அருள்பணி. ச. சந்தியாகு CSsR, திருச்சி
துன்புறும் இந்தியத் திரு அவை கலாச்சாரமும் – சமயமும்
தனிப்பட்ட ஆனால் இணைந்த யதார்த்தங்கள்
கலாச்சாரம் அல்லது பண்பாடு மற்றும் சமயம் ஆகிய இரண்டும் தனித்தனி எதார்த்தங்கள். ஆனால், உடல்-ஆன்மா போல ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மதம் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது. பொதுவாகவே அது தோன்றிய இடத்தின் கலாச்சாரத்தில் பொதிந்துள்ளது.
ஒரு நபரை அவரது உடல் மற்றும் பிற புறச்சூழல்களால் அடையாளம் காண்பிப்பதுபோல, ஒரு மதத்தை, அது பொதிந்துள்ள கலாச்சாரத்தால் அடையாளம் காணப் பழகிவிட்டோம். ஆனால், இந்த அடையாள முறை எல்லா நேரத்திலும் சரியாக இருப்பதில்லை. அதாவது, ஒரு மதத்தை அது பொதிந்துள்ள கலாச்சாரத்தால் உறுதியாக அடையாளம் காண முடியாது. ஒரு கலாச்சாரத்தை மதமாக எடுத்துக்கொள்வதால் பல கசப்பான உணர்வுகள், மோதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் விளைந்துள்ளன. இதனால் மதங்களும் கலாச்சாரங்களும் என இரண்டுமே பாதிக்கப்பட்டுள்ளன.
கலாச்சாரத்தோடு ஒன்றுபட்ட சமயங்கள்
சில மதங்கள் அல்லது மதத் தலைவர்கள் தங்களின் மதங்கள் தங்கள் கலாச்சாரத்துடன் பிரிக்க முடியாத வகையில், பிணைக்கப்பட்டிருப்பதாக நம்புவதை நாம் கவனிக்க வேண்டும். எனவே, அம்மதத்தை ஏற்றுக்கொள்வது அவர்களின் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்வதாகும். கலாச்சாரம் மற்றும் சமயம் பற்றிய ஒரே விதமான மற்றும் சீரான புரிதல் இல்லாததால் பல மாறுபட்ட மற்றும் முரண்பாடான எண்ணங்களும், செயல்பாடுகளும் விளைகின்றன. இவை அனைத்தும் மத துன்புறுத்தல்கள் என்று கருதப்பட்டாலும், உண்மையில் அவை கலாச்சாரங்களின் மோதல்களே.
கலாச்சாரமும் கிறிஸ்தவமும்
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை அது முதலில் யூதக் கலாச்சாரத்தில் பொதிந்திருந்தது. எனினும், அதன் தொடக்க காலத் தலைவர்கள் கி.பி முதல் நூற்றாண்டில் பாலஸ்தீனாவிலிருந்து அது வேறு நாடுகளில் பரவத் தொடங்கியபோது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்தனர். அதாவது, கிறிஸ்தவத்தை யூதக் கலாச்சாரத்துடனோ அல்லது வேறெந்த கலாச்சாரத்துடனோ இணைக்க முடியாது, இணைக்கக்கூடாது என்பதே அத்தீர்மானம். எந்த நாட்டில், எந்த மக்களிடையே கிறிஸ்தவம் பரவினாலும், அந்தந்த கலாச்சாரத்தோடு கிறிஸ்தவம் இணைய வேண்டும். இவ்வாறு, இணைவது வழிபாட்டு முறையில் மட்டுமல்ல; வாழ்க்கை முறைக்கும் பொருந்தும். ஆரம்பத்திலிருந்தே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. கடவுள் எல்லா மக்களுக்கும், எல்லாக் கலாச்சாரங்களுக்கும் உரியவர்; அவர் முன்னிலையில் அனைவரும், அனைத்து கலாச்சாரங்களும் சமம்.
பல்வேறு இன மக்களையும், கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய உரோமைப் பேரரசில் கிறிஸ்தவம் பரவியபோது, அந்தந்த கலாச்சாரங்களைத் தனதாக்கிக்கொண்டது. இவ்வாறு, ஐரோப்பிய கலாச்சாரங்களில் கிறிஸ்தவம் பொதியப்பட்டது. உரோமைப் பேரரசர்களால் நடத்தப்பட்ட துன்புறுத்தல்கள், மதத் துன்புறுத்தல்கள் அல்ல; கலாச்சார துன்புறுத்தல்களும் அல்ல; செல்வம், அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட பேரரசின் கொள்கைகளுடன், சமத்துவம் பகிர்தல் ஆகிய அடிப்படை கிறிஸ்தவ பொதுவுடமைக் கோட்பாடுகளின் மோதல்களே காரணம். இன்னும் குறிப்பாக, கிறிஸ்தவர்கள் இக்கோட்பாடுகளை போதித்து விட்டுவிடாமல், முனைப்புடன் இவைகளை வாழ்வியலாக்கியதே காரணம்.
கிறிஸ்தவமும் ஐரோப்பிய கலாச்சாரமும்
இடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் தொடங்கியபோது, காலனி ஆட்சியாளர்கள் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ மத போதகர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை திணித்தனர். நற்செய்தி அறிவிப்பு வரலாற்றின் அந்தக் காலக் கட்டத்தில் கிறிஸ்தவ சமயத்துடன் ஐரோப்பியக் கலாச்சாரம் இணைத்து பரப்பப்பட்டது. இந்த நிலைபாடு, பல அமெரிக்க, ஆப்ரிக்க, ஆசிய கலாச்சாரங்கள் மற்றும் பழங்குடி மக்களின் அழிவுக்கு வழிவகுத்தது. நற்செய்தியின் பெயராலும், கடவுளின் பெயராலும் நிகழ்ந்த இவை, அந்த மக்களுக்கும் அவர்களின் கலாச்சாரங்களுக்கும் எதிரான குற்றங்கள் மட்டுமல்ல; அவை கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான குற்றங்களும் ஆகும். காலம் கடந்து விட்டதால் தவறு சரியாகி விடுவதில்லை. எனவேதான், கத்தோலிக்கத் திரு அவை தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, அதிகாரப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் அவைகளுக்காக மன்னிப்புக்கோரியுள்ளது. நற்செய்தியைப் அறிவிக்கின்றோம் என நம்பிக்கொண்டு, நாமே அந்த நற்செய்திக்கு மிகப்பெரிய தடையாக இருந்திருக்கின்றோம். ராபர்ட் தே நோபிலி, பெஸ்கி, ஜான் தே பிரிட்டோ, லீவென்ஸ் போன்றோர் இதற்கு விதிவிலக்காக செயல்பட்டுள்ளனர் என்றாலும், அது வேரூன்றவும் இல்லை, நீடிக்கவும் இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப்பின், மக்களுடைய ஒட்டுமொத்த வாழ்வோடிணைந்த நற்செய்தி அறிவிப்புப் பணி மீண்டும் அறிவுறுத்தப்பட்டது.
Comment