No icon

அருள்முனைவர்  யேசு கருணாநிதி

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தொநூ 15:5-12, 17-18, 21, பிலி 3:17-4:1, லூக் 9:28-36

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்

மாற்றம் ஒன்றே மாறாததுஎன்பது எப்படி உண்மையோ, அதுபோலவே, மனித வாழ்வில்உறுதியற்ற நிலையே உறுதியானதுஎன்பதும் உண்மையே. ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது போலவும், இரண்டு சதவிகித ஹைட்ரஜனும், ஒரு சதவிகித ஆக்ஸிஜனும் இணைந்தால் தண்ணீர் என்பது போலவும் கணித மற்றும் வேதியியல் வாய்ப்பாடுகளின் உறுதித்தன்மையைப் போல, வாழ்வியல் எதார்த்தங்கள் இருப்பதில்லை.

நன்றாக உழைக்கிறோம். நேர்மையாக இருக்கிறோம். ஆனால், வாழ்வில் முன்னேற்றம் இல்லை. எடுத்த காரியம் நிறைவேறுவது இல்லை. தினமும் ஆலயம் செல்கிறோம். நற்செயல்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், எதிர்பாராத ஆபத்துக்கள் வந்தே தீருகின்றன. நம் குழந்தைகள் நன்றாகப் படிக்கின்றனர்; ஆனால், படிப்பிற்கேற்ற பலன் இல்லை. நம் மகன் நன்றாக வேலை செய்கிறார். ஆனால், வேலையில் அவருக்கு உயர்வே இல்லை. இம்மாதிரியான நேரங்களில், ‘நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றும் நினைக்கும்என்று சொல்லி நம்மையே தேற்றிக்கொண்டாலும், வாழ்வின் உறுதியற்ற தருணங்கள் நம் வாழ்வில் நமக்கு அச்சத்தையும், ஏக்கத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. நாம் எப்போதும் சறுக்கலான மணலில் நடப்பதுபோலவே உணர்கிறோம்.

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ள முடியுமா? அதை எப்படி எதிர்கொள்வது?

தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த உறுதியற்ற நிலைகளை ஆபிரகாம், பிலிப்பு நகரத் திரு அவையினர் மற்றும் திருத்தூதர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை, இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் காட்டுகிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 15:1-4), ‘உன்னை பெரிய இனமாக மாற்றுவேன்என்று ஆபிராமுக்கு, (‘ஆபிரகாம்என்ற பெயர் மாற்றம் அடைவது 17:5 இல் தான்) வாக்குறுதி கொடுக்கும் கடவுள் அவருக்குத் தோன்றுவதைப் பார்க்கிறோம். ‘உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்என்று, வாக்குறுதி கொடுத்து தன்னைத் தன்ஊரிலிருந்துபுறப்படச் செய்த இறைவன், இவ்வளவு நாள்கள் ஆகியும் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாரே என்று, தன் உள்ளத்தில் குழப்பமும், ஐயமும் கொள்ள ஆரம்பிக்கின்றார் ஆபிராம். இந்த நேரத்தில் ஆண்டவர் ஆபிராமை வெளியே (அவரின் கூடாரத்திற்கு வெளியேயும், அவரின் மனத்திற்கு வெளியேயும்) அழைத்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்என்றார். ‘ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்என உடனே பதிவு செய்கிறார் ஆசிரியர். ‘நீதிஎன்பதற்குமற்றவரோடு சரியான உறவில் இருப்பதுஎன்று பொருள். ஆக, ஆபிராம் கடவுளோடு கொள்ளும் சரியான உறவு நம்பிக்கையில் கட்டப்படுகிறது.

தொடர்ந்து, ஆண்டவர், “இந்நாட்டை உனக்கு உரிமைச்சொத்தாக அளிக்க, உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானேஎன்கிறார். இது முந்தைய வாக்குறுதியைவிட, இன்னும் அதிகம் உறுதியற்றது. நம்ம ஊர் பேருந்து நிலையத்திற்கு வெளியே சிறிய குடிசை போட்டு அமர்ந்து, ஊசி - பாசி பின்னிக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் கடவுள், ‘உனக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளை உரிமைச் சொத்தாகத் தருவேன்என்று சொன்னால் அவர் எப்படி அதிர்ச்சி அடைந்து, புன்னகை பூப்பாரோ அப்படித்தான் நகைக்கின்றார் ஆபிராம். ஏனெனில், கல்தேயரின் ஊர் என்றழைக்கப்படும் கானான் அன்று ஒரு பெரிய கனவு நாடாக இருந்தது. அதன் வளமும், பலமும் பலரின் கண்களை அந்நாட்டை நோக்கித் திருப்பியது. தான் ஒரு சாதாரண நாடோடி என்பதை அறிந்திருந்த ஆபிராம், இந்த வாக்குறுதியின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் பொருட்டு, ‘என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக்கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?’ எனக் கேட்கின்றார். உடனே, ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வருகின்றார். உடன்படிக்கை என்பது ஓர் எழுத்துப் பத்திரம் போன்ற ஆவணம். இதில் உடன்படிக்கை செய்துகொள்ளும் இரு நபர்களின் உரிமைகளும், கடமைகளும் எழுதப்பட்டிருக்கும். மேலும், இது எழுதப்பட்டவுடன் அதன் வெளி அடையாளமாக பலி ஒன்று ஒப்புக்கொடுக்கப்படும். எபிரேயத்தில், ‘உடன்படிக்கை செய்தல்என்பதைஉடன்படிக்கையை வெட்டுதல்என்று சொல்கின்றனர். அதாவது, உடன்படிக்கையின்போது, பலிப் பொருள்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட பலிப்பொருள்களுக்கு நடுவே உடன்படிக்கை செய்யும் இருவரும் நடந்து செல்ல வேண்டும். ‘நான் உடன்படிக்கையை மீறினால், நானும் இப்படி வெட்டப்படுவேன்என்று இருவரும் உணர்ந்து கொள்வதற்காகவே (காண். எரே 34:18) அவர்கள் இப்படி நடுவே நடப்பது வழக்கம். முதல் வாசகத்தில் கடவுளே உடன்படிக்கை செய்துகொள்ள முதலில் முன்வருகின்றார். மேலும், கடவுள் மட்டுமே தீச்சட்டி மற்றும் தீப்பந்தம் வடிவில் அந்தப் பலி கூறுகளுக்கிடையே நடக்கின்றார். இவ்வாறாக, கடவுள் நிபந்தனையற்ற நிலையில் ஆபிராமோடு தன்னை இணைத்துக்கொள்கின்றார். மேலும், தான் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற உறுதியையும் கடவுள் ஆபிராமுக்குத் தருகின்றார். காணக்கூடிய அடையாளத்தின் வாயிலாக ஆபிராமின் உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும் நீக்குகின்றார் கடவுள்.

ஆக, கடவுள் தனக்கு மொழிந்த குழந்தைப் பேறு மற்றும் வாக்களிக்கபட்ட நாடு என்னும் வாக்குறுதிகள் பற்றிய உறுதியற்ற நிலையில் இருந்த ஆபிராம், கடவுளின் உடன்படிக்கை செயல்பாட்டால் தன் உறுதியற்ற நிலையை எதிர்கொண்டு, தன் நம்பிக்கையால் வெற்றியும் காண்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 3:17 - 4:1), பவுல், பிலிப்பி நகரத் திரு அவையில் விளங்கிய போலிப் போதனையை எதிர்கொள்கின்றார். பிலிப்பியில் பவுல் நற்செய்தி அறிவித்தபின், சில போலிப் போதகர்கள் - யூதம் தழுவியோர் - எழுந்து மாற்று நற்செய்தி ஒன்றைப் போதிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையாளராக ஒருவர் மாறினாலும் யூதச் சட்டங்களையும், மரபுகளையும், முறைமைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், அச்செயல்களாலேயே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் என்றும் போதிக்கின்றனர். இப்படியாக, நம்பிக்கையாளர்கள் தங்களின் மீட்பு பற்றிய உறுதியற்ற நிலைக்கும், குழப்பத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இதைக் கேள்வியுறுகின்ற பவுல் போலிப் போதகர்கள்மேல் கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றார். அவர்களை, ‘நாய்கள்என்றும், ‘கெட்ட ஊழியர்கள்என்றும், ‘உறுப்பு சிதைப்போர்என்றும் சாடுகின்றார் (காண். பிலி 3:2). மேலும், இன்றைய வாசகத்தில்வயிறே அவர்கள் தெய்வம்என்று சொல்லும் பவுல், அவர்கள் கொடுத்த உணவு சார்ந்த மரபு முறைமைகளைக் கடிந்துகொள்கின்றார். ஏனெனில், யூத மரபில் நிறைய உணவு சார்ந்த முறைமைகள் இருந்தன. மேலும், ‘மானக்கேடே அவர்கள் பெருமைஎன்று சொல்லும்போது, மற்றவர்கள் பார்வையில் அருவருப்பாய் இருந்த விருத்தசேதனத்தை அவர்கள் தங்கள் பெருமையாகக் கருதியதைக் கடிந்துகொள்கின்றார். இறுதியாக, ஒட்டுமொத்தமாக, ‘அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியேஎன்கிறார். இவ்வாறாக, யூத போலிப் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைமைகளைப் பற்றிப் பேசுவதைச் சாடுகின்றார் பவுல்.

இந்தப் பின்புலத்தில் தன் போதனை பற்றிய சில தெளிவுகளை முன்வைக்கின்றார் பவுல். நற்செய்திக்கும் யூத முறைமைகளுக்கும் தொடர்பில்லை என்பதைச் சொல்கின்றார். ஏனெனில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர் பெறுகின்ற மீட்பு முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்ததே அன்றி செயல்கள் சார்ந்தது அல்ல என்கிறார். ஏனெனில், விருத்தசேதனம் போன்ற செயல்கள் வழியாகவும், உணவு மற்றும் உடலியல் முறைமைகளைப் பின்பற்றுவதால்தான் மீட்பு என்றால், இயேசுவின் சிலுவை மரணம் முழுமையற்றதாகப் போய்விடும். எனவே, போலிப் போதகர்களை, ‘சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர்என்றழைக்கும் பவுல், ‘நீங்கள் அனைவரும் என்னைப் போல வாழுங்கள்என்கிறார். அதாவது, ‘சட்டம்தான் எல்லாம்என்று நினைத்து சட்டத்திற்கு எதிராக இருந்த கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களைத் தண்டிக்கச் சென்ற நான், இப்போது மனமாற்றம் பெற்று, இயேசுவை மட்டுமே பற்றிக்கொண்டிருக்கிறேன். ஆக, ‘நீங்களும் என்னைப்போல இயேசுவை மட்டும் பற்றிக்கொள்ளுங்கள்என்கிறார் பவுல். இந்த உலகு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களை விண்ணகம் நோக்கியும், இயேசுவின் மீட்புச் செயல் நோக்கியும் திருப்புகின்றார் இயேசு.

ஆக, போலிப் போதகத்தால் உருக்குலைந்து உறுதியற்ற மற்றும் குழப்ப நிலையில் இருந்த பிலிப்பி நகர நம்பிக்கையாளர்களை, தன் போதனையாலும், முன்மாதிரியான வாழ்வாலும் உறுதியாக்குகின்ற பவுல், ‘ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்என அறிவுரை பகர்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:28-36) இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசுவுக்கு மிக நெருக்கமான மூன்று திருத்தூதர்கள் - பேதுரு, யோவான், யாக்கோபு - இந்நிகழ்வில் இயேசுவுடன் உடனிருக்கின்றனர். மலையில் தோன்றிய மோசேயும், எலியாவும், உருமாறிய இயேசுவின் தோற்றம் திருத்தூதர்களைக் குழப்பத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குழப்பத்தில்தான், ‘ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்என்கிறார் பேதுரு. இப்படிச் சொல்வதன் வழியாக, () பேதுரு, இயேசுவை மோசேக்கும், எலியாவுக்கும் நிகராக்குகின்றார் () பேதுருஆண்டவரேஎன அழைத்து இயேசுவின் முக்கியத்துவத்தை அறிக்கையிடுகின்றார் மற்றும் () மலையிலேயே நிரந்தரமான இடத்தைத் தெரிவு செய்ய நினைக்கின்றார்.

பேதுருவும் மற்ற இரு திருத்தூதர்களும் இயேசு யார் என்ற ஒரு குழப்பத்திலும், உறுதியற்ற நிலையிலும் இருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின் குழப்பத்தை நீக்கும் வண்ணம், மேகத்தினின்று, ‘இவரே என் மைந்தர். நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்என்ற குரலொலி கேட்கின்றது. ‘மைந்தர்என்ற நிலையில் இயேசு, மோசே மற்றும் எலியாவைவிட மேன்மையானவராகின்றார். ‘தேர்ந்து கொண்டவர்என்ற நிலையில் அவர் மெசியாவாக இருக்கிறார். மேலும், இவருக்குச் செவிகொடுக்க திருத்தூதர்கள் அழைக்கப்படுகின்றனர்.

ஆக, கடவுளின் குரலும், அவரின் கட்டளையும் திருத்தூதர்களின் உள்ளத்திலிருந்த உறுதியற்ற நிலையையும், குழப்பத்தையும் அகற்றி உறுதி தருகின்றது. இயேசு யார்? என்பது பற்றிய உறுதியை திருத்தூதர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

இவ்வாறாக, கடவுள் தேர்ந்துகொண்டவர்களும், கடவுளைத் தேர்ந்துகொண்டவர்களும் - ஆபிராம், பிலிப்பு நகர நம்பிக்கையாளர்கள், திருத்தூதர்கள் - உறதியற்ற நிலையையும், குழப்பத்தையும் எதிர்கொள்கின்றனர். எதிர்கொண்ட அவர்கள் கடவுளின் உடன்படிக்கையால், வாக்குறுதியால், போதனையால், கட்டளையால் உறுதியும் பெறுகின்றனர். இதையே இன்றைய திருப்பாடல் ஆசிரியரும் (காண். திபா 27), தன் உறுதியற்ற நிலையிலும், தன் குழப்பத்திலும், ‘ஆண்டவரே என் ஒளிஎன்று கண்டுகொள்கின்றார்.

வாழ்வின் உறுதியற்ற நிலையை எப்படி எதிர்கொள்வது?

1. நம்பிக்கை

ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்என்று சொல்கிறது இன்றைய முதல் வாசகம். ‘நம்பிக்கைஎன்பது ஐயமற்ற நிலை. உயரம் தாண்டும் விளையாட்டு வீரர் ஓடிக்கொண்டே இருக்கும்போது, தனக்கு முன் இருக்கும் அந்தக் குச்சியின் உயரத்தைத் தான் தாண்டிவிடுவேன் என்ற உறுதியில் ஐயமற்று இருக்க வேண்டும். ‘தாண்டிவிடுவேனா?’ என்ற ஐயம் சிறுதுளி வந்துவிட்டாலே, அவரால் உயரே எழ முடியாமல் போய்விடலாம். ‘அக்கா, ஒரு பென்சில் வாங்குங்க. அண்ணா, ஒரு பேனா வாங்குங்க!’ என்று சொல்லி பேருந்தைச் சுற்றி சுற்றி வரும் சின்னக் குழந்தைகளின் கண்களில் இருந்து நம்பிக்கையை நாம் கற்றுக்கொள்ளலாம். ‘இன்று மாலைக்குள் எல்லாப் பேனாக்களும், பென்சில்களும் விற்றுவிடும். நாம் மாலையில் நன்றாக உணவருந்தி உறங்கலாம்!’ என்ற நம்பிக்கையே அவர்களை ஒவ்வொரு பேருந்தினுள்ளும் ஏறி, இறங்க அவர்களை உந்தித் தள்ளுகிறது. நம்பிக்கை என்ற அந்த நெருப்புத்துளி நம் உள்ளத்தில் இருக்கும்போது, ஒரு கதவு அடைக்கப்பட்டாலும், மறுகதவு நோக்கி நம் கால்கள் தாமாகவே நகர்ந்து செல்லும்.

2. உடனடி ரிசல்ட் வேண்டாம்

பிலிப்பி நகர மக்கள் தங்களின் மீட்புக்கு உடனே பரிசு கிடைக்க வேண்டும் என்று பொறுமையற்ற நிலையில் இருக்கின்றனர். பொறுமையற்ற நிலையில்தான் நாம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பிப்போம். ‘விண்ணகமே நம் தாய்நாடு’, எனவே பொறுத்திருங்கள் என அறிவுரை பகர்கின்றார் பவுல். நம் வாழ்வில் உறுதியற்ற நிலையும் குழப்பமும் வரக் காரணம் நம்முடைய பொறுமையின்மையே. ஆக, அதைக் களைதல் அவசியம்.

3. சலனமற்ற மனம்

உருமாற்ற மலையில் சஞ்சலத்தோடு பேசிய திருத்தூதர்கள் மலைக்குக் கீழே வந்தவுடன் அமைதி காக்கின்றனர். சலனம் மறைந்து அமைதி பிறக்கும்போது வாழ்வில் பல தெளிவுகள் பிறக்கும். இந்த அமைதியில்தான் இயேசுவை யார் என்று அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

இறுதியாக, நம் நம்பிக்கை வாழ்விலும், அன்றாட நல்வாழ்விலும், உறுதியற்ற நிலைகளும், குழப்பங்களும் தவிர்க்க முடியாதவை. ஆனால், நம்பிக்கை, பொறுமை, அமைதி நம் நம்பிக்கையையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் - இன்றும் என்றும்.

Comment