No icon

திருவழிபாட்டு பேராயம்

இலத்தீன் வழிபாட்டுமுறை நாளேட்டில் புனித பவுஸ்தீனா விழா

இலத்தீன் வழிபாட்டுமுறை நாளேட்டில், புனித மரியா பவுஸ்தீனா கோவால்ஸ்கா (Maria Faustina Kowalska) விழாவை நினைவு நாளாகச் சிறப்பிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதியளித்துள்ளார்.

மே 18 ஆம் தேதி திங்களன்று, திருவழிபாட்டு பேராயம் வெளியிட்ட ஆணைப்பத்திரத்தில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி சிறப்பிக்கப்படும் புனித பவுஸ்தீனா விழா, உலகளாவிய திருஅவையில், கன்னியர் நினைவு நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டை, திருஅவை சிறப்பித்த அதேநாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுமதியுடன், திருவழிபாட்டு பேராயம், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அருளாளர் பவுஸ்தீனா  (ஹெலேனா) அவர்களை, இரண்டாயிரமாம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி புனிதராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்புனிதரே, புதிய மில்லென்யத்தில் அறிவிக்கப்பட்ட முதல் புனிதர் ஆவார். அதற்குப்பின், உலகெங்கும் இறை இரக்கத்தின் பக்தி வேகமாகப் பரவியது.

உலகின் பல பகுதிகளில், புனித பவுஸ்தீனா  (ஹெலேனா) அவர்களின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட மேய்ப்பர்கள், துறவிகள் மற்றும், பொதுநிலைக் கழகங்கள், திருப்பீடத்திற்கு விடுத்த விண்ணப்பங்களைக் கருத்தில்கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்று, அந்த ஆணைப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

புனித பவுஸ்தீனா  அவர்கள், 1934ம் ஆண்டு முதல், அவர் மரணமடைந்த 1938ம் ஆண்டு வரை, இயேசுவை காட்சியில்கண்டு உரையாடியதை, தனது நாளேட்டில் பதிவுசெய்துள்ளார். பின்னர், அந்த உரையாடல்கள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. அதன்வழியாக, உலகெங்கும் இறை இரக்கத்தின் பக்தி பரவியது.

இந்த ஆணைப்பத்திரத்தில், உலகளாவிய திருஅவையில், புனித பவுஸ்தீனா உருவாக்கியுள்ள நல்தாக்கத்தை வலியுறுத்தி, திருவழிபாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், அந்த பேராயத்தின் செயலர் பேராயர் ஆர்தர் ரோச்  அவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

1905 ஆம் ஆண்டில், போலந்து நாட்டின் Łஓட்ஸ்  நகருக்கருகில் அமைந்துள்ள கிளோகோவிக் ழுłடிபடிறநைஉ என்ற கிராமத்தில் பிறந்த புனித பவுஸ்தீனா, 1938ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார். இரக்கத்தின் அன்னை மரியா அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்த இவர், ஆழமான ஆன்மீக வாழ்வு வாழ்ந்தார்.

புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வாழ்வும், இறை இரக்கத்தின் பக்தியோடு அதிகம் தொடர்புகொண்டது. பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை, இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அறிவித்த இத்திருத்தந்தை, இந்த ஞாயிறின் திருவிழிப்பு நாளன்று, 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இவர், 2011ஆம் ஆண்டில், இறை இரக்கத்தின் ஞாயிறன்று அருளாளராகவும், 2014ஆம் ஆண்டு அதே ஞாயிறன்று புனிதராகவும் அறிவிக்கப்பட்டார்.

புனித பவுஸ்தினா  புனிதராக அறிவிக்கப்பட்டதன் இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு இறை இரக்கத்தின் ஞாயிறாகிய ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, உரோம் நகரில், இறை இரக்கத்திற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தில் (Santo Spirito in Sassia) திருப்பலி நிறைவேற்றினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், லொரேத்தோ அன்னை மரியா விழாவையும், நினைவு நாளாகக் கொண்டாடும் ஆணைப்பத்திரம் ஒன்றிற்கு அனுமதியளித்தார். லொரேத்தோ அன்னை மரியா விழா, ஒவ்வொர் ஆண்டும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

Comment