மறைக்கல்வியுரை-
படைப்பின் அற்புத நிலை - வியப்பு நிரம்பிய உணர்வு
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 23 May, 2020
இயேசு, தன் மலைப்பொழிவில் வழங்கிய எட்டு பேறுகள் குறித்த ஒரு மறைக்கல்வித் தொடரை நிறைவுசெய்து, இருவாரங்களுக்கு முன்னர், செபம் குறித்த ஒரு தொடரைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், அதன் தொடர்ச்சியாக, படைப்பு குறித்த நம் வியப்பும், அதன் வழியாக எழும் நம் செபம் குறித்தும், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். கொரோனா தொற்றுக்கிருமி அச்சத்தின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பல, இத்தாலியில் தளர்த்தப்பட்டு, சில வழிகாட்டுதல்களுடன், சமய வழிபாடுகள் இடம்பெற அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும், பெருமளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், கடந்த இரு மாதங்களைப்போல், மே 20 ஆம் தேதி புதன்கிழமையன்றும், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை, மக்கள் பங்கேற்பின்றி வழங்கப்பட்டு, காணொளி வழியாக ஒளிபரப்பப்பட்டது. படைப்பின் மறையுண்மை என்ற தலைப்பில் வழங்கப்பட்ட இந்த மறைக்கல்வியுரையின் துவக்கத்தில், எட்டாம் திருப்பாடலிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. பின் திருத்தந்தையின் உரை வழங்கப்பட்டது.
உமது கைவேலைப்பாடாகிய
வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள
நிலாவையும் விண்மீன்களையும்
நான் நோக்கும்போது,
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு
அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை
நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?
…………..
ஆண்டவரே, எங்கள் தலைவரே,
உமது பெயர் உலகெங்கும்
எவ்வளவு மேன்மையாய்
விளங்குகின்றது! (திபா 8:3-4,9)
மறைக்கல்வியுரை
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வியுரையில், இன்று, படைப்பின் மறையுண்மை குறித்து நோக்குவோம். விவிலியத்தின் முதல் பக்கங்கள், படைப்பின் அழகு, மற்றும், நன்மைத்தனம் குறித்து ஓர் உன்னத நன்றிப் பாடலை ஒத்ததாக அமைந்துள்ளன. படைப்பின் அற்புத நிலை, மனித இதயத்திற்குள், வியப்பு நிரம்பிய ஓர் உணர்வைத் தூண்டுவதோடு, செபத்தின் மீது ஆவலையும் எழுப்புகிறது. வியப்போடு நம்மை உற்றுநோக்க வைக்கும் படைப்பின் மேன்மை, நம் வாழ்வின் மறையுண்மையை ஆழமாகத் தியானிக்க நம்மைத் தூண்டுகிறது. இந்த உன்னதப் படைப்பனைத்தின் முன்னிலையில், நாம் முக்கியமானவர்கள் அல்ல என்ற அனுபவத்தை பெற்றாலும், நாம் ஒன்றுமில்லாதவர்கள் அல்ல என்பதையும், படைப்பில் எதுவும் சந்தர்ப்பவசமாக உருவானதல்ல என்பதையும், இறைவனுடன் நாம் கொண்டிருக்கும் உறவே, மேன்மையான நம் உன்னத நிலையின் ஆதாரமாக உள்ளது என்பதையும், செபம் நமக்கு உறுதி செய்கிறது. இயல்பு நிலையில் ஆண்களும் பெண்களும், ஒன்றுமில்லாதவர்களாக இருக்கலாம், ஆனால், அவர்கள் மாபெரும் மன்னர் ஒருவரின் குழந்தைகள். வாழ்வின் துன்ப துயர வேளைகளிலும், நம் பாராட்டு உணர்வையும், நன்றியுணர்வையும் தக்கவைக்க செபம் உதவுகிறது. ஏனெனில், செபமே, நம்பிக்கையின் புத்துணர்ச்சியை வழங்குகிறது. செபத்தின் வழியாக மக்கள் பெறும் நம்பிக்கை, தன் பங்காக, மற்றவர்களுக்கும் உதவுகிறது, அதாவது, வாழ்வு என்பது, இறைவனின் கொடை என்பதையும், விரக்தியைவிட நம்பிக்கை என்பது வலிமை நிறைந்தது என்பதையும், மரணத்தைவிட அன்பு வலிமையானது என்பதையும் நாம் கண்டுகொள்ள உதவுகிறது. நாம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எளிய மகிழ்ச்சி குறித்து, நம் வானுலக தந்தையாம் இறைவனுக்கு புகழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்போம்.
இவ்வாறு படைப்புக்கும், நம் செபத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து இப்புதன் மறைக்கல்வியுரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் விண்ணேற்பு பெருவிழாவிற்காக நம்மைத் தயாரித்துவரும் இவ்வேளையில், இயேசு, நம் பாதையில் நம்மோடு துணையிருந்து நமக்கு ஊக்கமூட்டிவருகிறார் என்பதை முழுவதுமாக உணர்ந்தவர்களாக, உயிர்த்த கிறிஸ்துவுக்கு தாராள மனதுடைய சாட்சிகளாக விளங்குமாறு விண்ணேற்பு நிகழ்வு அழைப்புவிடுக்கிறது என்று கூறினார். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள் என்ற இயேசுவின் அழைப்பை ஏற்று, நம் வாழ்வில் அவரின் வார்த்தைகளுக்குச் சாட்சிகளாக இருப்போமாக என்ற விண்ணப்பத்துடன், தன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக பங்கேற்ற அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
Comment