No icon

குடந்தை ஞானி

விண்மீன் காட்டும் பாதையை நோக்கி... பாறையில் கட்டப்பட்ட வீடு

தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்,…மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்(காண்க: நீ.மொ.12:5-15), என்ற நீதிமொழிகள் நூலின் வார்த்தைகளின்படி, உண்மையான அறிவும் ஞானமும் கொண்ட மனிதர்கள் கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுத்து, அதன்படி நடப்பார்கள் என்பதை அறிகிறோம். இயேசுவும் தம் சீடர்களிடமிருந்து இத்தகைய நடத்தையை எதிர்பார்க்கிறார். அவரை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, என அழைப்பதோடு நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது (மத்.7:21), மாறாக, அவரின் போதனைகளை நாம் உள்வாங்கி, அதை நம் நடவடிக்கைகள் வழியாக வெளிக்காட்டவேண்டும். ஏனெனில், சொல்லும் செயலும் இணையும்போதுதான் அங்கே நல்ல விளைவுகள் ஏற்படும். இயேசுவின் போதனை நம் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நிரூபிப்பதற்கு இதுதானே வழி. இயேசுவே நம் பாறை, அந்த அடித்தளத்தில்தான் நம் வாழ்வே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இயேசுவின் போதனை நமக்கு உறுதியான அடித்தளமாக இருக்கும்போது, நம் வாழ்வு, எப்புயலையும் மழையையும் தாங்கும் பலம் பெற்றிருக்கும். தடுமாறும் வேளையில் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி, இயேசுவின் வார்த்தைகளுக்கு உள்ளது.

வாய்ச்சொல் வீரராக இருப்பவர் ஒருநாளும் பெரியன ஆற்றியதாக வரலாறு இல்லை. நம் சொல்லும் செயலும் இணையும்போதுதான் அரும்பெரும் செயல்களை ஆற்ற முடிகிறது. இறைவார்த்தையை உள்வாங்கி, அதனை நம் வாழ்வாக உருமாற்றி, நம் வாழ்வு நடவடிக்கைகள் வழி வடிவம் கொடுக்கும்போதுதான், நாம் கிறிஸ்தவர்கள் என அடையாளம் காணப்படுகின்றோம்.

நம் வாழ்வுக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நல்ல அடித்தளம் வேண்டும். கட்டுவோர் புறக்கணித்த கல்லாம் இயேசுவை மூலைக்கல்லாகக் (மாற்.12,10) கொண்டு நம் வாழ்வு கட்டப்படவேண்டும். அவ்வாறு கட்டப்பட்ட திருஅவை, கடும் புயலையும் நில நடுக்கத்தையும், வெள்ளத்தையும், வறட்சியையும் தாண்டி உறுதியாக நின்று நிலைப்பதை நம் கண்முன்னாலேயே காண்கிறோம்.

அதேவேளை, இறைவனில் கட்டப்பட்ட நம் வாழ்வு, இறைவார்த்தையின் துணைகொண்டு புதுப்பிக்கப்படவேண்டும். இத்திருவருகைக் காலத்தில் இறைவார்த்தை தரும் சிந்தனைகளை வாழ்வாக்குவோம். பாறை மீது கட்டப்பட்ட வீடாக நிலைத்து நிற்போம்.

Comment