Vatican News
திருத்தந்தையின் திருப்பலி நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 23 May, 2020
மே 19ம் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு நிறுத்தம்
மே 18 ஆம் தேதி முதல், இத்தாலியில் உள்ள அனைத்து ஆலயங்களிலும், மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் திருப்பலிகள் தொடங்கியதால், மே 18 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் இத்திருப்பலியைத் தொடர்ந்து, மே 19 ஆம் தேதி முதல், அவர் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலிகளின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 9ம் தேதி முதல் நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு
கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடியால், இத்தாலியில், மார்ச் மாத துவக்கத்திலிருந்து, ஆலயங்களில், மக்கள், வழிபாடுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டதையடுத்து, மார்ச் 9 திங்கள் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலிகளை ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு இசைவு தெரிவித்தார்.
அத்துடன், புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற புனித வார வழிபாடுகள், உயிர்ப்புப்பெருவிழா ’ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தி, மற்றும், கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து இவ்வுலகைக் காப்பதற்கு, புனித பேதுரு வளாகத்தில், மார்ச் 27, வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெற்ற சிறப்பு செப வழிபாடு மற்றும், ’ஊர்பி எத் ஓர்பி’ சிறப்பு ஆசீர் ஆகிய அனைத்து நிகழ்வுகளும், மக்களின் பங்கேற்பின்றி, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாயின என்பது இங்கே நினைவுக்கூரத்தக்கது.
Comment