No icon

அருள்முனைவர் ஜான் பேப்டிஸ்ட் இந்திய ஆயர் பேரவை, பெங்களூரூ.

கூட்டொருங்கியக்கத் திருஅவை ஒரு விவிலியப் பார்வை

நமது திருத்தந்தையவர்கள் உலக ஆயர்கள் மாமன்றத்தைக் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். இப்போது தலத்திருஅவைகளில் இம்மாமன்றத் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகாலம் (அக்டோபர் 2021 முதல் அக்டோபர் 2023 வரை நிகழவிருக்கும் இத்தொடர் நிகழ்வு, “கூட்டொருங்கியக்கத் திருஅவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்தி அறிவிப்பு எனும் இலக்கைக் கொண்டு செயல்படும். இவ்வேளையில் இந்த மாமன்றத்தின் நோக்கம் நிறைவேற்றவும், அதன் முழு பலனை திருஅவை பெறவும் இதைப்பற்றிய புரிதல்களை கொஞ்சம் ஆழப்படுத்திக்கொள்வது நல்லது. அந்தவகையில் கூட்டொருங்கியக்கம் பற்றிய வேர்கள் திருவிவிலியத்தில் எங்கு காணக் கிடைக்கின்றன என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். பன்னாட்டு இறையியல் பணிக்குழு (International Theological Commission) வெளியிட்டுள்ள, “திருஅவையின் வாழ்விலும், பணியிலும் கூட்டொருங்கியம் (Synodality in the life and mission of the church) என்னும் ஏட்டினை அடியொற்றி இக்கட்டுரை பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு நூல்களில் காணப்படும் இச்சிந்தனைகளை விளக்க முயல்கிறது. குறிப்பாக திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் எருசலேம் திருச்சங்க நிகழ்வின் வழிமுறையை (Process) அதனால் விளைந்த பயனையும் (Product) விளக்கி அதிலிருந்து இந்த ஆயர்கள் பெருமன்றத்திற்கான பாடங்களையும், படிப்பினைகளையும் கோடிட்டு காட்ட விழைகின்றேன்.

1. பழைய ஏற்பாட்டில்கூட்டொருங்கியக்கம்

திருவிவிலியத்தின் தொடக்க நிகழ்வான உலகப்படைப்பிலேயே கடவுள் மானிடரை இவ்வுலகை பேணிகாக்க ஒரு சமூகமாகப் படைத்தார் எனக் காண்கின்றோம் (காண் தொநூ 1; 26-28, 2: 5, 20-25). இச்சமூகத்தோடு பின்னாளில்ஆபிரகாம் (காண் தொநூ 12: 17, 22) மற்றும் மோசே வழியாக (காண், விப 19: 24) உடன்படிக்கை செய்து கொண்டு அவர்களை இறைமக்களின் கூட்டமாக ஒருங்கிணைத்தார் கடவுள். அவர்கள் திருச்சமூகமாக இறைவனின் கட்டளைபடி வாழவும், வழிபடவும் பணித்தார். சீனாய் உடன்படிக்கையில் தொடங்கிய கூட்டொருங்கியக்கம் இறைவனை மைய்யமாகவும், கோத்திரங்களின் கூட்டமைப்பை ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாகவும் கொண்டு மோசே, யோசுவா, நீதித்தலைவர்கள் மற்றும் இறைவாக்கினர்களால் வழிநடத்தப்பட்டு வந்தது. இதில் குறிப்பாக இறைவாக்கினர்கள் இச்சபை இடர்பாடான காலங்களை சந்தித்த போதெல்லாம் மனமாற்றத்திற்கும், நீதி நிறைவாழ்வு வாழவும், தொடர்ந்து அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தனர். உதாரணமாக எரேமியா இறைவன் செய்யும் புதிய உடன்படிக்கைப் பற்றியும், அவர்கள் உள்ளத்தை பாதிக்கும் சட்டத்தைப் பற்றியும் பேசுகின்றார் (காண் எரே 31:31-34).

2. இயேசு கொணர்ந்தகூட்டொருங்கியக்கம்

இயேசு இவ்வுலகில் உதித்தபோது, தான் தனியாளாக செயல்படவில்லை என்றும், தான் தந்தையினுள்ளும், தந்தை தன்னுள்ளும் இருப்பதாகவும், தான் கூறுபவற்றை தானாகக் கூறவில்லை என்றும், தந்தை தன்னுள் இருந்து செயலாற்றுகின்றார் என்றும் தெளிவு படுத்துகின்றார் (காண் யோவா 14: 10-11). தன் பெயரால் தந்தை அனுப்பும் தூய ஆவியார் தம் சீடர்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் (காண் யோவா 14: 26) என்றும் அறிவுறுத்தினார். இவ்வாறு மூவொரு இறைவன் ஒரு கூட்டொருங்கியக்கமாகச் செயல்படுகின்றனர். இயேசு தான் தேர்ந்த சீடர்களும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என மன்றாடினார். என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! (யோவா 17: 21).

புனித லூக்கா தனது நற்செய்தியில் இயேசுவை ஒரு திருப்பயணியாகக் காட்டுகின்றார் (காண். லூக் 9: 51). இப்பயணத்தில் அவர் நற்செய்தியையும், இறையாட்சியையும் போதித்து (காண் லூக் 4: 14-15, 8: 1, 9: 57, 13:22, 19:11) கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பித்தார் (காண் லூக் 20: 21). அதனால்தான் யோவான் நற்செய்தியில் இயேசு தம்மைவழியும் உண்மையும் வாழ்வும்என்கிறார் (காண் யோவா 14:6). “என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லைஎன்றும் கூறுகின்றார் (யோவா 14:6). எனவே, திருப்பயணியாகவும், வழியாகவும் இருக்கும் இயேசுவின் திருஅவையும் ஒரு திருப்பயணத் திருஅவையாக அதன் நிறைவை நோக்கி போக அழைக்கப்பட்டுள்ளது. இப்பயணத்தின் அதன் நம்பிக்கையாளர்களுக்கும், உலக மாந்தர் அனைவருக்கும் நிறைவாழ்வை வழங்கவும் பணிக்கப்பட்டுள்ளது (காண் யோவா 20:31, மத் 28: 19-20).

3. தொடக்க திருஅவையில் காணப்பட்டகூட்டொருங்கியக்கம்

இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர்கள் தலைமையில் செயல்படத் தொடங்கிய தொடக்கத் திருஅவை அதன் வளர்ச்சிப் பாதையின் முக்கியமான நேரங்களில் உயிர்த்த ஆண்டவரின் திருவுளத்தை தேர்ந்து தெளியவும், தூய ஆவியாரின் வழிகாட்டுதலைப் பெறவும் இந்த கூட்டொருங்கியக்க வழியையே கையாண்டது.

இறை நற்சான்று பெற்றவர்களும், தூய ஆவி அருளும், வல்லமையும், ஞானமும் நிறைந்தஎழுவரை திருத்தொடண்டர்களாக தேர்ந்த நிகழ்விலும் (காண். திப 6: 1-6) திருத்தூதர்கள்சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த ஒரே இடத்தில்கூடி மத்தியாவை, யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுத்த நிகழ்விலும் (காண் திப 1: 14-26). இன்னும் குறிப்பாக எருசலேம் திருச்சங்க நிகழ்வில் இந்த கூட்டொருங்கியக்க செயல்பாடு பல படிநிலைகளில் நிகழ்வதைக் காண்கிறோம் (காண். திப 15). இதைப் பற்றி சிறிது விளக்கமாக இனி காண்போம்.

4. எருசலேம் திருச்சங்க நிகழ்வில்கூட்டொருங்கியக்கம்

கூட்டொருங்கியக்க செயல்பாடுகள் அனைத்திற்கும் மாதிரியாகவும், முதன்மையானதாகவும் கொண்டாடப்படும் இந்நிகழ்வு திருத்தூதர் பணிகள் 15 மற்றும் கலா 2:1-10 ஆகிய இடங்களில் விவரிக்கப்படுகின்றது. இங்கு திருத்தூதர் பணிகள் நூலின் அடிப்படையில் கூட்டொருங்கியக்கத்தின் வழிமுறைகளைக் காண்போம்.

i. புறவினத்தார் மீட்படைய மோசேயின் விருத்தசேதனம் முதலான சட்டத்தை அவர்கள் கடைபிடிக்க வேண்டுமா? எனும் முக்கியமான சிக்கலை தீர்க்க எழுந்ததே, நிகழ்ந்ததேஎருசலேம் திருச்சங்கம்.’

ii. அந்தியோக்கியாவிலிருந்த திருஅவை இது குறித்து எருசலேம் திருஅவையிலிருந்த திருத்தூதர்களிடமும், மூப்பர்களிடமும் இதுகுறித்து கலந்து பேச தீர்மானிக்கின்றது (திபா 15: 2). எனவே, இது அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கிய நகர்வாகவும், அந்தியோக்கு, எருசலேம் ஆகிய திருஅவைகளுக்கு இடையேயான உறவையும் வெளிப்படுத்துகின்றது.

iii. எருசலேம் திருஅவையாரும், அதன் திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை அன்புடன் வரவேற்றார்கள் (காண். திப 15:4). பவுலின் கருத்துப்படி, தீத்து கிரேக்கராய் இருந்தும், விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு கட்டாயப் படுத்தப்படவில்லை (காண். கலா 2:3). மாறாக, பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணி பவுலடியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனக் கண்டுகொண்டு அதை அங்கிகரித்தனர் (காண் கலா 2: 7-8). திருஅவையின் தூண்கள் எனக் கருதப்பட்ட யாக்கோபு, கேபா, யோவான் ஆகியோர் நட்புறவின் அடையாளமாக பவுலுக்கும், பர்னபாவுக்கும் கை கொடுத்தனர் (காண். கலா 2:9). இவ்வாறு தாய்த்திருஅவை (எருசலேம்) தலத்திருஅவையின் (அந்தியோக்கு) பணியை, பணியாளர்கள் அங்கீகரித்து, ஆமோதித்து ஏற்றுக் கொண்டது.

i. புறவினத்தார் விருத்த சேதனம் செய்ய வேண்டுமா எனும் சிக்கல் திறந்த மனதுடன் நெடுநேரம் விவாதிக்கப்படுகிறது (காண் திப 15:7). அதாவது, ‘கலந்துரையாடல்நடைபெறுகின்றது. பெரும் திருத்தூதர்களான பேதுரு தனது நிலைப்பாட்டை தனது அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பாக கொர்னேலியு மனம்மாறிய நிகழ்வின் (காண் திப 10) பின்னனியில் விளக்குகிறார் (காண் திப 15: 7-11). எருசலேம் திருஅவையின் தலைவர் எனும் முறையில் திருத்தூதர் யாக்கோபும் தனது நிலைப்பாட்டை விளக்குகிறார் (காண் திப 15: 13-21). அவரின் கருத்துப்படி பிற இனத்தாரின் மனமாற்றம் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அதற்கு ஆமோ 9: 11-12 மேற்கோளாகத் தருகின்றார். இவ்வாறு பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

. இறுதியாக இறுதித் தீர்வு எட்டப்படுகிறது. திருத்தூதர் நூலின்படி இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையும் புறவினத்தார் மீது சுமத்தப்படக் கூடாது என்பதே அது (காண் திப 15: 28-29). கலாத்தியர் மடலின்படி யூதர்களுக்கு எருசலேம் திருஅவையின் திருத்தூதர்களும், யூதரல்லாதோருக்கு பவுலும், பர்னபா, தீத்து ஆகியோரும் நற்செய்தி அறிவிப்பது என்பதும் தீர்மானிக்கப்பட்டது.

i. இந்தத் தீர்மானம் மடலாக வழங்கப்பட்டு (திப 15: 23-29), அதை வாய்மொழியாக விளக்க திருச்சங்கத்தின் பிரதிநிதகளாக பர்சபா எனும் யூதாவும், சீலாவும் தேர்ந்தெடுத்து அந்தியோக்கு திருஅவைக்கு அனுப்பபடுகிறார்கள் (காண். திப 15:22).

ii. மடலை வாசித்து அந்தியோக்கு தலத்திருஅவை ஊக்கமடைந்து மகிழ்கின்றது (காண். திப 15: 31), யூதாவும், சீலாவும் அந்தியோக்கியாவிலிருந்தவர்களை ஊக்கப்படுத்தி, உறுதிப்படுத்துகிறார்கள் (காண். திப 15: 32).

இந்த கூட்டொருங்கியக்க செயல்பாட்டால் விளைந்த நன்மைகளை, பயன்களை இவ்வாறு பட்டியலிடலாம்.

. திருஅவையின் பலநிலையில் உள்ளோர் தங்களின் கடமையை ஆற்றுகின்றனர். பங்களிப்பை வழங்குகின்றனர். தீர்மானிப்பதில் அனைவரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

. தலத்திருஅவையின் (அந்தியோக்கு) பணியும், தனித்து வாழும் அங்கிகரிக்கப்படுகின்றது, ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

. தாய்த்திருஅவை சிக்கலை கரிசனையோடு அணுகி நலமான அதே வேளையில் துணிச்சலான முடிவுகளை எடுக்கின்றது. இது தூய ஆவியாரின் செயல்பாடுகளாக பார்க்கப்படுகின்றது (காண். திப 15:28). இரு திருஅவைகளும் ஒரே மனதுடன் செயல்படுகின்றன (காண். திப 15: 25).

. இவ்வாறு, இத்திருச்சங்க செயல்பாட்டால் புறவினத்தார் இறைத்திட்டத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர். நற்செய்தி உலகின் கடைஎல்லை வரை (காண். திப 1:8) செல்ல வழி வகை செய்யப்படுகின்றது.

. யூதர் புறவினத்தார் ஆகிய இருவரின் மீட்புக்கும் இறைநம்பிக்கையே அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விருத்தசேதனம் போன்ற மோசேயின் சட்டத்திலிருந்து விடுதலை அளிக்கப்படுகிறது.

. அதே வேளையில் இந்த செயல்பாடு, தீர்மானம் அனைத்தும் இறைத்திட்டத்தின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் பார்க்கப்படுகின்றது. எனவே, புறவினத்தார் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் யூதர்கள் புறந்தள்ளப்பட்டுவிட்டனர் என்றல்ல மாறாக, யூதரின் (எருசலேமில்) தொடங்கிய திருஅவை புறவினத்தாரையும் உள்ளடக்கி வளர்ச்சி காண்கின்றது.

இறுதியாக...

திருத்தந்தையர்கள் முன்னெடுத்திருக்கின்ற இந்தகூட்டொருங்கியக்கம்எனும் செயல்பாடு ஒருசில நாள்கள் பணியல்ல, இதுஒரு தொடர் பயணம்; ஒரு நீண்ட இலக்கு நோக்கிய திருபயணம். இது பல நிலைகளை தாண்ட வேண்டியுள்ளது. அனைவரும் திருஅவையின் பல நிலையிலுள்ளோரும் தங்களின் பங்களிப்பையும் வழங்க வேண்டியுள்ளது. நாம் இப்போது இருப்பது இந்த பயணத்தின் தொடக்கப் புள்ளி மட்டுமே இறுதியல்ல. ‘கூட்டொருங்கியக்கத் திருஅவைநமது பங்குகளில், மறைமாவட்டத்தில், நாட்டில், அகில உலகில் மலர நமது பங்களிப்பை அளிப்பது, ஒரு புதிய திருஅவையை, உலகை, விண்ணகத்தை, புதிய மண்ணகத்தை அமைப்போம் (காண் திவெ21). அப்போது, “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்”(2:9) எனும் பேதுருவின் கனவு நனவாகும். கூட்டொருங்கியக்கமாக ஒன்றிணைவோமோ?!

Comment