குடந்தை ஞானி
கர்நாடகாவில் தாக்கப்பட்டது மேலும் ஒரு தேவாலயம்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 06 Jan, 2022
மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பேராயர் பீட்டர் மச்சாடோ ஊடகங்களுக்கு, "மதமாற்ற எதிர்ப்பு மசோதா கிறிஸ்தவர்களுக்கு எதிரானது, ஏனெனில் இது குறிப்பாக கிறிஸ்தவர்களை மட்டுமே குறிவைக்கிறது." என்று கூறினார். மசோதாவின் விதிகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், முன்மொழியப்பட்ட சட்டத்தில் தொண்டு செய்வது கூட குற்றமாகும் என்றிருப்பது வேதனையளிக்கிறது என்றார். தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் மதமாற்றங்களைத் தடுக்கும் சட்டத்தை இயற்றுவது குறித்து சட்டமியற்றுபவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில், மேலும் ஒரு கத்தோலிக்க தேவாலயம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
"டிசம்பர் 23 ஆம் தேதி காலை, பெங்களூரு உயர்மறைமாவட்டத்தின் புனித யோசேப்பு ஆலயத்தில் இருந்த புனித அந்தோணியார் திருவுருவம் உடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, தாக்குதல் பின்னணியில் யார் இருக்க முடியும் என்று தெரியவில்லை" என்று ஜே.ஏ. காந்தராஜ், பேரூராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள் UCA செய்தியிடம் கூறினார். இந்த ஆலயத்தின் பங்கு தந்தை அங்கிருந்த சேதங்களை பார்வையிட வந்த காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
புனித யோசேப்பு ஆலயம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ஒன்று. இந்த தாக்குதலின் பின்னணியில் கர்நாடகம் முழுவதும் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களை ஓரங்கட்டுவதற்கான திட்டமிட்டு செயல்படும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகர் என உலகளவில் அறியப்படும் பெங்களூருவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் புனித அந்தோணியார் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதற்காக கிராமப்புற காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
டிசம்பர் 22 ஆம் தேதி அன்று பெங்களூருவில் இந்த மதமாற்றத்தடை மசோதாவுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் குழுவாக ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். முன்மொழியப்பட்ட சட்டம் அமலுக்கு வந்தால், கிறிஸ்தவர்களுக்கு வன்முறைகளும், தங்கள் நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் அதிகரிக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மிகப் பெரிய நெருக்கடியும் ஆபத்தும் காத்திருக்கிறது.
Comment