No icon

Vatican News

“Laudato Si” சிறப்பு ஆண்டு: 24 மே 2020-24 மே 2021

“Laudato Si” சிறப்பு ஆண்டு: 24 மே 2020-24 மே 2021

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, புகழ்பெற்ற “Laudato Si” திருமடலை வெளியிட்டார்

மே 17 இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள “Laudato Si” வாரத்தை ஊக்குவித்து சிறப்பித்துவரும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, 2020 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி முதல், 2021ம் ஆண்டு மே 24ஆம் தேதி வரை“Laudato Si” சிறப்பு ஆண்டையும் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ஆண்டு குறித்து, வத்திக்கான் செய்தித்துறையிடம் உரையாடிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் சுற்றுச்சூழல் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி ஜோஸ்த்ரோம் குர்ரிதடாம் (Joshtrom Kureethadam ) அவர்கள், இந்த சிறப்பு ஆண்டில், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் உண்மையான நிலையை எடுத்தியம்பி, அதைப் பாதுகாப்பதற்கு உலகினர் ஊக்கப்படுத்தப்படுவர் என்று கூறினார்.  

இப்பூமியின் நெருக்கடிகள்

தற்போது வளர்ந்துவரும் சிறார்க்கு எத்தகைய ஓர் உலகை விட்டுச்செல்லப் போகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதையும், இப்பூமியின் ஆபத்தான நிலைமை குறித்து அறிவியலாளர்கள் எச்சரித்திருப்பதையும் அருள்பணி ஜோஸ்த்ரோம் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சிறாரின் வருங்காலத்தை நம்மால் திருட முடியாது என்றும், நாம் எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றோம் என்பதையும், ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கு உலகினர் அனைவரிலும் ஒருமைப்பாடு எவ்வளவு அவசியம் என்பதையும், கோவிட்-19 உருவாக்கியிருக்கும் அவசரகால நிலை உணர வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மே 24, வருகிற ஞாயிறன்று துவங்கும் Laudato Si’ சிறப்பு ஆண்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்றும், 2021 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ள தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டையொட்டி, வத்திக்கானில்   மூன்றாவது கலந்துரையாடல் நடைபெறும் என்றும், அதே ஆண்டு மார்ச் 22ஆம் தேதி, உலக தண்ணீர் நாளன்று, உலக சமயத் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்றும், சலேசிய சபையைச் சார்ந்த, இந்தியரான அருள்பணி ஜோஸ்த்ரோம்  அவர்கள் அறிவித்தார்.

இந்த சிறப்பு ஆண்டு நிறைவுறும்போது பன்னாட்டு கருத்தரங்கு, Laudato Si’ விருதுகள், இசை நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெறும் என்று கூறிய அருள்பணி ஜோஸ்த்ரோம் அவர்கள், இந்த சிறப்பு ஆண்டைத் தொடர்ந்து, ஏழு ஆண்டு திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்

Comment