No icon

Vatican News

ஐந்து இறையடியார்களின் புண்ணிய வாழ்வுக்கு திருத்தந்தை இசைவு

2009ம் ஆண்டில் மூளை புற்றுநோயால் உயிரிழந்த, 18 வயது நிரம்பிய இத்தாலிய இளைஞர் ஒருவர் உட்பட, ஐந்து இறையடியார்களைவணக்கத்துக்குரியவர்கள்என்று போற்றப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இசைவு தெரிவித்துள்ளார்.

புனிதர்நிலை பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், மே 06 ஆம் தேதி ப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து, இந்த ஐந்து இறையடியார்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பித்தார்.

இத்தாலிய அருள்பணியாளர்கள் பிரான்செஸ்கோ கரூசோ (Francesco Caruso 1879-1951), மற்றும், கார்மேலோ தெ பால்மா (Carmelo De Palma 1876-1961),

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலக மீட்பர் சபையின் அருள்பணியாளர்  பிரான்சிஸ்கோ பரேச்சேகுரன்   மோன்டாகுட் (Francisco Barrecheguren Montagut) (1881-1957), மரியா டி லா கன்செப்சியோன் பரேச்சேகுரன்  (Maria de la Concepción Barrecheguren García (1905-1927), இத்தாலிய இளைஞர் மத்தேயோ ஃபரீனா (Matteo Farina) ஆகிய ஐந்து இறையடியார்களின் புண்ணிய வாழ்வுப் பண்புகளுக்கு திருத்தந்தை இசைவு தெரிவித்தார்.

பிரான்சிஸ்கோ பரேச்சேகுரன்   மோன்டாகுட் அவர்கள், முதலில் மரியா டி லா கன்செப்சியோன் பரேச்சேகுரன்  அவர்களைத் திருமணம் செய்திருந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகள் இருக்கிறார். தனது துணைவியார் இறைவனடி சேர்ந்தபின், இவர் அருள்பணித்துவ வாழ்வைத் தேர்ந்துகொண்டார்.

18 வயது இத்தாலியரின் புண்ணிய வாழ்வுப் பண்புகள் ஏற்பு

வணக்கத்துக்குரிய மத்தேயோ ஃபரீனா

இத்தாலியின் அவெலினோவில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்த, இளைஞர் மத்தேயோ ஃபரீனா அவர்கள், பிரிந்திசி நகரில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

வணக்கத்துக்குரிய ஃபரீனா அவர்களை புனிதர்நிலைக்கு உயர்த்தும் படிநிலைகளை ஆற்றிவரும் வேண்டுகையாளர் கூறுகையில், ஆழ்ந்த நம்பிக்கை நிறைந்த கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த ஃபரீனா அவர்கள், சிறுவயதிலிருந்தே புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார் என்று கூறினார்.

ஃபரீனா அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் மற்றும், புனித பாத்ரே பியோ மீது, சிறுவயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டவர் என்றும், படிப்பில், விளையாட்டில், இசையில்... இவ்வாறு எந்தத் துறையிலும் மிகவும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டார் என்றும், தன் வயதையொத்த நண்பர்களிடம் நற்செய்தியைப் பரப்புவதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்தார் என்றும், வேண்டுகையாளர் கூறினார்.

2003 ஆம் ஆண்டில், ஃபரீனா அவர்களின் 13வது பிறந்த நாளுக்கு முந்தைய மாதத்தில், அவரது உடலில் மூளை புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் துவக்கப்பட்டதிலிருந்து நாள்குறிப்பு எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்குறிப்பில், கடுமையான தலைவலியும், வேதனையும், ஒருவரின் வாழ்வையும், மற்றவரின் வாழ்வையும் மாற்றுகின்றன என்றும், அவை, இறைநம்பிக்கையில் உறுதிபெறவும், அதில் வளரவும் உதவுகின்றன என்றும், ஃபரீனா அவர்கள் எழுதியுள்ளார்.

இவருக்கு, அடுத்த ஆறு ஆண்டுகள் பலமுறை மூளை அறுவை சிகிச்சைகளும், புற்றுநோய்க்குரிய மற்ற சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், அவர், அமல அன்னைக்குத் தன்னை அர்ப்பணித்தார் மற்றும், அவரது அன்னை மரியா மீதுள்ள பக்தியும் உறுதியடைந்தது.

ஃபரீனா அவர்கள், மருத்துவ சிகிச்சை நடைபெற்ற காலக்கட்டத்தில், மற்ற இளைஞர்கள் போன்று பள்ளிக்குச் சென்றார், இசை குழு ஒன்றை உருவாக்கினார் மற்றும், நண்பர் வட்டத்தையும் பெருக்கினார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ்ந்து நிற்க, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி வணக்கத்துக்குரிய மத்தேயோ ஃபரீனா இறைவனில் ஐக்கியமானார்.

 

 

Comment