No icon

திருப்பலி சடங்குகளில் பெண்களுக்கு புதிய அங்கீகாரம்

திருப்பலி சடங்குகளில் பெண்களுக்கு புதிய அங்கீகாரம்
திருப்பலி வாசகங்களை வாசிப்பதற்கும், திருப்பலிகளில் அருள்பணியாளர்களுக்கு உதவுதற்கும், பெண்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்க வழிசெய்யும், Motu Proprio எனும் சுயவிருப்பத்தின் பேரிலான அறிக்கை ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் சனவரி 11 ஆம் தேதி திங்களன்று வெளியிட்டுள்ளார்.

உலகின் பல்வேறு தலத்திருஅவைகளில், ஏற்கனவே, திருப்பலிச் சடங்குகளில், நடைமுறையில் இருக்கும், பெண்களின் பங்கேற்பை, தற்போது, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் இந்த சுயவிருப்பத்தின் பேரிலான அறிக்கைக்கு, "Spiritus Domini," அதாவது, ஆண்டவரின் ஆவி, என்று திருத்தந்தை பிரான்சிஸ் பெயரிட்டுள்ளார்,.

இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய ஜனவரி 10 ஆம் ஞாயிறன்று திருத்தந்தையால் கையெழுத்திடப்பட்டு, இத்திங்களன்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கை குறித்து விளக்கமளித்து, திருஅவையின் விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர், கர்தினால் லூயிஸ் லடாரியா  அவரகளுக்கு கடிதம் ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.

அண்மைக்கால ஆயர் மாமன்றங்களின் பரிந்துரைகளை மனதில்கொண்டு, திருப்பலி மேடைகளில் வாசகங்களை வாசிக்கவும், பீடப்பணியாளர்களாக உதவவும், பெண்களுக்கு அதிகாரப்பூர்வமான அனுமதி வழங்க தான் தீர்மானித்ததாக, திருத்தந்தை, இம்மடலில் கூறியுள்ளார்.

திருப்பலியில் உதவுபவர்களாகவும், திருப்பலியின்போது திருப்பலி வாசகங்களை வாசிப்பவர்களாகவும் ஆண்களை மட்டுமே அனுமதித்து, திருத்தந்தை, புனித ஆறாம் பவுல் அவர்கள், 1972ம் ஆண்டு கொணர்ந்த விதிகள், தற்போதைய சுயவிருப்பத்தின் பேரிலான அறிக்கை வழியாக நீக்கம் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை அருள்பணியாளராக திருநிலைப்படுத்தும் எண்ணம் திருஅவைக்கு இல்லை என்று, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் மேற்கோள் காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலிகளில் உதவிபுரிய, பொதுநிலையினரான ஆண்களையும், பெண்களையும் அனுமதிப்பது, திருஅவையின் மறைப்பணியிலும், வாழ்விலும், அனைவரும் பங்குபெற வழிவகுக்கும் என, கர்தினால் லடாரியா அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். 

Comment