No icon

தவக்காலம் கருணைக் காலம்

வரலாற்றுப் பார்வையில் 
நாம் வாழும் இக்காலத்தில் சராசரியாக மனிதர் 25,550 நாள்கள் உயிர் வாழ்வதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். இந்த நாள்களில் ஒரு வருடத்திற்கு வெறும் நாற்பது நாள்களை கடவுளுக்கு என்றும் நமக்கு என்றும் உறவுகளுக்கு என்றும் ஒதுக்கி வைப்பது பொருத்தமல்லவா!
திருவிவிலியத்தில் நாற்பது என்னும் எண்ணைக் கடவுள் ஒர் ஆன்மிகப் பொருள் நிறைந்த காலமாகத் தந்துள்ளார். நாற்பது என்னும் எண் ஒரு முழுமையைக் குறிக்கிறது என்பர் விவிலிய அறிஞர்கள். நாற்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறையைக் குறிக்கும் சொல்லாகும். எனவே தான் நீதித் தலைவர்கள், அரசர்கள் போன்றோர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினர் என்று விவிலியம் குறிப்பிடுகிறது (எகா நீத 9:28; 1 அர 2:11; 11:42).
அவ்வாறே கடவுள் தமது நோக்கத்தின்படி எவரையாவது பயிற்றுவிக்க விரும்பினால் அதற்கும் நாற்பது நாட்களை எடுத்துக் கொண்டார் என்று விவிலியத்திலிருந்து பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
        நாற்பது நாள்கள் பெய்த பெருமழையில் நோவாவின் வாழ்வு புதியதாய் மாறியது (தொநூ 8).
        சீனாய் மலையில் நாற்பது நாள்கள் மேற்கொண்ட தவத்தின் உச்சத்தில் மோசேயின் வாழ்வு அருள்பொழிவு நிறைந்ததாய் மாறியது (விப 24:18).
        வாக்களிக்கப்பட்ட நாட்டில் நாற்பது நாள்கள் தங்கியதால் ஒற்றர்களின் பார்வை மாறியது (1சாமு 17:16).
        கடவுள் தந்த உணவை தொடர்ந்து நாற்பது நாள்கள் உட்கொண்டதால் எலியாவின் வாழ்வு வலிமைமிக்கதாய் ஆனது (1 அர 19:8).
        யோனாவின் இறைவாக்குப் பணியின் மூலமாக கடவுள் தந்த நாற்பது நாள்களில் நினிவே நகர் முழுவதும் மனமாற்றமும் உயிர் மீட்சியும் கண்டது (யோனா 3:4).
        பாலை நிலத்தில் நாற்பது நாள்கள் நோன்பு இருந்தால் இயேசு அலகையை வென்று வலிமை மிக்கவராய் வெளிப்பட்டார் (மத் 4:2).
        இயேசு உயிர்த்தெழுந்த பிறகு நாற்பது நாள்களாக சீடர்களுக்குத் தோன்றி இறை யாட்சியைப் பற்றிக் கற்பித்ததால் அவர்கள் புதுவாழ்வு கண்டனர் (திப. 1:3)
இந்த விவிலிய மரபைப் பின்பற்றி கிறிஸ்த வர்களும் தொடக்கக் காலத்திலிருந்தே நாற்பது நாள்கள் தவத்தை மேற்கொண்டதாக திருஅவைத் தந்தையர்கள் (குயவாநசள டிக வாந ஊhரசஉh) மற்றும் கிறிஸ்தவ எழுத்தாளர்களின் ஏடுகளிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.
  கால கட்டமைப்பு
தொடக்கக் காலத்தில் தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்துதான் தவக்காலம்
தொடங்கியதாகக் கணிக்கப்பட்டது. பின்னரே ஞாயிற்றுக்கிழமைகள் தவநாள்களாக எண்ணப் படாததால் முதல் ஞாயிறுக்கு முந்திய சில நாள்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இப்படி படிப்படியாக நாம் இப்பொழுது வழக்கத்தில் கொள்ளும் தவக்காலம் நடைமுறைக்கு வந்தது. அதாவது திருநீற்றுப்புதன் (ஹளா றுநனநேளனயல) அன்று தவக்காலம் முறையாகத் தொடங்குகின்றது.
  திட்டங்கள்
தொடக்கக்காலக் கிறிஸ்தவர்க்கு இத்தவக் காலம் மூன்று திட்டங்களை முன்வைத்தது. 
     நல்ல கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனத்துயர் அடைந்து மன்றாடி இறையருளை பெறுவதற்குத் தங்களைத் தயாரிக்கும் நாள்கள். 
         பொதுப் பாவிகள் திருமுழுக்குப் பெற்றிருந் தும் பாவவழியில் நடந்தால் தாங்கள் பெற்ற வெண்ணிற ஆடையாகிய தூய வாழ்வை கறைப்படுத்தினால் அவர்கள் பொதுவில் யாவரும் பார்க்கும் வண்ணம் தவம், செபம் செய்து பாவப்பொறுத்தல் பெறும் காலம். 
        திருமுழுக்குப் பெற விரும்புவர்கள்; தாங்கள் கடவுளின் பிள்ளையாக மீண்டும்
பிறப்பதற்காகத் தங்களைத் தூய்மைப் படுத்தித் தயாரிக்கும் நாள்கள்.
தொடக்கக் காலத்தில் தவக்காலம் வெறுமனே தவம் செய்வதற்கு மட்டுமல்ல என்பதைப்
புரிந்திருந்தனர். ஆதலால்தான் இறைவனைப் புகழ்
வதற்கும் பாடிப் பரவுவதற்கும் மன்றாடுவதற்கும் தியானிப்பதற்கும் உகந்த காலமாகவும் தவக்
காலத்தைக் கருதினர். உரோம் நகரில் திருத்தந்தை
தலைமையில் திருவழிபாடு நிகழ்த்தப்பட்டது.
திருத்தந்தை புனித ஆறாம் பவுல் தொடங்கி புனித இரண்டாம் ஜான் பவுல், பதினாறாம் பெனடிக்ட் ஏன் இன்றைய திருத்தந்தை  பிரான்சிஸ்
தவக்காலத்தில் உரோம் நகரில் உள்ள திருத்தலங்
களைச் சந்தித்து அங்கு திருப்பலி நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இறைமக்களும் திருப் பயணம் மேற்கொண்டு இத்திருத்தலங்களைச் சந்தித்து அருள் பெறுகின்றனர்.
  பழைய ஏற்பாடு: திருப்பயணங்கள்
திருப்பயணம் செல்லுதல் என்பது விவிலியத்தில் உள்ள நடைமுறைக் கருத்தாகும். பழைய ஏற்பாட்டில் எல்கானா - அன்னா தம்பதியர் ஆண்டுதோறும் சீலோவில் உள்ள படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் சென்று வருவர் என்று வாசிக்கிறோம். (1சாமு:1 ஆம் அதிகாரம்)
பிற்காலத்தில் சாலமோனின் ஆட்சியில் எருசலேமில் ஆண்டவருக்கென்று கோவில் எழுப்பப்பட்டு அதுவே வழிபாட்டின் மையமாய்த் திகழ்ந்தது. ஆண்டுதோறும் பாஸ்கா விழாவிற்கு யூதர்கள் திருப்பயணம் மேற்கொண்டு எருசலே மிற்கு வந்து செல்வது வழக்கமாயிற்று. திருப்பாடல் களில் பல பாடல்கள் எருசலேம் திருப்பயணத்தின் போது பாடுவதற்கென்றே எழுதப்பட்ட, பயணக் களைப்பைப் போக்குகின்ற பஜனைப்பாடல்கள் ஆகும். அதாவது வழிநெடுக இறைவனின் வல்ல செயல்களையும் அவரது குணநலன்களையும் நினைத்து நினைத்து உள்ளம் உருகிப் புகழ்ந்து புகழ்ந்து போற்றி வணங்கிப் பாடிப் பரவசமாயினர் யூதர்கள் (தி.பா.103-136). 
  புதிய ஏற்பாட்டில் - இயேசு
மேலும் இயேசு தமது பொது வாழ்க்கைப் பணிக்காலத்திலும் மூன்று பாஸ்கா விழாவிற்கு எருசலேம் சென்றார் என்று யோவான் நற்செய்தி யாளர் (5:1; 6:1; 7:1) குறிப்பிடுவதிலிருந்து திருப்பயணத்தின் அருமை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நல்ல வழக்கத்தில் தவக்காலத்தில் நாமும் பங்கெடுக்கலாம். 
ஆயினும் திருப்பயணங்கள் மேற்கொள்ள
வேண்டியது திருத்தலங்களுக்கு மட்டுமன்று:
நோயில் வாடுவோர் உள்ள மருத்துவமனைகளுக் கும், ஆறுதல் தேவைப்படுவோர் உள்ள அனாதை
இல்லங்களுக்கும், சேரிகளில் வாழும் ஏழைகள் குடிசைகளுக்கும் இப்படி கடவுளின் கோவில்களாகிய மனங்களின் இதயங்களுக்கும் பொருள் உள்ளத் திருப்பயணங்கள் மேற்கொள்ளலாமே. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாமே!
தவக்காலம் - அடையாளச் செயல்கள்
தவக்காலத்தின் தொடக்க நாளிலேயே திரு வழிபாட்டின் வழியாக திருச்சபை தவம், ஜெபம், தருமம் ஆகியனவற்றை எடுத்துரைக்கிறது. அதில் மிகச் சிறப்பாக அன்று நம் நெற்றியில் சாம்பலைப் பூசி “மனிதனே! நீ மண்ணிலிருந்து வந்தாய்: திரும்பவும் மண்ணுக்குப் போவாய்” என்ற ஒர் எதார்த்தத்தை வலியுறுத்திக் காட்டுவதாகும். மேலும் “மனிதனே! மனம் திரும்பி நற்செய்தியை நம்பு” என்றும் அறிவுறுத்துகின்றது.
அடிப்படையில் தவக்காலம் என்பது
ஒவ்வொரு தனிமனிதனும் மனம் மாறுவதற்காக
கடவுள் தருகின்ற இன்னொரு கருணைக்கால மாகும். பகிரங்கப் பாவிகள் என்று கருதப்பட்டோர் திருச்சபையின் வழிபாடுகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களைத் திருச்சபையோடு ஒப்புரவாக்குவதற்காகவே அக்காலத்தில் பெரிய வியாழன் அன்று சிறப்பு ஒப்புரவுத் திருப்பலிகளும் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு நாற்பது நாள்கள் கடுந்தவம் புரிந்து பாவ மன்னிப்பு பெற்ற இவர்கள் திருச்சபை என்னும் திருக்கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். நோன்பு இருப்பதன் குறிக்கோள் தர்மம்செய்தவற்காகத்தான். ஒருபொழுது உண்ணா நோன்பு இருக்கும்போது அந்தவேளை உணவிற்காக ஆகும் செலவைச் சேமிக்க வேண்டும். பின்னர் அதை இல்லாத ஏழைகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் திருச்சபையின் எதிர்பார்ப்பு.
  இறைவன் விரும்பும் நோன்பு
இன்றைய காலகட்டத்தில் பக்தி முயற்சி களில் நாம் காட்டப்படும் புதிய, சமூக நோன்பு பாராட்டுக்குரியது இறைவனைப் புகழ்வோம். ஆனால் ஒருவேளை, அல்லது இருவேளை உணவை விட்டுவிடுவது இறைவனை மகிழ்ச்சிப்படுத்தாது. பரிசேயேர்களின் இத்தகைய நிலையைத்தான் வெளிவேடமென்றார் நம் ஆண்டவர் இயேசு (மத் 6:16). அடுத்திருப்பவர் மீது குறிப்பாக எழை எளியவர் மீது அக்கறையோடு வெளிப்படும் நோன்பையே இறைவன் விரும்புகிறார். கடவுளுக்கு உகந்த நோன்பு என்பது எசாயா
58:6-7ல் சொல்லப்பட்டுள்ளது. “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும் நுகத்தில் பிணையல்களை அறுப்பதும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!” பசித்தாரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு. திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடும் வெளிவேடக்கார சமயத்தை இயேசு எதிர்க்கிறார் (மத் 23:23). ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர் (1யோவா 1:9). ஏனெனில் ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார் (நீமொ 17:5).
  ஏழைகளும் தர்மமும்
மத் 22:39-ல் இரண்டு கட்டளைகளை பற்றி இயேசு பேசியுள்ளார். இதில் மனிதரை அன்பு செய்வது என்பது இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்னும் முதலாவது கட்டளைக்கு இணையான இரண்டாவது கட்டளை என்கிறார். அதாவது இரண்டாம்தரக் கட்டளை அல்ல. எனவே இறைவழிபாட்டிற்கு இணையான விதத்தில் ஏழைகளுக்கு உதவுவதையும் நாம் நினைத்துச் செயல்படவேண்டும். வழிபாடுகளிலேயே கவனத்தைச் செலுத்திய யூதக் குரு. லேவியர் போன்று செயல்படாமல் ஒரு நல்ல சமாரியராய் நாம் மாறுவது எப்போது? (லூக் 10:29-37).
விவிலியத்தில் ஏழை எளியவர்க்கும் இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தப்படியே கொடுக்கவேண்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். ஏனெனில் “முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்” (2 கொரி 9:7). திருப்பாடலிலிருந்து பவுல் இந்த இடத்தில் மேற்கோள் காட்டும் வசனம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. “ஒருவர் ஏழைகளுக்கு, வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” (திபா 112:9)
  இயேசு விரும்பும் ஜெபம்
இன்றைய கிறிஸ்தவர்கள் மிகவும் பலவீனமாக உள்ள ஒரு துறை என்ன என்று ஆராய்ந்தால் அது ஜெபம் என்று உறுதிப்பட கூறலாம். சொந்த வார்த்தைகளில் உள்ளத்தின் உணர்வுகளைக் கொண்டு ஜெபிக்கத் தெரியாத கிறிஸ்தவர்கள் பலர் இருக்கிறார் கள். ஒரு பத்து நிமிடம் மனதை ஒருமுகப்படுத்தி இறைவன் பால் உள்ளத்தை எழுப்பி நம்மில் பலரால் ஒன்றிக்க முடிவதில்லை. ஜெபத்திற்கு என்று காலையிலோ மாலையிலோ நேரம் கூட ஒதுக்க முடியாமல் நம்மில் பலர் நுகர்வுக் காலச்சாரத்தில் சிக்குண்டுள்ளோம். திரு விவிலியத்தில் நிறைய செபங்கள் இருக்கின்றன. திருப்பாடல்கள் நம் உள்ளத்து உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தும் மன்றாட்டுகளாகும். ஏன் திருவிவிலியமே ஒரு ஜெபப் புத்தகம் தான். நாம் ஜெபிப்பதற்குத் தூண்டுதலாக திருவிவிலியத்தைப் பயன்படுத்த மறந்துள்ளோம். அன்றாடம் திருவிவிலியத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் ஜெபிக்கக் கற்றுக் கொள்வார்கள்.
மேலும் ஜெபவாழ்வுக்கு எடுத்துக்காட்டாக நம் ஆண்டவர் இயேசுவை உற்றுப்பார்க்க வேண்டும். காலை முதல் மாலை வரை மக்கள் பணியே மகேசன் பணி என்று மூழ்கிக் கிடப்பார் இயேசு. வீடுகளைச் சந்தித்தல், நற்செய்தி அறிவித்தல், நோயுற்றோரை நலம் விசாரித்தல், குணம் அளித்தல் என்று அவரது பணி ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ஊரிலும் முழுமையாய் இருந்தது. ஆயினும் இவ்வளவு பணிப்பளுவிற்கு நடுவிலும் விடியற்காலையிலும், பொழுது சாய்ந்தவேளைகளிலும் ஜெபிப்பதற்கு என்று நேரத்தை ஒதுக்கினார் இயேசு. இயேசுவைத் தேடிய சீடர்கள் அவர் இறைத் தந்தையோடு ஒன்றித்து, “அப்பா” என்று அவர் உரிமையோடு அழைத்ததைப் பார்த்துப் பரவசமடைந்தார்கள். தங்களுக்கும் ஜெபிக்கக் கற்றுத்தரச் சொன்னார்கள்.
  சீடத்துவத்தின் படிபினைகள் 
    இயேசுவோடு இருப்பதாகும். 
    நற்செய்தி பறைசாற்றுதலாகும். 
     சாத்தானையும் தீமைகளையும் வெல்வதாகும். 
நம்மில் பலர் முதல்படியில் கால் வைக்காமல் மூன்றாம்படிக்குத் தாண்ட நினைக்கின்றோம்.
கிறிஸ்தவரின் உயிர் மூச்சாய் ஜெபம் இருத்தல் வேண்டும். தவக்கலாம் நம்மை ஜெபிக்க அழைக்
கிறது. இயேசுவோடு ஒன்றிக்க அழைக்கிறது. சீடர்களாய் மாறிச்சான்று பகர அறைக்கூவல் விடுகின்றது. ஜெபம், தவம், தர்மம் ஆகியவைதான் தவக்காலத்தில் அடையாளங்கள். இந்தத் தவக் காலத்தில் இவற்றைப் பொருளுள்ளதாக்குவோம். ஏனெனில் இது நமக்குக் கடவுளின் இன்னொரு கருணைக் காலமாகும் (வசந்த காலம்).

Comment