No icon

திருப்பலி ஒப்புக்கொடுத்த திருத்தந்தை

செஞ்சிலுவை, செம்பிறை சங்கங்களில் பணியாற்றுவோருக்காக..

இன்று, செஞ்சிலுவை மற்றும், செம்பிறை சங்கங்களின் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது, மிகுந்த நன்மைகளை ஆற்றும் இந்த அமைப்புக்களின் பணியாளர் எல்லாருக்காகவும் செபிப்போம் என்று, மே 08 ஆம் தேதி வெள்ளி காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியைத் துவக்கினார்.

வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில், பாஸ்கா காலத்தின் நான்காம் வார வெள்ளி மற்றும், பொம்பெய் அன்னை மரியா நோக்கி சிறப்பான மன்றாட்டுக்களை எழுப்புகின்ற, மே 08 ஆம் தேதியன்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளில் சிறப்பிக்கப்படும் செஞ்சிலுவை மற்றும், செம்பிறை சங்கங்களின் உலக நாளை நினைவுகூர்ந்தார்.

நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்  (யோவா.14,1-3)” என்று இயேசு இறுதி இரவு உணவில் தம் திருத்தூதர்களிடம் கூறிய ஆறுதல் அருள்வாக்கை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையாற்றினார்.

இயேசுவே, நமக்கு ஆறுதலளிப்பவர்

நமக்கு ஆறுதலளிப்பவர் இயேசுவே, என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திய திருத்தந்தை, தம்மை ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று, இறுதி இராவுணவில், இயேசு கூறியது குறித்து திருத்தூதர்கள் கலக்கம் அடைந்திருந்ததால், அவர் அவர்களிடம், நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள் என்ற சொற்களால் ஆறுதலளித்தார் என்று கூறினார்.

இயேசுவின் பல பண்புகளில் ஆறுதலளிப்பதும் ஒன்று என்றும், ஆறுதலளிக்கும் முறை, பல வடிவங்களில் வரலாம், அது, உண்மையானதாக, இருக்கலாம், அல்லது, கடமைக்காக சொல்லப்படும் ஆறுதலாக இருக்கலாம், அல்லது, அது போலியானதாகவும் இருக்கலாம், என்று கூறிய திருத்தந்தை, இயேசு, நம் துன்ப நேரங்களில் ஆறுதலளிக்கும் முறை வித்தியாசமானது என்றும், அருகாமை, உண்மை, நம்பிக்கை ஆகிய மூன்று வழிகளில், அவர் ஆறுதலளிக்கின்றார் என்றும், திருத்தந்தை கூறினார்.

அருகாமை

இயேசு, வெகு தொலைவிலிருந்து அல்ல, மாறாக, அவர் எப்போதும் அருகிலிருந்து  ஆறுதலளிக்கிறார் என்றும், அவ்வாறு அவர் ஆறுதலளிக்கையில் வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மாறாக, “நான் இருக்கிறேன், நான் உங்களோடு இருக்கிறேன்என்ற வார்த்தைகளால் ஆறுதலளிக்கின்றார் என்றும், எதுவும் சொல்லப்படாதபோதும், அவரின் பிரசன்னம், மற்றும் அவரது அருகாமை வழங்கும் சக்தி, நம்மிடம் பேசுகின்றன என்றும், திருத்தந்தை கூறினார்.

உண்மை

இயேசு தம் திருத்தூதர்களிடம் பேசுகையில், அவர்களிடமிருந்து உண்மையை மறைக்கவில்லை, தமது மரணம் நெருங்கிவருவதை அவர்கள் அறியச்செய்தார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு, தம் திருத்தூதர்களின் மனதைப் புண்படுத்தாமல், கனிவாக உண்மையை எடுத்துரைத்தார் என்றும், இயேசுவே, வழி, உண்மை, மற்றும் வாழ்வாக இருப்பதால், அவர் உண்மை பேசினார் என்றும் கூறினார்.

நம்பிக்கை

நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன.. நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் (யோவா.14,1-2)” என்று, இயேசு தம் திருத்தூதர்களைத் தேற்றினார், அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார் என்று திருத்தந்தை கூறினார்.

நம் அனைவருக்காகவும் விண்ணகக் கதவைத் திறப்பதற்காக, இயேசு நமக்குமுன் சென்றுள்ளார் என்று கூறிய திருத்தந்தை, இயேசு தம் திருத்தூதர்களுக்கு உறுதியளித்தது போன்று, அவர் வந்து, நம்மையும் அழைத்துச் செல்வார் என்று கூறினார்.

திருத்தந்தையின் செபம்

நாம் துன்புறமாட்டோம் என்று இயேசு உறுதியளிக்கவில்லை, மாறாக, நாம் துன்பங்களை எதிர்கொள்கையில், அவர் நமக்கு அருகில் இருந்து நமக்கு ஆறுதலளிக்கிறார் என்று தன் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரால் தேற்றப்படுவதற்கு நம்மை அனுமதிப்பது எளிதானதல்ல, துன்ப நேரங்களில் கடவுள் மீது நாம் சினம் கொள்ளலாம், மற்றும், நமக்கு ஆறுதலளிக்க அவரை அனுமதிக்காதிருக்கலாம் என்று எடுத்துரைத்தார்.   

ஆண்டவரால் ஆறுதலளிக்கப்பட நம்மை நாம் அனுமதிக்குமாறு செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் ஆறுதல் என்பது, அருகாமையாகும், உண்மையை உருவான அவர், நம்பிக்கையின் கதவுகளைத் திறக்கிறார் என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

Comment