No icon

துறவற வாழ்வின் விவிலிய அடித்தளம் - 25.04.2021

துறவற வாழ்வின் விவிலிய அடித்தளம் 

அருள்முனைவர். மைக்கில் ராஜ்
புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி.
 

கிறிஸ்து தம் பணி வாழ்வின் காலத்தில் துறவற வாழ்வைத் தோற்றுவித்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் நேரடியாக இல்லையெனினும் சீடத்துவத்தை, அர்ப்பணம் நிறைந்த சீடர்களை அவர் தன் வார்த்தையாலும் வாழ்வாலும் உருவாக்க விரும்பினார் என்பதற்கு பல நற்செய்தி ஆதாரங்கள் உள்ளன. இயேசுவின் தொடக்ககால சீடர்கள் இயேசுவின் அழைப்பை ஏற்று அதற்கு தகுந்த பதில் மொழியை தங்கள் நம்பிக்கை வாழ்வின் மூலம் கொடுக்கத் தொடங்கினர். தொடக்ககாலத் திரு அவை தன் இயல்பிலும் பணியிலும் உண்மையின் அடையாளமாக திகழ அழைக்கப்பட்டது. நற்செய்திக்கு சான்று பகரவே திருஅவை தன் அழைப்பையும் பணிநிலையையும் பெற்றிருந்தது. இயேசுவை உலகுக்குக் கொடுப்பதே திருஅவையின் பணியும் இலக்குமாக அமைந்திருந்தது என்பதை திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துச்சொல்கிறது. இயேசுவை உறுதியோடும் உண்மையோடும் பின்பற்றிய சீடர்களே தொடக்ககாலத் திருஅவைச் சமூகத்தை உருவாக்கினர் (திப 2:42-47, 4:32-37) என்பதைக் காண முடிகிறது. தொடக்ககாலத் திருஅவை பகிரும் திருஅவையாக, ஏழை எளியோர் மீது அக்கறையும் பரிவும் காட்டும் திருஅவையாக செயல்பட்டது. சிறுசிறு குழுக்களாக ஒன்றுகூடி இறைவேண்டல், அன்புப் பகிர்வு, ஏழைகளுக்கு உதவுதல், கரிசனையோடு கூடிய குழுவாழ்வு என தொடக்ககாலத் திருஅவையின் வாழ்வு தொடர்ந்தது. 
தொழுகைக் கூடங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டபோது, யூதத் தலைமைச் சங்கத்தாலும் தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டபோது நம்பிக்கையாளர்களின் இல்லங்கள் ஒன்றுகூடும் மையங்களாகவும், இறைவேண்டல் செய்யும் ஆலயங்களாகவும் மாறின. இல்லத் திருஅவையாக தொடக்ககாலத் திருஅவை திகழ்ந்தது. வசதி படைத்தோர் தம் இல்லங்களில் எளியோரையும் ஏழைகளையும் வரவேற்று உபசரித்தனர். தங்குவதற்கும் இறைவேண்டல் செய்வதற்கும் இடம் தந்தனர். யூதர்களாலும் தொழுகைக் கூடங்களாலும், சொந்தக் குடும்பத்தினராலும் பல்வேறு நிராகரிப்புகளைச் சந்தித்த தொடக்ககாலத் திருஅவை, இல்லங்களில் ஒன்றுகூடி ஆதரவையும் அன்பையும் பகிர்ந்து கொண்டது. அதன் வெளிப்பாடாகவே உணவையும் உடைமைகளையும் பகிர்ந்து கொண்டனர் (மாற் 6:40, லூக் 9:14). 50 பேராக, 100 பேராக சிறுசிறு குழுக்களாக, இல்லத் திருஅவைகளாக செயல்பட்ட காலத்தில் அன்பும் கரிசனையும், பகிர்வும் பாசமும், தோழமையும் நல்லிணக்கமும் திருஅவையில் மிகுந்து வளர்ந்தது (2திமோ 3:17, எபே 4:12). தொடக்ககாலத் திருஅவையிலும் கைம்பெண்கள் ஒன்றுகூடி இறைவேண்டலிலும் நற்செயல்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினர்.
உலகமயமான திருஅவைக்கு மாற்றாக துறவு அருள்வாழ்வு
கி.பி. 312-313 ஆம் ஆண்டுகளில் உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மாறி அரசையும்  கிறிஸ்தவ அரசமைப்பாக மாற்றி அதிகாரம், ஆட்சி இவற்றில் திருஅவைத் தலைவர்களுக்கு இடமளித்தபோது, இல்லத் திருஅவைகள் சிதறி மிகப்பெரும் மாட மாளிகைக்குள் திருஅவை புகுந்தது. அன்பு, பகிர்வு, அக்கறை, கரிசனை சிறிது சிறிதாக குறைந்து ஆட்சி, அதிகாரம், நிலம், பணம், செல்வாக்கு, தனி உடைமை, உலகப்போக்கு என கிறித்தவம் தன் இயல்பை இழக்கத் தொடங்கியது. மிகக் குறிப்பாக கி.பி. 312 ஆம் ஆண்டு உரோமைப் பேரரசன் கான்ஸ்டன்டைன் வெளியிட்ட ‘மிலான் சாசனம்’ திருஅவையின் வாழ்வை ஆடம்பர வாழ்வுக்கு கொண்டுப்போன காலத்தில் குழுச்செயல், குழும இல்லத் திருஅவைகள் சிதறின. முறையான தயாரிப்பு, தகுந்த மனநிலை, ஈடுபாடு இல்லாமல் பலர் கிறித்தவர்களாக ஆதாயத்துக்காகத் தங்களை இணைத்துக்கொண்டபோது, திருஅவை எண்ணிக்கையில் அதிகரித்தது. தரமற்ற வாழ்வும், கும்பலான கூட்ட மனப்பான்மையும் அதிகரித்தது. வியாபார போக்கும், பண ஆதாயமும் திருஅவையின் வழிபாடு மற்றும் சடங்குகளில் தலைதூக்கியது. அன்பும் ஆதரவும் மறைந்து அடக்குமுறையும் அதிகாரமும் தலையெடுத்தது. 
இதன் விளைவாக ஏழைகள் புறக்கணிக்கப்பட்டனர்.  எளியோர் கண்டு கொள்ளப்படவில்லை. ஆயர்களும் குருக்களும் நில பிரபுக்களாக மாறினர். ஆட்சியும் அதிகாரமும் அவர்களின் கண்களைக் குருடாக்கியது. நற்செய்தி விழுமியங்கள் விலைபேசப்பட்டு வியாபாரமயமாகிப் போயின. கோவில்கள் சந்தைகளாக மாறிப்போயின. அறநெறி வாழ்வும் வீழ்ந்தது. தொடக்ககாலத் திருஅவையில் நல்லொழுக்கமும், அடுத்தவரைப் பற்றி அறிந்துவைத்திருந்ததும், அக்கறையோடு நடந்து கொண்டவிதமும் மறைந்து சகோதர சகோதரிகள் மத்தியில் நிலவிய உண்மையான உறவு (காண். 1கொரி 16:20, 2கொரி 13:12, 1தெச 5:26, 1பேது 5:14) உடைந்து போனது.
வரலாற்றின் தொடக்ககாலத்திலேயே இந்த உலகமயமான திருஅவைக்கு மாற்றாக எழுந்தது தான் துறவு அருள்வாழ்வு. துறவு ஆன்மிக நெறி. உலகப்போக்கை எதிர்த்து உண்மை வாழ்வு வாழ வேண்டுமென ஒரு சிறு இயக்கம் எழுந்தது. நற்செய்தி மதிப்பீட்டுச் சமூகமாக அந்த சிறிய குழு உருவெடுத்தது. தங்களுக்கென நற்செய்தி மதிப்பீட்டின் அடிப்படையிலான ஒழுங்குகளை அமைத்துக்கொண்டு இறைவேண்டல், எளிமை வாழ்வு, உண்மையான சான்று பகர்தல் என கான்ஸ்டன்டைன் அரசனின் உலகமயமாக்கல் திருஅவைக்கு எதிராக ஓர் இயக்கமாக சிலர் எழுந்தனர். இதுவே துறவு இயக்கத்தின் தொடக்கமானது. 
உலகமயமாக்கல் திருஅவைக்கு எதிராக ஓர் இயக்கமாக துறவு வாழ்வு
திருஅவையின் தொடக்ககால நற்செய்தி மதிப்பீடுகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கி செல்வம், அதிகாரம், நிலம், பணம் என உலகபோக்கும் சிற்றின்ப ஆசைகளும் குழுக்களாக கூடிவந்த நம்பிக்கையாளர்களை அசைத்துப் பார்த்து நற்செய்தி வாழ்வை ஆட்டம் காணத் தொடங்கிய நேரத்தில்தான் உலகத்தைவிட்டு ஒதுங்கி வாழ்வதே தீர்வு என ஒரு சிலர் பாலைவனத்தை, காடுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். இதன் விளைவாகவே பாலைவனத் துறவு வாழ்வு திருஅவை வரலாற்றிலே உதயமானது. உலகில் துறவற வாழ்வை வாழ இயலாத சூழ்நிலையில்தான் தலைமை வாழ்வுக்காய், இறைவேண்டல் வாழ்வுக்காய் பாலைவனங்களை, காடுகளை தேர்வு செய்து அமைதி, தனிமை இதன் காரணமாக இப்படிப்பட்ட இடங்களில் போய் வாழத் தொடங்கினர். துறவு மடங்கள், சன்னியாசக் கூடங்கள், அடைபட்ட இல்லங்கள் மற்றும் துறவிகளின் மடங்கள் என இந்த பாலைவனத் துறவு இல்லங்கள் வரலாற்றில் உருவெடுத்தன.  இதுவே தொடக்ககாலத்தில் துறவு வாழ்வின் தொடக்க நிலையாக மலர்ந்தது. 
தங்களையும் உலகையும் புனிதப்படுத்தும் நோக்கத்துடன்தான் இறைவேண்டல் மற்றும் எளிமை வாழ்வை மையப்படுத்தி தொடக்கக்கால துறவு நிலைகள் உருவாயின. இயேசுவின் போதனையான இறையாட்சிக்குத் தங்களையே அர்ப்பணித்து, இயேசுவின் நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்வாக்க உலகத்தில் வாழ்தல் தடையாக மாறிய காலத்தில்தான் ஆரவாரமற்ற, கூச்சலற்ற, சுகபோகங்களற்ற வாழ்வுக்காய் பாலைவனங்களைத் தொடக்ககாலத் துறவியர்கள் தேடினர். உலக ஆசைகள் மற்றும் திருஅவையின் பிறழ்வுகளை எதிர்த்து பற்றற்ற வாழ்வையும் பகிர்ந்து வாழும் வாழ்வையும் செயல்படுத்த எழும்பிய அமைதிப்புரட்சியே திருஅவையின் தொடக்ககால துறவு வாழ்வின் அடிப்படை என்பது உண்மையே.
கூட்டு வாழ்வும், கரிசனைச் சமூகமும் உயிர் பெற்ற துறவு வாழ்வு
மிலான் சாசனத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் வார்த்தையில் மட்டுமல்ல, அதற்கு மாற்று வாழ்வை முன்மொழிந்த தொடக்கநிலை துறவிதான் புனித வனத்து அந்தோணியார்.  புனித வனத்து அந்தோணியார் நற்செய்தி அழைப்பை ஏற்று அதற்குப் பதில் கொடுத்தார். உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். கடுமையான தவவாழ்வைப் பாலைவனத்தில் வாழத் தொடங்கினார். தனிமையிலும் இறைவேண்டலிலும் தன் துறவு வாழ்வை செலவிட்டார். அவரைப் போல பிறரும் தவவாழ்வை - துறவு வாழ்வை மேற்கொள்ளத் தூண்டுதல் தந்தார். 
வனத்து புனித அந்தோணியாரின் சம காலத்தைச் சேர்ந்தவர் பக்கோமியஸ் (கி.பி. 313-400). புனித வனத்து அந்தோணியாரின் சமகாலத்தில் வாழ்ந்த பக்கோமியஸ் கிறித்தவத்திற்கு மனம் திரும்பினார். இவர்தான் முதன்முதலாக ஆண்-பெண் துறவியரின் இணைந்த கூட்டு துறவற வாழ்வை அறிமுகப்படுத்தினார். எகிப்திய பாலைவனங்களில் ஆண் - பெண் துறவு மடங்கள், சன்னியாச இல்லங்கள் உருவாக்கப்பட்டன. எருசலேமில் நிகழ்ந்த தொடக்ககால இல்லத் திருஅவைகள் போல, கூட்டு வாழ்வை மீண்டும் துறவிகளுக்காக ஏற்படுத்தினார். தங்கள் உடைமைகளையும் வாழ்வாதாரங்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், அனைவரோடும் இணைந்து குருவாக மன்றாடவும் இந்தக் கூட்டு வாழ்வு துறவற வாழ்வாக வரம் பெற்றது. எருசலேமில் திருஅவையின் தொடக்ககாலத்தில் வாழப்பட்ட கூட்டு வாழ்வும் பகிர்வுச் செயல்பாடும் மீண்டும் தழைத்தோங்கியது.
கி.பி. 320 இல் பக்கோமியஸ் தொடங்கிய கூட்டு வாழ்வு கிறித்தவ நற்செய்தி மதிப்பீடுகளுக்கு வாழ்வில் எளிமை, தன்னிலை மறுப்பு, இணைந்து இறைவேண்டல் என ஆண்கள் பெண்கள் இணைந்த குழும வாழ்வாக இந்த அருள்நிலை துறவு வாழ்வுத் தொடங்கியது. காலம் செல்லச் செல்ல சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. திருஅவையின் அடிப்படை இயல்பான கூட்டு வாழ்வும், கரிசனைச் சமூகமும் மீண்டும் இதனால் உயிர் பெற்றன. பாலைவனத்தில், காடுகளில், கிராமங்களில், வயல் வெளிகளில் தொடங்கிய இந்தத் துறவற இயக்கம் பெருநகரங்களில் வியாபாரமயமாகிப்போன திருஅவை அமைப்புகளை, அதன் இழிநிலை வாழ்வைக் கடுமையான கேள்விக்குட்படுத்தியது. துறவிகள் ஆயுதமேந்தாமல், அதிகாரத்தால் புரட்சி செய்யாமல், தவத்தாலும், இழப்பாலும், உறுதியான உள்ளத்தாலும், நற்செய்தி வாழ்வாலும் இந்த போராட்டத்தை நடத்தி மீண்டும் திருஅவையில் புதுப்பித்தலைக் கொணர்ந்தனர். அதுவே துறவு வாழ்வின் தொடக்கம். 
தொடக்ககால இல்லத் திருஅவையின் வடிவமே துறவற வாழ்வின் அடித்தளம்
தொடக்ககாலத்தின் பாலைவன துறவு வாழ்வு நிலை தொடங்கி இன்றைய துறவு வாழ்வின் நிலைவரை, கிறித்தவ ஆண்களும் பெண்களும் சிறு குழுக்களாகக் கூடி, வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் வாழ்வை அர்ப்பண வாழ்வாக மாற்றி, அன்பு மற்றும் பணி இவற்றை தங்கள் வார்த்தைப்பாடுகளாக, உறுதிப்பாடுகளாக, நிலைப்பாடுகளாக மாற்றி நற்செய்திக்கு மிக ஆழமான அதேவேளையில் அர்த்தமுள்ள சான்று பகர்தலை நிகழ்த்தி வருகின்றனர். உலகப்போக்கின்படி வாழ்ந்த திருஅவைக்கு எதிர் சக்தியாக தங்கள் வாழ்வாலும் வார்த்தைகளாலும் இவர்கள் சான்று பகரத் தொடங்கினர். தொடக்ககாலத் திருஅவையின் இல்லத் திருஅவை வடிவம் இப்போது துறவிகளின் இணைந்த வாழ்வுநிலை வடிவத்தைப் பெறத்தொடங்கியது. வனத்திலும் பாலைவனத்திலும் கடுமையான தவவாழ்வையும் கூட்டு வாழ்வையும் தங்கள் ஆன்மீகமாக செயல்படுத்த இந்த சிறு குழுவினர் தொடங்கிய இயக்கமே துறவு வாழ்வுக்கான வித்தாக அமைந்தது. இதுவே காலப்போக்கில் மறைந்து போன இல்லத் திருஅவை மீண்டும் உயிர் பெற்று எழ உதவியது.
கிறிஸ்து இயேசுவின் வாழ்வும் சீடத்துவ உருவாக்கமுமே துறவற வாழ்வுக்கு அடிப்படையுமாகும். மரியா தொடங்கி, திருத்தூதர்கள் மற்றும் தொடக்ககால நம்பிக்கையாளர்களின் வாழ்வும் சாட்சியமும் துறவு வாழ்வுக்கு முன்னோட்டமாக மாறியுள்ளது. துறவற வாழ்வின் அடிநாதமான தியான வாழ்வு மற்றும் பின்னால் உருவெடுத்த பணிவாழ்வு இரண்டுக்கும் இயேசுவின் இறைவேண்டல் வாழ்வும், மக்கள் பணிவாழ்வுமே அடிப்படையாக அமைகின்றன. தியான வாழ்வும், துறவியரின் பணிவாழ்வும் தொடக்ககாலத்திலிருந்து இயேசுவின் நற்செய்தி அறிவுரைகளின் அடிப்படையிலேயே துறவியர்களின் வாழ்வாக, பயணமாக, பாதையாக கட்டியெழுப்பப்பட்டது. 
கி.பி. 1209 இல் புனித பிரான்சிஸ் அசிசியில் தன் துறவு சபையை ஏற்படுத்தினார். அன்று தொடங்கி இன்று வரை பிரான்சிஸின் ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு ஆண் பெண் துறவியர்கள் சபைகளாக, குருக்களாக, துறவு அமைப்புகளாக வாழத் தொடங்கியுள்ளனர். பிரான்சிஸ்கன் ஆன்மீக அடிப்படையில் கல்விப்பணி, ஆன்மீகப்பணி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் ஆன்மீக நிலையில் சாதாரண நிலை தொடங்கி கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், சிலுவைப் பாதை செபித்தல் போன்றவையும் உள்ளடங்கும். “நற்செய்தியை எப்பொழுதும் அறிவி; தேவைப்படும்போது வார்த்தையால் அறிவி” என்ற பிரான்சிஸின் ஆன்மீக அனுபவம் மிக உயர்ந்தது. இந்த அமைதி புரட்சியே துறவற வாழ்வின் அடித்தளமாயிற்று. 
வாழ்நாள் முழுவதும் இயேசுவை பின்பற்ற
தம்மையே ஆண்டவருக்கு அர்ப்பணிக்க முன்வருவோர் கன்னியானவரும் ஏழையானவருமான கிறிஸ்துவை (மத் 8:20, லூக் 9:58) தங்கள் ஏழ்மை வாழ்வால் பின்பற்ற முன் வருகின்றனர். சிலுவை சாவையே ஏற்கும் அளவுக்கு தந்தையின் மீட்புத்திட்டத்திற்குக் கீழ்ப்படிந்த கிறிஸ்துவை (பிலி 2:8) தங்கள் கீழ்ப்படிதல் வாழ்வின் மாதிரியாகக் கொள்கின்றனர். தூய ஆவியார் உள்ளங்களில் பொழியும் அன்பால் இயக்கப்பட்டு (உரோ 5:5) கிறிஸ்துவுக்காகவும் உலகின் திருஉடலாகிய திருஅவைக்காகவும் வாழமுன் வருகின்றனர் (கொலோ 1:24). இவ்வாறு துறவற வாழ்வு (அர்ப்பண வாழ்வு) என்பது தங்கள் வாழ்வு முழுவதையும் இறைவனுக்கு மனமுவந்து அர்ப்பணிப்பதே ஆகும். கடவுளுக்குத் தங்களை அர்ப்பணிக்கும்போது, திருஅவைக்கும் தங்களை அர்ப்பணிக்கின்றனர் என்பதே உண்மை. இதன் அடிப்படையிலேயே உலகத்தில் அனைத்தையும் இழந்து (மாற் 10:28) கிறிஸ்துவை வாழ்வாக ஏற்றுக்கொண்டு (லூக் 10:42) அவரது வார்த்தைக்குச் செவிமடுத்து (லூக் 10:39) உலகத்தைப் பின்னுக்குத் தள்ளி, கிறிஸ்துவின் மேல் அக்கறை கொண்டு (1கொரி 7:32) வாழ்நாள் முழுவதும் இயேசுவை பின்பற்ற (மத் 19:21) துறவற வாழ்வு உண்மையான அழைப்பினை விடுக்கிறது. 
துறவியரின் வாழ்வு முழுவதும் இறைவனுக்கும் உலகின் திருஅவைக்கும் அதன்மூலம் அவரின் மக்களுக்கும் உண்மையான பணி செய்வதே தலையான நோக்கமாக அமைகிறது. அதன் அடிப்படையிலேயே கற்பு வாழ்வு என்பது விண்ணரசின் பொருட்டு (மத் 19:12) மனமுவந்து, தாமாக முன்வந்து அர்ப்பணித்தலே உண்மையான கற்பு நிலையாக பொருள் கொள்ளப்படுகிறது (1கொரி 7:32-35).  விண்ணக நன்மைகளின் தனிப்பட்ட அடையாளமே கற்புநெறி என்பதுதான் இறைவார்த்தை சொல்லும் பாடம். கடவுளுக்கு ழுழுமையான அர்ப்பணத்தோடும், மானிடருக்கு தூய்மையான பிளவுபடா உள்ளத்தோடும் பணியாற்றவே கற்புநிலை துறவுவாழ்வை நேரிய பாதையில் கொண்டு செலுத்துகிறது. 
இதன் அடுத்த நற்செய்தி அறிவுரையாக அமைவதுதான் ஏழ்மை. இது கட்டாயத்தால் ஏற்கப்படும் ஏழ்மை என்பதை விட மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வாழ்வு நிலையாகும். “அவர் செல்வராயிருந்தும் நமக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நாம் செல்வராகும்படி இவ்வாறு செய்தார்” (2கொரி 8:9, மத் 8:20). மண்ணுலகில் இழப்புகளை ஏற்க முன்வருவோர் விண்ணகத்தில் தமக்கென செல்வம் சேர்ப்போர் ஆகின்றனர் (மத் 6:20) உலக கவலைகளை உதறிவிட்டு கடவுளின் பராமரிப்புக்கும் இறைத்திட்டத்திற்கும் தங்களையே கையளிப்பது தான் (மத் 6:25) உண்மையான ஏழ்மை வாழ்வாகும். ஏழ்மை வாழ்வு என்பது அதன் உண்மையான நிலையில் எளியோரின் தேவைகளைச் சந்திப்பதும், உதவும் மனதோடு பிறரின் நலன்களை முன்னிறுத்துவதுமாகும். பிறர் தேவைகளை தீர்ப்பதும் வறியோருக்கு உதவ முன் வருவதுமே உண்மையான சமய வாழ்வு என இறைவார்த்தை சான்று பகர்கிறது (மத் 19:21, 25:34-36, யாக் 2:15-16,  1யோவா 3:17). 
மூன்றாவது நற்செய்தி அறிவுரையான கீழ்ப்படிதல் என்பது கடவுளுக்கு தங்களையே முழுமையாக பலியாக்கும் துறவியரின் வாழ்வை வெளிப்படுத்துகிறது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற இயேசு முன் வந்தார் (யோவா 4:34, 5:30, எபி 10:7, திபா 39:9). உண்மையின் வாழ்வை ஏற்ற கிறிஸ்துவை (பிலி  2:7), துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்ட கிறிஸ்துவை (எபி 5:8) நம் வாழ்வின் உயிர் நாடியாக மாற்றிக்கொள்வதே கீழ்ப்படிதல் வாழ்வு. இந்த கீழ்ப்படிதல் அனைவரின் மீட்புக்காகத் தன்னையே இழந்த கிறிஸ்துவைப் பின்பற்ற (மத் 20:28, யோவா 10:14-18) அழைப்புத் தருகிறது. கீழ்ப்படிதல் இழப்பு அல்ல; ஆனால் அருள்வாழ்வின் முதிர்ச்சிக்கு (எபே 4:13) துறவியரை அழைத்துச் செல்கிறது. 
துறவு வாழ்வை புதுப்பித்தல்  
மேற்கூறிய நற்செய்தி அறிவுரைகளின் படி, தனிவாழ்வின் உண்மையான அர்ப்பணத்தோடு இணைந்து குழுவாழ்வு வாழ முன்வருவதுதான் உண்மையான அர்ப்பண வாழ்வு (திப 2:42, 4:32). சகோதர சகோதரிகளுக்கு குழும வாழ்வில் மதிப்பளித்து (உரோ 12:10) ஒருவர் மற்றவரின் சுமைகளைத் தாங்கிக்கொள்வதே (கலா 6:2) உண்மையான கூட்டு வாழ்வு. இதயத்தில் அன்பு கொண்டு (உரோ 5:5) இறைவனின் உடனிருப்பை வெளிப்படுத்தும் அடையாளமே கூட்டு வாழ்வு (மத் 18:20). கூட்டு வாழ்வின் அடிப்படை அன்பு வாழ்வு என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் (உரோ 13:10). அன்பே எல்லா நற்பண்புகளுக்கும் நிறைவு (கொலோ 3: 14). இதன் மூலமே கிறிஸ்துவின் சகோதர சகோதரிகளாக (யோவா 13:35, 17:21) வாழ்வதன் வெளிப்பாடாக கூட்டு வாழ்வு அமைகிறது. 
கி.பி. 1962 - 65 வரையிலான இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திருஅவையின் வாழ்வைப் புதுப்பித்த வேளையில் துறவு வாழ்வையும், அர்ப்பண வாழ்வையும் ஆழமாய்ப் புதுப்பிக்க அழைப்புத் தந்தது. அகில உலக ஆயர்களின் கூடுகை இந்தப் புதுப்பித்தலை முன்மொழிந்தது. துறவு சபைகள் தங்கள் வேர்களுக்குத் திரும்பிச் செல்ல இந்தச் சங்கம் அழைத்தது. தொடக்க ஒளிக்கு திரும்பிச் செல்லவும் அதிலிருந்து இன்றைய உலகின் தேவைகளுக்கு பதில் தரவும் புதுப்பித்தலை ஏற்படுத்தவும் அழைத்தது. கடவுளின் அழைப்புக்குப் பதில் கொடுக்கும் விதத்தில் துறவு வாழ்வின் இன்றைய பதிலிறுப்பு காலத்திற்குகந்த பணியாகச் செய்யப்படுகிறது. “துறவு வாழ்வில் தங்களின் தனிப்பட்ட மாதிரிகையான வாழ்வைவிட வேறு சிறந்த வாழ்வு நிலை வேறொன்றுமில்லை. இதுவே அவர்களின் துறவு சபையின் வளர்ச்சிக்கும் புதிய துறவுகளின்  உறவுக்கும் வழி செய்யும்” (ஞநசகநஉவயந ஊயசவையவளை - துறவு வாழ்வை புதுப்பித்தல்  பற்றிய ஏடு). ‘துறவற வாழ்வை புதுப்பித்தல்’ என்ற இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஏடான (ஞநசகநஉவயந ஊயசவையவளை - ஞஊ) துறவு வாழ்வு இறைப்பணி என்றும் கிறிஸ்துவை பின்பற்றுதல் என்றும் வரையறையைத் தருகிறது. 
காலத்தின் தேவைகளுக்கேற்ப, மக்களின் ஆன்மீக ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பதில் கொடுக்க புதிய புதிய துறவு சபைகளும், இயக்கங்களும், அமைப்புகளும் தோன்றியுள்ளன. பிறருக்கு உதவுதல் தொடக்கத் திருஅவையின் காலத்தில் செய்யப்பட்டதாக திருத்தூதர் பணிகள் நூலும், பவுலின் மடல்களும் சான்று பகர்கின்றன. பிறரன்புப் பணிகள், ஏழைகளின் பசி தீர்க்கும் பணிகள் குடும்ப நிலையில், இல்லற வாழ்வு நிலையில், தனியறம் வாழ்வோரும் தங்களை இணைத்துக்கொண்டனர். ஏழைகளுக்கான பணி மூன்றாம் நிலை துறவு வாழ்வாக, பொதுநிலை துறவு அமைப்பாக, பிறருக்கு உதவுதல் உலகுசார் பணிநிலையாக இன்றுவரை பல துறவற சபைகளால் மூன்றாம் சபை இயக்கங்களாக தொடர்ந்து செய்யப்படுகின்றன. 
நம்பிக்கையாளரின் கிறித்தவ வாழ்வே பிற்காலத்தில் துறவு வாழ்வாக வடிவமைத்தது என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இயேசுவின் அழைப்புக்கு செவிமடுப்பதும் அழைப்புக்கு பதில் கொடுப்பதும் பணிநிலையைத் தேர்ந்தெடுப்பதும் துறவு வாழ்வு மற்றும் அர்ப்பண வாழ்வுக்கு அடிப்படையாக அமைகிறது எனலாம். நற்செய்தி எடுத்துரைக்கும் முறையில் “கிறிஸ்துவைப் பின்பற்றுவதே துறவு வாழ்வின் அடிப்படை அளவுகோல்” (துறவற வாழ்வு எண். 2) துறவற வாழ்வுக்கு ஊற்றும் ஆதாரமும் கிறிஸ்துவின் வாழ்வும் அவரின் படிப்பினைகளுமே என்பது உண்மையெனில், அதுவே துறவு வாழ்வின் முன்னோடிகள், சபை ஆதினத் தலைவர்கள், துறவு மடங்களின் மடாதிபதிகள், துறவு சபைகளின் நிறுவனர்கள் இவர்களின் தலையான நோக்கமுமாகும். 
இன்று துறவற வாழ்வுக்கு அழைப்பும் பதிலிறுப்பும்
இதுவரை 34 துறவற சபையினர் திருத்தந்தையராகப் பணியாற்றியுள்ளனர். கி.பி. 2013 - 2021 வரையிலான இக்காலத்தில் துறவியான திருத்தந்தை பிரான்சிஸ் தன் பணிக்காலத்தில் மிகச்சிறப்பான அழைப்பையும் புதுப்பித்தலுக்கான தேவையையும் துறவிகளுக்கு முன்மொழிகின்றார். 2015ஆம் ஆண்டு அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் துறவற ஆண்டாகத் திருஅவையால் சிறப்பிக்கப்பட்ட போது துறவியரின் ஆழமான அர்ப்பணம் இன்று மிக அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். 2018ஆம் ஆண்டு இளையோருக்கான அகில உலக ஆயர் மாமன்றப் பேரவையைக் கூட்டி சிந்தித்த போதும் அவர்களின் அழைப்பும் பதிலிறுப்பும் துறவற வாழ்வுக்கு தேர்ந்து தெளிதலை உள்ளடக்க வேண்டும் என முன்மொழிந்தார். உலகின் மீட்புக்காகவும் திருஅவையின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பண வாழ்வு அவசியமாகிறது என்பதையும் இது விளக்குகிறது. இதனை இன்றும் சரியாய் புரிந்து கொள்ள இறைவார்த்தையின் ஒளியும் இயேசுவின் போதனையும் நமக்கு உதவி செய்ய இயலும். 

Comment