No icon

07, ஏப்ரல் 2024 - இறை இரக்கத்தின் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் 2 ஆம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) திப 4:32-35; 1யோவா 5:1-6; யோவா 20:19-31

உயிர்ப்பு விழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, இறை இரக்கத்தின் ஞாயிறு என்று அழைக்கின்றோம். இறை இரக்கத்தின் ஞாயிறை வழிபாட்டுக் காலத்தின் ஒரு பகுதியாக 2000-ஆம் ஆண்டில் இணைத்தவர் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால். இரக்கம் காட்டுவதில் சலிப்படையாத இறைவன், இரக்கத்தோடு தோமாவைச் சந்தித்துக்கொண்ட அழகான நிகழ்வை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

உண்மை பேசுபவரை ‘அரிச்சந்திரன்’ என்றும், வாரி வழங்குபவரை‘பாரி வள்ளல்’என்றும் அழைப்பதுபோல, சந்தேகப்படுபவரை ‘சந்தேகத் தோமையார்’என்று அழைக்கின்றோம். நமக்கெல்லாம் அவ்வளவு தூரம் தோமா ‘சந்தேகத்தின் மறுபிறவியாக’மாறிவிட்டார் போலும்!

தோமா நம்பிக்கையின்மையின் அடையாளம் என்பதைவிட, அவர் தொடக்கக் காலத் திரு அவையின் மனித முகம் என்று புரிந்துகொள்ளலாம். ஏனெனில் தோமாவின் பேச்சும், அவரது செயல்களும் தொடக்கக் காலத் திரு அவையில் நம்பிக்கை பிறழ்வுகளைக் காட்டுகிறது. தோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதைவிட, அவர் உயிர்த்த ஆண்டவரை இன்னும் சந்திக்கவில்லை என்பதே சரியான பார்வையாக இருக்க முடியும்.

தோமா ஒரு நேர்மையாளர். அதனால்தான் தன் கேள்விகளை வெளிப்படுத்துகிறார். ஆண்டவரின் விலாவிலும், கைகளிலும் காயங்கள் இருந்தன என்பதற்குத் தோமா ஒரு நல்ல சாட்சியம். உண்மையிலேயே அவரிடம் இருந்த மனத்துணிவும், ஆழமான இறைநம்பிக்கையும், நம்பிக்கையில் பிறந்த சாட்சிய வாழ்வும் எவருக்கு வரும்? கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான இந்தப் பண்புகளைத் தோமாவின் அனுபவத்திலிருந்து இன்று கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

முதலாவதாக, தோமாவிடம் காணப்பட்ட துணிவு: பெத்தானியாவில் மார்த்தா, மரியா, சகோதரர் இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, இரண்டு நாள்கள் கழித்து, மீண்டும் யூதேயாவுக்குச் செல்ல விரும்புவார் இயேசு. அப்போது சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்? மீண்டும் அங்குப் போகிறீரா?” (யோவா 11:8) என்று கேட்பார்கள். இந்நிகழ்வில் திதிம் என்னும் தோமா தன்னுடன் இருந்த பிற சீடர்களிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” (11:16) என்பார். என்னே அவரது துணிவு! ஆண்டவரின் இறுதிப் பிரியாவிடையின் போதும், “நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்பார் இயேசு. இயேசுவின் இந்தக் கூற்று எவருக்கும் புரியவில்லை; கேள்வி கேட்டு, தெளிவுபெறத் துணிவும் இல்லை. இந்தச் சூழலில் தோமா உடனிருக்கும் மற்ற சீடர்கள் சார்பாக, “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்று எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்ற கேள்வியை எழுப்புவார். ஒருவேளை மற்ற சீடர்களைப்போல தோமாவும் அமைதியாக இருந்திருந்தால்,  “வழியும், உண்மையும், வாழ்வும் நானே” என்ற அற்புதமான அமுத மொழியை இயேசுவிடமிருந்து நாம் கேட்டிருக்க முடியாது (யோவா 14:4-6). தோமாவே, ஆயிரம் நன்றி உமக்கு!

இரண்டாவதாக, உயிர்த்த ஆண்டவர்மேல் தோமா கொண்ட ஆழமான நம்பிக்கை: இயேசுவின் உயிர்ப்பு மனித அறிவையும் கடந்த ஒரு நிகழ்வு. எனவேதான் உயிர்ப்பை ‘பாஸ்கா மறை பொருள்’ என்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை எவரும் நேரடியாகக் கண்டதாகத் திருவிவிலியத்தில் சான்றுகள் இல்லை. எனவே, மற்றச் சீடர்கள் “உயிர்த்த ஆண்டவரைக் கண்டோம்” என்று தோமாவிடம் சொன்னபோது, அவர் ‘உண்மைதானா?’ என்ற தேடலில் ஈடுபட்டார். “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” (20:25) என்று அடம்பிடித்தார்.

காலங்காலமாக இந்த ஒரு சொற்றொடரைப் பிடித்துக்கொண்டு, ‘என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய்ப் பழகி விட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?’ என்று கேள்வி கேட்கிறோம். ‘விசுவாசம் கெட்ட தோமா’, ‘சந்தேகப் பேர்வழி’ என்று அவர்மீது கண்டனக் கற்களை எறிய முயற்சிக்கிறோம். ஆனால், தோமாவின் இந்த ஆதங்கக் கேள்வி, இயேசுவின்மீது கொண்டிருந்த மாறாத பேரன்பும், பற்றுறுதியும், நெருங்கிய உறவாலும்தான் என்பதை மறந்துவிடுகிறோம்.

இன்னொரு பார்வையில் தோமாவின் இக்கூற்றைத் தியானிக்கும்போது, ‘தோமாவின் சந்தேகம்’ மற்றச் சீடர்களுக்கு உயிர்த்த ஆண்டவர்மீது தாங்கள் வைத்த நம்பிக்கையை இரட்டிப்பாக்கியது என்பதுதான் உண்மை. உயிர்த்த ஆண்டவரை முதலில் கண்ட மகதலா மரியா விரைந்து சென்று சீடர்களிடம் சொன்னபோது அவர்கள் எவரும் நம்பவில்லை (20:2-3). உயிர்த்த இயேசு சீடர்களைச் சந்தித்து இருமுறை “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (20:19,21) என்று சொன்ன போதிலும்கூட சீடர்களிடமிருந்த கலக்கம், குழப்பம், சந்தேகம் தீர்ந்தபாடில்லை (மத் 28:17; மாற் 16:13-14; லூக் 24:37-39).

‘இயேசு உயிர்த்தார்’என்பது உண்மையென்றால், சீடர்கள் மனத்துணிவோடு வெளியேறி, எவருக்கும் அஞ்சாமல் அந்தச் செய்தியை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எனவே, தன் உடன் சீடர்களின் கோழைத்தனத்தையும், அச்சத்தையும் பார்த்த தோமாவுக்கு, ‘இவர்கள் உண்மையிலேயே இயேசுவின் உயிர்ப்பை அனுபவித்தவர்கள்தானா?’ என்ற சந்தேகம் எழுந்ததில் வியப்பேதும் இல்லை. எனவே, இயேசுவின் உயிர்ப்பைத் தோமா கேள்விக்கு உட்படுத்தியதால், சீடர்கள் மேலும் நம்பிக்கையில் உறுதிபெற தோமா காரணமாகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இரக்கத்தின் வடிவான இயேசு, தோமாவின் சந்தேகங்களுக்கு மட்டுமல்ல, சீடர்களின் சந்தேகங்களுக்கும் சேர்த்துக் கூறிய பதில்தான் “இதோ! என் கைகள்; இங்கே உன் விரலை இடு; உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைக்கொள்”என்பது (20:27). இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவின் காயங்களைத் தொட்டுப் பார்த்தாரா? என்பதற்கு நற்செய்தியில் பதில் இல்லை.

கடவுளையே கண்ணாரக் கண்டவர், காயங்களுக்குள் கைவிரல்களை இட்டுப்பார்க்க வேண்டுமோ? தோமா இப்படிச் சோதனை முயற்சிகளில் இறங்கி இருக்க மாட்டார் என உறுதியாக நம்பலாம். அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை முழுமையாக நம்பினார். அந்த முழுமையான நம்பிக்கையில் இயேசுவை நோக்கி, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” (20:28) என்று தோமா அறிக்கையிட்டது, மிகவும் அழகு நிரம்பிய வெளிப்பாடு. பழைய மொழிபெயர்ப்பில் இன்னும் உணர்வுப்பூர்வமாக, “என் ஆண்டவரே, என் கடவுளே” என்று சரணாகதி அடைகிறார்.

உண்மையான நம்பிக்கை என்பது கடவுளிடம் முழுவதுமாகச் சரணடைவதாகும். அதாவது, கடவுள்தான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதை நம்புவதாகும். இந்த அடைக்கலமாதலில், இயேசுவைக் ‘கடவுள்’ என்று கூறிய முதல் மனிதர் தோமாதான். இயேசு தோமாவை இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை உலகெங்கும், சிறப்பாக, இந்தியாவிலும் பறைசாற்றப் புறப்பட்டார்.

மூன்றாவதாக, தோமாவின் சாட்சிய வாழ்வு: உயிர்ப்பின் உண்மையான மகிழ்ச்சி என்பது உலகின் கடையெல்லை வரைக்கும் சென்று, உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிப்பதுதான். “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; பாவங்களை மன்னியுங்கள்; உயிர்ப்பின் சாட்சிகளாய் மாறுங்கள்” (20:22-23) என்பதுதான் இயேசு சீடர்களுக்கு முன்னுரைத்தது. எனவே, ‘கிறிஸ்து உயிர்த்தார்’ என்ற உண்மையை அறிந்து, அனுபவித்த தோமா அமைதியாக இருக்கவில்லை. உயிர்ப்பின் பொருள் புரிந்து, உள்மன மாற்றம் பெறுகிறார்; முற்றிலும் புதிதாய்ப் பிறந்த மனிதராக மாறுகிறார். வேறுபட்ட காலச் சூழல், புதிய பண்பாடு, கலாச்சாரம், வேற்று மக்கள், புதிய மொழி போன்ற தடைகள் எதுவும் அவரைத் தடுக்க இயலவில்லை. உயிர்ப்பின் உண்மையை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதற்காகக் கடல் கடந்து இந்தியா வருகிறார். இந்தியாவின் ‘முதல் மறைச்சாட்சியாய்’ தன் உயிரையும் கையளிக்கிறார்.

இறுதியாக, இந்த நாள் நமக்கு உணர்த்தும் சில பாடங்களை மனத்தில் ஏற்போம். திருத்தூதர்கள் வழியாக இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்ற முதல் கிறிஸ்தவர்களின் வாழ்வு நமக்கெல்லாம் மிகச்சிறந்த பாடம். நம்பிக்கை கொண்டோரின் சிந்தனைகள் ஒன்றாக இருந்தது; பகிர்தல் வாழ்வின் மையமாக இருந்தது; எனவே, உடைமைகளும் பொதுவாய் இருந்தன; தேவையில் உழல்வோர் எவரும் இல்லை என்பது இன்று நமக்கு வியப்பூட்டும் செய்தி. எல்லாவற்றுக்கும் மேலாகத் ‘திருத்தூதர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்’ என்பது இன்றைய மறைப்பணியாளர்களுக்கு விடுக்கும் சவால்! ‘தேவைகளுக்காகத்தான் பொருள்கள்; பொருள்களுக்காக மனிதர்கள் இல்லை’ என்பதைத் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தனர் (திப 4:32-35). ‘இழப்பதிலேதான் பெறுகிறோம்’ என்பதை உணர்ந்திருந்தனர். இக்கால மக்களும் இதனை நன்றாக அறிந்திருந்தால் சமூகம் எவ்வளவு நலமாக இருக்கும்!

பல வேளைகளில் கேட்பதற்கெல்லாம் ‘ஆம்’ என்று தலையாட்டி, உண்மையைக் கண்டுணராது, குழப்பமான நிலையில் ‘அமைதியாகவே’ இருந்துவிடாமல், பல குழப்பமான நேரங்களில் துணிவோடு தெளிவுகள் பெறவும், உண்மையை அறிந்து, செயலில் இறங்கி நம் வாழ்வை வளமாக்குவோம். இயேசுவின் தழும்புகளைத் தாங்கி நிற்கும் நலிந்தோர், நோயுற்றோர், விளிம்பு நிலையினர் யாவருக்கும் இறையாட்சிப் பணியாற்ற முன்வருவோம். நிபந்தனைகள் ஏதுமின்றி நம்மை ஒவ்வொரு நாளும் தேடிவரும் இறைவன், சந்தேகம் என்ற சிறைக்குள் சிக்கித் தவிக்கும் நம் குடும்ப உறவுகளை விடுவிக்க மன்றாடுவோம். இருகரம் விரித்து, இதயத்தைத் திறந்து, காத்திருக்கும் இறைவனின் இரக்கத்தை, வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் நாம் உணர திருத்தூதர் தோமாவின் பரிந்துரையோடு வேண்டுவோம்.

Comment