No icon

அருள்முனைவர் D. அல்போன்ஸ்

தமிழகத் திருஅவை கூட்டியக்கத் திருஅவையாகப் புத்தாக்கம் பெற

புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்எனப் பாடினான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். இத்தகைய ஓர் இலட்சியக் கனவை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் இயேசு. எல்லா மானிடரும் நிறைவாக வாழவேண்டும் (யோவா 10:10), அதற்கு எதிரான அனைத்து அநீதிகளும் ஆதிக்கங்களும் ஒழிக்கப்படவேண்டும் என்பதே அந்த இறைஆட்சிக் கனவு.அதன் அடையாளமாகத் திகழவும் அதனை உலகெங்கும் பரவலாக்கும் கருவியாகச் செயல்படவும் அவர் தொடங்கியதே அவருடைய நம்பிக்கையாளர் குழுமங்கள். இவைகளின் ஒன்றிணைப்பே திருஅவை. “நீங்கள் உலகின் ஒளி... மலைமேல் இருக்கும் நகர்” (மத் 5: 14), ‘நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு” (மத் 5:13), ‘மாவு முழுவதையும் புளிப்பேற்றும் புளிப்புமாவு” (மத் 13:33) எனும் இருவகை உருவகங்களின்வழி அவரே திருஅவையின் இயல்பையும், பணியையும் எடுத்துரைத்துள்ளார். இவ்வாறு, திகழ முதலில் அது இறையாட்சியின் இன்றியமையாத பண்புகளாகிய சகோதரத்துவ அன்புறவு, சமநீதி உரிமைகள், பொறுப்புகள், ஒன்றிணைந்த நற்செய்திச் செயல்பாடு என்பவற்றைக் கொண்டதாக இருத்தல் அவசியம்.

 முதல் மூன்று நூற்றாண்டுகளாக பெரிதும் அத்தகைய ஓர் இயக்கமாகவே திருஅவை திகழ்ந்தது. ஆனால், அதன் பின்பு முதலில் உரோமைப் பேரரசுடனும் பின்பு ஐரோப்பிய பண்ணை நிலமுடைமை

சமூகத்துடனும் சமரசம் செய்து கொண்டு அவற்றின் பாணியிலேயே அது தன்னையும் கட்டமைத்துக் கொண்டது.இதனால் அதுபுறச் சமூகத்தில் புரையோடிக் கிடந்த அரசியல் ஆதிக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனம் குலம்-நிறம்-பால் என்பவற்றின் அடிப்படையில் நிலவிய பல்வேறு பாகுபாடுகள் என்பவற்றைத் தன் நடுவிலிருந்து வேரறுத்துவிட்ட மாற்றுக் கலாச்சார சமூகமாகச் செயல்படத் தவறியது. மாறாக, அது பெரும் பெரும் மாட அல்லது கோபுரக் கோயில்களைக் கட்டிக்கொண்டு, அவற்றில் ஆடம்பர வழிபாடுகளையும், மிகை அலங்காரக் கொண்டாட்டங்களையும் நடத்துவதை முதன்மைப்படுத்திய கோயில் சமயமாகவே பெரிதும் மாறியிருந்தது. திருப்பணிகளின் பொறுப்பு, ஆட்சி அதிகாரம், இறையியல் அறிவு, நிதி நிர்வாகம் என்பவற்றைத் தங்கள் தனி உரிமையாக வைத்திருந்த, குருகுலம் எனும் ஆதிக்க உயர் சாதியை உருவாக்கிக் கொண்டு, மிகப் பெரும்பான்மையினராகிய நம்பிக்கையாளர்களை சம மாண்பும் உரிமையும் பணிகளில் சமப்பங்கேற்பும் அற்ற இரண்டாம் நிலையினராகவே அது ஆக்கியிருந்தது. இந்நிலையை மாற்றும் நோக்கில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அதனைஇறைமக்கள் சமூகம்என அடையாளப்படுத்தியது. ‘திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும், செயல் பொறுப்பிலும் சமமானவர்களேஎனப் புதிய திருஅவைச்சட்டமும்(208) முழக்கமிட்டு, பங்கேற்பு அமைப்புகளை ஏற்படுத்த முயன்றது. இருப்பினும் திருஅவை இன்றும் பெரிதும் அருள்பணியாளர்களின் சமயமாக இயங்குகின்றதே அன்றி மக்கள் சமயமாக அல்ல; பெரும்பான்மையான பொதுநிலையினர், அதிலும் குறிப்பாகப் பெண்கள், அதில் குரல் அற்றவர்களாகவே இருக்கின்றனர். நாம் எல்லாரும் பழகிவிட்ட இத்தகைய மரபுப் பாணிச் சிந்தனைகளையும் செயல்முறைகளையும் கைவிட்டு இயேசுவின் உண்மையான இறையாட்சி இயக்கமாகவும், உறுப்பினர் அனைவரும் சகோதர உறவுடனும் சம பொறுப்புடனும் பல்வேறு தளங்களில் இணைந்து பயணிப்பது எவ்வாறு என்பது பற்றி சிந்தித்துச் செயல்படுவதே, அடுத்துவரும் ஆயர் மாமன்றத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் விரும்பும் முதல் கட்ட முன்தயாரிப்பு. அதற்கென அவசரமாக நாம் முன்னெடுக்கவேண்டிய நடைமுறை சார்ந்த சில முக்கிய செயல்பாடுகள் இதோ:

சகோதரக் குழுமங்கள் ஆவோம்

நீங்கள் யாவரும் சகோதரர்கள், சகோதரிகள்... ஏனெனில், உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்” (மத் 23: 8-9) என்பதுவே இயேசுவின் படிப்பினைகள், பணிகளின் சாரம். இத்தகைய சகோதர உறவுக் குழுமங்களாக வாழ்வதே உண்மைக் கிறித்தவம். இதுவே இயேசு தம் நம்பிக்கையாளர்களிடம் எதிர்பார்த்தச் சீடத்துவம். இவ்வாறுதான் அவரும் வாழ்ந்து காட்டினார், தம் சீடர்களையும் வாழ்ந்திடப் பணித்தார். அவ்வாறுதான் தொடக்ககாலக் கிறித்தவர்களும் வாழ்ந்தார்கள். ஆனால்; இன்று அவர்கள் சிறிய அல்லது பெரியபங்குகளில் கிறித்தவக் கூட்டமாக வாழ்கின்றார்களே அன்றி இயேசுவின் உண்மையான சீடர்களின் அன்புறவுக் குழுமங்களாக அல்ல. மேலும் கிறித்தவர்கள் பெரிதும் மாளிகைக் கோயில்களில் ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே ஒன்றுகூடி வருகின்றனர், ஒருவரை ஒருவர் அன்பு செய்யாதவர்களாகவே கடவுளை வழிபடுகின்றனர், ஒருவர்மீது ஒருவர் அதிகம் அக்கறையின்றியே வெளியேறிச் சென்றுத் தங்கள் அன்றாட வாழ்வைத் தொடர்கின்றனர். இதுவே பெரும்பான்மையான பங்குகளில் காணப்படும் இன்றைய நிலை. ஆனால், அன்றாடச் சகோதர உறவும் பகிர்வும் இன்றிக் கிறித்தவ வாழ்வு இல்லை.கொரிந்துநகர் கிறித்தவர்களிடம் அவை இல்லாததால்தான் அவர்களை நோக்கி, “இந்நிலையில் நீங்கள் ஒன்றாகக் கூடிவந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல” (1கொரி 11:20) எனக் கண்டிக்கிறார் புனித பவுல்.

 எனவே, பெரிய பங்குச் சமூகங்களாக வாழும் கிறித்தவர்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து, அன்பு செய்கின்ற, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து இணைந்து பயணிக்கின்ற உண்மையான சகோதரக் குழுமங்களாகப் புத்தாக்கம் பெறவேண்டும். வழிபாட்டிற்குக் கூடிவரும் கோயில்-கிறித்தவர்களாக நின்றுவிடாமல் வாழ்வுக்-கிறித்தவர்களாகி அவர்களிடையே ஆதரிக்கப்படாத ஏழைகள் இல்லை, அடைக்கலம் கிடைக்காத அனாதைகள் இல்லை, கவனிக்கப்படாத நோயாளர்கள், முதியோர் இல்லை எனும் நிலைஉருவாகஅன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை” (கலா 5:6) அவர்களிடையே வளர்ந்தோங்க வேண்டும்.

சாதியத்திற்கு அடிப்போம் சாவுமணி

இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்க என்றும், அடிமைகள் என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை…... கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3:28) என முழக்கமிட்டார் புனித பவுல். ஆனால், தமிழகத் திருஅவையில் அன்று முதல் இன்று வரை, அடி முதல் முடி வரை சாதிய உணர்வு தலைதூக்கி நிற்பது கண்கூடு. ஆயர்களின் நியமனங்கள், அருள்பணியாளர் பதவிகள், துறவியர் தலைவர் தேர்தல்கள், மறைமாவட்டங்கள் பங்குகள் பிரித்தல், நிறுவனங்கள் ஏற்படுத்தல் எனப் பல்வேறு துறைகளில் சாதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பலரும்அறிந்ததே. இது எங்கள் சாதி மறைமாவட்டம் அல்லது துறவு அவை. இதில் எங்கள் சாதியினருக்கே உயர் பதவிகள் தரப்பட வேண்டும் என வெளிப்படையாகவே பேசவும், செயல்படவும் கூடிய அருள் (?) பணியாளர்களும் அருள் (?) சகோதரிகளும் கூட இன்னும் பலர் இருக்கின்றனர். சிறுபான்மைச் சாதியினரை பங்கு உறுப்பினராகச் சேர்க்க மறுத்தல், சாதிக் கல்லறைகள் எனும் பாகுபாடுகளும் இன்னும் பல இடங்களில் தொடரத்தான் செய்கின்றன. இத்தகைய உளப்பாங்கும் பாகுபாடுகளும் தொடரும்வரை எந்தத் திருஅவையும் இயேசுவின் உண்மையான திருஅவை அல்ல. எனவே, சாதியப் பாகுபாடுகள் அனைத்தும் முற்றிலும் களையப்பட வேண்டும். தனிச் சாதிப்பங்குகள், கல்லறைகள் என்பவற்றில் உடனடியாகஅனைத்து சாதியினருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். பிடிவாதமாக மறுப்பவற்றிற்கு அருள்பணியாளர்களது பணி நிறுத்தப்பட வேண்டும்.

பெண்களும் சம உரிமையினரே

இயேசுவின் புரட்சியான செயல்பாடுகளுள் ஒன்று தம்முடையத் தோழமையிலும் பணியிலும் பெண்களுக்கு அவர் தந்த சமத்துவம். ஆண்களைப் போலவே சில பெண்களையும் அவர் தம் சீடர்களாகக் கொண்டிருந்தது மட்டுமின்றித் தம்முடன் ஊர்ஊராக, நகர்நகராக அவர்களையும் இறுதிவரை அழைத்துச் சென்றுத் தம் பணிகளிலும் அவர்களுக்குப் பங்களித்தார் (லூக் 8:1-3,மத் 27:55-56). அவரது உயிர்த்தெழுதலின் முதல் சாட்சிகளாகி, திருத்தூதர்களுக்கு அதை அறிவித்து, ‘திருத்தூதர்களுக்கே திருத்தூதர்என மகதலா மரியாவைப்பற்றி புனித அகுஸ்தினார் குறிப்பிடுவது போன்று அவர்கள் பணிஉரிமை பெற்றிருந்தவர்கள்.இதனைப் பின்பற்றியே தொடக்கக் கிறித்தவ அவைகளில் பெண்கள் பல்வேறு பணிகளில் தலைமை ஏற்றுச் செயல்பட்டனர் ( உரோ 16). இது அன்றைய அன்றைய ஆணாதிக்க சமூகங்களின் முறைமைகளுக்கும் யூத சமயத்தின் பெண் தீட்டுக் கருத்தியலுக்கும் நடைமுறைகளுக்கும் எதிரான மாற்றுக் கலாச்சார நற்செய்திச் செயல்பாடு.

இயேசுவின் இத்தகைய புரட்சியான சிந்தனையையும், செயல்பாணியையும், நடைமுறைப் படுத்தினால்தான் தமிழகத் திருஅவை இன்று உண்மையானதாக இருக்கமுடியும். பெண்கள் தாம் வழிபாடுகளில் அதிகம் பங்கெடுக்கின்றனர், பெரும்பான்மையான பணிகளையும் ஆற்றுகின்றனர். இருப்பினும் திருஅவையின் ஆட்சியுரிமையிலும், திருப்பணிகளிலும், அவர்களுக்குப் பங்கு இல்லை. இயேசுவின் சீடர்கள் நடுவேஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை” (கலா 3:28) எனப் புனித பவுல் முழங்கி விரைவில் ஆண்டுகள் ஈராயிரம் ஆகவிருக்கிறது என்றாலும்கூட, திருஅவை ஆணாதிக்க சமுகமாகவே தொடருகிறது என்பதுதான் துயரநிலை எனவே, திருஅவையின் திருப்பணிகள், அதிகார அமைப்புகள் அனைத்திலும் பெண்களது சம உரிமையையும் பங்கேற்பையும் நடைமுறைப்படுத்த உடனடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உரையாடல் திருஅவையாக உருவாகிட

உரையாடல் இன்றி உறவு இல்லை. திருஅவை உண்மையான, உயிரியக்கம் உள்ள சகோதர உறவுக் குழுமங்களாகவும், ஒன்றிப்புறவு சமூகமாகவும் உருவாகி வளர்ந்திட வேண்டுமெனில் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இடையே உளம் திறந்த நலமான கலந்துரையாடல் நாளும் அவசியம். இது திருஅவையின் எல்லா நிலைகளிலும் குழுக்களிலும் அவற்றிற்கு இடையிலும் நடைறெ வேண்டும். எனினும் முதலில், அது திருஆட்சியாளர்களுக்கும், பொதுநிலையினருக்கும் இடையே நிகழ்வது மிகவும் அவசியமானது. அவ்வாறே பங்கு அருள்பணியாளர் - மக்கள், பல்வேறு பங்கேற்புஅமைப்புகள், பணிக்குழுக்கள், கழகங்கள் என்பவற்றின் தலைவர்கள் - உறுப்பினர் என்போருக்கு இடையிலும் அது நிகழ வேண்டும். என்னுடைய கருத்துகள் கேட்கவும், மதிக்கவும் படவில்லை, என்னுடைய தேவைகள் கண்டு கொள்ளப்படவில்லை என எவரும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டுவிட்ட உணர்விற்கு ஆளாகாத நிலை உறுதி செய்யப்படுவது அவசியம். குறிப்பாக, பல கிறித்தவ சமூகங்களில் கண்டு கொள்ளப்படாதவர்களாக இருக்கும் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மைச் சாதியினர், மொழியினர், தாங்களாகவே ஒதுங்கி இருக்கும் புதுவரவினர், மாற்றுச் சிந்தனையினர், அதிருப்தியாளர் என்போரை ஒவ்வோரு கிறித்தவ சமூகமும் தேடிச்சென்று, அவர்களுடன் உரையாடி, அவர்களை உறவாக்கிக்கொள்வதும் அவசியம். ஏனெனில், விளிம்புநிலையிலிருந்தே பல வேளைகளில் புதிய விடியல்கள் தோன்றுகின்றன.

 உரையாடல் நடைபெற வேண்டியது திருஅவையின் பல்வேறு உறுப்பினர்களுக்கு இடையேமட்டும் அல்ல; சீர்திருத்த திருஅவையினர் பிறசமயத்தினர், நல்மனம் கொண்ட பல்வேறு தன்னார்வக் குழுக்கள், இயக்கத்தினர் என்போருடனும் தான். அவர்கள் வழியாகவும் தூய ஆவியார் நமக்குப் புதிய ஈடுபாடுகளுக்கான அழைப்பு விடுக்கமுடியும்.

பணிகள் பலவாக்கிப் பகிரப்படவேண்டும்

எல்லாரும் வாழ வேண்டும், நிறைவாக வாழ வேண்டும்” (யோவா 10:10) எனும் இயேசுவின் இறையாட்சி இலட்சியத்தைச் செயல்படுத்துவதே திருஅவையின் ஒரே நோக்கமும் பணியும். இன்றைய மனித

சமூகத்திலே அதற்கான புதிய வாய்ப்புகளும் பல, அதற்கு எதிரான ஆதிக்கங்களும் அநீதிகளும்கூட மிகப் பலவே. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி மக்களது வாழ்வுகளை வளர்க்கவும் அவற்றிற்குத் தடையிடுபவற்றை எதிர்த்துச் செயல்படுவதும் அவசியம். இதனால் முன்புபோல வழிபாடு களையும் பக்தி முயற்சிகளையும் அன்பிரக்கச் செயல்பாடுகளையும் மட்டும் நிறைவேற்றும் வெறும் சமய நிறுவனமாக இருந்துவிட முடியாது. இப்பின்னணியில்தான் திருஅவைக் குழுமங்களில் பல்வேறு புதுப் பணிகள், புறசமூகத்தில் திருஅவை முன்னெடுக்க வேண்டிய புதிய பல ஈடுபாடுகள் என்பன இன்றைய காலத்தின் கட்டாயங்கள் ஆகியுள்ளன. இத்தகையப் பல்வகைப் பணிகளைத் திறம்பட ஆற்ற அதிக எண்ணிக்கையில் திருப்பணியாளர்கள் அவசியம்.

இதனைக் கருத்தில்கொண்டு தான் 1973 ஆம் ஆண்டிலேயே, திருத்தந்தை ஆறாம் பவுல் சில திருப்பணிகள் (Ministeria Puaedam) எனும் மடலின் வழியாக வாசகர், பீடப் பணியாளர் எனும் பழைய பணிகளுக்குப் புதுவடிவம் கொடுத்ததுடன் அவற்றைப் பொதுநிலையினர் திருப்பணிகள் என விரிவாக்கமும் செய்தார். மேலும், அவைபோல் தலத்திருஅவைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஏனைய திருப்பணிகளையும் ஆயர் பேரவைகள் திருத்தந்தையின் இசைவுபெற்றுஏற்படுத்தலாம் என்றும் ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு ஆயர் பேரவை நற்செய்திப் பணி, நற்கருணைப் பணி, நோயில் பணி, நீதிப் பணி என நான்குப் பொதுநிலையினர் திருப்பணிகளை ஏற்படுத்தியது. அவற்றிற்கான பயிற்சிகளும் நடத்தப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஆயர்கள் அத்தகையப் பயிற்சிகளுக்கு அதிகப் பொதுநிலையினரை அனுப்பவும் இல்லை; அனுப்பியிருந்தாலும் பயிற்சிபெற்ற பலருக்குப் பணிநியமனம் தரப்படவும் இல்லை. இதைவிடத் துயர்மிகு செயல் ஐம்பது ஆண்டுகளுக்கு அதிகமாகத் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுநிலையினருக்கான வேதியர் பயிற்சியை அவர்கள் நிரந்தரமாக நிறுத்தியது தான். பொதுநிலையினர் திருப்பணிகள் பற்பல என ஆக்கிப் பகிரப்பட வேண்டிய இக்காலக்கட்டத்தில் இத்தகைய பணி மறுப்புகளும் நிறுத்தல்களும் நடைபெறுவது பொறுப்பின்மையா? அருள்பணியாளர் ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடா? எனும் கேள்விக்கு இடம் அளிக்கிறது.

என்னவெனினும், அருள்பணியாளர் இன்றித் திருப்பணிகள் இல்லை எனும் ஆதிக்க அமைப்பு முறையும் மனநிலையும் உடனடியாக முடிவுக்கு கொணரப்பட வேண்டும். ஆண்-பெண், திருமணம் ஆனோர் -ஆகாதோர் எனும் வேறுபாடுபரராது, மரபுத் திருப்பணிகளையும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, புதிதாக உருவாக்கப்பட வேண்டிய பல்வேறு பணிகளையும் அததற்கு உரியத் தகுதியும் திறமையும் கொண்ட எல்லாருக்கும் தேவைக்கு ஏற்ப உரிய நீண்ட அல்லது குறுகிய கால பயிற்சியளித்து வழங்கப்பட வேண்டும். ஏனெனில், ஒரு குலத்தின் உரிமை என யூத சமயத்தில் இருந்த குருத்துவப் பணியை தம் சீடர்கள் அனைவரது கடமை என ஆக்கியவர் இயேசு. இதனால்தான்நீங்கள்... அரச குருக்களின் கூட்டத்தினர்“ (1பேது 2:9) எனப் புனித பேதுருவும் கூறியுள்ளார். மேலும், திருமுழுக்கு, உறுதிபூசுதல் எனும் அருளடையாளங்களில் பெறப்படும் திருநிலைப்பாடு வழியாக அனைத்து நம்பிக்கையாளர்களும் இயேசுவின் குருத்துவ, இறைவாக்கு, தலைமைப் பணிகளில் பங்கேற்கின்றனர் என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் அழுத்தமான படிப்பினை (திருஅவை).

கூட்டுத்தலைமை தேவை!

தலைமைப் பொறுப்பு என்பது திருஅவையில் வெவ்வேறு வகைகளில் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரியது. ஆனால், அண்மைக்காலம் வரை திருஅவை படிநிலை ஆட்சியமைப்பைக் கொண்டதாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதாவது, உலகளாவிய திருஅவையில் அனைத்து அதிகாரமும் திருத்தந்தைக்கு உரியது,அவர்அதைப் பகிர்ந்து அளிப்பதால் மறைமாவட்டங்களில் அனைத்து அதிகாரமும் அதனதன் ஆயருக்கு உரியது, அதில் பங்கு பெறுவதால் அருள்பணியாளர்கள் தத்தம் பங்குகளில் அனைத்து அதிகாரமும் கொண்டவர்கள் எனும் ஆட்சியமைப்பே இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலம்வரைத் திருஅவையில் நடைமுறையில் இருந்தது. இதனால் திருத்தந்தையும் ஆயர்களும் அருள்பணியாளர்களும் புனிதப்படுத்தும், போதிக்கும், ஆளும் திருநிலையினர் எனவும், ஏனையோர் புனிதப்படுத்தப்படும், போதனைபெறும், ஆளப்படும் பொதுநிலையினர் எனவும் திருஅவை இரண்டாகப் பிரித்துப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக அதில் பரவலாக இருந்தது திருநிலையினர் ஆதிக்கம். இதனைக் களையும் வகையில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் பொதுநிலையினரை உள்ளேற்றப் பல்வேறு பங்கேற்பு அமைப்புகளை ஏற்படுத்த ஆணையிட்டது அல்லது பரிந்துரைத்தது.

ஆனால், அந்தப் பங்கேற்பு அமைப்புகள் இன்னும் பல்வேறு மறை மாவட்டங்களில் ஏற்படுத்தப் படவில்லை. ஏற்படுத்தப்பட்ட பல இடங்களிலும் அவை பொதுநிலையினரின் ஆக்கபூர்வமான பங்கேற்பையும், பணிப்பொறுப்பையும் உறுதி செய்துள்ளது என நாம் கூறுவதற்கு இல்லை. இதற்கு முக்கிய ஒரு காரணம்திருஅவையைப் பிடித்திருக்கும் புற்று நோய்எனத் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டும் அருள்பணியாளர் ஆதிக்கம். அதற்கு வழியமைப்பது அப்பங்கேற்பு அமைப்புகள் சட்டபூர்வமாக வெறும் அறிவுரை மன்றங்களாக இருப்பதுதான். அதாவது, அவற்றின் ஒரே மனதான ஒத்த கருத்துகள்கூட வெறும் பரிந்துரைகளே. அவற்றை ஏற்றோ, மறுத்தோ இறுதியாகவும், அறுதியாகவும் முடிவேடுக்கும் அதிகாரம் முற்றிலும் அருள்பணியாளர்களுக்கும் ஆயர்களுக்கும் திருத்தந்தைக்குமே உரியது என்பதே இன்றும் உள்ள சட்டம். இத்தகையப் படிநிலை ஆட்சிமுறையை மாற்றிக் கூட்டுத் தலைமை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதாவது, அனைத்துலக மறைமாவட்ட அல்லது பங்கு என எந்தத் திருஅவையெனினும் அதில் முக்கிய முடிவுகள் அனைத்தும்அதன் எல்லா பகுதியினர், நிலையினருடைய கருத்துகளும் திறந்த மனதுடன் கேட்கப்பட்டு அவர்களுடைய பதிலாட்களுடன் இணைந்து எடுக்கப்படும் என்பது கூட்டியக்கத் திருஅவையின் இயல்பும் இயங்கு முறையும் ஆகும். அடுத்த அனைத்துலகத் திருஅவையின் (ஆயர்) மாமன்றத்தைக் கூட்டத் திருத்தந்தை அழைப்பு விடுத்திருப்பதன் முக்கிய ஒரு நோக்கம் இது என நாம் கருதலாம்.

பரவலாக்கப்படவேண்டும் பயிற்சிகள்

திருஅவையின் ஓரநிலையினர் உட்பட அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு இயன்ற அளவு அவைஏற்கப்படுவது, முக்கிய முடிவுகள் அனைத்தும் அனைத்து உறுப்பினர்களின் பதிலாள்களால் இணைந்து எடுக்கப்படுவது, திருப்பணிகள் இன்றைய உலகின் நற்செய்திப்பணித் தேவைகளுக்கு ஏற்பத் திருப்பணிகள் புதியனவாகவும் பலவாகவும் ஏற்படுத்தப்பட்டுப் பலருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவது என்பன கூட்டியக்கத் திருஅவையின் முக்கிய சில கூறுகள். இவைநலமாக நடைபெற வேண்டுமெனில் இவற்றிற்கு உரிய பயிற்சிகள் பரவலாக்கப்படுவது இன்றியமையாதது. இன்றுவரைத் தமிழ்நாட்டுத் திருஅவையில் அருள்பணியாளர்களுக்குப் பெரும் பொருள்செலவில் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் பயிற்சி தரப்படுகிறது. ஆனால், பொதுநிலையினர் பணிகளுக்கான பயிற்சிகள் அரிதானவையாகவும், குறுகியனவாகவுமே தரப்படுகின்றன. எட்டு, ஒன்பது ஆண்டுகள் என நீண்ட பயிற்சி பெற்றுவரும் அருள்பணியாளர்களுள் பலர் (சிலவேளைகளில் ஒரு நூறுக்குக் குறைவான கத்தோலிக்கக் குடும்பங்களே உள்ள பங்குகளில் இருந்து)தினமும் திருப்பலி நிறைவேற்றுவது தவிர என்னப்பெரிதாகப் பணிசெய்கின்றனர் எனும் கேள்வியும் எழத் தொடங்கியுள்ளது. இத்தகைய அருள்பணியாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதைவிட பல்வேறு வகைகளில் பகுதிநேரம் பணியாற்றக்கூடிய மிகப்பல பொதுநிலையினருக்குப் உரிய பல்வேறு பயிற்சிகள் தந்து அவர்களைப் பணிஅமர்த்தலாமே. அவர்களுள் பலர் இன்றைய பல அருள்பணியாளர்களைவிட அதிக அறிவும் திறமையும் அர்ப்பணமும் கொண்டவர்கள் என்பது அனுபவத்தில் நாம் காணும் மெய்ம்மை.

இறுதியாக

மாபெரும் யூபிலி 2000த்தை ஒட்டியும் பின்பும் தமிழ்நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களில் மாமன்றங்கள்-இறைமக்கள் பேரவைகள் கூட்டப்பெற்றன. பேரார்வத்துடனும், மிகுந்த எதிர்நோக்குடனும், பல்வேறு அருள்பணியாளர்களும், பொதுநிலையினரும் அவற்றில் பங்கேற்றனர். ஆழமான கருத்துரைகள் பல ஆற்றப்பட்டன. ஆவேசமான கலந்தரையாடல்களும் நடைபெற்றன. காலத்திற்கு ஏற்ற புதிய பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. மகிழ்ச்சி ஆரவாரத்தோடு பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், கடந்த 20ஆண்டுகள் பின்நோக்கிப் பார்க்கும்போது நமக்கு எஞ்சுவது மிகுந்த ஏமாற்றமே. ஏனெனில், ஓரிரு மறைமாவட்டங்கள் நடைமுறைப்படுத்திய ஓரிரு முடிவுகள் தவிர எண்ணற்ற ஏனையவை செயலாக்கம் எனும் விடிவைக் காணவில்லை என்பதே துயர்மிகு மெய்ம்மை. கூட்டியக்கத் திருஅவை ஆவோம் எனும் முழக்கத்துடன் அனைத்துலகத் திருஅவையுடன் நாம் தொடங்கும் அடுத்த மாமனறத்திற்கானக் கலந்தாய்வுகளுடன் முன்னைய இத்தகைய முயற்சிகள் தோல்வியைத் தழுவியதன் காரணிகளையும் இனம் கண்டு அதே வரலாறு தொடர்கதை ஆவதைத் தடுக்கவும் திடமான முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம்.

Comment