No icon

மறுகிறிஸ்துவாக இறையாட்சிப் பணியில் எழுச்சியுடன் புனித பிரான்சிஸ் அசிசியார் - 25.04.2021

 

 

மறுகிறிஸ்துவாக இறையாட்சிப் பணியில் எழுச்சியுடன் புனித பிரான்சிஸ் அசிசியார்

அருள்தந்தை. ஆ. தைனிஸ், க.ச.,
திருஅவை வரலாற்றுப் பேராசிரியர், அமல ஆசிரமம், திருச்சி.

 

பதிமூன்றாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அதிகாரம், ஆடம்பரம், ஆணவம் நிறைந்ததாகயிருந்தது. போர் தொடுத்தல், வெற்றிகள் ஈட்டுதல், பட்டங்கள் சூடுதல், பிரம்மாண்டமான பேராலயங்கள் எழுப்புதல், பெரும் விழாக்கள் கொண்டாடி பேரணிகள் நடத்துதல் என  கிறிஸ்தவம் பகட்டாகவும், பரபரப்பாகவும் பயணித்தது. இந்த பரப்பரப்பான கிறிஸ்தவத்தின் பயணத்தில், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள், திருஅவையின் தலைவர்கள் மட்டுமே காணப்பட்டனர். ஏழைகள், எளியோர், பெண்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். கிறிஸ்துவின் இறையாட்சி முழக்கம் வறியோருக்கானது என்பது இருட்டிக்கப்பட்டு, வசதிப் படைத்தோரின் அரியணைகளில் காட்சிப் பொருளானது. கிறிஸ்தவத்தின் பெயரால் பாமரர்கள் வஞ்சிக்கப்படும் அலங்கோலமும் அரங்கேறியது. ஏழைகள் படும் துன்பங்களைக் கண்டு திருஅவை பாராமுகமாய் இருந்தது.  இயேசுவின் பாதை, புனிதப் பாதை மட்டுமல்ல; அது ஏழைகளை அதிகாரமிக்கவர்களாக மாற்றுகின்ற புரட்சிப்பாதை என்பதை அசிசி நகர் புனித பிரான்சிஸ் (1182-1226) அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை தனது எளிய வாழ்வால் ஏழைகளுக்கு எடுத்துச்சென்றார்.
கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலும், திருஅவைக்கு கீழ்ப்படிதலிலும் நாம் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பதற்கு புனித பிரான்சிஸ் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றார். எல்லாக் காலங்களுக்கும், எல்லாருக்கும் அவருடைய செயல்கள் ஏற்புடையதாக இருக்கின்றன. கிறிஸ்துவை மையப்படுத்தி தனது எளிய வாழ்வை அமைத்துக்கொண்டார். “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” (மத் 19:21) என்ற இந்த இறைவாக்கியங்கள் பிரான்சிஸின் வாழ்க்கையை மாற்றிப் போட்டது. பீட்டர் ஃபெர்ணடோனே - பீக்கா என்ற செல்வசெழிப்புமிக்க பெற்றோரின் அன்புமகன் சொகுசு வாழ்வை தூக்கி எறிந்துவிட்டு, வானத்தையே கூடாரமாக்கிக் கொண்ட சாமானிய மக்களோடு சங்கமமானார். ஏழைகளை வளப்படுத்துவதற்காக அவர் தெருக்களில் இறங்கவில்லை. மாறாக ஏழைகளோடு தோழமை கொள்வதற்கு, ஏழ்மையே வலிமையானது என்றும், ஏழையாக வாழ்வதற்கு தாம் அழைக்கப்பட்டதாகவும் உணர்ந்தார். துவக்கத்தில் பித்தனாகப் பார்க்கப்பட்டார். பின்பு மறுகிறிஸ்துவாக வெகுவிரைவில் உணரப்பட்டார்.
புனித பிரான்சிஸ் திருஅவையின் செயல்பாடுகளில் குற்றம் காணவில்லை, யாருக்கும் எதிராக முழக்கமிடவில்லை, விமர்சனங்களை தொடுக்கவில்லை, மனுக்கொடுக்கவில்லை, வெற்று முழக்கங்கள் எழுப்பவுமில்லை. ஆனால், தன்னை முறைப்படுத்திக்கொள்வதன் மூலமாக, தரணியின் கவனத்தை தன்பால் ஈர்த்தார். தனிமனித ஒழுக்கத்தால், பொறுப்புணர்வால் மழுங்கடிக்கப்பட்ட மனச்சாட்சிகளுக்கு மறுவாழ்வு அளித்தார். திருஅவையை மீண்டுமாக ஏழைகளின் பக்கமாய் திருப்பி அமைதி புரட்சிக்கு வித்திட்டார் அண்ணல் அசிசி. ஏழைகளே திருஅவையின் சொத்து என்று முழங்கிய திருத்தொண்டர் புனித லாரன்ஸ்,  புனித அசிசி கிளாரா மற்றும் தனது எளிய சகோதரர்களின் துணையுடன் அன்புத் தொண்டாற்றினார். துறவு வாழ்வு பூட்டப்பட்ட மடாலயங்களில் அல்ல; மாறாக கைவிடப்பட்ட மக்களை அன்பு செய்வதில்தான் அமைந்துள்ளது என்பதை திருஅவைக்கு உணர்த்தினார். திருஅவையை மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாக மாற்றினார்.
புனித பிரான்சிஸ் உறவுக்கு முன்னுரிமை தந்து சகோதரத்துவத்தைப் போற்றினார். தனது மடத்திற்கு கொள்ளையிட வந்த கொள்ளையர்களையும் அன்புடன் உபசரித்தார். தனது  இதமான உறவால் திருடர்களையும், இயேசுவின் சீடர்களாக மாற்றினார். இறைவனின் படைப்பனைத்தையும் சகோதர, சகோதரியாக பாவித்தார். வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் விண்ணகத்தந்தையின் மக்கள் என்பதில் உறுதிக்கொண்டார். ஏழ்மையை ஏற்பதன் மூலம் இவ்வுலகின் கடைநிலை மனிதராக வாழ முடியும் என விரும்பினார். பெயர், புகழ், பதவி, பணம், பட்டங்களை நோக்கி உலகம் ஓடுகின்றபொழுது ஏழ்மை, எளிமை, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், உழைப்பு, ஏழைகள் என தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். நாள் முழுவதும் வயல்வெளிகளில் உழைத்த பிரான்சிஸ், மாலை வேளையில் வீடு வீடாகச் சென்று யாசகம் செய்து உண்டார். தற்பெருமைகளை உடைத்தெரிந்து, தாழ்ச்சியுடன் வாழவே யாசகம் செய்வதாக கூறினார். தனது சபையை "சிறிய சகோதரர்கள்" மற்றும் "எளிய சகோதரர்கள் சபை" என அழைத்தார். புனித கிளாரம்மாவின் சபையை “ஏழை சகோதரிகள்” என அழைத்தார். இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவை பற்றுறுதியுடன் பின்பற்றினார். ஏழ்மை வாழ்வில் மகிழ்ச்சியைக் கண்டார். ஏழ்மையை தன் காதலியென்றும், ஏழைகளை தன் உடன் பிறந்தோரென்றும், மரணத்தை அன்பு சகோதரியென்றும் அரவணைத்துக்கொண்டவர், இவ்வாறு கிறிஸ்தவ சீடத்துவ வாழ்க்கைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
திருஅவையின் படிப்பினைகளை துறவு சபைகளைக் கடந்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதில் பிரான்சிஸ் அக்கறைக் காட்டினார். பொதுநிலையினருக்காக சில ஒழுங்குகளை எழுதி இல்லறத்திலும் நெருக்கமாக கிறிஸ்துவை பின்பற்ற வழிகாட்டினார். கிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், திருப்பலி, திருவருள்சாதனங்களோடு நின்றுவிடாமல், மக்களின் அன்றாட வாழ்வாகவும் மாறவேண்டுமென உரைத்தார். மூன்றாம் சபை என்ற பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் ஓர் இயக்கமாக பல்வேறு பங்குதளங்களில் செயல்படுகின்றனர். தாமஸ்மூர், வாஸ்கோடகாமா, கிறிஸ்டோபர் கொலம்பஸ், கலிலியோ, ஹங்கேரி அரசி எலிசபெத், பிரான்ஸ் அரசர் லூயிஸ், ஜோன் ஆப் ஆர்க், திருத்தந்தையர் பத்தாம் பத்திநாதர், 23ஆம் ஜான், மைக்கேல் ஆஞ்சலோ போன்ற புகழ்பெற்றவர்களும் பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் இயக்கத்தின் அங்கத்தினர்களாக இருந்தனர். ஹங்கேரி அரசி எலிசபெத், புனித பிரான்சிஸின் ஆன்மீகத்தை ஏற்று ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து, அரண்மனையில் ஏழையாக வாழ்ந்தார் என்பது சிறப்பு.
புனித பிரான்சிஸ் கத்தோலிக்க விசுவாசத்தின் பாதுகாவலராக போற்றப்படுகின்றார். எல்லாநிலையிலும் திருஅவைக்குக் கீழ்ப்படிந்து, அவற்றின் புனித செயல்பாடுகளை முன்னெடுப்பதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தனது சகோதரர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். நற்செய்தி அறிவிப்புப் பணியை தனது தலைமைப்பணியாகக் கொண்டார். ‘நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்கு கேடு!’ (1கொரி 9:16) என்ற புனித பவுலடியாரின் இயல்பை தனதாக்கிக்கொண்டு தனது சொல்லிலும், செயலிலும் நடமாடும் நற்செய்தியாக வாழ்ந்தார். புனித பெரார்டு மற்றும் சகோதரர்களை மொரோக்கோ நாட்டிற்கு மறைப்பணியாற்ற அனுப்பிவைத்தார். அவர்கள் சில வாரங்களிலே தலைகள் வெட்டப்பட்டு மறைசாட்சிகளாக மரித்தனர். சீனாவின் பீஜீங் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட இத்தாலிய பிரான்சிஸ்கன் ஜான் மோந்தே கொர்வினோ 1291-92 ஆகிய ஆண்டுகளில் மயிலாப்பூர் புனித தோமாவின் கல்லறையில் தங்கி நூற்றுக்கணக்கானவர்களுக்கு திருமுழுக்கு அளித்தார் என மார்கோ போலோ என்ற புகழ்பெற்ற கப்பற்பயணி குறிப்பிடுகின்றார். இந்தியாவிற்கு மறைபரப்ப வந்த முதல் துறவற குழுமம் பிரான்சிஸ்கன் சபையாகும். 1500இல் போர்ச்சுக்கீசிய பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர்கள் கோவா வந்துச் சேர்ந்தனர். கோவா, சூரத், மங்களூர், கொச்சின், திருச்சூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, பாண்டிச்சேரி, சென்னை - மயிலாப்பூர் (லஸ்), மச்சிலிப்பட்டினம், விசாகப்பட்டினம், சந்திரநாகூர், வங்காளம் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்தவத்தை விதைத்ததில் பெரும் பங்காற்றியவர்கள் பிரான்சிஸ்கன் சபையினர். திருஅவைக்கு எல்லா நிலையிலும் கீழ்ப்படிந்து வளர்ந்திட புனித பிரான்சிஸ் தனது சகோதர, சகோதரிகளுக்கு அன்புக்கட்டளை பிறப்பித்தார்.
புனித பிரான்சிஸ் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமயத்தைக் கடந்து புரோட்டஸ்டான்ட் சபைகள் மற்றும் பிற சமயங்களாலும் போற்றப்படுகின்ற, பின்பற்றப்படுகின்ற மாமனிதராக திகழ்கின்றார். ஆங்கிலிக்கன் மற்றும் லூத்தரன் சபையினரும் பிரான்சிஸின் ஆன்மீகத்தை ஏற்று குழுக்களாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழ்மையின் காதலர், ஏழைகளின் தோழர், இயற்கை பற்றாளர், அமைதியின் தூதுவர், மறுகிறிஸ்து போன்ற சிறப்புப் பெயர்களால் அவருடைய அசாத்தியமான குணாதிசயங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 60ரூ க்கும் மேற்பட்ட இருபால் துறவியர் புனித அசிசி பிரான்சிஸ்குவின் ஆன்மீகத்தை ஏற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. பிரான்சிஸ்கன் கப்புச்சின் சபை, பிரான்சிஸ்கன் அப்சர்வெண்ட்ஸ், பிரான்சிஸ்கன் சகோதரர்கள் மற்றும் எஃப்.எம்.எம், புதுச்சேரி இதய கன்னியர், கொன்சாகா, அடைக்கல அன்னை, சென்னை அன்னாள் சபை, பிரான்சிஸ்கன் வளனார், கோவை காணிக்கை அன்னை போன்ற கன்னியர் சபைகளும் புனித பிரான்சிஸின் எளிய வழியில் எண்ணற்ற கல்வி, மருத்துவம், சமூகப்பணிகளை கடந்த 500 ஆண்டுகளாக, 1517 முதல் (லஸ் ஆலயம் தோற்றுவித்தல்) தமிழ் மண்ணில் ஆற்றி வருகின்றனர். இவ்வாறு அனைத்து மக்களாலும் அன்பு செய்யப்படுகின்ற புனித பிரான்சிஸ் புரட்சி நாயகன் கிறிஸ்துவின் உண்மையுள்ள சீடனாக,  நற்செய்தி விழுமியங்களை உலகிற்கு இன்றும் என்றும் அறிவிக்கின்றார்.. அறிவித்துக்கொண்டேயிருக்கிறார்.. இறையாட்சிப் பணியின் பணியாளர்களாக உழைக்க விரும்புவோர் அசிசி புனித பிரான்சிஸ் காட்டும் நற்செய்தி, ஏழ்மை, தாழ்ச்சி, எளிமை, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், இயற்கை போன்ற கிறிஸ்துவின் மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்வோம். மறுகிறிஸ்துவாக இறையாட்சிப் பணியில் எழுச்சியுடன் செயல்படுவோம். அர்ப்பணிப்போடு வாழ்வோம்! இறையன்பை அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்! மாற்றத்தையும்! ஏற்றத்தையும் தருவோம்.

Comment