No icon

பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள் அளித்த நேர்காணல்

கர்நாடக பாஜக அரசின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து (நன்றி: சப்ரங் இந்தியா) (தமிழாக்கம்: பணி. ஜான் பால், நம் வாழ்வு)

(நன்றி: சப்ரங் இந்தியா) (தமிழாக்கம்: பணி. ஜான் பால், நம் வாழ்வு

சப்ரங்இந்தியாவின் திரு. கருணா ஜானுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பேராயர் பீட்டர் மச்சாடோ, கிறிஸ்தவ ஆலயங்கள், செபக்கூடங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பின் ஆபத்தான தாக்கங்கள் குறித்தும் மற்றும் கொண்டுவரப்படவுள்ள மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தைப் பற்றியும் மேற்கொண்ட நேர்காணல்... தமிழில்

கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின்கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்பற்றிய கணக்கெடுப்புக்கு கடுமையாக எதிர்வினையாற்றிய முதல் கிறிஸ்தவத் தலைவர்களில் பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோவும் ஒருவர். இங்கு பெங்களுரு-கர்நாடகா திருஅவையின் தலைவர், இந்த கணக்கெடுப்பு எவ்வாறு மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவர்களை மட்டுமே குறி வைத்து தன் இலக்காக கொள்கிறது என்பதையும், அதே போல் முன்மொழியப்பட்ட மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தின் சாத்தியமான விளைவுகளையும் நமக்கு எடுத்துரைக்கிறார்.

நீங்கள் மட்டும்தான் தைரியமாகப் பேசியிருப்பவர். கர்நாடகாவின் நிலைமை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

 இது மிகவும் நன்றாக இல்லை. நாங்கள் அமைதியை விரும்பும் சமூகம். மொத்தத்தில் கர்நாடகம் கூட மிகவும் அமைதியான இடம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் உள்ளனர். சிறு சிறு குழுக்களால் ஆங்காங்கே அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள் பிரச்சனைகளை உருவாக்குகின்றன, இருப்பினும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்மஸ் என ஒவ்வொரு திருவிழாக்களையும் மக்கள் ஒன்றாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை உருவாக்க முதலமைச்சரை உற்சாகப்படுத்துவது இந்த சிறு குழுக்களின் வேலையே. முதலமைச்சரின் தலையீடு நேரடியாக இல்லாதபோது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபைத்தலைவர்களின் எண்ணிக்கையை எடுக்க காவல்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது எங்களை இன்னும் அதிகமாக காயப்படுத்தியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் என்றும் அங்கீகரிக்கப்படாத கிறிஸ்தவ தேவாலயங்கள் என்றும் வகைப்படுத்தி வைத்துள்ளனர். போதகரின் பெயர், தொலைபேசி எண் போன்றவையும் இதில் கேட்கப்பட்டு இருக்கிறது. இது பாரபட்சமானது என்பதையும், இது அனைத்து சமூகங்களுக்கும் இல்லை என்பதையும் நாங்கள் கூறுகிறோம். அது கிறிஸ்தவர்களாகிய எங்களை மட்டும் குறிவைப்பது போல் தெரிகிறது. இரண்டாவதாக, அரசாங்கம் இந்த விவரங்களை விரும்பினால், அவர்கள் எந்த வடிவத்திலும் அதை வைத்திருக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம், உண்மையில் சிறுபான்மைத் துறை எங்கள் எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களின் பட்டியலையும் கொண்டுள்ளது. இப்போது கணக்கெடுப்புக்குப் பின் இந்தப் பட்டியல் பொதுதளத்தில் இருக்கும், மேலும் அந்த சிறிய குழுக்களுக்கு அனுப்பப்படும், அது "அங்கீகரிக்கப்படாதவர்களை" துன்புறுத்தத் தொடங்கும்.

ஒரு தேவாலயம் "அங்கீகரிக்கப்படாதது" அல்லது "சட்டவிரோதமானது" என்று அவர்கள் கூறுவதின் அர்த்தம் என்ன?

அவர்கள் ஒருவேளை கூறுவது கட்டிடத்திற்கு முழு அனுமதியும் எடுக்கப்படவில்லை என்று அர்த்தத்தில்கூட இருக்கலாம், ஒருவேளை கூட்டங்களுக்குகூட சொல்லலாம். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த குழுக்கள் வீடுகளில் கூடி ஜெபிப்பதற்கு எதிராக இருந்தன. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், கிறிஸ்மஸ் சமயத்தில் குழந்தை இயேசுவை வீடு வீடாகச் எடுத்து செல்வோம், அப்போது அக்கம்பக்கத்தினரும் ஒன்றுகூடி ஜெபிக்கலாம். கிறிஸ்தவ தேவாலயங்கள் அல்லது கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் கட்ட கர்நாடகாவில் அனுமதி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாங்கள், சுற்றுச்சூழல் சான்றிதழ்கள் மேலும் சுகாதாரம், காவல் துறை, தீயணைப்புத் துறைகளில் இருந்தும் சான்றிதழ்கள் பெற்று, ஏறக்குறைய 15 முதல் 20 வகையான சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். சிறிய தேவாலயங்களுக்கு, அதிகாரத்திலிருப்போரிடமிருந்து இவை அனைத்தையும் பெறுவது என்பது எளிதானது அல்ல. பல இடங்களில் விண்ணப்பித்த, ஐந்து-ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அனுமதிகள் நிராகரிக்கப்படுவதுவும் நடக்கின்றன.

ஆனால் வீடு தேவாலயங்கள் தனியார் சொத்தில் நடத்தப்படுகின்றனவா?

இதை கர்நாடக அரசு அனுமதிக்காது. அவர்கள், அங்கு கூடுபவர்கள் பொதுமக்கள், உங்களிடம் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை, உபகரணங்கள் அல்லது சான்றிதழ் இல்லை என்று கூறுவார்கள். அவர்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அல்லது மாலைகளில் செபம் மற்றும் பஜனை பக்தி பாடல்களைப் பாடுவதற்காக மட்டுமே கூடுவார்கள்.

கர்நாடகாவில் விரைவில் மதமாற்றத் தடைச் சட்டம் வரலாம், கிறிஸ்தவ சமூகத்தின் கவலை என்ன?

அரசியலமைப்புச் சட்டத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கான சுதந்திரமும் கட்டுப்பாடுகளும் உள்ளன. கட்டுரை எண் 25 ஒவ்வொரு குடிமகனுக்கு தனது மதத்தை ஓதவும், ஒழுகவும், ஓதிபிரச்சாரம் செய்யவும் சுதந்திரம் உள்ளது என்றுகூறுகிறது, அதே நேரத்திரல் அதற்கான வரம்புகளும் உள்ளன. நாட்டில் போதுமான சட்டங்கள் உள்ளபோது, கிறிஸ்தவர்களை தண்டிப்பதற்காக மேலும் ஒரு சட்டம் தேவையா? காவல்துறை மிகவும் பணிவுடன் இந்த கணக்கெடுப்பை செய்தால் எனக்கு கவலையில்லை, ஆனால் இது அந்த சிறு மக்கள் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே கர்நாடகாவில் தார்மீக காவல்துறை பற்றி அதிக கூச்சல் உள்ளது, காவல்துறை அதைச் செய்வதில்லை ஆனால் வேறு சில குழுக்கள் அதைச் செய்கின்றன. காவல்துறையினர் உதவியற்று இருக்கிறார்கள், அவர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்த மாதிரியான சட்டங்கள் அந்த மக்கள் கைகளில் விழும்போது அது யாருக்கு நலம் பயக்கும். கர்நாடகாவிற்கு இதுபோன்ற மதமாற்ற எதிர்ப்பு சட்டம் தேவையில்லை நாங்கள் அறிவில் முதிர்ந்தவர்கள், எங்களுக்கு போதுமான புரிதல் உள்ளது. அந்தந்த சமூகத்தினரே சமாதானக் குழுக் கூட்டங்களை நடத்துகிறார்கள், எனவே இதற்காக அரசாங்கம் இந்த வகையில் பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

ராம் சேனே போன்ற இயக்கங்கள் செயல்படும் சில பகுதிகளில் மதமாற்றங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

ஹூப்ளி என்ற இடத்தில், ஒரு குழு தேவாலயத்திற்குச் சென்று தங்கள் சொந்த பஜனைப் பாடல்களை பாடி ஜெபிக்க தொடங்கினார்கள். இனி யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம்...

சுதந்திர தேவாலயங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியதா?

ஆம், நான் அவர்களுக்காக என் உணர்வை வெளிப்படுத்துகிறேன். நாங்கள் கத்தோலிக்கர்கள் குறைந்தபட்சமாவது அமைப்புகளாக உள்ளோம், ஒழுங்கமைக்கப்பட்டுள்ளோம், எங்கள் தேவாலயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் பிறசபைகள் அப்படி இல்லை. ஒருவேளை அரசு என்னிடம் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் எவைஎவை என்று கேட்டால், இவர்கள் அங்கீகாரம் பெற நாங்கள் உதவுவோம். யாருடைய பட்டியலும் எனக்கு வேண்டாம்.

அப்படித்தான் வலதுசாரி கும்பல் அதிகாரம் பெறுகிறதா?

ஆம்.

ஆனால், கர்நாடகாவில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவ சமூகமே அமைதியாக உள்ளது. நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

கிறிஸ்தவ சமூகம் அமைதியானது மற்றும் சில சமயங்களில் அமைதியானவர்கள், அவர்கள் சத்தமாக பேச மாட்டார்கள். ‘என்னை காயப்படுத்தினால் ஒழிய நான் பேசமாட்டேன்என்ற வகையானவர்கள். இருப்பினும் நான் இதை ஏற்கமாட்டேன். நாங்கள் பல்வேறு இடங்களில் ஐக்கிய கிறிஸ்தவ மன்றங்களை உருவாக்கி, அனைத்து தேவாலயங்களையும் ஒன்றிணைக்க ஊக்குவிக்கிறோம். சில விஷயங்களில் தனித்தனியாக இருந்தாலும், பல விஷயங்களில் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் ஒரே திருவிவிலியத்தை, ஒரே நம்பிக்கையை வைத்து அதையே அறிக்கையிடுகின்றோம்.

கிறிஸ்தவ கணக்கெடுப்பு மற்றும் முன்மொழியப்பட்ட மசோதாவை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளபோகிறீர்கள்?

மசோதாவைப் பொறுத்தவரை, நம்மால் முடியும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் அரசாங்கத்திற்கு அதன் சொந்த பெரும்பான்மை உள்ளது, மசோதாக்களை நிறைவேற்றுவதற்கென வழிமுறைகள் போன்றவை அதற்குள்ளது. இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் தளர்வுற்றிருக்கிறேன், ஆனால், அதே நேரத்தில் நல்லெண்ணம் உள்ளவர்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நமக்காகப் பேசக்கூடியவர்கள் மற்றும் மக்களுக்கு ஓரளவு உணர்வைத் தரக்கூடியவர்களை தொடர்பு கொள்ள நான் முயற்சித்த வருகிறேன். கணக்கெடுப்பைப் பொறுத்தவரை, அவர்கள் இன்னும் நகரங்களை நோக்கி வரவில்லை, ஒருவேளை அவர்கள் அதிகமாக கிராமங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கலாம், அவர்கள் கேட்கும் எந்தத் தகவலையும் வழங்குமாறு நாங்கள் மக்களிடம் கூறியுள்ளோம்.

இதுவரை ஏதேனும் கணக்கெடுப்பு(சர்வே) கேள்வித்தாள்களைப் பார்த்தீர்களா?

துரதிர்ஷ்டவசமாக, காவல்துறைக்கு அவர்களின் கடமை என்னவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த வழக்கில் அவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று தங்கள் மொபைலில்படிவத்தைகாட்டுகிறார்கள், ஆனால் நாங்கள் எங்கள் மக்களிடம் அது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் நாமும் எழுத்துப்பூர்வமாகவே பதிலளிப்போம் என்றும் சொன்னோம். அதுதான் வழக்கம். ஏனெனில் வந்தவர் அங்கீகரிக்கப்பட்டவர்தான் என்பது எப்படி நமக்கு தெரியும்?

இது தொடர்பானவை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா?

இது நல்லதல்ல என்று நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுகிறோம், ஆனால் இதைப்பற்றை யாருக்கு எழுதுவது யாரிடம் பேசுவது என்று தெரியவில்லை, தெளிவு இல்லை. நாளை அவர்கள் மறுக்கலாம். நாங்கள் எதுவும் சொல்ல முடியாது, விஷயங்கள் மங்கலாக உள்ளன என்று துறையினர் கூறலாம். யுனைடெட் கிறிஸ்டன் ஃபோரம் அலுவலகங்களுடன் சுதந்திரமான கிறிஸ்தவ தேவாலயங்கள் இணைக்கக்கூடிய ஒரு பொறிமுறையை நாங்கள் நிறுவியுள்ளோம். தேவைப்பட்டால் மற்ற சிறுபான்மையினருக்கும் ஆதரவு கிடைக்கும். அவர்கள் எங்களை குறிவைத்துள்ளனர் எனவே நாங்கள் அவர்களுக்கு பதிலளிப்போம், ஒருவேளை சிறுபான்மையினர் அனைவருக்குமான பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம்.

ஏன் இப்போது கிறித்தவ விரோத இலக்கு மிகவும் மோசமாக உள்ளது?

2008ல் தேவாலயங்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டன, அது சமயம். தற்போதைய முதலமைச்சர் அப்போது ஜனதா தளம் கட்சியில் இருந்தவர், அதையெல்லாம் கண்டித்தவர். ஆனால் அவர் பன்னிரெண்டு வருடங்களாக இதை மறந்துவிட்டு மறைமுகமாக இவற்றை ஊக்குவித்து வருகிறார்.

இந்த தீவிரவாத குழுக்கள் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன?

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஊக்குவிக்கின்ற போது , ஆதரிக்கின்ற போது , நிச்சயம் அவர்கள் வளருவார்கள் அல்லவா? அரசாங்கம் ஒருவேளை நாங்கள் அரசியலமைப்பின் கீழ் இருக்கிறோம், நாங்கள் அரசியலமைப்பின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்திருக்கின்றோம், எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பானவர்கள் என்று ஒரு வலுவான செய்தியை அனுப்பினால், இது போன்ற தாக்குதல் நடத்த முடியாது.

கர்நாடக அரசுக்கு உங்கள் செய்தி என்ன?

நான் முதலமைச்சரை சந்தித்தேன், அவர் மிகவும் கண்ணியமாகவும் நலம் விரும்பியாகவும் இருந்தார். முதல்வர் எங்கள் மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் நாட்டின் குடிமக்கள் மற்றும் அரசியலமைப்புச்சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரான எதையும் நாங்கள் செய்ய மாட்டோம், இரண்டாவதாக, எங்கள் கிறிஸ்தவ தேவாலயங்களின் பட்டியலை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், எங்கள் நிறுவனங்களின் பட்டியலையும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சமூக சேவைகள் பல பொதுமக்களுக்கு சேவை செய்கின்றன, அவற்றின் பட்டியலை எடுத்து அவற்றை மதிப்பிடுங்கள். பெங்களூரில் மட்டும் எங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள் என்று அரசுக்கு சவால் விட்டுள்ளேன். அங்கு நடந்த மதமாற்றத்திற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள். கரோனா காலங்களில் எங்கள் மருத்துவமனை ஒரே நேரத்தில் ஆயிரம் நோயாளிகளை அனுமதித்தது... அவர்கள் விரக்தியடைந்து இறந்து கொண்டிருந்தார்கள்... அங்கே ஏதாவது மதமாற்றங்களா நடந்ததா? எங்கள் மீது அரசு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் கண்டிப்பாக அரசை பற்றி தவறாக அவதுhறு எதுவும் பேசமாட்டோம், காட்டிக் கொடுக்க மாட்டோம். நாங்கள் நாட்டின் குடிமக்கள், நாட்டுக்காக உழைப்போம், நீங்கள் விரும்பும் எதையும் எங்களிடம் கோருங்கள். மேலும் பல மருத்துவமனைகள் மற்றும் சமூக மையங்களை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் மத ரீதியாக, எங்களை ஆதரிக்கவும். எங்களின் மதநம்பிக்கையின் காரணமாகவே இந்தச் சேவைகளையெல்லாம் பொதுமக்களுக்குச் எங்களால் செய்ய முடிகிறது. நான் கடவுளை நம்பவில்லை என்றால், நான் ஏன் மற்றவர்களின் நலனில் அக்கறை காட்டுப்போகிறேன்? எனது நம்பிக்கை அந்தளவிற்கு மிகவும் வலுவானது, எனவேதான் எனது கைகள் மக்களுக்கு சேவை செய்கின்றன. இது உங்கள் சொந்த நலனுக்காக செய்யப்படுகிறது, எனவே நாங்கள் உங்களுக்கு மேலும் உதவ முடியும் என்று ஒரு அதிகாரி என்னிடம் கூறினார். எனக்கு இந்த மாதிரி பணம் வேண்டாம் என்றேன். ஒருவேனை கணக்கெடுப்பு முடிந்து, அது அனைவரும் அறியுமாறு வரும்போது இந்த சிறு குழுக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்து அதிகமானவர்களை குறிவைத்து தாக்கலாம். கணக்கெடுப்பை கைவிடுமாறு(வாபஸ்) நான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு உங்கள் செய்தி என்ன?

துன்பப்படுதல் என்பது நம் நம்பிக்கையை வலுப்படுத்தவும், ஒருவரோடொருவர் பிணைக்கவும், கஷ்டங்கள் இருந்தபோதிலும் மற்றவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற நமது உறுதியை வலுப்படுத்தவும் என்று நான் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன். மறைசாட்சிகளின் இரத்தம் எப்போதும் புதிய மரங்களின் விதையாகிறது. நாம் சோர்வடைய வேண்டாம் அதே நேரத்தில் இதற்காக அதிக வேலை செய்யவும் வேண்டாம். இவை கடந்து செல்லும் கட்டங்கள். இது ஒரு வீண் பயிற்சி என்பதை அரசாங்கமே ஒரு நாள் உணரும். பிஜேபியில் பல கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், அவர்கள் இப்போது தங்கள் நம்பிக்கை இழக்க நேரிடும், அரசாங்கத்தை ஆதரித்த கிறிஸ்தவர்கள் கூட, இவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது அல்லது இவர்களை நம்புவது பாதுகாப்பானதா என்று அடுத்த தேர்தலின் போது இருமுறை யோசிப்பார்கள்?

Comment