No icon

+ மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி

மாணவியின் மரணத்திற்கு மதவாத சாயம் பூசாதீர்!

சனவரி 2022 தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சரகத்துக்குட்பட்ட மிக்கேல்பட்டியில் இயங்கும் கத்தோலிக்க பெண்கள் விடுதியில் தங்கிப் படித்த மாணவியின் மரணம் கேட்டு நாங்கள் வருந்துகிறோம். மகளை இழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இளம் மாணவியின் இறப்பிற்கு எவர் காரணமாயினும் அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவியின் மரணம் குறித்து மாவட்ட காவல்துறைத் தலைவர் எடுத்த துரித நடவடிக்கைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம். மாணவியின் வாக்குமூலம் விடுதி காப்பாளர் மீதான குற்றச்சாட்டாக அமைந்த காரணத்தால், 62 வயதான காப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதையும் இது சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருந்தால் அதனையும் மதிக்கிறோம். மாணவியின் மரணத்திற்கு எவர் காரணமாயினும் அவரை சட்டத்தின் அடிப்படையில் தண்டிப்பதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அவசர வழக்காக எடுத்து அவற்றைக் கையாண்ட நடவடிக்கையையும் நாங்கள் வரவேற்கிறோம்.

தமிழகமெங்கும் கிறித்தவ மதச்சிறுபான்மையினர் ஆற்றிவரும் கல்விப்பணிப் பற்றி அனைவரும்  அறிவர். இப்பள்ளிகளுள் நூற்றுக்கணக்கான பள்ளிகள் பெண்களுக்காகவே நடத்தப்பட்டு வருகின்றன. கிறித்தவ மறை சார்ந்த பெண் துறவியரால் அர்ப்பண உணர்வோடு நடத்தப்பெறும் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவியரின் பாதுகாப்பிலும் அவர்தம் வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தப்படுவதையும் அனைவரும் அறிவர். கிறித்தவ மதச்சிறுபான்மையினரால் நடத்தப்பெறும் இப்பள்ளிகளில், மதப் பெரும்பான்மையினர்தாம்பெரும்பான்மையினர்என்பதனையும் ஊரறியும். இப்பள்ளிகளை நிர்வகிக்கும் துறவிகள் எப்பொழுதும் மதமாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதே இல்லை என்பதே உண்மையாயிருக்க, மிக்கேல்பட்டி பள்ளி மாணவி மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இப்பொய்க் கூற்றை நாங்கள் ஏற்கவில்லை.

பள்ளியில் நடந்த அவல நிகழ்வுக்கு உண்மைக் காரணத்தை காண முயலாத மதவாத அரசியல் சக்திகள், “மதமாற்றம்என்ற பொய்மையை கையிலெடுத்து பிரச்சனையைத் திசை திருப்ப முயல்வதோடு, இப்பொய்ப் பிரச்சாரத்தால் சமய நல்லிணக்கத்தையும் கெடுக்க முயல்கின்றன.

இந்நிலையில் தமிழக பாரதிய சனதாவின் தலைவர் அண்ணாமலை அவர்கள் நடந்த நிகழ்ச்சிக்கு உரிய சட்டப்பூர்வ விசாரணையைத் தேடாமல்மதமாற்றம்எனும் முழக்கத்தை கையில் எடுத்திருப்பது வேடிக்கையானது.

அண்ணாமலை போன்றோரின் கூற்றை நாங்கள் தனித்த குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. நாடு முழுவதும் பெரும்பான்மை மதவாத சக்திகள் முன்வைத்து வரும் பொய் முழக்கங்களின் ஒரு பகுதியாகவே இதனை கருதுகிறோம்.

தமிழக அரசும், தமிழகக் காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறோம். அரசும் காவல்துறையும் மாணவியின் சாவு குறித்த வழக்கை நடுநிலையோடு நடத்தி முடித்திட வேண்டும். நாங்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று உறுதி கூறுகிறோம்.

 

+ மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி

தலைவர்

தமிழகக் கத்தோலிக்க ஆயர் பேரவை.

Comment