No icon

உலக இறைமக்கள் கூட்டியக்க மாமன்றம்

கூட்டியக்கத் திருஅவை (Synodality) உலக இறைமக்கள் கூட்டியக்க மாமன்றம்

இயேசு திருஅவையை ஏற்படுத்தினாரா?

இக்கேள்வி விவிலிய ஆய்வாளர்கள், இறையியலார்கள், விமர்சன சிந்தனையாளர்களால் கேட்கப்படும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குப் பலரும் பலவாறு பதில் சொல்கின்றனர். இவர்களது பதிலை இரு சொல்லடர்களில் அடுக்கலாம். இவை இல்லை, ஆம் என்பனவாகும்.

இன்றையத் திருஅவையில் காணப்படும் அதிகாரக்குவிப்பு, அருள்பணியாளர்கள் ஆதிக்கம், இறைமக்களுக்கு எதிரான சில எதேச்சதிகாரப் போக்குகள், நிதி நிர்வாகச் சீர்கேடு, பாலியல் ஒழுக்கக்கேடு, ஊழல், வெளிப்படுத்தன்மையின்மை, ஏழைகளை, பெண்களை தலித் மக்களை ஓரம் கட்டுதல், சாதி - தீண்டாமை செயல்பாடுகள், இலட்சிய தலைமையின்மை, குருக்கள் மீது அவநம்பிக்கை - இவை போன்றவை நிலவுகின்ற இன்றையத் திருஅவையை இயேசு உறுதியாக ஏற்படுத்தவில்லை. இதுஇல்லைஎன்பதற்கான பதில்.

இயேசு, வாழ்வு முழுவதும் ஆவியாரின் ஆற்றலால் இயக்கப்பட்டு, தம் தந்தையின் திருவுளமாகிய இறையட்சியை - சமதர்ம, சகோதரத்துவ சமுதாயத்தை - எடுத்துரைத்தார், வாழ்ந்தார். தமது இந்த இலட்சியத்தைச்  செயலாக்க தம்மைப் போல ஆவியாரால் இயக்கப்படும் சீடர்கள் கொண்டு குழுவை ஏற்படுத்தினார். இது தெடக்கத்தில்இயேசு இயக்கம்என்றும் பின்புதிருஅவைஎன்றும் அழைக்கப்பட்டது.

இத்திருஅவை, இறையாட்சியை இவ்வுலகில் கொண்டுவர வேண்டிய ஒரு கருவி பணியாள். இந்த வகையில் இயேசு திருஅவையை ஏற்படுத்தினார் எனலாம். இதுஆம்என்பதற்கான பதில். இத்தகைய மக்கள் இயக்கத்தை, குழுவை திருத்தூதர்கள் பணியில் காணலாம் (திப 2 : 42 - 47; 4 : 32 - 37).

கி.பி. 313 இல் கான்ஸ்டன்டைன் அரசன் காலத்தில் உரோமைப் பேரரசு கிறிஸ்தவமானபோது, இம்மக்கள் இயக்கம் சிதையத் தொடங்கியது. இதை மீண்டும் தூக்கி நிறுத்த திருஅவையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இரண்டாம் வத்திகான் பொதுச்சங்கம் (1962 - 65) இடம் பெற்றது. பல மாற்றங்கள் நடந்தன. ஆயினும் இச்சங்கத்தின் கனவும், இலக்கும் அமைப்பு ரீதியாக முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை என்பது தான் எதார்த்தம், உண்மை.

உலக ஆயர்கள் மாமன்றம்

இயேசுவின் பணிப்பிரகடனக் கனவை (லூக் 4: 18 -19), இரண்டாம் வத்திகான் சங்கம் தொடர முனைந்தது. ஆனால், எதிர்பார்ப்பது போல இது நிறைவேறவில்லை. இன்று பலவகையிலும் சுரண்டப்படும் விளிம்பு நிலை மக்களை முன்னிலைப்படுத்தி (லூக் 6 : 20), காலத்தின் குறிகளைத் துழாவி அறிந்து, இன்றையத் திருஅவையை கூட்டியக்கத் திருஅவையாக மாற்ற நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னெடுக்கும் இலட்சிய முயற்சியே உலக ஆயர்கள் மாமன்றம் (2021 - 2023) ஆகும்.

கத்தோலிக்கத் திருஅவையில் நடந்த இரண்டாம் வத்திகான் பொதுச்சங்கம் உண்மையிலேயே ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. காரணம், அதுவரை அடைப்பட்டிருந்த திருஅவையைத் திறந்து விட்ட பெருமை இச்சங்கத்திற்கு உண்டு. உலகோடு உரையாடல், பண்பாடுகளோடு உரையாடல், சமயங்களோடு உரையாடல் என்று மும்முனை உரையாடலை இச்சங்கம் முன்வைத்தது.

மேலும், திருத்தந்தை 12 ஆம் பியுஸ்பொது நிலையினரே திருஅவைஎன்று  சொன்னதை உறுதிப்படுத்தி, ‘இறைமக்களே  திருஅவை’  என்று  அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டது. சங்கம் இறைமக்களுக்கு மத்தியில் சம மாண்பும், மதிப்பும் உண்டு என்கிறது. ஆனால், இந்த இலட்சிய பார்வைக்கும் எதார்த்தத்திற்கும், இடையில் ஒரு இழுபறித்தன்மை இன்றளவும் தொடர்கிறது.

சங்கம் நிறைவுற்றப்பின் (1965) சில ஆயர்களுடைய வேண்டுகோளின்படி, திருத்தந்தை ஆறாம் பவுல்ஆயர்கள் மன்றம்என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். உலக ஆயர்களுடைய பகராளிகள் அவ்வப்போது ஒன்று கூடி மாறிவரும் காலத்தின் அறிகுறிகளை நற்செய்தியின் ஒளியில் ஆய்வு செய்து திருத்தந்தையிடம் அதை ஒப்படைப்பார்கள். திருத்தந்தை தமது திருத்தங்கள், சேர்க்கை, குழுவுடன் அதை வெளியிடுவார். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் வேறுபட்டது. இது உலகிலுள்ள எல்லா ஆயர்களையும் உள்ளடக்கும். மேலும், இதில் எல்லா இறைமக்களுடைய கருத்துகளும் குறிப்பாக விளிம்புநிலை மக்களுடைய கருத்துகளும் கவனமாகக் கேட்கப்படும். அப்படியானால், இதைஉலக இறைமக்கள் கூட்டியக்க (திருஅவை) மாமன்றம்என அழைக்கலாமே. மீண்டும் ஆயர்களை மையப்படுத்தி உலகஆயர்கள் மாமன்றம் 2021 - 2023 என அழைப்பதேன்?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் திருஅவையில் அடிப்படை சமத்துவத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறார். வத்திகான் நிதிநிலையைக் கண்காணிக்க ஆறு பெண்களை நியமித்திருக்கிறார். நத்தால் பெக்குவார்ட் என்ற பெண்ணை ஆயர்கள் மன்றத்தின் வாக்குரிமை பெற்ற ஒரு செயலராக நியமித்திருக்கிறார். பிரான்சிஸ்கன் அருள்சகோதரி இரபேலா பெத்ரினி என்பவரை வத்திக்கானின் பொதுச் செயலராக ஆக்கியுள்ளார். இவைகளும் இன்னும் திருத்தந்தையின் எளிய, சாட்சிய வாழ்வும் சில அதிரடிச் செயல்பாடுகளும் மிகவும் நம்பிக்கை தருவதாக அமைகின்றன. இதுபோல, திருஅவையில் நடைபெற இருக்கும் உலக மாமன்றமும் அடிப்படை அமைப்பு மாற்றங்களைக் கொண்டுவந்து, படிநிலை வடிவத் திருஅவையை வட்டவடிவ சமத்துவத் திருஅவையாக மாற்றும் என எதிர்பார்க்கலாமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மாமன்றத்தின் இலக்கு வாக்கு / மையப்பொருள்

தோழமை உறவு (ஒன்றிப்பு), பங்கேற்பு - பங்களிப்பு, இறையாட்சிப்பணி (நற்செய்தி அறிவிப்பு) என்பவற்றைக் கொண்டு, உலக கூட்டியக்கத் திருஅவையை 3000 மாவது ஆண்டில் திருத்தந்தை கனவு காண்கிறார். இம்மூன்று இலக்கு வாக்கு பற்றி சற்று ஆழமாகச் சிந்திப்போம்.

1. தோழமை உறவு (Communion) நட்புறவு

தோழமை உறவு என்பது, ஏதோ திருஅவை நிர்வாகத்தில் பொதுநிலையினருக்கு சட்டபூர்வமாக அல்லது அதிகாரப்பூர்வமாகப் பங்களிப்பது மட்டுமல்ல. பெரும்பான்மையினர் குடியரசில் முடிவு எடுப்பதும் அல்ல. தோழமை உறவுக்கு ஆழமான ஓர் இறையியல் அடித்தளம் உண்டு. திருமுழுக்கு அருள் அடையாளத்தின் மூலம் அனைவரும் சமமாக (திருஅவை 32, இன்றைய உலகில் திருஅவை 29) ஓருடலக (1கொரி 12: 12-31) இணைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஏற்றத்தாழ்வுகள் இல்லை, செயல் வேறுபாடுகளும் உண்டு. ஆனால், மேல் - கீழ் என்ற பாகுபாடுகள் இல்லை. திருஅவையின் சாரமே சமத்துவம் தான் (மத் 23: 8 - 9). இதனால்தான் Communion என்பதை தமிழில் வெறும்உறவு என்று மட்டும் குறிப்பிடுவது இதன் ஆழமான அடிப்படையை உணர்த்தாது.

திருப்பலியில் கூடதூய ஆவியாரின் நட்புறவும் (Communion or fellowship) என்று குரு வாழ்த் துகிறார். இதில் சமத்துவம் இருக்கிறது, சம பங்களிப்பு இருக்கிறது, சம பணி இருக்கிறது. தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆட்களாக இறைவன் இருக்கிறார். தந்தை, மகன் அல்ல, மகன் தூய ஆவியார் அல்ல; இவர்கள் ஆள் வகையில் வேறுபட்டவர்கள். ஆனால், சமமானவர்கள். இந்த மூவொரூ இறைவனின் அன்புறவில் தான் மானிடரின் தோழமை உறவு ஆழமாக வேரூன்றியுள்ளது.

மேலும், கூட்டியக்கத் திருஅவை (Synodality) என்பது ஓர் ஆழமான கிறிஸ்தவ மானிட இயலில் வேரூன்றி நிற்கிறது. இறைவன் ஒரு மறைபொருள். இந்த மறைபொருளின் ஒரு சிறிய வெளிப்பாடு அல்லது பங்கேற்புதான் இறைச்சாயலில் படைக்கப்பட்ட மானிடர். எனவே, மறைபொருளான இந்த மானிடரை மதிப்போடும், மாண்போடும் நடத்த வேண்டும். மனிதர்களை செயப்படுபொருளாக (Objects) உபயோகப்படுத்தக் கூடாது. மாறாக, எழுவாயாக (Subjects) நடத்த வேண்டும். இவர்களது கருத்து, எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறுவர்களிடமிருந்தும், ஓரங்கட்டப்பட்டவர்களுடைய வாழ்வு அனுபவத்திலிருந்தும் ஞானம் வெளிப்படும் (லூக் 10:21). ஆக, எல்லாரையும் திறந்த மனத்தோடு, வியப்போடு பார்க்க, அணுக வேண்டும். அப்போதுதான் ஏழை எளியவர்களின் கருத்துகள் முக்கியத்துவம் பெறும்.

2. பங்கேற்பு - பங்களிப்பு (Participation)

அருள்கொடைகள் பலவகையுண்டு. ஆனால், தூய ஆவியார் ஒருவரே. ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை, வேறொருவருக்கு நம்பிக்கையை, மற்றொருவருக்குப் பிணி தீர்க்கும் அருள்கொடையை, ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலை, இன்னொருவருக்கு இறைவாக்கு உரைக்கும் ஆற்றலை, வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலை, மற்றொருவருக்கு பல்வகை பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றலை, பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்தூய ஆவியார். தம் விருப்பம் போல் ஒவ்வொருவருக்கும் பொது நன்மைக்காக இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்” (1 கொரி 12: 4, 7 - 11).

தூய ஆவியாரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அருள் கொடைகள் வாயிலாக, அனைத்து இறைமக்களும் ஒருவர் ஒருவருக்குப் பணிபுரியத் தகுதி பெறுகிறார்கள். திருஅவையின் விளிம்பில் உள்ளவர்களை அல்லது ஒதுக்கப்பட்டவர்கள் என உணர்பவர்களை ஒன்று கூட்டிச் சேர்த்து, அவர்களது வளங்களோடு திருஅவை முழுவதும் பொதுநன்மைக்காகச் செயல்படுவதை மாமன்ற நிகழ்வுகள் உறுதி செய்ய வேண்டும்.

3. இறையாட்சிப்பணி (நற்செய்தி அறிவிப்பு)

மூவொரு இறைவனால் அன்பு செய்யப்படும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள், தாங்கள் பெற்ற அன்புக்கு தங்களுடைய சமூகத்தில் சான்று பகர்ந்து வாழக் கடமைபட்டவர்கள். ஒவ்வொரு கொடைக்கும் ஒரு கடமை உண்டு. இந்த நற்செய்திப் பணிக்காகவே திருஅவை உள்ளது. இப்பணி நற்செய்தி அறிவிப்பையும், உள்ளடுக்கிய செயல்பாட்டுப்பணி அல்லது இறையாட்சியை இவ்வுலகில் கட்டி எழுப்பும் பணி. நல்மனம் படைத்த அனைவரோடும், நலமாக சக்திகள், மக்கள் இயக்கங்களோடும் இணைந்து செய்யும் பணி. இது சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு, ஆன்மீகம் போன்ற அனைத்துத் தளங்களையும் உள்ளடுக்கும் பணி. இப்பணி

ஈடுபாடு இல்லாதவர், தங்களது மீட்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறார்கள் (இன்றைய உலகில் திருஅவை, 43). சமயத்திற்கு தன் சமயம் சார்ந்த உறுப்பினர்களுக்கு செய்ய வேணடிய பணியும் உண்டு. தன் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடுமையும் உண்டு. நாம் எதிர்நோக்கும் கூட்டியக்க திருஅவை சமூகத்திற்கு செய்ய வேண்டிய பணிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியச் சூழலில் நற்செய்திப் பணி

நற்செய்தி அறிவிப்பு என்றதும் நமது கண்முன் வருவது மத்தேயு நற்செய்தி 28: 18 -20 மேலும் மாற்கு நற்செய்தி 16: 15 -18 பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் கடந்தகால வரலாற்றில் ஒரு வகையான ஆக்கிரமிப்பு, வன்முறைப் பணிக்கு (ஆளைளiடிn) வித்திட்டிருக்கின்றன.

மத்தேயு நற்செய்தி மற்றொரு பணி (Mission command) பற்றியும் பேசுகிறது. இதை நாம் பெரும்பாலும் மறந்துவிட்டோம். இது மலைப்பொழிவில் இடம் பெறும் உப்பும் - ஒளியும் (மத் 5: 13 - 16). நீங்கள் உலகிற்கு உப்பு. நீங்கள் உலகிற்கு ஒளி (மத் 5: 13-14). இதோடுகூட, நாம் இறையாட்சியின் (விண்ணரசின்) புளிப்பு மாவு (மத் 13 : 33) என்பதையும் இணைத்துக் கொள்ளலாம்.

இப்பகுதிகளில் அழுத்தம் பெறுவது நற்செயல்கள். “உங்கள் நற்செயல்ளைக் கண்டு உங்கள் விண்ணககத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்” (மத் 5 : 16) என்கிறார் இயேசு.

மத் 5: 13-14; 13-33 பகுதிகள் திருஅவையை மையப்படுவது இல்லை, இயேசுவையும் மையப்படுத்துவதில்லை. மாறாக, கடவுளை மையப்படுத்துகின்றன. திருஅவையையும், இயேசுவையும் கடந்து, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரையும் கூட்டியக்கமாக ஒன்றிணைக்க ஏதுவான பகுதிகள் இவை. பிரான்சிஸ் அசிசியார் சிலுவைப் போரின் போது, அமைதிப் பணியின் பொருட்டு எகிப்துக்குச் சென்றார். அங்குள்ள சுல்தான் மாலிக் - எல் - கமில் என்பரைச் சந்தித்தார். இந்நிகழ்வின் 800 வது ஆண்டு ஞாபகமாக திருத்தந்தை பிரான்சிஸ் 2019 இல் அபுதாபியில் கிராண்ட் இம்மாம் அகமத் - அல்-தாயப் அவர்களைச் சந்தித்தார். இருவரும் இணைந்துஉலக சமாதானத்திறக்காகவும், இணைந்து வாழ்வதற்காகவுமான மானிட சகோதரத்துவம்என்ற ஆவணத்தில் கையொப்பமிட்டனர். இதில் படைப்பின் இறைவன் மட்டும் இடம் பெறுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நற்செய்தி விழுமியங்களும் இடம் பெறுகின்றன. திருச்சபையோ, இயேசுவோ இடம் பெறவில்லை.

இந்தியர்கள் இறை மனிதர்களைப் பார்க்க  (தர்ஷன்) விரும்புகின்றனர். மேலே கண்ட உப்பு,ஒளி, புளிப்பு மாவுஇருத்தலை வலியுறுத்துபவை. மேலும்இது தனிமனித இருத்தலையும் கடந்து இறையட்சியின்  நீதிக்காகத்   துன்புறுத்தப்படும் இறைவாக்கினர்களின் குழும இருத்தலை வலியுறுத்துகிறது (மத் 5 : 6, 10-11, 18: 18 -  20). இவ்வாறு, நீதிக்காகத் துன்புறுத்தப்படும் இறைவாக்கினர்கள் தான் இவ்வுலகின் உப்பாய், ஒளியாய், புளிப்பு மாவாய் இருந்து உலகை உய்விக்கின்றனர். நற்செய்தி அறிவிப்பு என்பது  இவ்விருத்தல்  வாழ்வின் நீட்சியாகும். அப்போதுதான் அது பிறரைக் காந்தமாக ஈர்க்கும் சக்தியாக அமையும். இல்லையெனில் அது நற்செய்தி விளம்பரமாகும், வெற்று வார்த்தையாகும்.

Comment