No icon

5. மனிதரோடும் ஒப்புரவாவோம்

தவக்காலத் தொடர்

1. மனந்திரும்புதல் என்பது கடவுளோடு மட்டுமல்ல
மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள், குற்றங்கள், மீறுதல்கள்.. இவைகளை கடவுளுக்கு மட்டுமல்ல; மனிதர்களுக்கும் விரோதமானவை. நாம் நம் குற்றங்களைச் சற்று ஆழமாக ஆய்வு செய்வோமெனில் அவை முதலில் மனிதர்களுக்கு எதிராக இருப்பதை நன்கு உணரலாம்.
ஆதலால் மனந்திரும்புதல் என்பது கடவு
ளோடு மட்டுமல்ல; மனிதரோடும் செயல்படுத்த வேண்டிய ஒன்று ஆகும். அது கடவுளோடும் அத்துடன் மனிதரோடும் ஒப்புரவாக வேண்டிய தாகும்.
எடுத்துக்காட்டாகப் பத்துக் கட்டளைகளை ஆழமாகப் பார்ப்போம். (விப 20) அங்கே 1 முதல் 4 முடிய உள்ள கட்டளைகள் கடவுளுக்கான நமது கடமைகள் பற்றிப் பேசுகின்றன. ஆனால் 5 முதல் 10 முடிய உள்ள பிற கட்டளைகள் அனைத்தும் மனிதருக்கான நமது கடமைகள் பற்றி எடுத்துரைக்கின்றன. எனவேதான் நம் ஆண்டவர் இயேசு இக்கட்டளைகளை இரண்டாகச் சுருக்கி இவ்விதம் சொன்னார். ஒன்று, கடவுளிடம் அன்பு செலுத்து. இரண்டு, உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்பு செலுத்து (மத் 22:36-40).
இங்கே எது முக்கியம்? முதன்மை முக்கியம்? என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு இயேசு
பதில் இரண்டுமே சமமுக்கியம் என்று பதில் வழங்கு
கிறார். ஆதலால்தான் வசனம் 39ல் “அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வது என்பது இதற்கு (முதலாவது) இணையான இரண்டாவது கட்டளை என்று தெளிவாக்குகிறார்.
கிறிஸ்தவத்தின்  அடையாளமாக “சிலுவை” முன்னிறுத்தப்படுகிறது. அச்சிலுவையில் இரு
கட்டைகள் உள்ளன. நெடுக்குக் கட்டை கடவுளோடு ஒப்புரவாகுதலைக் குறிக்கிறது. குறுக்குக் கட்டை
அடுத்திருப்பவரோடு ஒப்புரவாகுதலைக் குறிக்கிறது.
“குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று; குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று” என்று பாடுகிறோம். இறையாட்சியின் அடையாளமாகக் சிலுவையில் கடவுள் தன்மையும் மனிதப் பண்புகளும் பின்னிப் பிணைந்துள்ளன. குழந்தைகளாய் நாம் மாறினால்தான் விண்ணரசில் நுழைய முடியும். எனவே கடவுளோடு ஒப்புரவாகு தலை விரும்பும் நாம் மனிதரோடு ஒப்புரவாகு தலையும் அலட்சியப்படுத்தக் கூடாது. 
கடந்த வாரக் கட்டுரையில் பாவங்களைப் பட்டியலிட்டோம். அதில் நீதிமொழிகள் 6:16-19ல்
சொல்லப்படும் கடவுள் வெறுக்கும் 7 பாவங்களைக் கூர்ந்து நோக்கினால் அவை அனைத்துமே
மனிதருக்கு  எதிரானவை  என்பது  வெள்ளிடைமலை.
காணாமல் போன மகன் உவமையில் இளைய
வரின் பாவ அறிக்கை பின்வருமாறு: “அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம்  செய்தேன்” (லூக் 15:18-21) என்று மனிதரோடும் ஒப்புரவாகுதல் முக்கியத்துவம் பெறுகிறதல்லவா!
மேலும் லூக்கா 1:16-17ல் வானதூதர் செக்கரியாவிடம் திருமுழுக்கு யோவான், ஆற்றப் போகும் பணிகள் இருவகை எனக் குறிப்பிடுவது ஈண்டு நினைவில் கொள்ளத்தக்கது. ஒன்று, வச.16ல் “அவர்  இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்” என்றுள்ளது. இரண்டு, வச 17ல் “அவர் தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்” என்றும் உள்ளது.  இங்கேயும் ஒப்புரவாகுதல் என்பது கடவுளோடு மட்டுமல்ல அடுத்திருக்கும் சகமனிதரோடும் நடைபெற வேண்டிய ஒன்று என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.
2.மனந்திரும்புதலின் இருபக்கங்கள்
திருத்தூதர் பவுலின் எழுத்துக்களில் மனந்திரும்புதல் குறித்து பல கருத்துகள் காணக் கிடக்கின்றன. எனினும் உரோமையர் 8:1-7ல் தூய ஆவி அருளும் மாட்சி பற்றி விளக்குமிடத்தில் மனந்திரும்புதலின் இருபக்கங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவை
அ) ஊனியல்பின் செயல்களை விலக்குதல்
ஆ) தூய ஆவியின் கனிகளை விளைவித்தல்
ஊனியல்பின் செயல்கள் பற்றி பவுல் கலாத்தியர் 5:19-21ல் விரிவாகப் பேசுகிறார். இங்கே 17 செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆழ்ந்து நோக்கும்போது பின்வரும் 8 செயல்கள் அடுத்திருக்கும் மனிதரோடு உள்ள உறவு குறித்துப் பேசுவது தெளிவாகும். அவையாவன: பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை.
மேலும்,  தூய ஆவியின் கனிகள் பற்றி அவர் கலாத்தியர் 5:22, 23ல் விரிவாகப் பேசுகிறார். இங்கே சொல்லப்படும் ஒன்பது கனிகளும் ஏறத்தாழ அடுத்திருப்பவரோடு உள்ள உறவுகள் பற்றியே பேசுகின்றன என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அவை: அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்.      
 இங்கே திருத்தூதர் பவுலின் பார்வையில் மனந்திரும்புதலின் இருபக்கங்களிலும் மனிதரோடு ஒப்புரவு ஆகுதல் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.
ஆதலால்தான் ஆண்டவர் இயேசுவும் மலைப்பொழிவில் அடுத்திருப்பவரோடு ஒப்புரவு ஆவதை “முதலில்” வைத்தார்.
“ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப்
பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள்மீது மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன்
உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப்போய் “முதலில்” அவரிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கை களைச் செலுத்துங்கள்” (மத் 5:23,24)
இதனை மீட்பு அடைய நிபந்தனை என்பதா? அன்றேல் மீட்பு அடைந்தேரின் நிரூபணம் என்பதா? யாக்கோபின் திருமுகப் போதனைப் படி இது நிபந்தனையாய் தோன்றுகிறது. ஆனால் அதே வேளையில் சக்கேயுவின் மனம் மாற்றத்தில் இது நிரூபணமாய் வெளிப்படுகிறது. 
லூக் 19:8ல்... “அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்கிறார்.
இந்தப் பின்னணியில் இத்தவக்காலத்தில் நாம் எவருக்கும் எதிராகத் தவறிழைத்திருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் எவரிட மிருந்தும் எதையாவது கவர்ந்திருந்தாலோ அபகரித்
திருந்தாலோ அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 
3. ஒப்புரவாகவே முடியாவிட்டால்
கடவுளின் அருளைப் புறக்கணித்து விடாதபடி நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று அமைதியாக இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள்’ எனவும் எபிரேயர் திருமுகம் பரிந்துரைக்கிறது (எபி 12:14). 
இங்கே அனைவரோடும் அமைதி என்பது ஒரு பக்கமாகவும் ஆண்டவரோடு தூய்மை என்பது மறுபக்கமாகவும் இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதைக் கவனித்தல் நன்று. 
அவ்வாறே திருத்தூதர் பவுலும் திருத்தூதர் பணிகள் 24:16ல், “நான் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்” என்கிறார்.
ஆக ஒப்புரவு என்பது கடவுளோடு மட்டுமல்ல மனிதரோடும் செய்யப்பட வேண்டியது என்பது தெளிவாகியுள்ளது. ஆயினும் எதார்த்தத்தில்
நம்மால் நம் உடன் பிறப்புகளோடும், சொந்தங்களில் சிலரோடும், கடின உள்ளம் கொண்ட பலரோடும் ஒப்புரவாக முடிவதில்லை. நாம் எவ்வளவுதான் முயற்சிகள் எடுத்தாலும் (?!) அவர்கள் ஒப்புரவை விரும்பாது பகையை வளர்க்கும் போது செய்ய வேண்டியது என்ன?
இதற்கும் திருத்தூதர் பவுல் அழகுற அறிவுரை தருகிறார்.” இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள். பழிவாங்காதீர்கள். அதைக் கடவுளின் சினத்திற்கு விட்டுவிடுங்கள். தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள் (உரோ 12:18-21).
மனிதரோடு ஒப்புரவு ஆவதற்கு இன்றே ஒரு பட்டியல் தயார் செய்வோமா? நன்றே நலமுடன் சான்று பகர்வோமா? 

Comment