் கருவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள வத்திக்கான், போலந்து மக்களின் தாராள மனப்பான்மையைப் பாராட்டியுள்ளது.
திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான, போலந்து கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்களும், திருப்பீடத்தின் போலந்து தூதர் யானூஷ் கோட்டான்ஸ்கி (Janusz Kotański) அவர்களும், இந்த மருத்துவக் கருவிகள் வத்திக்கானுக்கு வழங்கப்படுவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இந்த நன்கொடைகள் பற்றி வத்திக்கான் வானொலியில் விளக்கிய போலந்து தூதர் யானூஷ் கோட்டான்ஸ்கி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், போலந்து அரசுத்தலைவர் ஆன்ரேஸ் டுயுடா (Andrzej Duda) அவர்களும் தொலைப்பேசியில் கலந்துரையாடிய எட்டு நாள்களுக்குப்பின் இந்த உதவிகள் வத்திக்கானை வந்தடைந்துள்ளன என்று கூறினார்.
இதற்கு கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி அவர்கள் பெரிதும் உதவினார் என்று கூறிய யானூஷ் கோட்டான்ஸ்கி அவர்கள், கோவிட்-19 சூழலில், போலந்தின் நிலைமை, இத்தாலியின் நிலைமை போன்று இல்லை என்றும், இந்த மருத்துவக் கருவிகள், இத்தாலியர்கள், வத்திக்கான் நகரம், அங்குப் பணியாற்றும் காவல்துறையினர், சுவிஸ் கார்ட்ஸ் போன்றோருக்கு உதவும் என்றும் தெரிவித்தார்.
ஹங்கேரி அரசின் உதவிகள்
மேலும், ஹங்கேரி நாடும், இந்த கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காலத்தில், அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும், 45 ஆயிரம் முகக்கவசங்களைத் திருப்பீடத்திற்கு வழங்கியுள்ளது.
இவற்றை, திருப்பீடத்தின் ஹங்கேரி தூதர் எட்வர்டு ஹாஸ்புர்க் லோத்ரிங்கன் (Eduard Habsburg-Lothringen) அவர்கள், வத்திக்கான் மருந்தகத்தின் இயக்குனர் அருள்சகோதரர் பின்னிஷ் தாமஸ் முலக்கல் (Binish Thomas Mulackal) அவர்களிடம், மே 08 ஆம் தேதி வெள்ளியன்று வழங்கினார்.
இத்துன்பச் சூழலில் திருப்பீடத்துடன் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாகவும், ஹங்கேரி நாட்டுக்கும் திருப்பீடத்திற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டு நிறைவின் நினைவாகவும் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. ஹங்கேரி நாட்டு உதவிப் பிரதமர் செஷோல் செம்யேன் (Zsolt Semjén) அவர்களின் முயற்சியால் இந்நற்செயல் இடம்பெற்றுள்ளது. ,
மேலும், ஐந்தாயிரம் முகக்கவசங்கள், உரோம் நகரில் கல்வி பயில்கின்ற பல்வேறு மத்திய ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கென, ஜெர்மன்-ஹங்கேரி கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன.
Comment