No icon

பொதுக் குருத்துவத்திற்கு அழைக்கப்படும் பொதுநிலையினர் - 25.04.2021

பொதுக் குருத்துவத்திற்கு அழைக்கப்படும் பொதுநிலையினர்

அருள்பணி. சு. லூர்துசாமி, செயலர், தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு, திருச்சி.

தொடக்ககால திருஅவை பொதுநிலையினரின்  மையத் திருஅவையாக இருந்தது. (திப 4:32-35) இல் கூறுவது போல “நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது. வல்லமையோடு சான்று பகர்ந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாக பெற்றிருந்தனர்”. பொதுநிலையினர் இறைஅழைத்தல் ஏற்று இறையாட்சி வளர்ச்சிக்காக அர்ப்பணத்தோடு அருள்பணி ஆற்றிவந்தனர். இன்றும் இறைபணியை சிறப்பாக ஆற்றி வருகின்றனர்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-65) பொதுநிலையினர் பொற்காலத்தை மீண்டும் தொடங்கி வைத்தது. 1983-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய திருஅவை சட்டம் சங்கப்பார்வையில் பொதுக்குருத்துவத்திற்கான அழைப்பு மற்றும் பணிகளை உறுதி செய்கிறது.
பொதுநிலையினர் இயல்பு:
இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவை வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாகும். திருஅவையின் இயல்பையும் அமைப்பையும் மாற்றியமைத்த மாபெரும் நிகழ்வு. திருமுழுக்குப் பெற்ற அனைத்து இறைமக்களும் கிறிஸ்துவின் முப்பணிகளிலும் பங்குகொள்கின்றனர். “இறைமக்களைப் பற்றிக் கூறப்பட்டவை அனைத்தும் பொதுநிலையினர், துறவறத்தார், அனைவருக்கும் பொதுவானவையே” என்று (திருஅவை எண். 30) இறைமக்களின் பொதுப்பண்பை வெளிப்படுத்துகிறது. 
“உலகைச் சார்ந்திருக்கும் பண்பு பொதுநிலையினருக்கு உரியதும், தனிப்பட்ட விதத்தில் அவர்களை சார்ந்ததும் ஆகும். உலகுசார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு உழைக்குங்கால், அவற்றைக் இறைவனின் திட்டப்படி நெறிப்படுத்துவதின் மூலம், இறைவனின் ஆட்சியை அமைக்கத் தேடுவது, தங்களின் தனிப்பட்ட அழைப்பால் பொதுநிலையினரைச் சார்ந்தது” (திருஅவை எண். 31) என்று பொதுநிலையினர் இறையாட்சியை இம்மண்ணில் வளர்ப்பது தனிப்பட்ட அழைப்பு என்பதை இரண்டாம் வத்திக்கான் சங்கம் உறுதி செய்கிறது. 
மேலும் “திருமேய்ப்பர்கள் திருஅவையில் பொதுநிலையினர் கொண்டுள்ள மேன்மையையும், பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை மேம்படச் செய்யவேண்டும். பொதுநிலையினரின் முன்மதியுள்ள அறிவுரையை விருப்புடன் அவர்கள் பயன்படுத்துவார்களாக. திருஅவையின் பணிப்பொறுப்புகளை அவர்களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து, அவர்கள் சுதந்திரத்தோடு செயல்புரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்” (திருஅவை எண். 37) என்று முன்மொழிவதன் வாயிலாக பொதுநிலையினரின் அழைப்பை திருஆட்சியாளர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறது.
1983-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருஅவைச் சட்டம் பொதுநிலையினருக்கு பல்வேறு உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது. திருஅவைச் சட்டம் 208 முதல் 230 வரையுள்ள அவற்றைப் பொதுநிலையினரின் "பேருரிமைப் பத்திரம்" (ஆயபயே ஊயசவய) என்றே அழைக்கலாம். திருஅவையில் இறைமக்களின் உரிமைகள், அழைப்பு, கடமைகள் போன்றவைகளை தெளிவாக திருஅவைச் சட்டங்கள் எடுத்துரைக்கிறது. பொதுநிலையினர் திருஅவையிலும் உலகிலும் தலைமை ஏற்க அழைக்கப்படுகின்றனர்.
பொதுநிலையினரின் பண்புகள்:
1917-ம் ஆண்டின் திருஅவையின் சட்டதிரட்டு பொதுநிலையினரைப்பற்றி இரண்டு இடங்களில் மட்டும்தான் கூறுகிறது. அவை என்னவென்றால் “பொதுநிலையினர் குருக்களிடமிருந்து திருஅவையின் ஆன்மீக நலன்களையும் மீட்புக்கு தேவையான உதவிகளையும் பெற்றுக்கொள்ள உரிமை உண்டு” (தி.சட்டம் 682). இந்த சட்டம் சரியானதாக தென்படவில்லை. ஏனென்றால் திருஅவையின் ஆன்மீக நலன்களை பெறுவது எல்லா இறைமக்களின் உரிமையாகும். இரண்டாவதாக “பொதுநிலையினர் குருகுலத்தோரின் உடைகளை அணிந்து கொள்ளகூடாது” (தி.ச. 683). இந்த சட்டம் தெளிவான கருத்துக்களை வழங்குவதுபோல் தெரியவில்லை. மேலும் திருப்பணியாளர் மட்டும்தான் திருஅவையின் பணிப் பொறுப்பை மேற்கொள்ளவும் மற்றும் ஆளும் அதிகாரத்தில் பங்கேற்கவும் முடியும் (தி.ச. 118). மறைமாவட்ட தொகுப்பின்படி பொதுநிலையினர் திருஅவையின் பணிப் பொறுப்பிலிருந்தும் ஆளும் அதிகாரத்திலிருந்தும் முற்றிலுமாக விளக்கி வைக்கப்பட்டிருந்தனர். திருப்பணியாளர் ஒரு முனையிலிருந்து தொடுக்க பொதுநிலையினர் மறுமுனையில் பெறுகின்றவர்களாக செயல்பட்டனர்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் பொதுநிலையினரின் இயல்புகளையும் அவர்களது பணிகளையும் தெளிவுப்படுத்தியது. பின்னணியிலிருந்த பொதுநிலையினர் முன்னணிக்கு கொண்டு வந்து அவர்களது உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுத்தது. திருச்சங்கத்தின் பார்வையில் “பொதுநிலையினர்” என்ற சொல் அருள்பணியாளர் மற்றும் திருஅவையின் துறவற நிலையினர் நீங்கலாக ஏனைய கிறிஸ்தவ விசுவாசிகள் எல்லாரையும் குறிப்பிடுகிறது. இவர்கள் திருமுழுக்கு மூலம் கிறிஸ்துவோடு ஓருடலாகப் பெற்று இறைமக்கள் உருபெறுகின்றனர்” (தி.ச. 31). 1983 ஆம் ஆண்டில் வெளியிட்ட திருஅவை சட்ட தொகுப்பு திருஅவையின் முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரின் பங்கினை விவரிக்கின்றது. 1987-ல் நடந்த “ஆயர் பேரவையும் திருஅவையிலும் உலகிலும் பொதுநிலையினரின் அழைப்பும் பணியும் என்ற தலைப்பினை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
முப்பெரும் பணிகளுக்கு அழைப்பு:
இயேசு கிறிஸ்து குருவாக இருந்து மக்களை புனிதப்படுத்துகிறார். ஆசிரியராக இருந்து மக்களுக்கு போதிக்கிறார். அரசராக இருந்து மக்களை ஆளுகின்றார். இம்முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரும் தங்களுக்கு உரித்தான வகையில் பங்கு பெறுகின்றனர். இதனை தான் திருச்சங்கமும் “கிறிஸ்துவின் குருத்துவ இறைவாக்கு உரைக்கும் அரச அலுவல் என கூறுகின்றது. 1983 ஆம் ஆண்டின் புதிய சட்ட தொகுப்பில் இம்முப்பெரும் பணிகளில் பொதுநிலையினரின் புனிதப்படுத்தும் பணி, போதிக்கும் பணி, மற்றும் ஆளுகை பணி என்று மூன்று பணிகளையும் ஆற்றுவதற்கு அழைக்கப்படுகின்றனர் என்று உறுதி செய்கிறது.
1. பொதுநிலையினரின் பணி - II வத். திருஅவை: 34
திருமுழுக்கால் பெற்ற புதுவாழ்வினால் கிறிஸ்தவ விசுவாசிகள் இப்புனிதப்படும் பணியில் தங்கள் பங்கை பெறுகின்றனர். கிறிஸ்துவின் வாழ்வில், மணவாழ்வில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாகவும், தங்கள் பிள்ளைகளின் ஞான கல்விக்கு ஏற்பாடு செய்வதன் மூலமாகவும், எங்கும் தூய்மையாக செயல்பட்டு பொதுநிலையினர் உலகையே கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர். பொதுநிலையினர் புனிதப்படுத்தும் பணியில் பங்கு கொள்வதை திருஅவைச் சட்டங்கள் உறுதிசெய்கிறது.
1.1. அருளடையாளங்களை வழங்குதல் - தி.ச 1112
1.2. வாசகர் பணி, பீடத்துணைவர் பணி - தி.ச 230
1.3. அருளடையாளங்களை பெற தயாரிக்கும் பணி - தி.ச 843
2. நற்செய்தி அறிவிக்கும் பணி –- II வத். திருஅவை: 35
கிறிஸ்து இறைவாக்கு உரைக்கும் அலுவலை தொடர்ந்து ஆற்றுகிறார். அவர் தம்முடைய பெயராலும் அதிகாரத்தாலும் கற்பிக்கும் திருஅவை ஆட்சியாளர் மூலம் மட்டுமல்ல பொதுநிலையினர் வழியாகவும் இவ்வலுவலை ஆற்றி வருகிறார். வாழ்வென்னும் சான்றாலும் போதனையாலும் கிறிஸ்துவை பிறருக்கு எடுத்துரைக்கும்போது நற்செய்தி அறிவிப்புப்பணி தனிச்சிறப்பு பெறும். அவர்களும் தமக்கே உரிய அழைத்தலுக்கு ஏற்ப வாழ்கின்றனர். பொதுநிலையினர் இறைவாக்குப் பணியை ஆற்றும் உரிமைகளை திருஅவை சட்டம் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
2.1. போதனைப் பணி - தி.சட்டம் 766
2.2. மறைக்கல்விப் பணி - தி.சட்டம் 776
2.3. மறைத்தூதுப் பணி - தி.சட்டம் 785
2.4. இறையியல் பயில வாய்ப்பு - தி.சட்டம் 229
2.5. சமூக தொடர்பு கருவிகள் - தி.சட்டம் 227
3. ஆளும் பணி  - II வத். திருஅவை: 36
கிறிஸ்து இறையாட்சியைப் பறைசாற்றினார். அவர் தம்முடைய ஆட்சியை மட்டுமல்ல பொதுநிலையினர் வழியாகவும் பரப்ப விரும்புகிறார். இவ்வாட்சி உண்மையின் ஆட்சி, வாழ்வின் ஆட்சி, தூய்மையின் ஆட்சி. அருளின் ஆட்சி, நீதியின் ஆட்சி, அன்பின் ஆட்சி, அமைதியின் ஆட்சி ஆகும். திருஅவை சட்டங்களிலும் திருஅவையின் ஆளும்பணி அல்லது வழிகாட்டும் பணியில் பொதுநிலையினர் அழைப்பையும் கடமைகளையும் உறுதி செய்கிறது.
3.1. சட்டத்துறை - தி.சட்டம் 46
3.2. நீதித் துறை - தி.சட்டம் 1425
3.3. நிர்வாகத் துறை - தி.சட்டம் 492
இரண்டாம் வத்திக்கான் சங்கம் மற்றும் புதிய திருஅவைச் சட்டம் பொதுநிலையினர் திருப்பணியாற்ற அழைப்பு விடுத்தாலும் திருஆட்சியாளர்கள் அனுமதியளித்து அங்கீகாரம் அளிக்கவேண்டும். குருகுலத்தாரோடு பொதுநிலையினர் ஒன்றிணைந்து இறைப்பணி ஆற்றினால் திருஅவை வளரும், இறையாட்சி மலரும்.

Comment