No icon

அருள்பணி. ஜேம்ஸ் பீட்டர், கிறிஸ்துவின் சேனை

மன்றாடி மகிழ்ந்திடுவோம்

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்கிறார் (திபா 23:2).

எபேசு நகரில், இறைபணியாற்றிக் கொண்டிருந்த யோவான், பத்மு தீவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

நாடு கடத்தப்படுதல் என்பது மிகவும் கொடுமையான அனுபவம். தனிமைப்படுத்தப்பட்டு, எந்த தேவைகளும் கிடைக்காத பரிதாப நிலை.

ஆனால், ஆண்டவரின் பிள்ளைகளுக்கு எந்த இடமும் சொர்க்க பூமிதான்!

வேத கலாபனை காலத்தில், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். தங்களது வீடு, சொத்து, சொந்தங்களை இழந்து, அந்நியர் இடத்தில், அனாதைகள் போல் தஞ்சமடைவது பரிதாபமல்லவா! ஆனாலும், இவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஏன் நாங்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறோமென்றால், இயேசுவைப்பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காகத்தான்” (திப 8:4). ஆகவே, அவர்கள் எந்நிலையிலும் கிறிஸ்துவின் அமைதியில் ஆனந்தமாக இருந்தார்கள்.

கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டவர்களின் இதயத் துடிப்பாக மாறிய வசனம்கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி, கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனதையும் பாதுகாக்கும் (பிலி 4:5-7).

பாழடைந்த, வெறுமையான, துன்பமான, தனிமையான பத்மு தீவை அமைதியான நீர்நிலையாக யோவான் பார்த்ததால், ஆண்டவர் அவரை ஆட்கொண்டு, உலக முடிவில் நடக்கப்போகும் காரியங்களையெல்லாம் திருவெளிப்பாடாக தந்தார்.

தாவீது பெரும்பாவம் புரிந்தது உண்மைதான். ஆனால், தன் பாவம் உணர்த்தப்பட்டபொழுது, மனம் கசந்து அழுதார்; ஆண்டவரின் மன்னிப்பிற்காக மன்றாடினார்.

உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம்மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்” (திபா 51:11) என்று மன்றாடினார்.

கடவுளும் மனமிரங்கி மன்னித்து, தமது இதயத்துக்கு உகந்தவனாக அரவணைத்துக் கொண்டார்.

ஆனால், எளியவனாக இருந்த சவுலை ஆண்டவர் அரசனாக உயர்த்திய போதிலும், கீழ்ப்படியாத மனிதனாக நடந்து கொண்டார்.

சவுல், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தவுடன், அவரிடமிருந்த சொத்துக்களையோ, அரச பதவியோ எடுக்கப்படவில்லை. ஆனால், மனநிம்மதியை இழந்தார்தீயஆவியால் அவ்வப்பொழுது அலைக்கழிக்கப்பட்டவராக, அமைதியின்றி தவித்தார்.

இறுதியில், போரில் தற்கொலை செய்துகொண்டார்.

ஆண்டவரோடுள்ள ஒன்றிப்பில்தான் உண்மையான அமைதி உள்ளது. எல்லாம் இருக்கிறது. ஆனால், அமைதியில்லையே; உறக்கம் இல்லையே என்று தவிப்பவர் உண்டு.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருக்கும் எல்லாரும் வாருங்கள், உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இயேசு உரைத்தாரே. நான்தான் தவறாமல் கோயிலுக்கு வருகிறேனே, ஆலயத்திற்கு வேண்டிய அனைத்தும் வழங்குகிறேனே, பக்திச் செயல்களில் எந்தக் குறையும் வைப்பதில்லையே, ஆனாலும், என் உள்ளத்தில் இளைப்பாறுதல் இல்லையே என்று தவிப்பவர் உண்டு.

இவ்வுலக மனிதர்கள் சொத்துக்களை விட்டுச் செல்கிறார்கள். இயேசு விட்டுச் சென்றதோ அவரது அமைதி.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பசியால் இருந்தபோது, இருப்பதோ 5 அப்பங்களும், 2 மீன்களும்தான். ஆனாலும், பதட்டமில்லை.

எதிரிகள் முறைத்த போதும், முணுமுணுத்த போதும், கற்களை எடுத்தபோதும் பதறவில்லை.

படகு அமிழும் சூழலிலும், அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். என் தந்தை என்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை!

சிலுவையில் அவமானமாக தொங்கவிட்டிருந்த வேளையிலும், தாங்க இயலாத வேதனை வலியின் மத்தியிலும், எதிரிகளை மன்னிக்கும்படி மன்றாடினார்.

இதுதான் இயேசுவின் அமைதி. ஆகவேதான், “என் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்” (யோவா 14:27) என்றார். இது இலவசம், எல்லாருக்கும் உரியது.

இயேசுவே ஆண்டவர், நீரே என் சிந்தையை, சொல்லை, செயலை, வாழ்வை ஆளுகை செய்யும் என்று அர்ப்பணிக்கும்பொழுது, அமைதியான நீர்நிலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளோம்.

Comment