No icon

அன்புக்குரிய தந்தை யோசேப்பு - 02.05.2021

அன்புக்குரிய தந்தை யோசேப்பு - 

மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, சென்னை - மயிலை உயர்மறைமாவட்டம்

மனித உறவுமுறைகளில் நாம் ஒருவர் மற்றவரை இரண்டு வெவ்வேறான வழிகளில் அணுக முடியும். நபர்களாக உறவாடுவது ஒரு முறை. செயல்பாட்டு கருவிகளாக அணுகுவது இன்னொருமுறை. அடிப்படையில் சமூக உறவுகளின் சங்கமமாகத் திகழும் நமது சமூகம் இவ்விரண்டு வழிமுறைகளுக்கான எண்ணற்ற உதாரணங்களை வாங்க முடியும். முதலாளி - ஊழியர், ஆசிரியர் - மாணவர், வியாபாரி - வாடிக்கையாளர், தலைவர் - வாக்காளர்.
இன்று நாம் வாழும் பொருள் முதலாவதாக, நுகர்வியல் கலாச்சாரத்தின் முக்கியமான பிரச்சனை என்னவெனில் நமது சமூக உறவுகளில் நாம் மற்றவர்களை மனிதர்களாக பாவிக்காமல் செயல்பாட்டுக் கருவிகளாகக் கருத வேண்டியிருக்கிறது. சமூக உறவு முறைகளில் இந்த இரண்டு தத்துவங்களுக்கு இடையிலான வேறுபாட்டினை ஜெர்மானிய தத்துவயியலாளர் இம்மானுவேல் கான்ட் அவர்கள் அழகாக விவரிக்கின்றார். அவர் கூறுவது, “உங்கள் சுய அடையாளத்திலும், மற்றவர்களின் சுய அடையாளங்களிலும், மனிதத்தைக் கருவியாக அல்லாமல், மாண்பிற்குரிய நிறைவாகக் கருதும் மனிதத்தைக் கடைப்பிடியுங்கள். மற்றவர்களைக் கருவிகளாக பாவித்தல் என்பது, அந்த நபரை அவர் ஆற்றும் செயல்பாட்டிற்கு குறைத்து விடும் மனநிலையாகும்”.
இவ்வாறு மனிதர்கள் கருவிகளாக மாறிவிடுகிறார்கள். ஆனால், மறுபுறம் மற்றவரை அவருடைய பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் அவரது தனித்துவத்தின் பொருட்டு அவரை மாண்புமிக்க நபராக மதித்து ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். புனித தாமஸ் அக்குவினாஸ் வரையறுப்பது போல, இறைவனே அனைத்திற்கும் மேலான மாண்பிற்குரிய நிறைவு. எனினும் தன்னையே நமக்காக பொதுநன்மைக்கு வழங்குவதால் இவ்வழிமுறையின் வழியே அவர் நேசிக்கப்பட வேண்டும். எனவே நாம் மற்ற மனிதர்களை உடன் பங்கேற்பாளர்களாக அன்பு செய்து மற்றவர்களை மாண்பிற்குரிய நபர்களாக வழிநடத்துதல் அவசியம்.
“சிறு குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று உலகத்தை குறித்த குழந்தைகளின் பார்வை, நமது கண்ணோட்டத்தைவிட முற்றிலும் மாறுபட்டது. நமது இல்லங்களுக்கு கடிதங்களைக் கொண்டுவரும் தபால்காரர் ஒரு குழந்தையின் பார்வையில் அவர் ஆற்றும் செயல்பாடாக மட்டுமல்ல, மாறாக ஒரு நபராகத் தென்படுகின்றார். எனவே, அவரது வருகை குழந்தைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தநபரை சந்திக்கும்போது, குழந்தையின் முகத்தில் புன்னகை மலர்கிறது. வேறு ஒருவர் அந்த தபால்காரருக்கு பதிலாக வருபவர் எனில் முந்தைய நபரின் இல்லாமை அக்குழந்தையின் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு குழந்தையின் இதயம் அம்மனிதரை செயல்பாட்டு கருவியாக அல்லாமல் நபராக பதிக்கிறது. கிறிஸ்தவ ஆன்மீகம் நமக்கு கற்றுத்தரும் மனித நபரைக் குறித்த புரிதல் இத்தகையதே. எனவே தான் இறைவனை விவரிக்க கையளிக்கப்படும் உருவங்களும், அடையாளங்களும், சமூக உறவுமுறை பெயர்களைத் தழுவியதாக அமைந்திருக்கின்றது. கடவுள் ஒரு தந்தை (திபா 103:13), ஒரு தாய் (எசா 66:13), கணவன் (எசா 54:5), காதலன் (இபா 1:16), தோழன்/நண்பன் (யோவா 15:15) என விவிலிய உதாரணங்கள் பற்பல, மனித நபரைக் குறித்த கிறிஸ்தவ கருத்தியலின் அடிப்படை உறவு.
நாம் அனைவரும் அன்பையும், மதிப்பையும் அடிப்படையாகக் கொண்ட உறவுமுறைகளின் சங்கமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தனி நபர் குறித்த இத்தகைய கிறிஸ்தவ சித்தாந்தத்தை நம் அன்பிற்குரிய தந்தையாகிய யோசேப்பு உணர்த்துகிறார். திருத்தந்தையின் திருத்தூதுவ மடலான “ஞயவசளை ஊடிசனந” கூறுவதுபோல, புனித யோசேப்புவின் மாண்பு, அவர் மரியாவின் கணவராகவும், இயேசுவின் தந்தையாகவும் இருந்தார் என்பது தான். 
புனித ஆறாம் ஆம் பவுலை மேற்கோள்காட்டி திருத்தந்தை கூறுவது போல, யோசேப்பு தன்னுடைய அழைத்தலைக் குடும்ப அன்பாக மாற்றி தன்னையே முழு மனித பலியாக ஒப்புக்கொடுத்து தனது இதயத்தையும், தனது செயல்பாட்டுத் திறமைகளையும் காணிக்கையாக்கி, மெசியாவிற்கு ஊழியம் புரியும் அன்பினால் அவர் தனது இல்லத்தில் வளர காரணமானார். புனித யோசேப்பு இங்கு உணர்த்துவது, செயல்பாட்டு வாழ்வுமுறை மட்டுமல்ல, இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்பதையும் தாண்டி அவர் அனைத்து திருஅவையின் தந்தை என்னும் உறவுமுறையில் நம்மோடு இணைந்திருக்கின்றார். திருத்தந்தை கூறுவதுபோல, புனித யோசேப்பை அனைத்து கிறிஸ்துவ மக்களும் தந்தையாகப் போற்றி வருகின்றனர்.
திருஅவை அவர்மீது கொண்டிருக்கும் அன்பு அவரது பெயருக்கு அர்ப்பணமாக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற திருஅவை குடும்பங்கள் மற்றும் துறவற சபைகள் ஆன்மீகத்திலிருந்தும், புனித யோசேப்புவின் மேல் நாம் கொண்டிருக்கும் அன்பையும், பக்தியையும் உணர்த்தும்விதமாக வளர்ந்து வரும் எண்ணற்ற பக்தி முயற்சிகள், திருத்தலங்கள் ஆகியவற்றின் மூலமும் வெளிப்படுகின்றது. தொடக்கநூல் 41:55-ல் பார்வோன் மன்னன் விடுக்கும் அழைப்பு, “யோசேப்பிடம் சொல்லுங்கள், அவர் சொல்வதைச் செய்யுங்கள்”. பார்வோனின் இந்த அழைப்பு யாக்கோபின் மகனான யோசேப்புவைக் குறித்தாலும், நமக்கு இவ்வழைப்பு நம்முடைய பாதுகாவலரும், உடன் திருப்பயணியுமாகிய புனித யோசேப்புவையே குறிக்கின்றது. கிறிஸ்தவ அழைப்பு என்பது கடமையையும், பொறுப்பையும் நிறைவேற்றும் செயல்பாட்டு வழிமுறை மட்டுமல்ல. அருளின் நபராக மாறுவது. திருஅவைக்கும் உலகத்திற்கும் ஆசீரின், திருநிலைப்பாட்டின் கருவியாக மாறுவது.
எனவே அன்பார்ந்த குருக்களே, நீங்கள் ‘அருள்தந்தை’ என்று அழைக்கப்படும்போது, இதை நினைவில் கொள்ளுங்கள். இறைமக்கள் உங்களை குரு என்னும் இறைக்கருவியாக மட்டுமல்லாமல், உங்களை இறைவனின் சாயலில் வாழும் நபராகக் கருதுகின்றனர். எனவே உங்கள் கடமை அருள்சாதன கடமைகளை நிறைவேற்றுவதோடு முடிந்துவிடுவது இல்லை. மாறாக, புனித யோசேப்புவைப் போன்று தந்தையாக மாற நீங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள். நீங்கள் சேவைகளை ஆற்றுவதற்கு மட்டுமல்ல, இறைவனின் பிம்பங்களாக மாறத் திருஅவை விரும்புகின்றது.
குடும்பங்களில் வாழும் கணவர்களே, தந்தைமார்களே, ஒவ்வொருமுறையும் நீங்கள் அப்பா என்று அழைக்கப்படும்போது, புனித யோசேப்புவின் முன்மாதிரியை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குடும்பங்களுக்கான இன்றியமையாத தேவைகளைக் கொடுப்பதோடு மட்டும் உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை. மாறாக, குடும்பத்தின் ஒவ்வொரு நபரோடும் உடன் பயணித்து, உங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு நபரையும், நிறைவுள்ள மாண்புமிக்க மனிதர்களாக மதித்து, நேசிக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள்.
அன்பிற்குரிய தாய்மார்களே, மகன்களே, மகள்களே, தங்கைகளே! ஒருவர் மற்றவரின் பயன்பாட்டைத் தாண்டி மனிதர்களை நபர்களாக நேசிக்க கற்றுக்கொள்வோம். அன்பை மையப்படுத்திய உறவுமுறைகளை நோக்கிப் பயணிப்போம். அன்னை மரியாளும், புனித யோசேப்புவும் நமக்காகப் பரிந்து பேசுவதால் இன்றைய நமது குடும்பங்கள் மனிதர்களைக் கருவிகளாக பாவிக்கும் நுகர்வு சிந்தாந்தங்களிலிருந்து மாறி ஒவ்வொரு நபரையும், நேசிக்க, போற்ற இறைவன் நமக்குக் கொடுக்கும் அழைப்பைத் தகுந்தமுறையில் வாழ்வை முறையாக்க முற்படுவோம். 

Comment