No icon

இந்தக் கல்லை நமக்கென யார் புரட்டுவார்? - 18.04.2021

இந்தக் கல்லை நமக்கென யார் புரட்டுவார்?
புரட்சிகரமான கருத்தாழமிக்க உயிர்ப்புப் பெருவிழா மறையுரை
மேதகு ஆயர் நசரேன் சூசை, கேட்டாறு மறைமாவட்டம்

கிறிஸ்து இயேசுவில் அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் உயிர்ப்பின் பெருவிழா நல்வாழ்த்துகளை இனிதே தெரிவித்துக் கொள்கிறேன். உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் அருளும் அன்பும் அமைதியும் உங்களுடைய உள்ளத்திலும் இல்லத்திலும், நம் சமூகங்களிலும் குடிகொள்ள அன்போடு ஆசிக்கின்றேன்; வேண்டுகின்றேன். 
‘நாம் உயிர்ப்பின் மக்கள்! அல்லேலூயா!’ என்பது நம் பாடல். இந்த அருமையான வரிகளை எழுதியவர், நான்காம் நுhற்றாண்டில் வாழ்ந்த புனித அகுஸ்தீனார். அவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவ மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள், துயரங்கள் நடுவிலே திருப்பாடல்களைப் பற்றி அவர் மறையுரை ஆற்றும்போது இந்த அருமையான வாக்கியத்தை அவர் குறிப்பிடுவார். குறிப்பிட்டு இவ்வாறும் சொல்வார்: ‘நாம் எதிர்கொள்ளுகின்ற துயரங்கள் தவக்காலத்தைப் போல அதிக நாட்கள் நீடிக்காது. அது உயிர்ப்பினைப் போல ஒரு நாள் விடியும். அந்த உயிர்ப்பு என்றுமே தொடரும். எனவே, ‘நாம் உயிர்ப்பின் மக்கள்! அல்லேலூயா!’ என்பது நம் பாடல்.
நுhற்றாண்டுகள் பல கழிந்தபின் 1986 ஆம் ஆண்டிலே நம்முடைய முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல், ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்றபோது, இந்த உலகத்தை அப்போது இருள் கவ்வி கொண்டிருந்தது. துயரம், பல்வேறுவிதமான போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன. இவை நடுவிலே திருத்தந்தை தன்னுடைய உள்ளத்திலிருந்து மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கின்றபொழுது இதே வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார். 
இன்று உலகம் எதிர்கொண்டிருக்கின்ற பிரச்சனைகள், நெருக்கடிகள் போர் மேகங்கள் இவை நடுவிலே, அன்பு மக்களே, நாம் உணரவேண்டியது, ‘நாம் உயிர்ப்பின் மக்கள்! அல்லேலூயா!’ என்பது நம் பாடல். அத்தோடு முடிந்துவிடவில்லை. கடந்த ஆண்டு பெருந்தொற்றினை இந்த உலகம் எதிர்கொண்டபொழுது யாருமே இதுவரைக்கும் நினைத்திராத பெருந்துயரம் நிகழ்ந்தபோது உயிர்ப்புப் பெருவிழாவிற்கான தன்னுடைய செய்தியை அந்த சிறிய அறையிலிருந்தே நமக்குத் தந்த நமது அன்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதே புனித அகுஸ்தீனாருடைய வரிகளையும் பயன்படுத்தினார். 
இன்று பெருந்துயரமாக இந்த உலகம் நாம் எதிர்கொண்டிருக்கிற இந்த கொரோனா பெருந்தொற்றின் நடுவில் நாம் நம்பிக்கையோடு வாழ வேண்டும். இந்த துயரம் நம்மை வீழ்த்தி விடக் கூடாது. இந்த விரக்தி நம்மை ஆழ்த்தி விடக் கூடாது. மாறாக ‘நாம் உயிர்ப்பின் மக்கள்! அல்லேலூயா!’ என்பது நம்முடைய பாடல். அன்பு மக்களே! இன்றைய காலத்திற்கும் இதே ஓர் அருமையான செய்தியைத் தான் இறைவன் நமக்குத் தர விரும்புகிறார். எப்பொழுது எல்லாம் இச்சமுகம், திருஅவையானது பெருந்துயரத்தையும், நெருக்கடிகளையும், இன்னல்களையும் எதிர் கொள்ளுகின்றதோ அப்பொழுது ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளுகின்ற மக்கள் நாம் சொல்லிக்கொள்ள வேண்டியது: நாம் விரக்தியில் வீழ்ந்து விடுபவர்கள் அல்ல; துயரத்தில் ஆழ்ந்து விடுகிறவர்கள் அல்ல, மாறாக நாம் உயிர்ப்பின் மக்கள்! மகிழ்ச்சியான அல்லேலூயா என்பது தான் நம்முடைய பாடல். 
இந்தச் சூழலில் தான் அவர்களுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. காட்சி, இரண்டு பெண்கள் கல்லறைக்குச் சென்றதாகவும் அங்கே நறுமணப் பொருட்களை கொண்டு அடக்கம் செய்யப்பட்டவருக்கு செய்ய வேண்டிய காரியங்களை மரபுப்படி செய்யச் சென்றதாகவும், கல்லறை வாயிலிலிருந்து இந்த கல்லை நமக்கென யார் புரட்டுவார்? என்ற கேள்வியோடு சென்றவர்களுக்கு அங்கு ஆச்சர்யம் காத்திருந்தது, அந்தப் பெரிய கல் புரட்டப்பட்டிருந்தது. வெண்ணாடை தரித்த ஆடவர் ஒருவர் அங்கிருக்கிறார், இவர்களோடு உரையாடுகிறார். உயிர்த்த உயிருள்ள ஒருவரை இறந்தோரிடம் தேடுவது ஏன்? அவர் சொன்னபடி உயிர்த்துவிட்டார். உங்களுக்கு முன் அவர் கலிலேயா செல்கிறார். ஏன் அவரை இந்த கல்லறையில் தேடுகிறீர்கள்’ என்று சொல்லக் கேட்டதாகவும், நடுங்கியும், அஞ்சியும், திகிலுற்றும், ஆச்சரியப்பட்டவர்களாய் ஓடோடி வந்து சீடர்களிடம் சொன்னார்கள். சாட்சிகளைக் கேட்ட மாத்திரத்தில் சீடர்கள் ஆச்சர்யம் கொள்ளுகிறார்கள். அது எப்படி இறந்து போனவர் உயிர் பெற்று எழுவார்?! ஆனால் தங்களுக்குள்ளே இனம் புரியாத ஒரு வருடல், மகிழ்ச்சி, அவர் உயிரோடிருக்கும்போதே சொன்னாரே என்ற நினைவு. எனவே அவர்களும் கல்லறைக்கு ஓடோடி செல்லுகிறார்கள். ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பைக் காண்கிறார்கள். ‘ஆண்டவர் உயிர்த்து விட்டார்’ என்பதை தங்களுடைய வாழ்வில் உணர்கிறார்கள். வற்றிபோயும் மடிந்துபோன அவர்களுடைய உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொள்கிறது; வெளி வருகிறார்கள். அதனை நாம் சொல்ல வேண்டும் என்பது தான் இன்றைய இரவு நமக்கு வெளிப்படுத்துகிறது, உணர்த்துகிறது. 
மூன்று ஆண்டளவான அருமையான பணி! முழு நேர இறையாட்சி பணியாளர்! ஓய்வில்லாது கால் கடுக்க மக்களுக்கு உழைத்து சோர்ந்தவர்! ஆனால் மூன்று நாள் அடக்கமாயிருந்தவர், உடன் வந்தவர்கள், அவரைப் பின்பற்றியவர்கள். அவர் ‘மெசியா’ என நினைத்தார்கள். ‘மீட்பார்’ என காத்திருந்தார்கள். அவருடைய வலப்புறமும், இடப்புறமும் அமர்வதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பினார்கள். தங்களில் அப்பொழுது யார் பெரியவராக இருப்பார் என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்துக் கொண்டார்கள், ஏக்கமடைந்தார்கள். ஆனால் இம்மனிதன், உழைத்தான்; களைத்தான்; சோர்ந்தான்; உயிரைத் தந்தான்; மூன்று நாள் யாரோ ஒருவருடைய கல்லறையில் இரவலாய் அடக்கம் செய்யப்பட்டார்; மரணித்துப் போனது அவரை பின்பற்றிய சீடர்களுடைய கனவு. நாளை விடியலென நினைத்தார்கள். ஆனால் இவ்வாறு புதையுண்டு போகும் என அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அஞ்சினார்கள்; எந்த யூதர்களும் உரோமை அரசும் தாங்கள் எதிர்நோக்கிய தானைத் தலைவரை கொலைச் செய்ததனால் அவர்களுக்கு அஞ்சினார்கள்; கதவை அடைத்துக் கொண்டார்கள். இதயத்தைப்போல வெளி வந்து யாரையும் நோக்கவில்லை. ஒரு வேளை தங்களுக்கும் இதுதான் நேருமோ?! அவருக்கே இந்த கதியென்றால் தங்களுக்கு என்னவாகுமோ?! என்ற பயத்தினால் அவர்கள் தயங்கியும், ஒடுங்கியும், நடுங்கியும், அடங்கியும் இருந்தார்கள். எந்த யூதர்களுக்கும், அரசர்களுக்கும் பயந்து நின்றார்களோ புயலென அவர்களுக்கு முன்னே துணிவாக சொல்கிறார்கள். எந்த இயேசுவை நீங்கள் கொலை செய்தீர்களோ, எல்லா மக்களுக்கும் நல்லதையும் நலமென்றதையும் செய்து வந்த மனிதனை சிலுவையில் அறைந்து கொன்றீர்களோ, குற்றஞ்சாட்டி கொலை செய்தீர்களோ, அந்த மனிதன் உயிர்த்ததற்கு இதோ நாங்கள் சாட்சிகள்’ என்று துணிவோடு முழங்குகிறார்கள். 
இனிமேல் அச்சமில்லை; அரசனிடத்தில் செல்லலாம்; அதிகாரிகள் கேள்விக்குட் படுத்தலாம். தலைமைச் சங்கம் இனிமேல் இவ்வாறு பேசக்கூடாது என்று கட்டளையிடலாம். ஆனால் நாங்கள் உயிர்த்த ஆண்டவரின் சாட்சிகள். அவரைக் கண்டோம், நம்பினோம். எனவே நாங்கள் அறிவிக்கின்றோம். இதுதான் இந்த சீடர்களில் நிகழ்ந்த அற்புதம். அவர்கள் கண்டுகொண்ட உயிர்ப்பின் அனுபவம். அவர்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றி உலகிற்கு தந்த நற்செய்தி அறிவிப்பு. 
அன்பு மிக்கவர்களே, இன்றும் கல்லறை வாயிலில் இருந்து கல்லை நமக்கெனப் புரட்டுவது யார்? இந்த கேள்வி நமக்கு எழாமலில்லை. மலைபோல மலைப்பாக இவ்வளவு பெரிய கல்லை யார் புரட்டுவார்? என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுந்துகொண்டேயிருக்கிறது. இந்த கல்லை அகற்றுவதற்கு என்ன செய்வது? உயிர்ப்பின் மக்களாய் நீங்களும் நானும் இருப்பதற்கு என்ன செய்வது? ‘அல்லேலூயா!’ என்கின்ற புகழ் கீத பாடலைப் பாடி ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பை அறிவிப்பதற்கு நானும், நீங்களும் என்ன செய்வது? இதுதான் இன்றைய இரவு கேள்வியாக நம் முன்னே வைக்கப்படுகிறது. 
விடியலைக் காணவேண்டுமென்றால் இந்த கல் புரட்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். இந்த சமூகமும் தமிழகமும் விடியலைக் காணவேண்டுமென்றால் நீங்களும், நானும் சில காரியங்களை நிராகரிக்கவும் வேண்டும். எதனை நிராகரிக்க வேண்டும்? 
எது இத்தகைய கல்லை கொண்டு வந்து சேர்க்கிறதோ, யாரெல்லாம் இந்த கல்லை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு தடையாக கொண்டு வந்தார்களோ அவர்கள் அப்புறப்படுத்தப்படவேண்டும், அவர்கள் மாற்றப்படவேண்டும். அவர்கள் யார் என்றால்? அதுதான் இந்த உயிர்ப்பு நமக்கு தருகின்ற செய்தியாக இருக்கிறது. அந்த உரிமை உங்களுக்கும் இருக்கிறது; எனக்கும் இருக்கிறது. எனவே எந்த கல்? நானும் நீங்களும் இந்த ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பினை தரிசிக்க, அன்றாட வாழ்வில் கண்டுகொள்ள, உயிர்ப்பினைக் கொண்டாட தடையாக இருக்கிறதோ அந்த கல்லை புரட்டிப்போடத்தான் வேண்டும், மாற்றியாகத் தான் வேண்டும். 
இன்றைய சமூகத்தைக் காண்கின்றபொழுது, குவிந்து நின்று ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பைத் தடுத்துக் கொண்டிருக்கிற, கல்லறை வாயிலில் இருக்கிற கல்லைக் கண்டு நாம் கண்டிப்பாக அதிர்ச்சி கொள்ளுகிறோம். என்ன செய்வது? என்று ஒருவர் ஒருவரை வினவிக் கொள்ளுகிறோம். நமக்குள்ளே உரையாடிக்கொள்ளுகிறோம். 
அது எப்படிப்பட்ட கல்? இந்த நாட்டிலே பிறந்திருந்தாலும், மதத்தினால் நீங்கள் இந்த நாட்டின் குடியுரிமையைப் பெற முடியாது, என்று சொல்லுகின்ற குடியுரிமைச் சட்டங்கள் உள்ள கல்.
 அது என்ன கல்? இந்த நாட்டில் எல்லா மக்களும் மகிழ்வோடு, அமைதியோடு வாழ வேண்டும் என்று இருந்தாலும், விவசாய மக்களுக்கு எதிராக வருகின்ற வேளாண்மைச் சட்டம் என்கின்ற கல். 
அது என்ன கல்? சாகர் மாலா என்று சொல்லிக்கொண்டு இருக்கின்ற கடலையும் கூட தனியாருக்கு தாரை வார்க்கின்ற பெரியக் கல். 
அது என்ன கல்? தேசிய கல்விக் கொள்கை என்றுச் சொல்லி சாதாரண மக்களை அடிமை படுத்தி குலத் தொழில் செய் என்று சொல்லி அல்லது மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என ஒவ்வொரு படி நிலையிலும் பொதுத் தேர்வை நடத்தி சாதாரண குழந்தைகளை படிக்க விடாமல் தடுக்கின்ற கல்.
அது என்ன கல்? பன்னாட்டுச் சரக்கு பெட்டகம் மாற்றும் முனையம் என்று சொல்லி மக்களுடைய வாழ்வாதாரத்தையும், இயற்கையையும், கொள்ளையடிக்கின்ற கல்.
 அது என்ன கல்? ஆற்று மணலை விற்று, மேற்கு தொடர்ச்சி மலைகளையெல்லாம் குடைந்தெடுத்து கபளீகரம் செய்கின்ற கல்.
 அது என்ன கல்? பொதுநிறுவனமாக இந்தியாவிலிருந்து எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிக்கொள்கின்ற கல்.
அது என்ன கல்? இப்படி ஒவ்வொன்றாக நம்மால் சொல்ல முடியும். தமிழகத்தின் வாய்ப்புகளையெல்லாம் வட நாட்டவருக்கு கொடுத்து விட்டு இது தவித்து நிற்கின்ற கல் .
அது என்ன கல்? ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றை தேர்வு, ஒற்றை தேர்தல், ஒற்றை கட்சி, என இந்தியாவை மாற்றுகின்ற ஒரு கல் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். 
கல்லறை வாயிலிலிருந்து யார் கல்லைப் புரட்டுவார் என்கின்ற கேள்வி எழுப்பிச்சென்ற அந்த பெண்களைப் போல ஆண்டவரைத் தேடி செல்லுகின்ற போது இந்த உயிர்ப்பின் அனுபவம் எப்படி எங்களுக்கு கிடைக்கும்? 
இந்தக் கல்... இவ்வாறு நின்று கொண்டிருக்கிறதே யார் எங்களுக்கு உதவி செய்து இந்த கல்லை அப்புறப்படுத்துவார்? என்று கேட்ட பெண்களைப் போல இன்று நீங்களும் நானும் அன்பு மக்களே தவித்து தான் நிற்கிறோம். 
பெரிய கற்களாக மலையைப் போல, மலைப்பு ஏற்படுத்துகின்ற கல்லைக் கண்டு நாமும் இச்சமூகத்தில் தவித்து தான் நிற்கின்றோம். அப்படியென்றால் வாக்களிக்கத் தான் வேண்டும். வாக்கு வழியாக அது மாற்றப்படவும் வேண்டும். அன்பு மக்களே! இது தான் இந்த உயிர்ப்பு நமக்கு தருகின்ற செய்தி. 
மதத்தினால் மக்களை பிளவுப்படுத்தி மொழியை திணித்து, தங்களுடைய விருப்பம் நிறைவேற்ற கொள்ளையடித்து, லஞ்சமும், ஊழலும் பெருகிக் கொண்டிருக்கின்றபோது அந்தக் கல் அப்படியே இருக்கும். ஆனால் எப்பொழுது மக்கள் ஆண்டவர் இயேசு என்கின்ற அந்த சமத்துவத்தையும், சம உரிமையையும், மாண்பையும், மானுட உரிமைகளையும், கண்டுகொள்ள வேண்டுமென்றால் தடையாக இருக்கின்ற கல் அப்புறப்படுத்தப்பட வேண்டும். 
என்ன செய்வது? முதன்மையாய், தனி ஒரு மனிதனாய், நீங்களும், நானும் மானுட உரிமைக்காக குரல் கொடுக்கின்ற மக்களாக மாற வேண்டும். இயற்கையாக அதோடு இணைந்து வாழ்வதன்றோ நம்முடைய வழி என்று கண்டுகொள்ள வேண்டும். 
இல்லையென்றால் ஹைட்ரோ கார்பன் என்று சொல்வார்கள், மீத்தேன் என்று சொல்வார்கள், நியுட்ரீனோ என்று சொல்வார்கள். அணு உலை என்று சொல்லுவார்கள் ஆதாயத்திற்காக, மக்கள் வாழ்வைப் பற்றி இஞ்சித்தும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை உணர்ந்த மனிதன் இவற்றை அப்புறப்படுத்த விரும்புகிறான். அதனை முன் மொழிகின்றவர்களை நிராகரிக்க விரும்புகிறான். உங்களுக்கு லாபம் என்றால் இந்த திட்டம் வேண்டும் என்றால், ‘நாங்கள் வேண்டாம்’ என்று சொல்லுகிறோம். ஒரு மனிதன் தன்னுடைய குரலைத் துணிவாக எழுப்புகிறான். அதுதான் உயிர்ப்பின் தரிசனம், உயிர்ப்பின் அனுபவம். நாம் உயிர்ப்பின் மக்கள் என்பதன் அடையாளம். 
தனி ஒரு மனிதனாய் இன்னும் நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மைச் சார்ந்திருக்கிற பிறரிடம் சொல்ல முடியும். எது நல்லது? எனக் கண்டுணர்ந்திட என்று சொல்ல முடியும். செல்லும் வழி தவறு என்று சுட்டிக்காட்ட முடியும். நீ யாரோ காட்டுகின்ற பாதையில் உன்னுடைய சிந்தனையை மழுங்கடிக்கிறாய் என்று சொல்ல முடியும். நீ செய்கின்ற ஒவ்வொரு செயலும் வேறு யாருக்கோ வாய்ப்பாக மாறுகிறது என்றும் கற்றுத் தர முடியும். 
எனவே மதச்சார்பில்லாத ஒரு நாடாய் இது உருவாவதற்கு என்னுடைய குரல் மட்டுமல்ல. நம் ஒவ்வொருவருடைய குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்போது அது உயிர்ப்பின் அனுபவமாக அமையும் . சீடர்கள் இதைத் தான் செய்தார்கள். கண்டு கொண்ட ஆண்டவரை அந்த உயிர்ப்பின் அனுபவத்தை அவர்கள் எங்கு சென்றாலும் எடுத்துச் சென்றார்கள். அதைச் சொல்வதற்கு அவர்கள் தயங்கவில்லை. ஏனென்றால் அதனை நாங்கள் கண்டுக் கொண்டோம் ‘ஆண்டவர் இயேசு’ என்கிற மானுட உரிமையை நாங்கள் உணர்ந்து கொண்டோம். சமத்துவத்தைக் கற்றுத் தந்தவரை எங்கள் வாழ்வில் நாங்கள் கண்டு கொண்டோம். பெண்களும், ஆண்களும் சமம் என்பதனை எங்களுடைய வாழ்வில் இந்த ஆண்டவர் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டோம்.
யாரோ தாழ்ந்தவன், சிலர் உயர்ந்தவர் என்பது அல்ல அனைத்து மக்களும் கடவுளுடைய பிள்ளைகள் என்கின்ற ஆன்மீகத்தை இவரிடம் கற்றுக் கொண்டோம். சிலர் மட்டும் வாழ, பலர் வீழ வேண்டும் என்பது அல்ல; பகிர்ந்து உண்டால் அனைவரும் வாழலாம் இந்த சித்தாந்தத்தை இவரிடமிருந்து கற்றுக் கொண்டோம் என்பதையெல்லாம் ஒவ்வொரு தனி மனிதனும் ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பை அனுபவமாக பெற்று ஒவ்வொரு கிறிஸ்தவனும் இன்று கண்டிப்பாகச் சொல்ல முடியும். நீங்கள், நான், நாம் யாவரும் உயிர்ப்பின் மக்களாக இதற்காகத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம். 
அதுமட்டுமல்ல, நாம் வாழுகின்ற வீடாக இருக்கலாம், நாம் வாழுகின்ற பங்காக இருக்கலாம், நாம் பணி செய்கின்ற இடமாக இருக்கலாம், நாம் தொலை துhரம் செல்லுகின்ற இடமாகவும் இருக்கலாம், ஆனால் ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பின் அனுபவத்தை பெற்றவர் அவருடைய இந்த மதிப்பீடுகளை, செல்லும் இடங்களிலெல்லாம் துணிவாக எடுத்துச் சொல்கிறார். அது அதிகாரிகள் முன்னே நிறுத்தப்பட்டாலும், அரசுகள் கேள்வி கேட்டாலும் எதுவென்றாலும் அவர் துணிவாக சொல்ல காரணம் நாம் உயிர்ப்பின் மக்கள். 
இரண்டாவதாக, தனியொரு மனிதனாக மட்டுமல்ல மாறாக இணைந்த ஓர் இறைச் சமூகமாக நாமும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பினை இந்த உலகத்திற்கு அறிவிக்க வேண்டும். வாருங்கள்! எம் இறைவன் யார்? எனக் காணுங்கள். அவர் எவ்வளவு நல்லவர்! எனக் கண்டுணருங்கள். அவர் யாரையும் வெறுத்து ஒதுக்கியவர் அல்ல. படி நிலை அமைப்புகளை உருவாக்கியவர் அல்ல. ஏற்றத் தாழ்வுகளை கொண்டாடியவர் அல்ல. சிலர் வாழ்வதற்கும் பலர் வீழ்வதற்கும் கற்றுத் தந்தவர் அல்ல, மாறாக இறைச்சமூகம் சமத்துவத்தினால் இணைந்த சமூகம் என்பதனை தொடக்கக் காலத் திருஅவை மூலம் அருமையாக கற்றுத் தந்தார். 
திப 4:34 இறைச் சொற்றொடரில் தொடக்கக் கால கிறிஸ்தவர்கள் அன்றாடம் வீடுகளில் குழுமி வந்தார்கள்; என்ன செய்தார்கள்? அவர்கள் இறை வார்த்தையை முதலில் வாசித்தார்கள். ஆண்டவர் இயேசு யார் என்பதைக் கற்றுக் கொண்டார்கள். அவர் என்ன இந்த உலகத்திற்கு தந்தார் என்கின்ற அன்பு செய்தியை எடுத்து சொன்னார்கள். ஒருவர் பிறரை விட உயர்ந்தவரல்ல நீங்கள் உயர்ந்தவராக நினைத்தால் பிறருக்குத் தொண்டராக மாறுங்கள் என்பதையெல்லாம் அவர்கள் கேட்டுணர்ந்தார்கள். தாங்கள் கண்ணால் காணாத இந்த இயேசுவை கண்டவர்கள் சொல்ல அவர்கள் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். 
எனவே இறைவார்த்தையை அவர்கள் கேட்டார்கள், கற்றறிந்தார்கள். இணைந்து வந்து அப்பத்தை அவர்கள் பிட்டு உண்டார்கள். சமமானவர்கள் நாம் என்பதை உணர்ந்தார்கள். ஒரே அப்பத்தில் அவர்கள் பங்கேற்றார்கள். இந்த இறைச் சமூகத்தில் எல்லாருமே அது ஆண் என்றாலும், பெண் என்றாலும் அவன் நிற வேறுபாடு இல்லாது, இன வேறுபாடு இல்லாது, மொழி வேறுபாடு இல்லாது, எங்கிருந்து வருகிறான் என்பது இல்லாது, அனைத்து மக்களும் இணைந்து உண்கின்ற சம பந்தியில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். நாமெல்லாம் இந்த இறைவனில், நம்முடைய மீட்பர் இயேசுவில், நாம் எல்லாம் ஒன்று என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். 
மூன்றாவதாக அவர்கள் என்ன செய்தார்கள் தங்கள் வடிவில் ஏழைகளாக இருந்தவர்களை அவர்கள் உரிமையோடு ஏற்றுக்கொண்டார்கள், முதன்மையான இடம் கொடுத்தார்கள். எனவே அவர்கள் நடுவே யாருமே தேவையில் இருக்கவில்லை என்பதை அவர்கள் கண்டுணர்ந்தார்கள். யாரும் ஏழ்மையில் இருந்தால் அவர்களுக்கு தங்களால் இயன்றதைச் செய்து அவர்கள் வாழ்வில் உயரச் செய்தார்கள். வாழவும் செய்தார்கள் இதுதான் ஓர் இறைச்சமூகம்! இதுதான் ஒரு கிறிஸ்தவ சமூகம்.
 எனவே தொய்வுற்று இருக்கிற மனிதர்களை, வலுவிழந்து இருக்கிற மனிதர்களை, கை துhக்கி விடுவதுமே தொடக்கம் முதல் இன்றுவரை நிகழ்ந்துக்கொண்டிருக்கிற கிறிஸ்தவ சமயத்தின் தனிப்பெரும் தொண்டாக, தன்னிகரற்ற பண்பாக இருக்கிறது. அவன் எச்சமயத்தைச் சார்ந்தவன் என்பது அல்ல; அவன் இறைவனுடைய மகன்-மகள் இறைவனுடைய பிள்ளை என்பதனால், எந்த நிறமோ, எந்த இனமோ, எந்த மொழியோ, எந்த மதமோ என்றாலும் கூட அனைவருக்கும் பணி செய்வதுதான் கிறிஸ்து நமக்கு கற்றுத் தந்த மேலான பாடம்; அரிச்சுவடி என்பதனை அவர்கள் தங்கள் வாழ்க்கையினால் எண்பித்தார்கள். 
அன்பு மக்களே! இன்று நாமும் சிந்தித்து பார்ப்போம். அந்த பெண்களைப் போல ஆண்டவர் இயேசுவுடைய இந்த உயிர்ப்பை கண்டுகொள்ள வேண்டுமென்றால் இந்த கல்லை யார் புரட்டுவார்? என்ற கேள்வி எழுப்பி நிற்பதற்கு பதிலாக தற்போது நம் முன்னே நிற்கின்ற அனைத்தையும் அகற்ற முன் வருவோம்.
 எந்தக் கல்லாக இருந்தாலும், ஆண்டவர் இயேசுவுடைய இந்த உயிர்ப்பினை நானும் நீங்களும் தரிசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் தடையாக இருக்கிறதோ அதனை புரட்டுவதற்கு நாம் முன் வருவோம். புரட்டுகின்ற பொழுது நாம் உயிர்ப்பின் மக்களாய் திகழ்வோம். மகிழ்ச்சி கைக்கூடும். அது ஒரு சிலருக்கு அல்ல அனைத்து மக்களும் இன்புற்று வாழ்கின்ற சுமூகமான ஒரு சமூகம் உருவாகும்; அங்கு தான் இயேசு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ‘எங்கே இருவர்,
மூவர், என் பெயரால் கூடியிருக்கிறீர்களோ அங்கே உங்கள் நடுவே நான் இருக்கிறேன்’ என்று ஆண்டவர் மரணத்தின் பிடியில் அல்ல மாறாக வாழ்வோரால் இன்றும் நம் நடுவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். 
எனவே அந்த இயேசுவின் உயிர்ப்பின் அனுபவத்தை பெற்ற மக்களாய் வாழ்வோம். அதனால் நாம் உயிர்ப்பின் மக்கள் என்பதை இந்த உலகத்திற்கு நம்முடைய பணியால், சாட்சியால் எடுத்துச் சொல்வோம். 
‘அல்லேலூயா’ என்ற புகழ் பாடலால் நம்முடைய இதயத்தை நிரப்புவோம்! இந்த மகிழ்வான பாடலை இச்சமூகத்திற்கும் இந்த உலகத்திற்கும் என்றும் நம்மிடமிருந்து சென்று கொண்டிருக்கின்ற இனிமையான அருமையான புகழ் கீதமாக இருக்கட்டும்.ஆமென் 

Comment