No icon

அமெரிக்காவில் லெவே

மார்ச் 21-என்பது லெவே தினம் என்பதை அன்றைய ஒருங்கிணைந்த  மதுரை உயர்மறைமாவட்டம் நன்கு அறியும். இவ்வாண்டு சிறப்புமிக்க ஆண்டாகும். இவ்வாண்டில்தான் இறைஊழியர் லூயி மரிய லெவே அவருக்கு சருகணியில் அவர் துயில் கொள்ளும் இடத்திலே நினைவு மண்டபம் பிரமாண்டாய் எழுப்பபட்டிருக்கிறது. மேலும் இவ்வாண்டு சின்ன அருளாந்தாராகிய இறைஊழியருக்குப் பெருமை; சேர்க்கும் ஆண்டு. இவ்வாண்டுதான் செம்மண் புனிதர் அருளானந்தரின் மறைசாட்சியாக மரித்த 325 ஆம் ஆண்டாகும். 
கத்தோலிக்கப் பாரம்பரியத்தில் புனிதர்கள் உலகுதழுவிய அளவில் போற்றப்படுகிறார்கள். நம் இறைஊழியரும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல. 2017, அக்டோபர் 21 ஆம் நாள் புனித மரியன்னை பங்கைச் சேர்ந்த இளைஞன் காலேப் குர்தெல்ஸ்கி ஒரு விபத்தில் சிக்கினான். அன்று மாலை காலேப் தனது நண்பர்களோடு வாகனம் ஒன்றை பழுது பார்க்க மேடான பகுதியில் நிறுத்தி வைத்திருந்தான். கியர் சரியாகப் போடவில்லை. உயரமான பகுதியில் நின்றுகொண்டிருந்த வாகனம் திடீரென கீழ்நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. காலேப் கீழிருந்து ஓடி வாகனத்தில் குதித்து ஏறி அதை நிறுத்த முயற்சி செய்தான். திடீரென வாகனம் ஒரு பாறையில் இடித்து அப்படியே நின்றுவிட்டது. பின்னர் சற்றுநேரத்தில் அவனை நோக்கி நகர ஆரம்பித்தது. காலேப் வாகனத்தில் ஏற முற்பட்டபோது கதவு கண்ணாடி தலையில் மோதிவிட்டது. மண்டை ஓட்டை உடைத்து மூளையில் அடிபட்டு மறுபுறம் மூளை தள்ளப்பட்டுவிட்டது. உடனிருந்த இளம்பெண் அவரை வீட்டிற்குக் கொண்டு சென்றிருக்கிறார். பெற்றோருக்குத் தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அருட்பணி. ஸ்டீபன் ரொட்ரிகோ, மதுரை மாநில இயேசு சபையின் முன்னாள் துறவி, தற்சமயம் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் கலமாசு மறைமாவட்டத்தில் சேர்ந்து புனித மரியன்னை பங்கில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். தந்தை
ரொட்ரிகோ இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பிறந்து வளர்ந்தவர். இவரது பெற்றோர் பொருளாதாரப் பிரச்சினையால் கஷ்டப்பட்டபோது இராமநாதபுரம் பங்குப் பணியாளராக இருந்த தந்தை லெவே இவர்களது குடும்பத்தை கீழக்கரையிலிருந்து அழைத்து வந்து இராமநாதபுரம், புனித ஜெபமாலை அன்னை  பங்கு ஆலய வளாகத்திலேயே வீடு கட்டிக் கொடுத்து பராமரித்து வந்தார். தந்தை லெவேயின் தூண்டுதலால் இறையழைத்தல் பெற்று இயேசு சபை குருவானார் தந்தை ஸ்டீபன் ரொட்ரிகோ.
இறைஊழியர் லூயி லெவே அடிகளாருக்கு சிவகங்கை மறைமாவட்டத்தில் புனிதர் பட்டத் திருப்பணி தொடங்கப்பட்டதை அறிந்து அளவு கடந்த மகிழ்ச்சி கொண்டார் தந்தை ரொட்ரிகோ. தந்தை லெவே அவர்களது பணி வாழ்வு பற்றிய செய்திகளை அச்சடித்து தான் பணியாற்றும் புனித மரியன்னைப் பங்கு மக்களுக்கு வழங்கியுள்ளார். 2017, ஜனவரி முதல் இறைஊழியர் லெவே அருளாளர் பட்டம் பெறுவதற்கான மன்றாட்டை அப்பங்கு மக்கள் செபிக்க வழிகாட்டி வருகிறார். தந்தை லெவே மீது பக்தி கொண்டு அப்பங்கு மக்கள் தனியாகவும், குடும்பமாகவும், பங்குச் சமூகமாகவும் அவரை நோக்கி செபித்து வருகிறார்கள். 
மருத்துவர்கள் நடந்த விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். அன்று இரவே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். இருந்தபோதிலும் காலேப் பிழைப்பது மிக மிகக் கடினம் என்று சொல்லிவிட்டார்கள். புனித மரியன்னை பங்கில் பணிபுரியும் அருட்பணி. கிறிஸ்டோஃபர் காலேபுக்கு நோயில்பூசுதல் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார். 2017, அக்டோபர் 22 அன்று காலை நோயில்பூசுதலும் இறுதி ஆசிரும் வழங்கினார். அவர் அன்று இரவு முதல் இறைஊழியர் லெவேயிடம் செபிக்க ஆரம்பித்தார். காலேபின் பெற்றோர், உறவினர், நண்பர்களோடு மருத்துவமனையிலேயே தந்தை லெவேயை நோக்கி செபித்தார்கள். காலேபின் தந்தை கென்னெத் குர்தெல்ஸ்கி, தாய் கேரி ஆகியோர் 2017 மார்ச் முதல் இறைஊழியர் லெவே அருளாளர் பட்டத்திற்கான மன்றாட்டை செபித்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் மகன் காலேப் குணம்பெற தந்தை லெவேயின் பரிந்துரையை நம்பிக்கையோடு நாடினார்கள். அருட்பணி. ஸ்டீபன் ரொட்ரிகோ அவர்களும் மருத்துவமனைக்குச் சென்று காலேபைச் சந்தித்து அவனுக்காக தந்தை லெவேயிடம் மன்றாடினார். எட்டே நாட்களில் காலேபின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. புனித மரியன்னை பங்கு மக்கள் அனைவரும் காலேப் குணம்பெற ஒவ்வொரு நாளும் திருப்பலி முடிந்து தந்தை லெவே அவர்களின் மன்றாட்டைச் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாக செபித்தார்கள். ஏறக்குறைய ஒன்றரை மாதங்களில் காலேப் நல்ல உடல்நலத்தோடு வீடு திரும்பினான். 
மருத்துவர்கள், செவிலியர்கள் கணிப்பு மாறிப்போனது. “இப்படிப்பட்ட மிகப்பெரிய விபத்தில் சிக்கிய நோயாளி இவ்வளவு விரைவில் குணமானதை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று மருத்துவர்கள் சொன்னார்கள். காலேப் பிழைத்துக் கொண்டாலும் அவன் முழுமையான மனநலம் பெறமுடியாது; மனநிலை பாதிக்கப்பட்டவராகவே இருப்பார்;
தனது அன்றாட வேலைகளைச் செய்யமுடியாது என்றெல்லாம் மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் இன்றுவரை காலேப் நல்ல உடல்நலத்தோடும், மனநலத்தோடும் இருந்து தன்னுடைய அன்றாட வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறான். 
இறைஊழியர் லெவேயின் பரிந்துரையால் அற்புதமாக குணம்பெற்ற இந்த நிகழ்வை அருட்பணி. கிறிஸ்டோஃபர் மற்றும் அருட்பணி. ஸ்டீபன் ரொட்ரிகோ இருவரும் ஆவணங்களோடு பதிவு செய்திருக்கிறார்கள். 
தனக்கும் இறைஊழியர் லூயி மரிய லெவே-க்கும் உள்ள தொடர்பினை அவரே விவரிக்கிறார். “என்னுடைய பாசத்திற்குரிய அருட்தந்தை லூயி மரிய லெவே அவர்களைப் பற்றியும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் அருட்தந்தை லெவேக்கான புனிதர் பட்டத்திற்காக நடக்கும் முயற்சிகளைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்துகொள்வதிலே மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் 2003 ஆம் ஆண்டிலிருந்து இப்பொழுது வரை அருட்பணியாளராகப் பணியாற்றி வரும் அமெரிக்காவின் மிசிகன் மாகாணத்திலுள்ள தூய அன்னை மரியாளின் வருகை பேராலயப் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தெரியும். நான் எத்தனை முறை எனது மறையுரைகளிலே என்னுடைய இறையழைத்தலைப் பற்றியும் அதற்கு எவ்வாறு அருட்தந்தை லெவே அவர்கள் காரணமாய் இருந்தார் என்பதைப் பற்றியும் கூறினேன் என்று கடவுள் புரிந்துகொள்ள முடியாத வகைகளில் செயலாற்றுவார் என்று கூறுவார்கள். அங்கனம் எனது சொந்த பங்காகிய தென்னிந்தியாவிலுள்ள தமிழகத்தின் ராமநாதபுரத்தில் அமைந்திருக்கும் புனித செபமாலை மாதாவின் ஆலயத்திற்கு அருட்தந்தை லெவே அவர்கள் பங்குத்தந்தையாக வருகை புரிந்தது எனக்கு நிகழ்ந்த ஓர் ஆசீர்வாதமாக நான் கருதுகிறேன். எனது இறையழைத்தலைப் பற்றி இப்பொழுது மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசிக்கின்றேன்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பலி முடிந்தவுடன், தந்தை லெவே அவர்கள் எனது
தாயிடம் இவ்வாறு கேட்டார்கள். ‘‘அந்தோணியம்மா,
எனக்குப் பிறகு குருவானவராக மாற, உனது நான்கு பிள்ளைகளில் ஒருவனை எனக்குத் தருவாயா?’’ என்று. அதற்கு சரி என்று சொல்லி விட்டு, அடுத்த ஞாயிற்றுக்கிழமையே என் தாய்
என் சகோதரன் பெர்ட்ரமையும் (4) என்னையும் (7) தந்தையின் முன் நிறுத்தி அவருக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். எங்கள் இருவருக்கும் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. நாங்கள் இருவரும் விலைபோக வேண்டிய ஆடுகளைப் போல நின்றுகொண்டிருந்தோம். எனினும் நான் கண்கணை மூடி, தந்தை என் சகோதரனையே தேர்ந்தெடுக்குமாறு வேண்டிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் கண்களைத் திறக்கும்போது அவர் கைவிரலானது என்னை நோக்கி இருந்து, இவன் வேண்டும்’ எனக் கூறக் கேட்டு அதிர்ந்து போனேன். ஆம்! தந்தை லெவே ஒரு புனிதர் என்று உறுதியாகக் கூறுவேன். எனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, என்னில் இருந்த அவருடைய வார்த்தைகள் மீண்டும் உயிர்பெற்றன. நான் 1963 ஆம் ஆண்டு இயேசுசபையில் சேர்ந்து, 1975 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டேன்.
நாங்கள் செபமாலை சொல்லிக்கொண்டு போகும்பொழுது, பல நேரங்களிலே தந்தை அவர்கள் மழை மேகங்களை நிறுத்தி வைத்துவிட்டு, நாங்கள் செபம் சொல்லி முடித்ததும் கனமழை பொழியச் செய்துள்ளார். விவசாயிகள் மழைக்காக வேண்டுமாறு கேட்கும்பொழுதும், அவர் வேண்டி மழையைப் பொழியச் செய்வார். எனவே, நாங்கள் அவரை ‘வாழும் புனிதர்’ என்றே அழைப்போம். நீங்கள் செபம் செய்யும் பொழுதெல்லாம் தந்தை லெவே அவர்களின் பரிந்துரையை வேண்டுங்கள். அவரின் புனிதர் பட்டத்திற்கான முயற்சியில் உதவும் ஓர் அற்புதம் உங்கள் வாழ்க்கையிலேயே கூட நடக்கலாம்”. இறைஊழியர் தந்தை லெவே அருளாளராய், புனிதராய் விரைவில் உயர்வு பெற இறைவனை இறைஞ்சுவோம்.

Comment